Published:Updated:

NZ v IND: குறுக்கிட்ட மழை; சமனில் முடிந்த ஆட்டம்; ஹர்திக் பாண்டியா தலைமையில் தொடரை வென்ற இந்திய அணி!

Toss ( ICC )

9 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய அணி 75 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.

NZ v IND: குறுக்கிட்ட மழை; சமனில் முடிந்த ஆட்டம்; ஹர்திக் பாண்டியா தலைமையில் தொடரை வென்ற இந்திய அணி!

9 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய அணி 75 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.

Published:Updated:
Toss ( ICC )
நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. தொடரின் முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்த டி20 தொடரின் மூன்றாவது கடைசிப் போட்டி இன்று, நியூசிலாந்தில் உள்ள மெக்லீன் பார்க், நேப்பியர் மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சௌதி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். கடந்த போட்டியில் கேன் வில்லியம்சன் கேப்டனாகச் செயல்பட்டார். இந்தப் போட்டியில் அவர் விளையாடவில்லை.

Conway
Conway
ICC

நியூசிலாந்து அணியின் ஃபின் ஆலன், கான்வே தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரில் அர்ஷ்தீப் சிங் பந்தில் ஃபின் ஆலன், 3 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய மார்க் சாப்மேன் 12 ரன்கள் (12 பந்துகள்) எடுத்து சிராஜ் ஓவரில் ஆட்டமிழந்தார். தொடக்கத்திலிருந்தே நிதானமாகத்தான் விளையாடியது நியூசிலாந்து அணி. அடுத்து களமிறங்கிய கிலென் பிலிப்ஸ், கான்வேயுடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ரன்ரேட்டை உயர்த்தினர். இருவருமே அரை சதம் கண்டனர்.

15.5 ஆவது ஓவரில் அணியின் ஸ்கோர் 130 ரன்களாக இருந்தபோது கிலென் பிலிப்ஸ், 54 ரன்கள் (33 பந்துகள்) எடுத்து சிராஜ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் 16.4 ஓவரில் சிறப்பாக விளையாடி வந்த கான்வே 59 ரன்கள் (49 பந்துகள்) எடுத்து அர்ஷ்தீப் சிங் ஓவரில் ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழக்கும் போது, அணியின் ஸ்கோர் 4 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களாக இருந்தது. கான்வே மற்றும் கிலென் பிலிப்ஸ் இவர்களின் விக்கெட்டுகள் ஆட்டத்தின் போக்கையே மாற்றின.

இவர்களுக்குப் பின் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். நீஷம் ஒரு ரன்கூட எடுக்காமல் வெளியேறினார். சான்ட்னர் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். டேரில் மிட்செல் 10 ரன்கள் (5 பந்துகள்) மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். மில்னே மற்றும் இஷ் சோதி ஒரு ரன்கூட எடுக்கவில்லை. டிம் சௌதி 6 ரன்கள் (5 பந்துகள்) எடுத்து ஆட்டம் இழந்தார். லாக்கி பெர்குசன் 5 ரன்கள் எடுத்திருந்தார்.

இறுதியில், 19.4 ஓவரில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்கள் எடுத்திருந்தது.

இந்திய அணி
இந்திய அணி
ICC
அதிகபட்சமாக இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங் மற்றும் சிராஜ் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஹர்சல் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கினர், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பண்ட். இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரில், இஷான் கிஷன் 10 ரன்கள் (11 பந்துகள்) மட்டுமே எடுத்து மில்னே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். அடுத்த ஓவரில், ரிஷப் பண்ட் 11 (5 பந்துகள்) ரன்களுடன் டிம் சௌதி பந்து வீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். இவர் விக்கெட்டுக்குப்பின் இந்திய அணி, 2.5 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது.

ஆனால், அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா அணியின் ரன்ரேட்டை உயர்த்தினார். கடந்த போட்டியில் சதம் அடித்த சூர்யகுமார் யாதவ் 7வது ஓவரில், 13 ரன்கள் (10 பந்துகள்) மட்டுமே எடுத்து இஷ் சோதி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்த நிலையிலும், ஹர்திக் பாண்டியா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மழை
மழை
ICC

9 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 75 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. டிம் சௌதி 2 விக்கெட்டுகளும், ஆடம் மில்னே, இஷ் சோதி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியிருந்தனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை தொடர்ந்ததால், டக்வோர்த் லீவிஸ் (DLS) விதிமுறையின் படி ஆட்டம் சமன் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 1-0 என்ற புள்ளியின் அடிப்படையில், மூன்று டி20 போட்டிகள் அடங்கிய இத்தொடரை இந்திய அணி வென்றிருக்கிறது.

இந்தப் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய முகமது சிராஜ் ஆட்டநாயகனாகவும், இந்தத் தொடர் முழுக்கவே தனது சிறப்பான பேட்டிங் திறனை வெளிப்படுத்திய சூர்யகுமார் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.