Published:Updated:

IND vs PAK: மீள முடியாத இடத்திலிருந்து கம்பேக் கொடுத்த இந்தியா; மீட்டெடுத்த சேஸ் மாஸ்டர் கிங் கோலி!

IND vs PAK | கோலி ( ICC )

எந்த ராஃபின் பந்துகளை எதிர்கொள்ளத் திணறினார்களோ, அதே ராஃபின் இறுதி இரண்டு பந்துகளை லாங் ஆனிலும், ஃபைன் லெந்திலும் சிக்ஸர்களாக்கி சப்த நாடியையும் ஒடுங்கச் செய்தார் கோலி. 'King is Back to the throne' எனச் சொல்லாமல் சொல்ல வைத்தன அந்த இரு ஷாட்களும்.

IND vs PAK: மீள முடியாத இடத்திலிருந்து கம்பேக் கொடுத்த இந்தியா; மீட்டெடுத்த சேஸ் மாஸ்டர் கிங் கோலி!

எந்த ராஃபின் பந்துகளை எதிர்கொள்ளத் திணறினார்களோ, அதே ராஃபின் இறுதி இரண்டு பந்துகளை லாங் ஆனிலும், ஃபைன் லெந்திலும் சிக்ஸர்களாக்கி சப்த நாடியையும் ஒடுங்கச் செய்தார் கோலி. 'King is Back to the throne' எனச் சொல்லாமல் சொல்ல வைத்தன அந்த இரு ஷாட்களும்.

Published:Updated:
IND vs PAK | கோலி ( ICC )
கோலியின் விஸ்வரூபத்தால் கடந்த ஆண்டு விழுந்த இடத்திலேயே வெகுண்டு எழுந்திருக்கிறது இந்தியா.

பிளேயிங் லெவன்

மற்ற வீரர்களின் தேர்வில் ஆச்சரியங்கள் இல்லை என்பது போல் பாகிஸ்தான் அணியின் இடக்கை பந்துவீச்சாளர்களை மனதில் நிறுத்தி, அஸ்வினைத் தேர்வு செய்ததும் முன்கூட்டியே எதிர்பார்த்ததுதான். பண்ட்டுக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் உள்ளே வந்திருந்தார். டாஸை வென்று சேஸிங் என்றார் ரோஹித்.

பௌலிங் - இந்தியாவின் தொடக்கம் எப்படியிருந்தது?

இந்தியாவின் தொடக்கம் சரவெடியாக இருந்தது. பந்துக்கு ஒருமுறை வெடிக்கும் டைம் பாம், அதனால் நடுங்கும் இதயங்கள் - இதுதான் இந்தியாவின் முதல் நான்கு ஓவர்களின் சாராம்சம்.

சகலமும் இந்தியாவிற்குச் சாதகமாகவே தொடக்கத்தில் இருந்தது. வேகப்பந்து எக்ஸ்பிரஸ்களுக்கு எக்ஸ்ட்ரா பவுன்ஸை வழங்கி ரெட் கார்பெட் விரிக்கும் களம், பேட்ஸ்மேன்களைச் சோதனைக்கு உள்ளாக்கும் சீம் மூவ்மென்ட், இருபுறமும் பந்தை ஸ்விங் செய்வதற்கு உதவும் வானிலை என அத்தனையும் சேர்ந்து புதுப்பந்தை கூர்தீட்டின. அந்தக் கூர்மையைச் சரியாகப் பயன்படுத்தும் எண்ணத்தோடு ரோஹித், புவனேஷ்வர் மற்றும் அர்ஷ்தீப்போடும், இரு ஸ்லிப்களோடும் அட்டாக்கிங் மோடில் தொடங்கினார்.

IND vs PAK
IND vs PAK
ICC

2020 அடிலெய்டில் தோல்வி முகம்கண்ட பின்பு அதற்கடுத்த போட்டியில் தொடக்க ஓவர்களிலேயே ஒரு அட்டாக்கிங் பௌலிங் மற்றும் ஃபீல்டிங் செட்டப்போடு ரஹானே மிரட்டினார். அதுவே இழந்த நம்பிக்கையை வெகுண்டெழ வைத்தது. அதேபோல், "போன உலகக்கோப்பையின் வலி எங்களுக்குள் இல்லை", என அதே மனோபாவத்தை இப்போட்டியிலும் இந்தியாவிடம் தொடக்கத்திலேயே பார்க்க முடிந்தது.

அவுட் ஸ்விங்கர்களும் இன்ஸ்விங்கர்களும் இருபுறமும் அம்பாய் பாய, குட் லென்த்தில் எக்ஸ்ட்ரா பவுன்ஸும் உள்புகுந்து ஆட்டிவைத்த பந்து, ரிஸ்வானின் கைகளைத் தாக்க, யார்க்கர்கள் காலைத் தகர்த்தன. சற்றுநேரம், ஃபாஸ்ட் பௌலிங்கின் அத்தனை ஆபத்தான பரிமாணங்களையும் காட்டியது இந்தியா.

அர்ஷ்தீப் அமர்க்களம்

ஒருபக்கம், ரன் எடுப்பது என்பதையே ஆப்சனில் விடவைத்து புவனேஷ்வரின் பந்துகள் மிரட்டின, அதிவேகமில்லை எனினும் ஆபத்தாக வந்த அவை ஏற்றிய அழுத்தம், அர்ஷ்தீப்பின் ஓவரிலும் எதிரொலித்தது. அர்ஷ்தீப்பால் வீசப்பட்ட அந்தக் கூர்மையான இன்ஸ்விங்கரிடமிருந்து பாபராலும், ஃபைன் லெக்கில் கேட்சான அந்த பவுன்சரிடமிருந்து ரிஸ்வானாலும் தப்பிக்கவே முடியவில்லை. கடந்தாண்டு ஷாகீன் இந்திய ஓப்பனர்களை வீழ்த்தி அதகளப்படுத்திய அந்த மேஜிக்கல் ஸ்பெல்லின் மீட்டுருவாக்கமாக அர்ஷ்தீப்பின் பவர்பிளே ஓவர்கள் இருந்தன.

காப்பாற்றிய மஸுத் - இஃப்திகார் கூட்டணி

அடுத்து அமைந்த பார்ட்னர்ஷிப்தான் பாகிஸ்தானைக் கரையேற்றியது. மஸுத் - இஃப்திகார் கூட்டணி, அடுத்த எட்டு ஓவர்களில் களம் பழகி, செட்டிலாகி ஆடத் தொடங்கியது. போட்டிக்கு முன்னதாக ஷதாப் மற்றும் நவாஸ்தான் மத்திய ஓவர்களில் ஸ்பின்னைத் திறம்பட எதிர்கொள்வார்கள் எனக் கூறப்பட, உண்மையில் நிகழ்வு நேர்மாறானது. இஃப்திகார் ஸ்பின்னர்களைப் பந்தாடினார். அக்ஸர் படேலின் ஓவரில் மூன்று சிக்ஸர்களை விளாசி, போட்டியின் மொமெண்டத்தை தங்கள் பக்கம் திருப்பினார். டி20-ல் பவர்பிளே அதிரடி ஓவர்கள் மட்டுமல்ல, உறுதியாகக் கட்டமைக்கப்படும் மிடில் ஓவர் பார்ட்னர்ஷிப்களும் அச்சுறுத்தக் கூடியவைதான். அதுதான் இங்கேயும் நடந்தேறியது.

IND vs PAK
IND vs PAK
ICC

ரோஹித்தின் சாமர்த்தியம்

வேகமாக விழித்துக் கொண்ட ரோஹித்தின் அடுத்த நகர்வுதான் சமயோசிதமானது. ஸ்பின்னர்களை நிறுத்திவிட்டு, ஷமிக்கும் பாண்டியாவுக்கும் பேக் டு பேக் ஓவர்கள் தந்து மூன்று விக்கெட்டுகளை கொத்தாக அள்ளினார். இன்னமும் மீதமிருந்த சீம் மூவ்மெண்ட் வெகுவாக உதவியது. ஷமியின் அனுபவமும் களத்தைக் கணிக்கும் திறமையும், ஃபுல் லெந்தில் அதிவேகமாக ஒரு டெலிவரியை மிடில் ஸ்டம்ப் லைனில் பாய வைத்து இஃப்திகாரை எல்பிடபிள்யூவாக்கி பார்ட்னர்ஷிப்பை உடைத்தது. ஷதாப் மற்றும் ஹைதர் ஆகிய இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்து பாண்டியா இந்தியாவை மறுபடியும் கேமுக்குள் கொண்டு வந்தார். ஆனால், டெத் ஓவர்கள் நடுக்கம் இப்போட்டியிலும் எட்டிப் பார்த்தது.

பவர்பிளேயில் 32 ரன்கள் என இந்தியாவின் தொடக்கமே அதகளப்படுத்தினாலும், அங்கிருந்து போட்டியின் ஓட்டுநர் இருக்கையில் இரு அணிகளும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தினர், கியரும் பலமுறை மாற்றப்பட்டது.

சவாலான இலக்குதான்!

முதல் 5 ஓவர்களில் 24/2 என உடைந்து நொறுங்கிய பாகிஸ்தான், அடுத்த 5 ஓவர்களில் 36 ரன்களை சேர்த்து சற்றே திரும்பவும் மீண்டெழுந்து, அடுத்த 5 ஓவர்களில் 46 ரன்களைச் சேர்த்து அட்டாக் செய்யத் தொடங்கியது. ஒருபக்கம் விக்கெட்டுகள் விழுந்தன, ஆயினும் டி20-ல் டெத் ஓவர்களில் அதைப் பற்றி கவலைப்பட என்ன இருக்கிறது! எனவே அதே பாணியில் தொடர்ந்து மோதி விளையாடி, கடைசி 5 ஓவர்களில் 56 ரன்களைக் குவித்து 160 என்ற இலக்கை இந்தியாவிற்கு நிர்ணயித்தது. மிஞ்சியிருந்த மூவ்மென்ட்டும் பாகிஸ்தானின் அச்சமூட்டும் வேகப்பந்து மற்றும் ஸ்பின் கூட்டணியும் 160 என்பதே இந்தியாவிற்கு சவாலானதாகவே இருக்கப் போகிறதென்பதை உறுதி செய்தது.

IND vs PAK
IND vs PAK
ICC

சொதப்பிய இந்திய ஓப்பனர்கள்

முதல் இன்னிங்ஸில் அனுப்பப்பட்ட புல்லட்டுகள் எல்லாம் இரண்டாவது பாதியில் இந்தியாவின் பக்கமே திரும்பின. ஷாகீன் வீசிய முதல் ஓவரே இன்ஸ்விங்கிங் யார்க்கர், வொய்ட் யார்க்கர் வகையறாக்களே... அதாவது விக்கெட் காவு வாங்கியிருக்க வேண்டிய பந்துகள்தான். அவரிடமிருந்து தப்பித்திருந்தாலும், நசீம் ஷா வீசிய அடுத்த ஓவரில் கே.எல்.ராகுலால் தப்ப முடியவில்லை. ஷார்ட் ஆஃப் லெந்த் டெலிவரியை பிளாக் செய்ய அவர் முயல, அது இன்சைட் எட்ஜாகி ஸ்டம்பைச் சிதறடித்தது. ஒரு ஓவர் இடைவெளியில் ஹாரிஸ் ராஃப் வீசிய பந்தில் இந்தியாவின் அடுத்த நம்பிக்கை சரிந்தது. ஆஃப் சைடுக்கு வெளியே மணிக்கு 140+ கிமீ வெறிகொண்டு நகர்ந்த குட் லென்த் பாலைத் தொட முயன்று, இஃப்திகாரிடம் கேட்ச் கொடுத்து ரோஹித்தும் வெளியேறினார். மிக முக்கிய போட்டியில் இந்திய ஓப்பனர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த ரன்கள் வெறும் 8 மட்டுமே.

கோலியுடன் இணைந்த சூர்யக்குமாரின் தொடக்கம் அற்புதமாகவே இருந்தது. கோலியை மறுபுறம் நிறுத்தி வைத்தே சமீபத்தில் பல அற்புத இன்னிங்ஸுகளை அவர் ஆடியிருக்கிறார். ஆனால், இப்போட்டியில் அது நிகழவில்லை. ராஃப் வீசிய ஷார்ட் ஆஃப் லெந்த் டெலிவரியை விளாசி மிட் விக்கெட்டில் பவுண்டரியை அடித்தார். ஆனால், ராஃப் அடுத்த பந்திலேயே கம்பேக் கொடுத்தார். சூர்யாவின் ஸ்டம்ப் லைனில் ஒரு ஷார்ட் பால் பார்சல் செய்யப்பட்டது. அதுவும் முந்தைய பந்தை விட அதிக வேகத்தில் வர, அவர் சுதாரித்த ஆடத் தேவையான கால அவகாசமே தராமல் அது பேட்டைத் தொட்டு ரிஸ்வானிடம் தஞ்சமடைந்தது. ஆட்டத்தின் மிகப்பெரிய திருப்புமுனையாக இது மாறியது.

IND vs PAK
IND vs PAK
ICC

கைகொடுத்த ஹாரிஸ் ராஃப்பின் அனுபவம்!

போட்டிக்கு முன்னதாக பாபர் அசாம், "ராஃப் மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு அதிகமாக ஆடியிருக்கிறார், அந்த அனுபவம் எங்களுக்கு மிகவும் கை கொடுக்கிறது" என்று கூறியிருந்தார். அவர் சொன்னதைப் போலவே, அது பாகிஸ்தானிற்கு நன்றாகவே கைகொடுத்தது. ரோஹித், ஏன் கோலிகூட அவரது பந்துகளை எதிர்கொள்ளத் திணறினார். அடுத்ததாக வியூகமாக நினைத்து இந்தியா முன்கூட்டி இறக்கிய அக்ஸரும் ரன்அவுட்டாகி வெளியேறினார்.

பவர்பிளேயில் 31/3 என்ற பரிதாப நிலை மட்டுமல்ல, பாதிக்கிணறு தாண்டப்பட்ட 10 ஓவர்களின் முடிவில்கூட இந்தியா 45/4 என தோல்வியின் ஆரம்பப்புள்ளியில்தான் தடுமாறிக் கொண்டிருந்தது. குறிப்பாக இதில் ஷதாப் மற்றும் நவாஸ் வீசிய நான்கு ஓவர்களில் மொத்தமே 14 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டன. கோலி 23 பந்துகளில் 15 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார். ஆனால், இதன் பிறகுதான் ஆட்டம் சூடுபிடித்தது.

கோலி - பாண்டியா ஜோடி கொடுத்த நம்பிக்கை

கோலி - பாண்டியா கூட்டாக அணியை மீட்டெடுக்க முதலில் போராடியது, பின் மோதி விளையாடியது. முன்னதாக பணிந்து போன நவாஸின் ஓவரிலேயே மூன்று சிக்ஸர்களுடன் 20 ரன்களை விளாசி மொமென்டத்தைத் திரும்பக் கொண்டு வர முனைந்தனர். பாண்டியா ரன் எ பால் கணக்கில் ஆடி ஸ்ட்ரைக் ரொடேட் செய்ய, கோலி வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் பெரிய ஷாட் ஆடி, தேவைப்படும் ரன்ரேட்டை கணிசமாகக் குறைத்தார். 43 பந்துகளில் கோலி அரைசதம் கடந்தார். எந்த ஷாகீன் அஃப்ரிடி பெரிய அச்சுறுத்தலாக இருந்தாரோ அவர் வீசிய போட்டியின் 18-வது ஓவரில் அடித்து விளாசி 17 ரன்கள் சேர்த்தனர். அதனால்தான் இறுதி 2 ஓவர்களில் 31 ரன்கள் தேவை என ஓரளவு எட்டத்தக்கதாக இலக்கை வந்தடைந்தது இந்தியா. 100 ரன்களைத் தாண்டி நீண்ட இந்த பார்ட்னர்ஷிப்தான் இந்தியாவின் இறுதி நம்பிக்கையை ஏந்தி நின்றது.

IND vs PAK
IND vs PAK
ICC

விண்டேஜ் கோலியின் அந்த இரு சிக்ஸர்கள்!

ராஃப் வீசிய 19-வது ஓவர்தான் விண்டேஜ் கோலியின் மறு அவதாரத்தைக் நினைவூட்டியது. எந்த ராஃபின் பந்துகளை எதிர்கொள்ளத் திணறினார்களோ, அதே ராஃபின் இறுதி இரண்டு பந்துகளை லாங் ஆனிலும், ஃபைன் லெந்திலும் சிக்ஸர்களாக்கி சப்த நாடியையும் ஒடுங்கச் செய்தார் கோலி. ஆஸ்திரேலியாவும் அவரது இன்னொரு குகை என இன்னுமொருமுறை இந்தப் போட்டியில் நிருபிக்கப்பட்டுள்ளது. 'King is Back to the throne' எனச் சொல்லாமல் சொல்ல வைத்தன அந்த இரு ஷாட்களும்.

இதயத்துடிப்பை எகிற செய்த கடைசி ஓவர்!

16 ரன்கள் தேவையென்ற இறுதி ஓவரில், எல்லா விசித்திரமான விஷயங்களும் நடந்தேறின. முதல் பந்தில் பாண்டியா ஆட்டமிழக்க, இரண்டாவது, மூன்றாவது பந்துகள் 1, 2 ரன்களைக் கொண்டு வந்தன. நான்காவது பந்து, கோலியால் சிக்ஸருக்குத் தூக்கப்பட்டது மட்டுமல்ல அது உயரத்திற்கான நோ பாலாகவும் மாறியது.

பதற்றம், குழப்பம் அத்தனையும் நொடிக்கு நொடி ஏற, அதுவே நவாஸை லைனை கோட்டை விட்டு வொய்ட் வீச வைத்தது. அதற்கடுத்த பந்தில் கோலி ஸ்டம்புகளைப் பறிகொடுக்க, பந்து தேர்டு மேன் திசையில் ஓடிக்கொண்டிருந்தது. ஃப்ரி ஹிட் என்பதால் மூன்று ரன்களை ஓடியே கடந்தது கோலி - கார்த்திக் ஜோடி. ஸ்ட்ரைக்கிற்கு தினேஷ் கார்த்திக் வர, அந்தப் பந்தில் அவர் ஸ்டம்ப் விக்கெட் கீப்பரால் காலி செய்யப்பட்டது.

இறுதிப் பந்தில் இரண்டு ரன்கள் வேண்டுமே, ஸ்ட்ரைக்கில் இருக்கும் அஷ்வின் என்ன செய்ய இருக்கிறாரோ என நினைத்தால் அது வொய்டாக வீசப்பட்டு ஸ்கோர் லெவலானது. அதைத் தொடாமல் லீவ் செய்த அஷ்வினின் டைமிங் பாராட்டத்தக்கது. இறுதிப் பந்தில் மிட் ஆஃபில் அடித்து அஷ்வின் தேற்றிய சிங்கிள் மூலமாக ஒரு வரலாற்று வெற்றியை இந்தியா பதிவு செய்தது. கோலியின் விஸ்வரூபம் அணியை எல்லாவற்றையும் இழந்து நிலையிலும் மீட்டெடுத்திருக்கிறது.

IND vs PAK | கோலி
IND vs PAK | கோலி
ICC

Once a King, always a King!

டி20-க்கு இனி அவர் உதவ மாட்டார், அணியில் அவருக்கு இனி இடம் கிடைப்பது கடினம் என்றெல்லாம் பல விமர்சனங்களை ஓரிரு மாதங்களுக்கு முன் கோலி கடந்திருந்தார். ஆனால், மிக தேவையான சமயத்தில், இக்கட்டான சூழலில் அவர் வீறுகொண்டு அடித்த இந்த 82 ரன்களின் மதிப்பை பல சதங்கள் சேர்ந்துதான் சமன் செய்ய வேண்டுமென்பதே உண்மை.

இறுதி 10 ஓவர்களில் 100 ரன்களுக்கு மேல் சேர்த்து அசர வைத்துள்ளது இந்திய அணி, அதுவும் பலமான பாகிஸ்தானின் பௌலிங் லைன் அப்பிற்கு எதிராக! இந்த வெற்றி, வீரர்களின் தன்னம்பிக்கையையும் பலமடங்காக்கி இருக்கிறது.