Published:Updated:

`கபாலி' ஷெஃபாலியின் வெறித்தனங்கள்... இலங்கையை துவைத்தெடுத்த இந்தியன் கேர்ள்ஸ்! #INDVsSL Review

Women's T20
Women's T20 ( Image courtesy : ESPN cricinfo )

அரையிறுதிக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்ட நிலையில் செம கூலாக விளையாடி இலங்கையைத் தோற்கடித்துள்ளது இந்திய அணி.

மெல்பர்ன் ஜங்ஷன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் அட்டப்பட்டு பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்தது. 114 என்ற எளிய இலக்கை சேஸ் செய்த இந்திய அணி, 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Women's T20
Women's T20
Image courtesy : ESPN cricinfo

கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியில் எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்கியது இந்திய அணி. முதலில் பேட் செய்த இலங்கை அணியின் ஓப்பனர்களான திமெசனியும், கேப்டன் அட்டப்பட்டுவும் களமிறங்கினர். வழக்கம்போல தீப்தி ஷர்மாவின் சுழலோடு ஆரம்பித்தது இந்திய அணி. கேப்டன் அட்டபட்டு நல்ல டச்சில் இருக்க, முதல் இரண்டு ஓவர்களில் இரண்டு பவுண்டரிகளை அடித்தார். ஷிகா வீசிய இரண்டாவது ஓவரில் நேராக அடித்த பவுண்டரி அற்புதம். தீப்தி வீசிய 3-வது ஓவரின் முதல் பந்திலேயே திமிசெனி தூக்கி அடித்த பந்து 25 யார்டு வட்டத்தைக்கூட தாண்டாமல் ராஜேஷ்வரியிடம் கேட்ச் ஆனது.

அடுத்ததாக மாதவி களமிறங்கினார். கேப்டன் அட்டப்பட்டுவுடன் நல்ல பார்ட்னர்ஷிப் பில்ட் ஆகி கொண்டிருக்கும்போது ராஜேஷ்வரி வீசிய 8-வது ஓவரின் முதல் பந்தில் போல்ட் ஆனார் மாதவி. அந்த ஓவர் விக்கெட்டுடன் மெய்டன் ஆனது. 9-வது ஓவரில் இடக்கை ஸ்பின்னர் ராதா யாதவ் அறிமுகமானார். கடந்த 22 போட்டிகளில் குறைந்தபட்சம் ஒரு விக்கெட்டாவது எடுத்திருக்கும் ராதா இந்தப் போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டார். இவர் வீசிய 9-வது ஓவரில் அட்டப்பட்டு ஒரு ஸ்வீப் சிக்சர் அடிக்க, அடுத்த பந்தை ஷார்ட் பிட்ச்சில் ஸ்லோவாக வீசினார் ராதா. இந்த முறை பேக்ஃபுட்டில் ஆடிய அட்டப்பட்டு பவுண்டரி லைனில் கேட்ச் ஆனார்.

11,14,16 ஆகிய ஓவர்களை வீசிய ராதா ஓவருக்கு ஒரு விக்கெட் என வீழ்த்தி மொத்தமாக 4 விக்கெட்டை காலி செய்தார். ராதா யாதவின் பந்தில் கருணாரத்னே லாங் ஆனில் அடித்த ஒரு பந்தை வேதா கிருஷ்ணமூர்த்தி அபாரமாக கேட்ச் செய்தார். நேற்றைய போட்டி முழுவதுமே ஃபீல்டிங்கில் வேதா தாதாவாக மிரட்டினார். வழக்கமாக விக்கெட்டுகளை அள்ளிக்குவிக்கும் பூனம்-இந்த முறை ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களை எடுத்தது.

இந்த உலகக்கோப்பையில் முதல் முதலாக சேஸிங் செய்தது இந்திய அணி. சிறிய டார்கெட்தான் என்பதால் ஓப்பனர்களான மந்தனாவும் ஷெஃபாலியும் `சில் ப்ரோ' மூடில் களமிறங்கினர். இந்திய அணியின் கபாலியான ஷெஃபாலி தனது `நெருப்புடா' ஃபார்மை இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தார். இடக்கை வேகப்பந்துவீச்சாளரான ப்ரபோதனி வீசிய முதல் பந்தையே ட்ரைவ் ஆடி பவுண்டரிக்கு விளாசினார். அடுத்ததாக சசிகலா வீசிய இரண்டாவது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விரட்டினார் ஷெஃபாலி. 3-வது ஓவரில் மந்தனாவும் அதிரடி கோதாவில் இறங்கி இரண்டு பவுண்டரிகளை விளாசினார்.

சிறப்பாக விளையாடி வந்த மந்தனா, ப்ரபோதனி வீசிய 5-வது ஓவரில் மிட் ஆனில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஒன்டவுனில் ஜெமிமா அல்லது டானியா இறங்குவார்கள் என எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் சர்ப்ரைஸாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் களமிறங்கினார். சசிகலா வீசிய 6 வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் ஒரு சிக்சர் என ஆக்ஷன் ஹீரோயினி அவதாரமெடுத்தார் ஷெஃபாலி. 8-வது ஓவரை கேப்டன் அட்டப்பட்டு வீச கேப்டன் ஹர்மன்ப்ரீத் எதிர்கொள்ள அந்த ஓவரில் இரண்டு பவுண்டரி ஒரு சிக்சர் என ஒரு காட்டு காட்டினார் ஹர்மன்ப்ரீத். இந்தத் தொடர் முழுவதும் தடுமாறி வந்த ஹர்மன்ப்ரீத் இந்தப் போட்டியில் நல்ல டச்சில் இருந்தார். இருந்தும் 10-வது ஓவரில் லாங் ஆனில் தூக்கி அடித்து கேட்ச் ஆனார்.

நாட் அவுட் ஆக இன்னிங்ஸை முடித்திருந்தால் ஆசமாக இருந்திருக்கும். நான்காவது வீரராக ஜெமிமா களமிறங்க ஒரு பக்கம் பவுண்டரிகளாக அடித்தாலும் ரன் ஓடுவதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்த ஷெஃபாலி ஒரு ஈஸி த்ரோவில் லேஸியாக ரன் அவுட் ஆகி, இந்த முறையும் அரைசதம் அடிக்காமல் 47 ரன்களில் பெவிலியனுக்குத் திரும்பினார். அடுத்ததாக தீப்தி களமிறங்க ஜெமிமாவும் தீப்தியும் சேர்ந்து அடுத்த 4 ஓவர்களில் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றுவிட்டனர். 15-வது ஓவரின் 4-வது பந்தில் பவுண்டரி அடித்து சேஸிங்கை சுபமாக முடித்து வைத்தார் தீப்தி.

Women's T20
Women's T20
Image courtesy : ESPN cricinfo

23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளிய ராதா யாதவ்க்கு ப்ளேயர் ஆஃப் தி மேட்ச் விருது வழங்கப்பட்டது.

இந்த உலகக்கோப்பையில் இதுவரை சேஸிங் செய்யாத இந்திய அணி இந்தப் போட்டியை வெற்றிகரமாக சேஸ் செய்திருப்பது சிறப்பு. அதேவேளையில் கேப்டன் ஹர்மன்ப்ரீத்தும் ஓப்பனர் மந்தனாவும் பெரிய ஸ்கோருக்குச் செல்லாவிட்டாலும் தடுமாற்றமின்றி க்ளீன் டச்சோடு ஆடியிருப்பது இந்தியா பேட்டிங் சொதப்பல்களிலிருந்து மீண்டு வருவதற்கான அறிகுறி. அடுத்ததாக இனி அரையிறுதிப் போட்டி வியாழக்கிழமைதான் என்பதால் ரெஸ்ட் எடுத்து ரெஃப்ரஷிங்காக வரலாம் இந்திய அணி.

அடுத்த கட்டுரைக்கு