Published:Updated:

IND vs SA: 2ம் கட்ட அணிதான், ஆனால், உலகக்கோப்பைக்கான ஸ்குவாட் இங்கிருந்துதான்! என்ன செய்வார் பண்ட்?

Indian team ( BCCI )

முக்கியமான வீரர்கள் இல்லையென்ற போதும் இந்தத் தொடருக்கான முக்கியத்துவத்தில் எந்த குறையும் ஏற்படவில்லை. உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சில முக்கிய இடங்களை உறுதிசெய்வதில் இந்தத் தொடர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது.

Published:Updated:

IND vs SA: 2ம் கட்ட அணிதான், ஆனால், உலகக்கோப்பைக்கான ஸ்குவாட் இங்கிருந்துதான்! என்ன செய்வார் பண்ட்?

முக்கியமான வீரர்கள் இல்லையென்ற போதும் இந்தத் தொடருக்கான முக்கியத்துவத்தில் எந்த குறையும் ஏற்படவில்லை. உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சில முக்கிய இடங்களை உறுதிசெய்வதில் இந்தத் தொடர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது.

Indian team ( BCCI )

ஐ.பி.எல் தொடர் பரபரப்பாக நடந்து முடிந்திருக்கும் சூழலில் இந்திய வீரர்கள் மீண்டும் சர்வதேச தொடர்களுக்கு திரும்பியிருக்கின்றனர்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று டெல்லியில் தொடங்கவிருக்கிறது. அக்டோபர் - நவம்பரில் டி20 உலகக்கோப்பை தொடர் நடக்கவிருக்கும் சூழலில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இந்த டி20 தொடர் இந்திய அணிக்கு ரொம்பவே முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை உருவாக்குவதில் இந்தத் தொடரின் முடிவுகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
KL Rahul
KL Rahul
BCCI

கடந்த டி20 உலகக்கோப்பை தொடர் இந்திய அணிக்கு ஒரு கொடுங்கனவாக மாறிப் போயிருந்தது. அந்த உலகக்கோப்பைக்கு ஒரு சரியான செட்டிலான அணியை அழைத்துச் செல்லாதது இந்திய அணி செய்த மிகப்பெரிய தவறாக இருந்தது. அந்த தவற்றைக் களைந்து ஒவ்வொரு இடத்திற்குமான பொருத்தமான வீரர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கான சரியான பேக்-அப் வீரர்களையும் தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு இந்திய அணிக்கு இருக்கிறது.

பேக்-அப் வீரர்கள் என்கிற இந்த இடத்திலிருந்தே இந்தத் தொடர் கொஞ்சம் கூடுதல் முக்கியத்துவத்தை பெறுகிறது. நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு இந்தத் தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொடருக்கான கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த கே.எல்.ராகுலும் கடைசி நேரத்தில் காயம் காரணமாக தொடரிலிருந்தே விலகிவிட்டார். குல்தீப் யாதவும் காயத்தினால் ஒதுங்கியிருக்கிறார்.

இவர்களெல்லாம் இல்லாமல் ரிஷப் பண்ட் தலைமையில் பெரும்பாலும் இரண்டாம் கட்ட வீரர்களை உள்ளடக்கிய ஓர் அணியே இந்தத் தொடரில் களமிறங்க இருக்கிறது. இந்தத் தொடரில் ஆடும் வீரர்களில் எத்தனை பேருக்கு உலகக்கோப்பையில் ப்ளேயிங் லெவனில் இடம் கிடைக்கும் என்பது தெரியாது.

ஆனால், இந்திய அணி வலுவான வீரர்களை பென்ச்சில் வைத்திருக்க வேண்டும் என விரும்பும். எனவே, உலகக்கோப்பைக்கான அந்த முழுமையான அணியில் இந்தத் தொடரில் ஆடும் சில இளம் வீரர்களுக்கும் இடம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

Hardik Pandya - Dravid
Hardik Pandya - Dravid
BCCI

கே.எல்.ராகுல் விலகிவிட்டதால் ஓப்பனிங்கில் பெரிய குழப்பம் எதுவுமின்றி ருத்துராஜ் கெய்க்வாட்டும் இஷன் கிஷனுமே இறங்குவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. இருவருமே தங்களை நிரூபித்து காட்ட வேண்டிய இக்கட்டான சூழலில் இருக்கின்றனர். சுமாரான ஐ.பி.எல் சீசனுக்கு பிறகு இருவரும் எப்படி பெர்ஃபார்ம் செய்யப்போகிறார்கள் என்னும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

கடந்த உலகக்கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு ஹர்திக் பாண்டியாவும் பிரதான காரணமாக இருந்தார். காயங்களினால் பந்துவீச முடியாமல் அவதிப்பட்டார். பேட்டிங்கிலும் ஃபார்ம் அவுட் ஆகியிருந்தார். ஆனால், இதெல்லாம் சில மாதங்களுக்கு முன்புதான்.

கடைசியாக ஐ.பி.எல் இல் கேப்டனாக பேட்ஸ்மேனாக பௌலராக ஃபீல்டராக என அத்தனை விதத்திலும் கலக்கி குஜராத்தை சாம்பியன் ஆக்கியிருந்தார். இப்படி ஒரு ஹர்திக் பாண்டியாதான் இந்திய அணிக்குமே தேவைப்படுகிறார்.

ஐ.பி.எல் இல் ஹர்திக் பாண்டியா நம்பர் 4 லேயே இறங்கியிருந்தார். மிகச்சிறப்பாக ஸ்கோரும் செய்திருந்தார். ஆனால், இந்திய அணியில் இதுவரை ஃபினிஷராக மட்டுமே ஆடியிருக்கிறார். எனில், இந்தத் தொடரில் ஹர்திக் எங்கே இறங்கப்போகிறார் என்பது ஒரு கேள்வியாக இருக்கிறது. இதில் ஒரு உடனடி தெளிவுமே தேவைப்படுகிறது. ஹர்திக்கிற்கு ஒரு நிலையான இடத்தை கொடுத்து இந்த தொடருக்காக இல்லாமல் உலகக்கோப்பைக்காக அவரை தயார்ப்படுத்த வேண்டும். இப்படி ஒரு மேட்ச் வின்னரை இந்திய அணி எக்காரணம் கொண்டும் தவறவிட்டுவிடக்கூடாது.

இவர்களைத் தாண்டி அதிக முக்கியத்துவம் பெறுவது தினேஷ் கார்த்திக்கே. மீண்டும் இன்னொரு முறை அசாத்தியமாக இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்திருக்கிறார்.
Dinesh Karthik
Dinesh Karthik

ஐ.பி.எல்-இல் பெங்களூரு அணிக்காக ஃபினிஷர் ரோலில் ஆடியே தினேஷ் கார்த்திக் இந்த கம்பேக்கை சாத்தியப்படுத்தினார். பெங்களூரு செய்த மிகப்பெரிய நல்ல காரியம் அவருக்கு எந்தக் குழப்பத்தையும் கொடுக்காமல் நீங்கள்தான் எங்கள் அணியின் ஃபினிஷர் என்பதை மிகத்தெளிவாக முதலிலேயே கூறிவிட்டார்கள். அதில் கடைசி வரை உறுதியாகவும் இருந்தார்கள். இதனால்தான் தினேஷ் கார்த்திக்கால் அந்தக் கடைசி நான்கைந்து ஓவர்களில் அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. இந்தத் தொடரில் இஷன் கிஷன், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் என மூன்று கீப்பர்கள் ஒரே ப்ளேயிங் லெவனில் இருப்பது அணியின் சமநிலையை கொஞ்சம் பாதிக்கலாம். ஆனால் தினேஷ் கார்த்திக்கை இந்திய அணியும் ஒரு ஃபினிஷராக மட்டுமே பார்க்குமெனில், பெங்களூரு கொடுத்த அந்த உத்தரவாதத்தை இந்திய அணியும் அவருக்குக் கொடுத்தே வேண்டும். வெங்கடேஷ் ஐயர் போன்ற ஓப்பனிங் பேட்ஸ்மேனையெல்லாம் இந்திய அணி ஃபினிஷர் ரோலில் ஆட வைத்து பகீரத முயற்சிகளில் இறங்கியிருக்கிறது என்பதையும் மனதில் வைத்து தினேஷ் கார்த்திக் விஷயத்தில் முடிவெடுக்க வேண்டும். தினேஷ் கார்த்திக்குமே இந்திய அணிக்காக ஆடும்போது எதிர்கொள்ளும் சீரற்ற தன்மையைக் களைந்து தொடர்ந்து பெர்ஃபார்ம் செய்தாக வேண்டும்.

ஸ்ரேயாஸ் ஐயர் ஐ.பி.எல்-க்கு முன்பான டி20 தொடர்களில் மிகச்சிறப்பாக ஆடியிருந்தார். ஐ.பி.எல்-லிலும் ஒரு சில நல்ல இன்னிங்ஸ்களை ஆடியிருந்தார். கடந்த உலகக்கோப்பையில் அவரை ரிசர்வ் லிஸ்ட்டில் மட்டுமே வைத்திருந்தார்கள். இந்த முறை எப்படியேனும் அணிக்குள் நுழைந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்.

Bishnoi - Umran - Arshdeep
Bishnoi - Umran - Arshdeep
BCCI

புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், ஹர்சல் படேல், உம்ரான் மாலிக் போன்ற வலுவான வேகப்பந்து வீச்சாளர்களையும் இந்திய அணி கொண்டிருக்கிறது. உம்ரான் மாலிக் போன்றோரை முழுமையாக வேடிக்கை மட்டுமே பார்க்கவிடாமல் ஒன்றிரண்டு போட்டிகளில் அவருக்கும் வாய்ப்பை வழங்கி சோதித்து பார்க்க வேண்டும். கடந்த சில உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணி இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமலேயே களமிறங்கியது. இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு அணியின் மிகப்பெரிய சொத்து.

கடந்த உலகக்கோப்பையில் எதிரணிகளின் ஆக்ரோஷமான இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களாலேயே இந்தியா வீழ்ந்திருந்தது. இப்போது இந்திய அணியும் அதே ஆயுதத்தை கையிலெடுக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது.

அர்ஷ்தீப் சிங் எனும் அசத்தலான இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அணியில் இருக்கிறார். அவரை எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்தி உலகக்கோப்பைக்குத் தயார் செய்ய வேண்டும். அக்ஸர் படேல், சஹால், ரவி பிஷ்னோய் போன்ற ஸ்பின்னர்களும் அணியில் இருக்கின்றனர். சஹாலை கடந்த உலகக்கோப்பையில் இந்திய அணி கழட்டிவிட்டிருந்தது. அது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணரவும் செய்திருக்கிறது. அனுபவமிக்க சஹால் உலகக்கோப்பையில் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக நிச்சயம் இருப்பார்.

முக்கியமான வீரர்கள் இல்லையென்ற போதும் இந்தத் தொடருக்கான முக்கியத்துவத்தில் எந்தக் குறையும் ஏற்படவில்லை.

Team India
Team India
BCCI
உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சில முக்கிய இடங்களை உறுதிசெய்வதில் இந்தத் தொடர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது. இந்தத் தொடரை இந்திய அணி சரியாக பயன்படுத்திக் கொள்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இன்றைய ஆட்டத்திற்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யாரெல்லாம் இருக்கலாம்? உங்கள் சாய்ஸை கமென்ட்டில் சொல்லுங்கள்.