Election bannerElection banner
Published:Updated:

பிரசித், க்ருணால்... முதல் போட்டியிலேயே மிரட்டல் ஆரம்பம்... எழுந்து வீழ்ந்த இங்கிலாந்து! #INDvENG

#INDvENG
#INDvENG

ஸ்டோக்ஸ் ஓவர் மெய்டனாக, டெஸ்ட் போட்டியில் ஆடுகிறார்களோ என சந்தேகம் வர, அடுத்தடுத்தது நடந்ததோ வேறு. டி20மோடுக்கு மாறி, கரீபியன் வீரர்களின் அதிரடியை கண்முன் கொண்டு வந்தது ராகுல் - க்ருணால் கூட்டணி.

முதல் போட்டியில் அவமானகரமானத்தோல்வி, அடுத்து தொடர் வெற்றி என்பதுதான் இந்திய கிரிக்கெட்டின் சமீபத்திய ட்ரெண்டாக இருந்தது. இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய முதல் ஒருநாள் போட்டியிலும் அதற்கான சமிக்ஞைகளேத்தெரிய கடைசி நேரத்தில் பிரசித் கிருஷ்ணா, க்ருணால் பாண்டியாவின் ஆட்டத்தால் வெற்றிபெற்று அசத்தியிருக்கிறது இந்தியா.

தவான் தன் தாண்டியா ஆட்டத்துடன் தொடங்கினாலும், க்ருணால் பாண்டியா பவர் பாண்டியாவாக மாற, பிரஷித் கிருஷ்ணாவோ, நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்ட, அறிமுக வீரர்களாலேயே, முதல் ஒருநாள் போட்டியில், தனது முதல் வெற்றியைப் பெற்றிருக்கிறது இந்தியா.

வழக்கம் போல டாஸை வென்ற இங்கிலாந்து, பழக்கம் மாறாமல், இந்தியாவை பேட்டிங் செய்யப்பணித்தது. இந்தியாவின் பக்கம், க்ருணால் பாண்டியாவுக்கும், பிரசித் கிருஷ்ணாவும் அறிமுகப் போட்டிக்கான வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. இங்கிலாந்தோ, டி20தொடர் முழுவதும் வெளியே உட்கார வைக்கப்பட்ட மொயின்அலியை இன்னொரு ஸ்பின்னராக உள்ளே கொண்டு வந்திருந்தது. கூடவே வேகப்பந்து வீச்சாளார் டாம் கரண், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சாம் பில்லிங்ஸ் சேர்க்கப்பட்டிருந்தனர்.

ஓப்பனர்களாக தவான்-ரோஹித் உள்ளே இறங்கினர். அடித்து ஆடும் எண்ணமே இல்லை என்பதைப் போல், ரிஸ்க் எதுவும் எடுக்காமல், மிக மந்தமாகவே தொடங்கியது இக்கூட்டணி. மிகமெதுவாகவே இன்னிங்ஸ் கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில், ஐந்தாவது ஓவரில், மணிக்கு 148கிமீ என்னும் அபாரவேகத்தில் அம்பாய் வந்த, உட் வீசிய பந்து, ரோஹித்தின் முழங்கையைப் பதம்பார்க்க, பிஸியோ வந்துப் பார்த்தபின் போட்டி தொடர்ந்தது. எனினும் வலியைப் பொறுத்துக் கொண்டு தொடர்ந்த ரோஹித்தால், தொடர்ந்து கவனமாக ஆடமுடியவில்லை. விளைவு, வழக்கமான அதிரடி ஆட்டத்தை ரோஹித்திடமிருந்து பார்க்க முடியாமல் போக, பத்து ஓவர்களில் வெறும் 39 ரன்களே வந்திருந்தது.

#INDvENG
#INDvENG

ரன்களும் வராமல், விக்கெட்டும் விழாமல் வரண்டு நகர்ந்தன சில ஓவர்கள்‌‌. இறுதியில், 15.1 ஓவர்களில், 64 ரன்களை மட்டுமே இந்தியா சேர்த்திருந்த போது, ரோஹித், அவுட்சைட் த ஆஃப் ஸ்டெம்பில் ஸ்டோக்ஸ் வீசிய பந்தை அடித்து, கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, முதல் விக்கெட்டை இழந்தது இந்தியா.

கோலி உள்ளே வந்து தவானுடன் கைகோர்த்தார். கடைசி டி20 போட்டியில் செய்ததைப்போல, ஆங்கர் ரோல் செய்ய ஆரம்பிக்க, அவரிருக்கும் தைரியத்தில், மறுபுறம் தவான் பெரிய ஷாட்டுகளுக்குப் போய்க் கொண்டிருந்தார். ரஷித் வீசிய பந்தை சிக்ஸருக்குத் தூக்கியதன் வாயிலாக, 68 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டித் தொட்டார் தவான். மறுபுறம் பாலுக்கொரு ரன் எனச் சேர்த்துக் கொண்டிருந்த கோலியும், நன்றாக செட்டில் ஆகி விட்டார்.

கிட்டத்தட்ட 16 மாதங்களாக ரசிகர்கள் வர காத்திருக்கும், 71-வது சர்வதேச சதம் இன்று எப்படியும் வந்துவிடும் என்னும் ரீதியில் நம்பிக்கையேற்படுத்தி, ஆடிக்கொண்டிருந்தார் கோலி. மிடில் ஓவர்களில், ஸ்பின்னர்களை வைத்து விக்கெட் எடுக்க, ரஷித்தையும் மொயினையும் வைத்து மார்கன் முயற்சிக்க, சுழல் பந்துகளையும் சுலபமாக எதிர்கொண்டார் கோலி. இந்த இந்தியக் கூட்டணி, இங்கிலாந்து சுழல்பந்து வீச்சில், பத்து ஓவர்களில், 77 ரன்களைச் சேர்த்து மெல்லமெல்ல, ரன்ரேட்டை மேலே கொண்டு வந்திருக்க, ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து பலமாக இருந்தது இந்தியா. 50 பந்துகளில், கோலியின் அரைசதமும் வந்து சேர்ந்து நம்பிக்கை அளித்தது.

விக்கெட் விழுந்தேயாக வேண்டும், இல்லையெனில் கடைசி 15 ஓவர்களில் இந்திய பின்வரிசை வீரர்கள், ரன்களை அதிரடியாய்க் குவிப்பார்கள் என்பதால், உட்டைக் கொண்டு வந்தார் மார்கன். கைமேல் பலன் கிடைத்தது. உட் வீசிய பந்தை மிட் விக்கெட்டில் சிக்ஸருக்கு அனுப்ப முயற்சித்து, தேவையில்லாத ஒரு ஷாட்டால், 56 ரன்களால், தனது விக்கெட்டைப் பறிகொடுத்து வெளியேறினார் கோலி. கோலியின் சதத்தை எதிர்பார்த்திருந்த கண்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அடுத்ததாக உள்ளே வந்த ஷ்ரேயாஸ், உட் பந்தில், தவறான ஷாட்டுக்கு வெளியேற, மார்கன் எதிர்பார்த்ததைப் போல, கோலி, ஷ்ரேயாஸ் என இரண்டு விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தார் உட். கோலியுடன் தொடங்கிய வீழ்ச்சி, அதன்பின் சில ஓவர்கள் தொடர்ந்தது. சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த தவானின் ரன்னெடுக்கும் வேகம் குறைந்து போக, ஸ்கோர் போர்டில் ரன்கள் ஏறாமல் போனது.

16 ரன் எடுத்திருந்த போது ராய் விட்ட கேட்ச், 51 ரன்களில் அம்பயர் காலில் தப்பிப் பிழைத்தது, 59 ரன்னிருக்கும்போது, மிட் டீப் விக்கெட்டில் நின்றிருந்த மொயின்அலி கேட்சைத் தவறவிட்டுத் தந்த மற்றொரு வாய்ப்பென மூன்றுமுறை தப்பிப் பிழைத்த தவான், இறுதியாக, 98 பந்துகளிலேயே வெளியேறினார். இதன்பின், ஹர்திக்கின் விக்கெட்டும், இரு ஓவர்களிலேயே விழுந்துவிட, ஃபார்மை மீட்டெடுக்கப் போராடிக் கொண்டிருக்கும் ராகுலுடன், தனது அறிமுகப்போட்டியில் ஆடும் க்ருணால் பாண்டியா இணைந்தார். ஸ்டோக்ஸ் ஓவர் மெய்டனாக, டெஸ்ட் போட்டியில் ஆடுகிறார்களோ என சந்தேகம் வர, அடுத்தடுத்தது நடந்ததோ வேறு. டி20மோடுக்கு மாறி, கரீபியன் வீரர்களின் அதிரடியை கண்முன் கொண்டு வந்தது இந்த கூட்டணி.

அடுத்த 57 பந்துகளையும் அடித்து வெளுக்கப் போகிறோம் என்ற முகவுரையை, சாம் கரணின் ஓவரில், மூன்று பவுண்டரிகளை அடித்து, எழுதிஆரம்பித்தார் க்ருணால். அதன்பின் ரஷித்தின் ஓவரில், சிக்ஸரோடு தனது அதிரடி ரன்குவிப்பை ஆரம்பித்தார் ராகுல். யார் முதலில் அரைசதத்தைத் தொடுவார்களென தொடர்ந்த போட்டியில், 26 பந்துகளில் அரைசதத்தைத் தொட்ட க்ருணால், அறிமுகப் போட்டியில் அதிவேக அரைசதமடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

#INDvENG
#INDvENG

டெஸ்ட்டில் அக்ஸர், டி20-ல் சூர்யக்குமார், ஒருநாள் போட்டியில், க்ருணால் என அறிமுகப் போட்டியில் இந்திய வீரர்களின் வெற்றிநடை தொடர்வது, உள்ளூர் கிரிக்கெட் தொடங்கி, ஐபிஎல் வரை வீரர்கள் செதுக்கப்படுவதற்கான பலனையே காட்டுகிறது. இறுதியாக, எதிர்மறை விமர்சனங்களை மட்டுமே கடந்த சில நாட்களாகக் கடந்து வந்திருக்கும் ராகுலும் அரைசதமடிக்க, 100ரன் பார்ட்னர்ஷிப்பை எட்டிய இந்தக் கூட்டணி, சந்தித்த 57 பந்துகளில், 112 ரன்களைக் குவித்து, இந்தியஸ்கோரை 317-க்குக் கொண்டு வந்து நிறுத்தியது. நான்கு இந்தியபேட்ஸ்மேன்கள் அரைசதம் கடக்க, க்ருணால், சமீபத்தில் இறந்த தனது தந்தைக்கு தனது இன்னிங்ஸை அர்ப்பணித்தது, உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது.

318 ரன்களை இலக்காக, ராய் மற்றும் பேர்ஸ்டோவைக் கொண்டு தொடங்கியது இங்கிலாந்து‌. ராகுல்-க்ருணால் விட்ட இடத்திலிருந்து இவர்கள் தொடர ஆரம்பித்ததைப்போல், ரன்களைத் துரிதகதியில் குவிக்கத் தொடங்கி, இந்திய பௌலர்களைப் போட்டுப் பொளந்தனர். கடந்த போட்டிகளில், சிறப்பாக விளையாடாத பேர்ஸ்டோ, 40 பந்துகளில், அரைசதம் தொட, பத்து ஓவர்களில், 89 ரன்களை விக்கெட் இழப்பின்றி குவித்தது இங்கிலாந்து. போட்டி மெதுவாக இந்தியாவின் கையை விட்டு நகர்வதாக பயமெழுந்த தருணம், தனது நான்காவது ஓவரில் பந்துவீச வந்த பிரஸித், தனது முதல் சர்வதேச விக்கெட்டாக, ராயின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தி, இந்தியாவின் வெற்றிக்கணக்கைத் தொடங்கி வைத்தார்.

அடுத்து இணைந்த பேர்ஸ்டோ-ஸ்டோக்ஸ் கூட்டணியை, பிரஸித்தே உடைத்துக்காட்ட, ரன்ரேட் 8.5 என எகிறிக் கொண்டிருந்தாலும், வெற்றிக்கு வாய்ப்பிருக்கின்றதென்ற உத்வேகத்தை இந்திய கூடாரத்துக்குள் இது கொண்டுவந்தது‌. எனினும், கொஞ்சமும் அசராமல், அதிரடியைத் தொடர்ந்தனர் பேர்ஸ்டோவும், மார்கனும். இந்தமுறை மீட்புக்கு வந்தது, வழக்கம்போல் கேம் சேஞ்சர் தாக்கூர். சதத்தைத் தொட ஆறு ரன்களே மிஞ்சியிருந்த பேர்ஸ்டோ, புல்ஷாட் ஆட முயற்சித்து குல்தீப்பிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 169/3 என்ற நிலையில் இருந்தது இங்கிலாந்து.

அதன்பின் இங்கிலாந்தின் இன்னொரு நம்பிக்கையான மார்க்கனையும், தாக்கூரே ஷார்ட் பாலால் அனுப்பி வைக்க, இந்தியாவின் பக்கம் வெற்றிக்காற்று வீசத் தொடங்கியது. அதனை இன்னமும் பலமாக வீசச் செய்வதைப்போல், பட்லரை எல்பிடபிள்யூவில் வெளியே அனுப்பிய தாக்கூர், வரிசையாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தை முற்றுலுமாகத் தடுமாறவைத்தார்.

#INDvENG
#INDvENG

அதன்பின் சிறிது நேரம், மொயின்அலியும் சாம் பில்லிங்ஸும், ஓரளவு சிறிய நம்பிக்கை அளிக்குமாறு ஆட்டத்தை உயிர்ப்போடு வைத்திருக்க, இந்தக் கூட்டணியை, பிரசித் திரும்பவும் வந்து பிரித்துக் காட்டி, திருப்புமுனைத்தர, பில்லிங்ஸ் 18 ரன்களில் வெளியேற, 107 பந்துகளில் 101 ரன்கள் தேவையென இன்னமும் இங்கிலாந்துக்கு இலக்கு எட்டக்கூடியதாகத்தான் இருந்தது. சாம் கரணும் மொயின் அலியும் களத்தில் நிற்க, எதுவும் நடக்கலாம் என்ற நிலையே நிலவியது. எனினும், 'இம்முறை என்முறை!' என புவனேஷ்வர், மொயின்அலியின் விக்கெட்டை வீழ்த்த, டாம் கரண் வந்து சாம் கரணுடன் இணைந்தார். கரண் பிரதர்ஸ், இங்கிலாந்தைச் சரிவிலிருந்து மீட்டெடுப்பார்களா என்ற கேள்விக்குறியை முற்றுப்புள்ளியாக்கினார், இன்றைய முற்பகுதியாட்டத்தைத் தனதாக்கிய க்ருணால். சாம் கரணின் விக்கெட்டை வீழ்த்தினார் க்ருணால்.

இறுதியாக, ரஷித்தை புவனேஷ்வர் வீழ்த்த, கடைசியாக, பிரசித் டாம்கரணையும் வீழ்த்தி 43வது ஓவரிலேயே இங்கிலாந்தின் இன்னிங்ஸை முடிவுக்குக் கொண்டுவந்தார். அறிமுகப் போட்டியில், 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரசித் ஸ்டாராக ஒளிர, தாக்கூரோ வழக்கம்போல, மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி தாக்கத்தை ஏற்படுத்த, 15-வது ஓவர்கள் வரை விக்கெட்களை இழக்காத இங்கிலாந்தின் மொத்த விக்கெட்டுகளையும் அடுத்த 27 ஓவர்களுக்குள் எடுத்து மிரட்டியுள்ளது இந்திய பௌலிங் படை. 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா.

தவான், கோலி, ராகுல், க்ருணால் என நான்கு பேட்ஸ்மேன்களின் அதிரடியாலும், பிரசித், தாக்கூர் மற்றும் புவனேஷ்வரின் மிரட்டல் வேகத்தாலும் ஒருநாள் தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ள இந்தியா.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு