Published:Updated:

IND v SA: டாப் ஆர்டர் சொதப்பல், ஃபீல்டிங் குளறுபடிகள் - SKY இல்லையென்றால் இந்தியா என்னவாகும்?

IND v SA | Suryakumar Yadav ( ICC )

பவுன்ஸ் ஆகும் பந்துகளைக் கணிக்கச் சற்றே நேரம் எடுத்துக் கொண்டது மார்க்ராம் - மில்லர் கூட்டணி. 9வது ஓவரில் மார்க்ராமை ரன் அவுட் செய்யக் கிடைத்த வாய்ப்பை இந்தியா மிஸ் செய்தது. அந்தப் பார்ட்னர்ஷிப் அங்கேயே முறிக்கப்பட்டிருந்தால் பெரிய பாதிப்புகள் தடுக்கப்பட்டிருக்கும்.

Published:Updated:

IND v SA: டாப் ஆர்டர் சொதப்பல், ஃபீல்டிங் குளறுபடிகள் - SKY இல்லையென்றால் இந்தியா என்னவாகும்?

பவுன்ஸ் ஆகும் பந்துகளைக் கணிக்கச் சற்றே நேரம் எடுத்துக் கொண்டது மார்க்ராம் - மில்லர் கூட்டணி. 9வது ஓவரில் மார்க்ராமை ரன் அவுட் செய்யக் கிடைத்த வாய்ப்பை இந்தியா மிஸ் செய்தது. அந்தப் பார்ட்னர்ஷிப் அங்கேயே முறிக்கப்பட்டிருந்தால் பெரிய பாதிப்புகள் தடுக்கப்பட்டிருக்கும்.

IND v SA | Suryakumar Yadav ( ICC )
இந்திய பேட்ஸ்மென்களின் ஷார்ட் பால் பலவீனத்தாலும், குறைந்த ஸ்கோரை டிஃபெண்ட் செய்யும் போது செய்யக்கூடாத ஃபீல்டிங் தவறுகளாலும் மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது இந்தியா.

சில நாள்களுக்கு முன்னதாக, பெர்த் மைதானத்தைப் பற்றி டேவிட் ஹசி, "பேட்ஸ்மேன்கள் மிக மிகக் கவனமாக ஆட வேண்டிய களம், சற்றுநேரம் நிதானித்து, ஸ்டீப் பவுன்ஸுக்குத் தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டால் மட்டுமே தப்பிக்கலாம். பந்தின் வேகத்தைப் பயன்படுத்தி கட் ஷாட் மூலமாகவோ, ஃபைன் லெக்கிலோ பவுண்டரி அடிக்க முயற்சி செய்யலாம். புல் ஷாட்டை மிகக் கவனமாகவே ஆட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

IND v SA | Rohit Sharma
IND v SA | Rohit Sharma
ICC

இந்த வார்த்தைகளைச் சற்றே நினைவில் நிறுத்தியிருந்தாலே இந்திய பேட்டிங் படையில் பாதி பிழைத்திருக்கும். சேஸிங்கையே விரும்பும் ரோஹித், இம்முறை பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனாக அக்ஸர் படேலுக்குப் பதிலாக ஹூடாவும் கொண்டு வரப்பட்டிருந்தார். நம்பிக்கையோடுதான் இந்தியா தொடங்கியது. ஆனால், முதல் ஓவரிலிருந்தே போட்டி தென்னாப்பிரிக்காவின் கட்டுப்பாட்டிலேயேதான் இருந்தது. தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு, வெரைட்டிக்குப் பெயர் போனது. அதிலும் அவர்களது ஹோம் கிரவுண்டை நினைவுபடுத்தும் ஆஸ்திரேலிய சூழலில் அவர்களை இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற பயம் ஏற்கெனவே எழுந்திருந்தது. அது அப்படியேதான் நடந்தேறியது.

பார்னெல் முதல் ஓவரையே மெய்டனாக வீசி அழுத்தமேற்றினார். சிக்ஸர் மூலமாக இரு ஓப்பனர்களுமே ரன் கணக்கைத் தொடங்கினாலும் அதற்குமுன் கணிசமான பந்துகளை மென்று தின்றிருந்தனர். இத்தொடர் முழுவதிலும் எந்தப் போட்டியிலும் பவர்பிளேயில் இந்தியா 35 ரன்களைக் கடக்கவில்லை. காரணம் ஓப்பனர்களின் மந்தமான ஆட்டம். அதிலும் கே.எல்.ராகுலின் டெஸ்ட் பாணியிலான ஆட்டம், ரோஹித்தை தவறான ஷாட்களுக்குச் செல்ல வைத்து விக்கெட்டைப் பறிகொடுக்க வைக்கிறது. இப்போட்டியும் அதற்கு விதிவிலக்கல்ல. தவற்றுக்குப் பிராயச்சித்தம் போல ராகுலும் கூடவே கிளம்பி விட்டார். கொண்டு வரப்பட்டது ஐந்தாவது ஓவரில்தான் என்றாலும் வந்தவுடன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, அட்டகாசமாக ஆரம்பித்தார் எங்கிடி. 33/2 என தடுமாற்றமாக முடிந்தது இந்தியாவின் பவர்பிளே.

இந்தியாவை மீட்டெடுக்கும் நோக்கோடு, பேக் டு பேக் பவுண்டரிகளோடு கோலி தொடங்கினார். குட் லென்த்தில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட பந்தை எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரிக்குத் துரத்தியவர், அடுத்த பந்தையே மிட் விக்கெட்டில் பவுண்டரியாக்கினார். ஆனாலும், ஒரு ஷார்ட் பால் மூலமாக அதே ஓவரில் கோலியை பெவிலியனுக்கு அனுப்பினார் எங்கிடி. அதே ஷார்ட் பால் ஸ்ட்ராடஜியைத்தான் பாண்டியாவுக்கு எதிராகவும் எங்கிடி கையிலெடுத்தார். விளைவு ரபாடா பிடித்த அற்புதமான கேட்ச், பாண்டியாவை 2 ரன்களோடு வெளியேற்றியது. நடுவில் வந்து சேர்ந்த ஹூடாவாலும் தென்னாப்பிரிக்க வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இறுதியாக, சூர்யா - தினேஷ் கார்த்திக் கூட்டணி கைகோத்தது.

IND v SA
IND v SA
சாம்பியன் அணிகளுக்கான சாராம்சமே ஓரிரு வீரர்களின் முதுகில் மட்டுமே பயணிப்பதாக அது இருக்கக்கூடாது என்பதுதான். ஆனால், இந்திய பேட்டிங் லைன் அப் பெரும்பாலும் கோலி மற்றும் சூர்யாவையே சார்ந்திருக்கிறது. இப்போட்டியிலும் கோலி ஆட்டமிழந்தாலும் சூர்யாவின் தாண்டவம் தொடர்ந்தது. பிரஸரை அவர் மிகச் சிறப்பாகவே சமாளிக்கிறார் என்றாலும், உண்மையில் அதனை உருவாக்குவதே இந்திய ஓப்பனர்களான ராகுலும், ரோஹித்தும் என்பதுதான் கொடுமை.

உலகத்தரம் வாய்ந்த தென்னாப்பிரிக்கப் பந்துவீச்சு, அவர்களுக்கு ரத்தினக் கம்பளம் விரிக்கும் பெர்த் மைதானம், 49/5 என்ற மோசமான நிலை... ஆனாலும், தனியொருவனாக சூர்யாவின் அதிரடி தொடர்ந்தது. எல்லோரையும் வீழ்த்திய ஷார்ட் பால் அவருக்கும் வீசப்பட்டது. ஆனால் அது அப்பர் கட்டாகவோ, புல் ஷாட்டாகவோ மாறியது. இன்சைட் அவுட் ஷாட்களும் ராம்ப் ஷாட்களும் அசாத்தியமாக ரன்களைக் கொண்டு வந்தன. 170 ஸ்ட்ரைக்ரேட்டில் வந்து சேர்ந்த சூர்யாவின் 68 ரன்கள்தான் இந்திய அணி 100-க்குள் சுருண்டுப் போவதைத் தடுத்தது. கிட்டத்தட்ட அணியின் 50 சதவிகித ஸ்கோரை, சூர்யா மட்டுமே அடித்திருந்தார். சிறிய அணிகளை மட்டுமே திறம்பட எதிர்கொள்வார் எனச் சில சமயங்களில் அவர்மீது விமர்சனம் வைப்பவர்கள், ரிப்பீட் மோடில் போட்டுப் பார்க்க வேண்டிய இன்னிங்ஸ் இது.

IND v SA | Suryakumar Yadav
IND v SA | Suryakumar Yadav
BCCI

இன்னொரு எண்டிலிருந்த தினேஷ் கார்த்திக் இன்னமும் கொஞ்சம் சப்போர்டிங் ரோலை செய்து, ரன் எ பால் கணக்கில் ரன் சேர்த்திருந்தால் கூட இன்னமும் 10 ரன்கள் கூடுதலாக வந்திருக்கும். முன்னாலிருந்த வீரர்கள் ஆட்டமிழந்து சூர்யா மீது ஏற்றிய அழுத்தத்தைக் கூடவே இருந்து தினேஷ் கார்த்திக் ஏற்றிவிட்டார் என்பதே நிதர்சனம். குறைந்தபட்சம், இக்கட்டான நிலையில் விக்கெட்டைப் பறிகொடுக்காமல் இருந்திருந்தாலாவது இறுதி ஓவர்களில் இன்னமும் கூடுதலாக ரன் தேறியிருக்கும்.

இறுதியில் 134 என்பது குறைவான இலக்காகத் தோன்றினாலும், ட்ரிக்கி பிட்ச் என்பதால் இந்திய பௌலிங் படையின் கையிலேயே போட்டியின் முடிவு தரப்பட்டது. மேலும் பாகிஸ்தான் - ஜிம்பாப்வே போட்டியும் நினைவுக்கு வந்து ரசிகர்களைச் சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ள வைத்தது.
IND v SA | Arshdeep Singh
IND v SA | Arshdeep Singh

குறைந்த ஸ்கோரை டிஃபெண்ட் செய்ய விரைவான விக்கெட்டுகள் மட்டுமே வழி என்பதை உணர்ந்து இந்தியாவும் அட்டகாசமாகவே தொடங்கியது. இத்தொடரில் இப்போட்டிக்கு முன்னதாக தான் வீசிய 42 பந்துகளில் 30 பந்துகளை டாட் பால்களாகவே புவனேஷ்வர் வீசியிருக்கிறார். அவர் தந்த நெருக்கடியே சில சமயங்களில் மற்றவர்களின் கணக்கில் விக்கெட்களைச் சேர்க்கிறது. வார்னேவைப் பற்றி, ஸ்டூவர்ட் மேக்கில் இதே விஷயத்தை ஒருமுறை கூறியிருக்கிறார். இப்போட்டியிலும் அது நடந்தேறியது.

அர்ஷ்தீப் வீசவந்த போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே இரண்டு அபாயகரமான பேட்ஸ்மேன்களை வெளியேற்றினார். பாகிஸ்தானுக்கு எதிரான அவரது பவர்பிளே ஓவர்கள் வேட்டை, இப்போட்டியிலும் தொடர்ந்தது. அதிலும் டீ காக், சென்ற போட்டியில் சதமடித்த ரோசோவையும் ஆட்டமிழக்க வைத்தார். ஃபுல் லென்த்தில் சற்றே வெளியே ஸ்விங் ஆன பந்து, டீ காக் பேட்டில் பட்டு எட்ஜாகி ராகுலின் கையில் கேட்சானது. ரோசோவுக்கு அதே ஃபுல் லென்த்தில் வந்த ஒரு இன்ஸ்விங்கர் பேடைத் தாக்கி எல்பிடபிள்யூ ஆக்கியது. பவர்பிளேயின் கடைசி ஓவரிலேயே ரன் எடுக்கத் தடுமாறிய பாவுமாவையும் ஷமி வெளியேற்றினார். 24/3 என இலக்குக்குப் பல மைல்கள் பின்னால் இருந்தது தென்னாப்பிரிக்கா.

அந்தப் புள்ளியில் கிடைத்த அழுத்தக் கயிற்றைக் கொண்டு அப்படியே நெருக்கி தென்னாப்பிரிக்காவைத் திணறடிக்க இந்தியா தவறிவிட்டது. பவுன்ஸ் ஆகும் பந்துகளைக் கணிக்கச் சற்றே நேரம் எடுத்துக் கொண்டது மார்க்ராம் - மில்லர் கூட்டணி. 9வது ஓவரில் மார்க்ராமை ரன் அவுட் செய்யக் கிடைத்த வாய்ப்பை இந்தியா மிஸ் செய்தது. அந்தப் பார்ட்னர்ஷிப் அங்கேயே முறிக்கப்பட்டிருந்தால் பெரிய பாதிப்புகள் தடுக்கப்பட்டிருக்கும். 10 ஓவர் முடிவில் கூட 40 ரன்கள் மட்டுமே எட்டப்பட்டிருந்தாலும் அந்த அவகாசத்தில்தான் கிடைத்த மொமெண்டத்தை இந்தியாவின் கையிலிருந்து தட்டி விட்டிருந்தது தென்னாப்பிரிக்கா.
IND v SA
IND v SA

அதுவும் இந்திய ஃபீல்டிங்கும் மார்க்ராமுக்கு மறுவாழ்வளித்துக் கொண்டே இருந்தது. ஒரு ஓவரில் கோலி கேட்ச் டிராப் செய்து அவரைக் காப்பாற்ற, அதற்கடுத்த ஓவரிலேயே தன் பங்கிற்கு ஒரு ரன் அவுட் வாய்ப்பைத் தவறவிட்டு ரோஹித்தும் மார்க்ராமைக் காப்பாற்றினார். இந்த இரண்டு தவறுகளுக்கு இந்தியா பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது. அஷ்வினைக் குறிவைத்து ஒரே ஓவரில் அவர்கள் அடித்த 17 ரன்களும் பிரஷரை இந்தியாவின் பக்கம் திருப்பிவிட்டன. மில்லர் - மார்க்ராமின் பார்ட்னர்ஷிப்பும் அதை உடைக்க முடியாமல் போனதும் இந்தியத் தரப்பைச் சறுக்க வைத்தது. ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்தது மட்டுமல்லாமல் சிங்கிளை டபிள்ஸாக மாற்றி அற்புதமாக ஆடியது இக்கூட்டணி.

இதில் இன்னொரு விந்தை, ஹூடாவை பார்ட் டைம் பௌலிங் ஆப்சனாகக் கருதி அணியில் எடுத்து, இறுதி வரை ஒரு ஓவர் கூடக் கொடுக்காததுதான். இதே தவற்றை இந்தியா ஆசியக் கோப்பையிலும் செய்திருந்தது. ஒருவேளை 18-வது ஓவரை அஷ்வினுக்குப் பதிலாக ஹூடாவிடம் கொடுத்துப் பார்த்திருந்தால் முடிவுகள் வேறு வகையில் நகர்ந்திருக்கலாம்.

இறுதி ஓவரில் ஆறு ரன்கள்தான் வேண்டும், களத்தில் மில்லர் நிற்கிறார் என்ற போதே போட்டியின் முடிவைக் கணிக்க முடிந்தது. பேக் டு பேக் பவுண்டரியோடு வெற்றிக் கோட்டைத் தொட்டார் மில்லர். 46 பந்துகளில் 59 ரன்கள்தான் என்றாலும் சரியான நேரத்தில் ஆட்டத்தின் வேகத்தை முடுக்கி, கியரை மாற்றி, அஷ்வினின் இரண்டு ஓவர்களை டார்கெட் செய்த இடத்தில்தான் மில்லர் தங்களது வெற்றியை உறுதி செய்தார். ஐந்து விக்கெட் வித்தியாசத்திலான வெற்றி தென்னாப்பிரிக்காவை டேபிளின் உச்சத்தில் அமர்த்தியுள்ளது.

சூர்யாவைத் தவிர அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்திருப்பினும் பௌலர்கள் இறுதி ஓவர் வரை ஆட்டத்தை எடுத்துச் சென்றதே பெரிய விஷயம்தான் என இந்தியா ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியதுதான். அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளால் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்த இந்தியாவைத் தட்டி எழுப்பி நிகழுலகத்திற்குக் கூட்டி வந்துள்ளது இந்தத் தோல்வி.

IND v SA
IND v SA

டாப் ஆர்டர் திணறல், குறிப்பாக பவர்பிளே தடுமாற்றம், டெய்ல் எண்டர்களை நம்ப முடியாதது, ஃபீல்டிங் குளறுபடிகள், இறுதி ஓவர் இழுபறிகள் என இருக்கும் எல்லா தவறுகளையும் சரி செய்ய வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது.

சுய பரிசோதனை செய்து, பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இந்தியா கம்பேக் கொடுக்குமா? உங்கள் கருத்தை கமென்ட்டில் சொல்லுங்கள்.