ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது.
இந்த உலகக்கோப்பையை வெல்வதற்காகப் பல சர்வதேச அணிகள் முழுமூச்சுடன் தயாராகி வருகின்றன. இதுவரை இந்தியாவில் 1987, 1996, மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற்று இருக்கிறது. அதில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றி வரலாறு படைத்தது.

அதன் பிறகு நடந்த எந்தவொரு ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றவில்லை. இதனால் இந்த ஆண்டு சொந்த மண்ணில் நடக்கும் இந்த உலகக்கோப்பையை வென்றுவிட வேண்டும் என்று இந்திய அணி முனைப்புக் காட்டிவருகிறது.
இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாட்டு அணிகள் பங்கேற்க உள்ள இந்தத் தொடர் அக்டோபர் 5-ம் தேதி தொடங்கி நவம்பர் 19-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும் என்று ஏற்கெனவே தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தற்போது இந்தப் போட்டிகளை இந்தியாவில் எந்தெந்த மைதானங்களில் நடத்துவது என்பது குறித்து ஐசிசி ஆலோசித்து வருவதாகவும், அதில் ஐசிசி தேர்வு செய்துள்ள மைதானங்களில் சென்னை, பெங்களூர், அகமதாபாத், மும்பை, நாக்பூர், டெல்லி, லக்னோ, கவுகாத்தி, ஹைதராபாத், ராஜ்கோட், கொல்கத்தா, திருவனந்தபுரம், இந்தூர், தர்மசாலா ஆகிய மைதானங்கள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் மற்ற அணிகளுடன் மோதும் போட்டிகள் சென்னை மற்றும் பெங்களூர் மைதானங்களில் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.