Published:Updated:

IND v NZ: ஏறக்குறைய `நாக் அவுட்'... இந்தியா அரையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசமாக்க என்ன செய்யவேண்டும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ரவி சாஸ்திரி - கோலி - தோனி - ரோஹித்
ரவி சாஸ்திரி - கோலி - தோனி - ரோஹித்

2003க்கு பிறகு, ஐ.சி.சி தொடர்களில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தியதே இல்லை. 2007 மற்றும் 2016 டி20 உலகக்கோப்பை டி20 தொடர்கள் இரண்டிலுமே இந்திய அணி நியூசிலாந்திடம் வீழ்ந்திருக்கிறது.

உலகக்கோப்பை டி20 தொடரில் பாகிஸ்தான் ஏறக்குறைய அரையிறுதிக்கு தகுதிப்பெற்றுவிட்ட நிலையில், வங்கதேசம் ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், இந்தியாவும் நியூசிலாந்தும் இப்போதுதான் தங்களது இரண்டாவது போட்டியில் ஆடவிருக்கின்றனர். சூப்பர் 12 சுற்றின் முக்கியமான கட்டத்தில் நடைபெறும் மிக முக்கியமான போட்டியாக இது அமைந்திருக்கிறது. இந்த போட்டியில் வெல்லும் அணிக்கு அரையிறுதிக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். தோல்வியுறும் அணி கால்குலேட்டரும் கையுமாக மற்ற அணிகளின் முடிவை நம்பியிருக்கும் சூழலுக்கு தள்ளப்படும். எனவே, ஏறக்குறைய ஒரு நாக்அவுட்டாகக்கூட இந்தப் போட்டியை எடுத்துக் கொள்ளலாம்.

இந்தியா - நியூசிலாந்து இரண்டு அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகளாக இருந்தாலும் ஐ.சி.சி தொடர்களில் இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்து அணியே அதிக ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது.

2003 க்கு பிறகு, ஐ.சி.சி தொடர்களில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தியதே இல்லை. 2007 மற்றும் 2016 டி20 உலகக்கோப்பை டி20 தொடர்கள் இரண்டிலுமே இந்திய அணி நியூசிலாந்திடம் வீழ்ந்திருக்கிறது.
WTC | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
WTC | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
twitter.com/BCCI

'அவங்க ரொம்ப நல்லவங்கப்பா' என இந்தியாவிலேயே நியூசிலாந்துக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. ஆனால், இந்தியாவிற்கு சமீபமாக அடி மேல் அடி கொடுத்து முக்கியமான கட்டங்களில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருப்பது நியூசிலாந்துதான். 2019 ஓடிஐ உலகக்கோப்பையின் அரையிறுதியில் இந்தியாவிற்கு மறக்க முடியாத தோல்வியை பரிசளித்திருந்தது. இந்த ஆண்டில் ஜுன் மாதத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் மீண்டும் ஒரு மரண அடியை இந்தியாவிற்குக் கொடுத்திருந்தது. இந்த டி20 உலகக்கோப்பையில் மீண்டும் ஒரு முறை மிகமிக முக்கியமான ஒரு போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன. நியூசிலாந்து வழக்கம்போல சைலண்ட்டாக சம்பவம் செய்யுமா? அல்லது இந்தியா ரிவீட் அடிக்குமா?

டாஸ்:

இந்த உலகக்கோப்பை தொடரில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் டாஸின் பங்கு பெரிதாக இருக்கிறது. இதுவரை இந்தத் தொடரில் அதிகமாக டார்கெட்டை சேஸ் செய்த அணிகளே வென்றிருக்கின்றன.

குறிப்பாக, இந்தியா Vs நியூசிலாந்து போட்டி நடைபெற இருக்கும் துபாய் மைதானத்தில், சூப்பர் 12 சுற்றில் மட்டும் இதுவரை 6 போட்டிகள் நடந்திருக்கின்றன. இந்த 6 போட்டியிலுமே சேஸ் செய்த அணிகளே வென்றிருக்கின்றன.

டாஸை வென்று சேஸிங்கைத் தேர்வு செய்யும் அணி அங்கேயே பாதி வெற்றியை உறுதி செய்துவிடுகிறது. இதற்கு, துபாய் பிட்ச் முழுக்க முழுக்க பேட்டிங்கிற்குச் சாதகமாக இருப்பது ஒரு காரணம். மேலும் ஸ்கோரை டிஃபண்ட் செய்யும்போது பனியின் தாக்கத்தினால் பௌலர்கள் கண்ட்ரோலை இழப்பதும் முக்கிய காரணமாக இருக்கிறது.

டாஸ்
டாஸ்

கோலிக்கும் டாஸுக்கும் எப்போதும் பெரிதாக ஒத்துப்போவதில்லை. பெரும்பாலான போட்டிகளில் டாஸ் இந்திய அணிக்கு எதிராகத்தான் அமையும். அதில், குறை சொல்ல ஒன்றுமில்லை. ஆனால், டாஸை வெல்லும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதே நிதர்சனம். ஒருவேளை நியூசிலாந்து டாஸை வென்று இந்தியா முதலில் பேட் செய்ய நேர்ந்தாலும் இந்திய அணி அந்த சவாலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கோலி ப்ரஸ்மீட்டில் பேசியுள்ளார்.

முதலில் பேட் செய்யும் அணிகள் அதிகபட்சமான ஒரு டார்கெட்டை மனதில் வைத்துக் கொண்டு அதை சேஸ் செய்வதை போல ஆடினால் நிச்சயம் பெரிய ஸ்கோரை அடிக்க முடியும். சேஸ் செய்யும் அணிகளுக்கு அழுத்தத்தையும் கொடுக்க முடியும்.
ஹர்ஷா போக்லே

என ஹர்ஷா போக்லே போட்டிக்கு பிறகான நிகழ்ச்சியொன்றில் பேசியிருப்பார். இந்திய அணி முதலில் பேட் செய்யும்பட்சத்தில் ஹர்ஷாவின் தியரியை அப்ளை செய்தாக வேண்டும். பந்துவீச்சில் இந்திய அணிக்கு இருக்கும் குறைகள் ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாதெனில் பேட்ஸ்மேன்கள் கூடுதல் சிரத்தையுடன் ஆடியே ஆக வேண்டும். ஒருவேளை அதிர்ஷ்டவசமாக கோலி டாஸை வென்று சேஸிங்கைத் தேர்வு செய்துவிட்டால் அதுவே இந்திய அணிக்கு பெரிய சாதகமான அம்சமாக இருக்கும்.

6 வது பௌலர்:

6 வது பௌலர் யார்? இதுதான் இந்திய அணி சமீபமாக அதிகமாக எதிர்கொள்ளும் கேள்வி. ஆல்ரவுண்டராக களமிறங்கி வந்த ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக பந்து வீசாமல் முழுமையான பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடி வந்தார். இதனால் கூடுதலாக ஒரு பௌலிங் ஆப்சன் கூட இல்லாமல் சரியாக 5 பௌலர்களுடனேயே இந்திய அணி களமிறங்கி வந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு இதுவும் மிகமுக்கிய காரணமாக இருந்தது. ஹர்திக் பாண்டியா பந்துவீசுவாரா மாட்டாரா என்பதில் ஒரு தெளிவின்மை இருந்ததை முன்னாள் வீரர்கள் பலருமே கேள்வி கேட்டிருந்தனர். இந்நிலையில்,

இரண்டு நாள்களுக்கு முன்பு வலைப்பயிற்சியில் ஹர்திக் பாண்டியா பந்துவீசுவதை போன்ற புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டிருந்தது. கோலியுமே நேற்றைய ப்ரஸ் மீட்டில் ஹர்திக் பாண்டியா ஒன்று அல்லது இரண்டு ஓவர்களை வீச வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா
BCCI

இது அணிக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்கும். ஒரு பௌலர் இரக்கமேயின்றி அடி வாங்கும்போது இளைப்பாறுவதற்காக ஓவரை கட் செய்துவிட்டு ஹர்திக்கின் கையில் கொடுக்கலாம். மேலும், ஹர்திக் சமீபத்தில் இங்கிலாந்து, இலங்கை தொடர்களில் சிறப்பாகவே பந்துவீசியிருக்கிறார்.

6-வது பௌலர் யார்? ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டரா? ரவி சாஸ்திரி - கோலி - தோனியின் கேம்ப்ளான் என்ன?!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

6 வது பௌலிங் ஆப்ஷன் என்பது இந்தியாவிற்கு மட்டுமில்லை நியூசிலாந்துக்கும் பிரச்னைதான். டிம் சவுத்தி, ட்ரெண்ட் போல்ட், ஜேம்ஸ் நீஷ்ம், சாண்ட்னர், சோதி என 5 பௌலர்களுடனேயே பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கி தோற்றிருந்தது. 6 வது பௌலிங் ஆப்ஷன் என அவர்களுக்கும் பெரிதாக யாரும் இல்லை. ஓப்பனர் மிட்செல், க்ளென் பிலிப்ஸ் போன்றோரும் 6 வது பௌலர் எனச் சொல்லும் அளவுக்கான வீரர்கள் கிடையாது. ஒரு பேட்ஸ்மேனை இழந்து கூடுதலாக ஒரு பௌலருடன் நியூசிலாந்து களமிறங்கும் வாய்ப்பும் இருக்கிறது.

ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு உண்டா?

ஷர்துல் தாக்கூர் சமீபமாக உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறார். இங்கிலாந்து தொடரில் கலக்கியிருந்தார். ஐபிஎல்-இல் இரண்டாம் பாதியில் மட்டும் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். கடைசி நேரத்தில் அக்சர் படேலை நீக்கிவிட்டு ஷர்துலை அணிக்குள் கொண்டு வந்தனர். ஷர்துலின் விக்கெட் எடுக்கும் திறனே அவரது பலம். பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் தோல்வியை விட அந்தத் தோல்வி ஏற்பட்ட விதமே வருத்தமளிக்கும் விஷயமாக இருந்தது. இந்திய பௌலர்களால் ஒரு விக்கெட்டை கூட எடுத்திருக்க முடியவில்லை. இந்த மாதிரியான சமயங்களில்தான் ஷர்துல் தாக்கூர் உபயோகப்படுவார்.

இந்த இரண்டாம் பாதி ஐபிஎல் சீசனில் அவர் எடுத்த 16 விக்கெட்டுகளில் பெரும்பாலானவை இப்படியான இக்கட்டான சூழலில், விக்கெட்டே விழாத நிலையில் விக்கெட் கட்டாயம் வேண்டும் என்ற நிலையில் வந்தவை.
ஷர்துல் தாக்கூர்
ஷர்துல் தாக்கூர்

அதனால் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் ஷர்துல் தாக்கூர் இருந்தால் கூடுதல் பலமாக இருக்கும். ஆனால், யாரை நீக்கிவிட்டு அவரை உள்ளே கொண்டு வர முடியும்? புவனேஷ்வர் குமாரின் சமீபத்திய ஃபார்ம் ரொம்ப சுமாராகத்தான் இருக்கிறது. கடைசி ஐபிஎல் சீசனில் 6 விக்கெட்டுகளை மட்டும்தான் வீழ்த்தியிருக்கிறார். ஆனால், அவர் இல்லாவிடில் பந்தை பவர்ப்ளேயில் ஸ்விங் செய்வது யார் என்ற கேள்வி வரும். பும்ரா, ஷமி இருவரின் மீதும் கை வைக்க முடியாது. இந்த விஷயத்தில் கோலி எடுக்கும் முடிவு சர்ப்ரைஸாக இருக்கக்கூடும்.

பேட்டிங்:

கடந்த போட்டியில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ் என டாப் ஆர்டர் மொத்தமாக சொதப்பியிருந்தது. இது எப்போதாவது நடைபெறும் அரிய சம்பவம். ஆனால், அந்த அரிய சம்பவத்தை மீண்டும் நிகழ்த்திக் காட்டுவேன் என ட்ரென்ட் போல்ட் சவால் விடுத்துள்ளார்.

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் ஷாகின் ஷா அஃப்ரிடி என்ன செய்தாரோ அதை அப்படியே நானும் செய்ய முயல்வேன் என ட்ரென்ட் போல்ட் கூறியுள்ளார்.
போல்ட் - கோலி
போல்ட் - கோலி

இடக்கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்திய வீரர்கள் எப்போதும் திணறியிருக்கவே செய்கின்றனர். இந்த போட்டியிலும் பவர்ப்ளேயில் ட்ரென்ட் போல்ட வீசப்போகும் 2-3 ஓவர்கள் மிக முக்கியமானதாக இருக்கும். நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் ஸ்பின்னர்களுக்கு எதிராக குறைவான ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருந்த வீரர்களில் கோலியும் ராகுலும் இடம்பிடித்திருந்தார். நியூசிலாந்து அணியின் லெக் ஸ்பின்னரான இஷ் சோதிக்கு எதிராக இருவரின் ரெக்கார்டுகளும் ரொம்பவே மோசமாகத்தான் இருக்கிறது. இந்த விஷயத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஸ்கோரை சேஸ் செய்யும்பட்சத்தில் போட்டி கடைசி வரை செல்ல வாய்ப்பிருக்கிறது. போட்டியை வெற்றிகரமாக முடித்து வைக்கும் பொறுப்பு ஜடேஜாவுக்கும் ஹர்திக் பாண்டியாவுக்குமே இருக்கிறது. ஜடேஜா சென்னை அணிக்கு செய்ததை இந்திய அணிக்கும் செய்தாக வேண்டும். ஹர்திக் பாண்டியா தன்னை நிரூபிப்பதற்காகவாது சிறப்பாக ஆடியாக வேண்டும்.

நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கு முன்பாக இந்திய அணி கவனிக்க வேண்டிய விஷயங்கள் இவையே.

"காரியம் துணை" எனக் களத்தில் பேசும் கேமியோ நாயகன்... பினிஷர் ஆசிஃப் அலியின் சக்சஸ் ஸ்டோரி!

இந்தியா இந்தப் போட்டியை வென்றால்..?

இந்தப் போட்டியை இந்தியா வென்றுவிடும்பட்சத்தில் ஸ்காட்லாந்து, நமீபியாவுடனான போட்டிகளை இந்தியா எளிதில் வெல்லக்கூடும். ஆப்கானிஸ்தான் போட்டி போட்டாலும் இந்தியா வெல்வதற்கான வாய்ப்பே அதிகம். 4 போட்டிகளில் வெற்றி என்றால் அரையிறுதி நிச்சயம்.

இந்தியா தோல்வியுற்றால்..?

ஒருவேளை இந்தப் போட்டியில் இந்தியா தோற்கும்பட்சத்தில் சிக்கல் ஏற்படும். நியூசிலாந்தை ஆப்கானிஸ்தான் அப்செட் செய்தே ஆக வேண்டும். அப்படி அப்செட் செய்துவிட்டால் நியூசிலாந்து, ஆகானிஸ்தான், இந்தியா எல்லாம் ஒரே நிலையில் இருக்க வாய்ப்புண்டு. அப்படியான சூழலில் ரன்ரேட் அடிப்படையில் ஆப்கானிஸ்தானே அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு அதிகம் இருக்கும். ஒருவேளை ஆஃப்கானிஸ்தான் நியூசிலாந்திடம் வீழ்ந்தால் எந்தப் பிரச்னையுமின்றி நியூசிலாந்து அரையிறுதிக்கு செல்லும்.

எது எப்படியோ, இந்தியா நியூசிலாந்துக்கு எதிரான இந்தப் போட்டியை வென்றுவிட்டால் இந்தக் கணக்குகளுக்கெல்லாம் பெரிதாக வேலை இருக்காது. அதனால்தான் இது ஒரு நாக்அவுட் போட்டி அளவிற்குப் பார்க்கப்படுகிறது. இந்தியா வெல்லுமா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு