நியூஸிலாந்து வாஷ் அவுட்டுக்குப் பிறகு, நாளை தென்னாப்பிரிக்காவுடன் ஒருநாள் போட்டியில் மோதுகிறது இந்தியா. நாம், வாஷ் அவுட்டாக தாயகம் வந்திருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்கா சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை 3-0 என ஒயிட் வாஷ் செய்துவிட்டு வந்திருக்கிறது.
தொடர் போட்டிகள் காரணமாக, கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட தேர்வுக்குழு, துணை கேப்டன் ரோஹித் ஷர்மா அணியில் இல்லாததால் அந்த ரிஸ்க் எடுக்கவில்லை. விராட் கோலியே கேப்டனாகத் தொடர்கிறார். கொரோனோ வைரஸ் காரணமாக இருநாட்டு வீரர்களும் கைகுலுக்கிக்கொள்வது தவிர்க்கப்படும் எனத் தெரிகிறது. அணியின் பாதுகாப்பு கருதி தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முதன்மை டாக்டர் சொயப் மஞ்ச்ரா அணியுடன் வந்திருக்கிறார். வீரர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதைத் தொடர்ந்து அவர்தான் வழிநடத்தயிருக்கிறார்.

இந்திய அணி எப்படி?
முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 10 மாதங்கள் ஆடாமல் இருந்த ஹர்திக் பாண்டியா, ஹெர்னியா அறுவைசிகிச்சை காரணமாக ஆடாமல் இருந்த புவனேஷ்வர் குமார், தோள்பட்டை காயம் காரணமாக ஆடாமல் இருந்த ஷிகர் தவான் என 3 நட்சத்திர வீரர்களும் அணிக்குத் திரும்பியிருக்கிறார்கள். இவர்களின் வரவு, துவண்டிருக்கும் இந்திய அணிக்கு பெரும் பலம் சேர்க்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால், காயத்தின் பிடியிலிருந்து மீண்டு வந்த பும்ராவே இன்னும் பழைய பர்ஃபாமன்ஸ்களைக் கொடுக்கத் திணறிக்கொண்டிருக்கும் போது, மற்ற 3 வீரர்களும் எப்படி ஃபார்முக்கு வருவார்கள் என்பதில் எந்த உத்தரவாதமும் இல்லை. மும்பையில் நடைபெற்ற DY Patil 20 ஓவர் தொடரில், பாண்டியா மற்றும் புவனேஷ்வர் குமார் நன்றாக விளையாடினார்கள். குறிப்பாக, பாண்டியா 2 சதங்களை விளாசி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். ஒரு போட்டியில் 20 சிக்ஸர்கள் அடித்து அணியை வெற்றிபெற வைத்தவர், மற்றொரு போட்டியில் சதம் மற்றும் 5 விக்கெட்டுகள் எடுத்து சர்வதேச கிரிக்கெட்டுக்கு நான் ரெடி என்றே அறிவித்திருக்கிறார்.
ரோஹித் ஷர்மா இல்லாத நிலையில், ஷிகர் தவானோடு சேர்ந்து ஒப்பனிங் ஆடும் வாய்ப்பு பிரித்வி ஷா அல்லது ஷுபம் கில்லுக்கு வழங்கப்படும். நியூஸிலாந்து தொடரில் நன்றாக தொடக்கம் அளித்திருந்தாலும், பெரிதாக ஸ்கோர் செய்யத் தவறினார் பிரித்வி ஷா. அதிகபட்சம் 40 ரன்கள்தான் எடுத்தார். இந்திய மைதானத்தில் சிறப்பாக ரன் குவிப்பவர் என்ற அடிப்படையின் கீழ், பிரித்வி ஷாவுக்கே ஓப்பனிங் ஆட வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோலி, ஐயர், ராகுல் என மிடில் ஆர்டரில் எந்தவித மாற்றமும் இல்லாத நிலையில், 6-வது வீரராக மனிஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பாண்டியா மற்றும் ஜடேஜா ஆல்ரவுண்டர்கள் இடத்தை நிரப்புவார்கள்.
பெளலிங்கைப் பொறுத்தவரையில் புவனேஷ்குமார், பும்ரா , சஹால், ஜடேஜா, பாண்டியாதான் இருப்பார்கள். தேவைப்பட்டால் மனிஷ் பாண்டேவை உட்காரவைத்துவிட்டு சைனிக்கோ, குல்திப் யாதவுக்கோ வாய்ப்புகள் வழங்கப்படலாம்.

என்ன செய்யப்போகிறது தென்னாப்பிரிக்கா!
தொடர் தோல்விகளால் துவண்டிருந்த தென்னாப்பிரிக்கா, புது கேப்டன் டிகாக் தலைமையின் கீழ் சிறப்பாக செயல்படத் தொடங்கியிருக்கிறது. 2019 உலகக்கோப்பை முடிந்தவுடன், 33 வீரர்கள் தென்னாப்பிரிக்காவுக்காக அனைத்து வகையான போட்டிகளிலும் களம் கண்டுள்ளார்கள். அதில், 10 புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, சிறந்த அணியைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளது.
முன்னாள் கேப்டன் டுப்ளெஸிஸ் ஒரு வீரராக இந்தத் தொடரில் களம் காண இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில், கிளாசன் 2 அரை சதங்கள் மற்றும் 1 அரை சதம் அடித்து, தனது திறமையை நிரூபித்து, மேன் ஆஃப் தீ சீரிஸ் தட்டிச் சென்றுள்ளார். கிளாசன் ஸ்பின்னிலும் நன்றாக ஆடுவார் என்பது தென்னாப்பிரிக்காவுக்கு கூடுதல் பலம். ஏற்கெனவே மிடில் ஆர்டரில் டுப்ளெசிஸ், ராசி வேன்டேர் டுசன், மில்லர் இருக்கும் நிலையில் கிளாசனின் வரவும் சேர்ந்து தென்னாப்பிரிக்காவை ஸ்ட்ராங் பேட்டிங் லைன் அப் கொண்ட அணியாக மாற்றியுள்ளது.
முதல் போட்டிக்கு ஓப்பனர் டெம்பா பவுமா காயம் காரணமாக ஆடுவது சந்தேகம் என்கிற நிலையில், ஆஸ்திரேலியாவுடன் சதம் அடித்த புதுமுக வீரர் மாலனையும் 16-வது வீரராகச் சேர்த்து அழைத்து வந்துள்ளது தென்னாப்பிரிக்கா.

தென்னாப்பிரிக்காவுக்கு இருக்கும் ஒரே பிரச்னை பெளலிங்தான். காயம் காரணமாக, அணியின் நட்சத்திர பெளலர் ராபாடா இல்லை. ஸ்பின்னர் ஷம்சி, தன் மனைவிக்கு குழந்தை பிறக்க உள்ளதால் தொடரிலிருந்து விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவுடன் நன்றாகப் பந்து வீசிய லூங்கி நிகிடி, தொடர்ந்து 140 கி.மீ வேகத்திற்கு மேல் பந்து வீசக்கூடிய நோர்ஜ், ஆல்ரவுண்டர் ஆண்டில் பெளுக்வாயோ இவர்களை நம்பியே அணி உள்ளது. ஷம்சிக்குப் பதிலாகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கும் டெஸ்ட் அணியின் பெளலர் மகாராஜா, எந்த அளவுக்கு ஒருநாள் போட்டிகளில் சாதிப்பார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இரு அணிகள் நடத்தும் பலப்பரீட்சையில், இந்தியா முந்தும் என்றே தெரிகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவை வெற்றிகொண்ட தென்னாப்பிரிக்கா, இந்தியாவையும் வீழ்த்தி ஆச்சர்யம் கொடுக்கலாம். இனி, கோலி வெர்ஸஸ் டிகாக் போர் ஆரம்பம்!