Published:Updated:

அந்த மிடில் ஆர்டர்... அப்படியே அந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத்தும்... ஃபார்முக்கு வாங்க லேடீஸ்! #INDvsSL

Indian Team
Indian Team ( Women's T20 )

அரையிறுதி உறுதியாகிவிட்ட நிலையில் எந்தவித பிரஷரும் இல்லாமல் இலங்கையுடன் மோத இருக்கிறது இந்திய மகளிர் அணி.

இந்திய அணியை இந்த ஆட்டத்தின் வெற்றி தோல்வி பெரிய அளவில் பாதிக்காது எனினும், அரையிறுதிக்கு முன்பாக விளையாடும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அது இந்திய அணிக்குக் கூடுதல் பாசிட்டிவிட்டியைக் கொடுக்கும்.

இலங்கையைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா நியக்சிலாந்து அணிகளுக்கிடையேயான தோல்விகளுக்குப் பிறகு, அரையிறுதி வாய்ப்பில் நிலைத்திருக்க இந்திய அணியுடன் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்தியாவும் இலங்கையும் கடைசியாக மோதியுள்ள 5 டி20 ஆட்டங்களில் இந்திய அணி 4-ல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் முடிவில்லை.

Srilankan Team
Srilankan Team
Women's T20

அரையிறுதிக்கு முன்பாக இந்திய அணி தங்களிடம் உள்ள ஒரு சில குறைகளை இந்த ஆட்டத்தில் நிவர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் இந்திய அணி ஜெயித்திருந்தாலும் எந்தப் போட்டியிலும் இந்திய அணி சேஸிங் செய்யவில்லை. 130 ரன்கள் எடுத்துவிட்டாலே பௌலர்களை வைத்து வெற்றி பெற்றுவிடலாம் என்ற மனநிலையோடுதான் இந்திய அணி களமிறங்கி வருகிறது. அதுவும் இந்திய அணிக்குக் கைகொடுக்கத்தான் செய்கிறது. ஆனாலும், அரையிறுதிக்கு முன்பாக நடைபெறும் இந்த ஆட்டத்தில் இந்திய அணி சேஸிங் செய்து பார்க்கலாம். கடந்த 3 ஆட்டத்திலும் டாஸில் தோற்ற இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் இந்த முறை டாஸ் வென்றால் சேஸிங்குக்கு செல்ல வேண்டும்.

இந்திய அணியின் டாப் ஆர்டரில் ஷெஃபாலி வெளுத்து வாங்குவதால் மளமளவென ரன்களைக் குவிக்கிறது இந்திய அணி. ஆனால், ஷெஃபாலிக்குப் பிறகு முக்கிய வீரர்கள் மந்தனா, ஹர்மன்ப்ரீத் இருவரும் சோபிக்காததால் இந்திய அணி 7 முதல் 20 வரையிலான 14 ஓவர்களில் சொதப்பி வருகிறது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் பவர்ப்ளேயில் அதிக ரன்கள் அடித்தது இந்தியாதான். அதேநேரத்தில் ஆஸி, நியூசி, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளோடு ஒப்பிடுகையில் 7-20 ஓவர் கட்டத்தில் குறைந்த ஸ்கோரை அடித்துள்ளதும் இந்தியாதான். மற்ற அணிகள் இந்த ஓவர்களில் 8 பர் ஓவர் ரன்ரேட் வைத்துள்ள நிலையில் இந்திய அணி ஓவருக்கு 6 ரன்களையே திக்குமுக்காடித்தான் தாண்டுகிறது. மந்தனாவும் ஹர்மன்ப்ரீத்தும் இந்த ஓவர்களில் நின்றால் மட்டும்தான் இந்திய அணி இந்த பிரச்னையிலிருந்து மீள முடியும்.

இலங்கையைப் பொறுத்தவரை பேட்டிங்கில் கேப்டன் அட்டப்பட்டு கலக்கி வருகிறார். இவருக்கு உறுதுணையாக சஞ்சீவானி, சசிகலா, மதுஷிக் ஆகியோர் செயல்பட்டால் ரன் ஸ்கோரிங்கில் நல்ல வலுவான அணியாக இருக்கும். இருப்பினும் இந்திய பௌலிங் அட்டாக் கச்சிதமாக இருப்பதால் இலங்கை பேட்டிங்கை மொத்தமாக வாரிச்சுருட்டுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. பௌலிங்கை பொறுத்தவரையில் இடக்கை மிதவேக பௌலர் ப்ரபோதனி எக்கனாமிக்கலாக பந்து வீசி வருகிறார். இவரின் பந்துவீச்சை இந்திய அணியினர் ஜாக்கிரதையாக எதிர்கொள்ள வேண்டும்.

Indian Team
Indian Team
Women's T20

மொத்தத்தில் இது இந்திய அணிக்கு ஒரு ஜாலியான மேட்ச்... பச்சே... அந்த மிடில் ஆர்டர் பேட்டிங்கும் ஓகே ஆகிவிட்டால் செமி பைஃனலுக்கும் கவலை வேண்டாமே!

அடுத்த கட்டுரைக்கு