Published:Updated:

தொடரும் இந்தியாவின் ஆதிக்கம்... 1992 முதல் 2016 வரை - IND vs PAK போட்டிகள் ஒரு பார்வை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள்
இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள்

உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியாவை இதுவரை ஒரு முறை கூட பாகிஸ்தான் வீழ்த்தியதில்லை. அதிலும், டி20 உலகக்கோப்பையில் கடைசி மூன்று முறையும் சிரமமே இல்லாமல் இந்தியா வென்றுள்ளது. நாளை என்ன நடக்கும்?

இந்தியா - பாகிஸ்தான் பூகோள ரீதியாக ஓட்டிக்கொண்டிருக்கும் நாடுகள் என்றாலும் எதிரெதிர் துருவங்களாகவே முறுக்கிக் கொண்டிருக்கின்றன. அரசியல், ராஜாங்க ரீதியிலான உறவுகளில் மட்டுமில்லை. கிரிக்கெட்டிலும் இரு நாடுகளும் எதிரெதிர் துருவங்களே. இரண்டு அணிகளும் மோதும் போட்டிகள் விளையாட்டு என்கிற வரைமுறையை தாண்டி, இரு நாட்டு ராணுவ வீரர்கள் எல்லையில் நின்று தங்கள் நிலத்தைக் காக்கச் செய்யும் போராட்டத்தை போன்றே பாவிக்கப்படுகிறது. அதிலும் உலகக்கோப்பை என்றால் சொல்லவே வேண்டாம். அது சார்ந்து இரு அணி வீரர்கள் மத்தியில் உருவாகும் அழுத்தமும் பரபரப்பும், இரு நாட்டு ரசிகர்களிடம் பீறிட்டு எழும் தேசபக்தியும் உற்சாகமும் அளவிட முடியாதது.

நாளை (அக்டோபர் 24) டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் ஒரு முறை மோதவிருக்கின்றனர். நாடி நரம்பு முறுக்க... அரங்கம் மொத்தம் அதிர நடைபெறப்போகும் இந்தப் போட்டிக்கு முன்பாக, இதற்கு முன் உலகக்கோப்பையில் இரு அணிகளும் சந்தித்துக் கொண்ட நிகழ்வுகள் பற்றிய குட்டி ரீவைண்ட்.

ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை:

1992:

இந்தியா vs பாகிஸ்தான் - 1992
இந்தியா vs பாகிஸ்தான் - 1992

1975 லிருந்தே உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்று வந்தாலும் 1992-ம் ஆண்டுதான் இந்தியாவும் பாகிஸ்தானும் முதன்முதலாக உலகக்கோப்பை தொடரில் மோதிக்கொண்டன. இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் அணி, இந்த உலகக்கோப்பையை வென்றிருந்த போதும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோற்றிருக்கவே செய்தது. தனது முதல் உலகக்கோப்பை தொடரில் ஆடிய மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் அரைசதம் அடித்து அசத்தியிருப்பார். இந்தப் போட்டியில்தான் சர்ச்சை நாயகனான மியான்தத் இந்திய கீப்பரான கிரண் மோரேவை இமிட்டேட் செய்வதைப் போல களத்தில் துள்ளித் துள்ளி குதித்திருப்பார். இப்போதும் கூட இந்த வீடியோ பல நேரங்களில் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கும்.

1996:

1996 உலகக்கோப்பையில் காலிறுதி போட்டியில் இரண்டு அணிகளும் மோதியிருந்தன. பெங்களூருவின் சின்னச்சாமி மைதானத்தில் வைத்து நடைபெற்ற இந்தப் போட்டியில் நவ்ஜாத் சித்துவின் 93 ரன்கள் மற்றும் அஜய் ஜடேஜாவின் வெறித்தன அதிரடி ஃபினிஷிங்கால் இந்தியா 287 ரன்களை எடுத்திருக்கும். சேஸிங்கை பாகிஸ்தான் சிறப்பாகத் தொடங்கி 10 ஓவர்களில் 84 ரன்களை எடுத்திருக்கும். அமீர் சோஹைல் இந்திய பௌலிங்கை புரட்டியெடுத்திருப்பார். வெங்கடேஷ் பிரசாத்தை ஒரு பவுண்டரி அடித்துவிட்டு 'இனியும் இப்படித்தான் அடிப்பேன்' பார்த்துக்கொள் என்பதுபோல சோஹைல் சைகைக் காட்டியிருப்பார். மண்ணின் மைந்தனான வெங்கடேஷ் பிரசாத் அடுத்த பந்திலேயே ஆஃப் ஸ்டம்பை பறக்கவிட்டிருப்பார். இதன்பிறகு, மெதுவாக வீழ்ச்சியை நோக்கிப் பயணித்த பாகிஸ்தான் 39 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கும்.

இந்தியா vs பாகிஸ்தான் - 1996
இந்தியா vs பாகிஸ்தான் - 1996

1999:

இங்கிலாந்தில் நடைபெற்ற இந்த உலகக்கோப்பையில் சூப்பர் 6 சுற்றில் இரண்டு அணிகளும் மோதியிருக்கும். இந்தியா 57 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கும். இந்தப் போட்டியின் சூப்பர் ஹீரோவும் வெங்கடேஷ் பிரசாத்தே! 227 ரன்களை இந்திய அணி டிஃபண்ட் செய்ய வேண்டிய சூழலில் 27 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2003:

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியிருக்கும். இந்த தொடரிலும் பாகிஸ்தானை பதம் பார்க்கத் தவறவில்லை. இந்த முறை சச்சின் டெண்டுல்கர் தன் கரியரின் ஆகச்சிறந்த இன்னிங்ஸ்களின் ஒன்றை ஆடி இந்தியாவை வெல்ல வைத்திருந்தார். வாசிம் அக்ரம், சோயிப் அக்தர், வக்கார் யூனிஸ் என நெருப்பான பாகிஸ்தானின் பந்து வீச்சிற்கு எதிராக காயங்களோடு நின்று கர்ஜித்து 98 ரன்களை சச்சின் அடித்திருப்பார். அக்தரின் பந்தில் சச்சின் அடித்த அந்த அப்பர் கட் - இப்போதும் ரசிகர்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் அடிக்கடி பார்க்க முடியும்.

இந்தியா vs பாகிஸ்தான் - 2011
இந்தியா vs பாகிஸ்தான் - 2011

2011:

இந்தியாவில் நடைபெற்ற இந்த உலகக்கோப்பையின் அரையிறுதி போட்டியில் இரு அணிகளும் மோதியிருக்கும். சச்சினின் 85 ரன்களால் இந்தியா 261 ரன்களை பாகிஸ்தானுக்கு டார்கெட்டாக்கியிருக்கும். ஆவரேஜான ஸ்கோர்தான் என்பதால் இந்திய ரசிகர்கள் கொஞ்சம் பதற்றமாகவே இருந்தார்கள். ஆனால், இந்திய பௌலர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டிருப்பார்கள். ஜாகிர் கான், நெஹ்ரா, ஹர்பஜன் என இந்திய பௌலர்கள் அத்தனை பேருமே கட்டுக்கோப்பாக வீசியிருப்பார்கள். இந்தியர்களைப் பதற வைப்பதற்கென்றே பிறவியெடுத்து வந்த மிஸ்பா-உல்-ஹக் மட்டும் கொஞ்சம் வேடிக்கைக் காட்டியிருப்பார். மற்றபடி இந்தியா எந்தச் சிரமமும் இல்லாமல் இந்தப் போட்டியை வென்றிருக்கும்.

2015:

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்த உலகக்கோப்பையில் இரண்டு அணிகளும் தங்களது முதல் போட்டியிலேயே நேருக்கு நேர் மோதின. இந்தப் போட்டியின் சூப்பர் ஸ்டார் கிங் கோலியே. பாகிஸ்தானின் பலமிக்க பௌலிங்க் அட்டாக்கை நேர்த்தியாக எதிர்கொண்டு 126 பந்துகளில் 107 ரன்களை எடுத்திருப்பார். தவானும் ரெய்னாவும் அரைசதம் அடித்திருப்பர். சேஸ் செய்த பாகிஸ்தான் அணியில் வழக்கம்போல மிஸ்பா-உல்-ஹக் ஆறுதல் இன்னிங்ஸ் மட்டுமே ஆடியிருப்பார். பாகிஸ்தான் தோற்றுப்போனது.

இந்தியா vs பாகிஸ்தான் - 2015
இந்தியா vs பாகிஸ்தான் - 2015
AP

2019:

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பல்வேறு அரசியல் களேபேரங்களுக்கு மத்தியில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதின. தோனி தன்னுடைய க்ளவுஸில் ராணுவ முத்திரையை பொறித்து வந்து பரபரப்பாக்கியிருந்தார். இந்தப் போட்டியையும் வழக்கம்போல இந்தியாவே வென்றிருந்தது. இந்தியாவின் டாப் ஆர்டர் வெளுத்துக் கட்டியிருந்தது. ரோஹித் சர்மா 140 ரன்களை அடிக்க, ராகுலும் கோலியும் அரைசதம் அடித்திருப்பார்கள்.

ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் 7 முறை மோதியிருக்கிறார்கள். 7 முறையும் இந்தியாவே வென்றிருக்கிறது. டி20 உலகக்கோப்பையிலும் இதே கதைதான். முழுக்க முழுக்க இந்தியாவே ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது.

டி20 உலகக்கோப்பை

2007:

இந்தியா vs பாகிஸ்தான் - 2007
இந்தியா vs பாகிஸ்தான் - 2007

அறிமுக டி20 உலகக்கோப்பை தொடரான இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு முறை மோதியிருந்தனர். லீக் போட்டியில் இரண்டு அணிகளும் மோதிய ஆட்டம் டை ஆக முடிந்திருக்கும். முடிவைத் தீர்மானிக்க வைக்கப்பட்ட பௌல்அவுட் முறையில் சேவாக், உத்தப்பாவையெல்லாம் வைத்து இந்தியா ஸ்டம்ப்பைத் தெறிக்கவிட, பாகிஸ்தானிலோ உமர் குல், அஃப்ரிடி போன்றோரே ஸ்டம்பைத் தவறவிட்டிருப்பர்.

இரண்டு அணிகளும் சிறப்பாக ஆடி மீண்டும் இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் சந்தித்தன. கம்பீர் 75 ரன்கள் அடித்து பொறுப்பாக ஆடிக்கொடுத்த இன்னிங்ஸால் இந்திய அணி 157 ரன்களை எடுத்திருக்கும். சேஸிங்கில் மிஸ்பா-உல்-ஹக் மீண்டும் இந்திய ரசிகர்களை டென்ஷனாக்கி கொண்டிருக்க, ஒரு வழியாக தோனியின் 'I had other ideas' சம்பவம் அரங்கேறி ஜோஹிந்தர் சர்மா வீசிய கடைசி ஓவரில் மிஸ்பா அவுட் ஆக இந்தியா உலகக்கோப்பையை வென்றிருக்கும்.

2012:

இலங்கையில் நடைபெற்ற இந்த உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் இரண்டு அணிகளும் மோதியிருந்தன. பெரிய விறுவிறுப்புகள் எதுவும் இன்றி ஒன் சைடு மேட்ச்சாகவே இது முடிந்திருந்தது. பௌலிங்கில் தமிழக வீரர் பாலாஜி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார். இந்தியாவிற்கு டார்கெட் 129. கோலி 61 பந்துகளில் 78 ரன்கள் அடித்து மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடியிருப்பார்.

2014:

பங்களாதேஷில் நடைபெற்ற இந்த உலகக்கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே க்ரூப்பில் இடம்பெற்றிருந்த செய்தியே பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் உருவாக்கியிருந்தது. ஆனால், அந்தச் செய்தி ஏற்படுத்திய பரபரப்பை போட்டி ஏற்படுத்தவில்லை. ஒன்சைடு மேட்ச்சாக இந்தியாவே வென்றது. மிஷ்ரா, ஜடேஜா இருவரும் சுழலில் மிரட்டியிருந்தனர். இந்தப் போட்டியிலும் 36 ரன்களை எடுத்து கோலியே ஹை ஸ்கோரர்.

இந்தியா vs பாகிஸ்தான் - 2016
இந்தியா vs பாகிஸ்தான் - 2016
ICC

2016:

இந்தியாவில் நடைபெற்ற இந்த உலகக்கோப்பையில் லீக் சுற்றில் இரண்டு அணிகளும் மோதியிருந்தனர். கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மழை குறுக்கிட்டு தனி கேம் ஆடியது. போட்டி 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதிலும் பாகிஸ்தான் சுமாராகவே ஆடியது. இந்தியாவிற்கு டார்கெட் 119 தான். கோலியின் அரைசதத்தால் அதை 16 வது ஓவரிலேயே இந்திய அணி வெற்றியை எட்டிப்பிடித்தது.

உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியாவை இதுவரை ஒரு முறை கூட பாகிஸ்தான் வீழ்த்தியதில்லை. அதிலும், டி20 உலகக்கோப்பையில் கடைசி மூன்று முறையும் சிரமமே இல்லாமல் இந்தியா வென்றுள்ளது. நாளை என்ன சம்பவம் நிகழப்போகிறது? வரலாறு திரும்புமா? இல்லை பாகிஸ்தான் புது வரலாறை எழுதுமா? காத்திருப்போம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு