Published:Updated:

IND vs NZ | சதத்தால் நிரூபித்த மயங்க்... சர்ச்சையான முறையில் பறிபோன கோலியின் விக்கெட்!

Mayank Agarwal - Ind vs Nz

நியூசிலாந்தின் பந்துவீச்சை பொறுத்தவரையில் தனது பிறந்த மண்ணில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் அஜாஸ் படேல்.

IND vs NZ | சதத்தால் நிரூபித்த மயங்க்... சர்ச்சையான முறையில் பறிபோன கோலியின் விக்கெட்!

நியூசிலாந்தின் பந்துவீச்சை பொறுத்தவரையில் தனது பிறந்த மண்ணில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் அஜாஸ் படேல்.

Published:Updated:
Mayank Agarwal - Ind vs Nz
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியுள்ளது. போட்டி நாளன்று மழையின் பாதிப்பிருக்கும் என்று முன்னரே கணிக்கப்பட்டிருந்த நிலையில் ஆடுகளத்தின் ஈரப்பதம் காரணமாக இன்றைய முதல் செஷன் முழுவதுமே பாதிப்புக்குள்ளானது.

11 மணிக்கு பிறகே போடப்பட்ட டாஸை ஆச்சர்யமளிக்கும் விதத்தில் வென்ற கேப்டன் கோலி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். கோலியின் வருகையால் பெஞ்சில் உட்காரவைக்கப்படும் வீரர் யார் என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்த நிலையில் மொத்தம் மூன்று மாற்றங்களைச் செய்திருந்தது இந்திய அணி. முதல் ஆட்டத்தில் விக்கெட் எடுக்காத இஷாந்த் ஷர்மா, தொடர்ந்து சொதப்பி வரும் ரஹானே மற்றும் ஜடேஜா ஆகிய மூவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக கேப்டன் கோலி வழக்கம்போல காரணம் கூற ஜெயந்த் யாதவ் மற்றும் சிராஜ் அணிக்கு அழைக்கப்பட்டனர். நியூசிலாந்தை பொறுத்தவரையில் கேப்டன் வில்லியம்சனுக்குக் காயம் ஏற்படவே டாம் லாதம் அணியை வழிநடத்தினார்.

முதல் ஆட்டத்தின் இரு இன்னிங்ஸ்களிலும் சொதப்பியிருந்த மயங்க் அகர்வால் மிகுந்த நெருக்கடிக்கிடையில் இவ்வாட்டத்தில் களமிறங்கினார். ஆனால் தொடக்கத்தில் இருந்தே எதிரணி பந்து வீச்சாளர்களை எந்தப் பதற்றமும் இன்றி மிக நேர்த்தியாக எதிர்கொண்டார் மயங்க். மறுமுனையில் தன் முதல் ஓவரிலேயே மூன்று பவுண்டரிகளை அடித்து தன் இன்னிங்ஸை தொடங்கினார் கில். இருவரும் மிக சிறப்பாக ஆட முதல் 25 ஓவர்களை விக்கெட் இழப்பின்றி கடந்திருந்தது இந்தியா. ஆனால் அடுத்த சில ஓவர்களிலேயே அஜாஸ் படேல் ஓவரில் தன் விக்கெட்டை இழந்தார் கில்.

Shubman Gill-Mayank Agarwal
Shubman Gill-Mayank Agarwal

இதோடு நிறுத்திவிடாமல் புஜாரா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரது விக்கெட்டுகளையும் அடுத்த ஓவரிலேயே சாய்த்து அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் அஜாஸ். ஸ்பின்னர் பந்துவீசுகையில் வழக்கமாக ஆடும் டவுன் தி க்ரீஸ் டிஃபன்ஸை புஜாரா ஆட பந்து அவரின் பேடில் பட்டு ஸ்டெம்பை சாய்த்தது. அடுத்து களமிறங்கிய கோலியும் தனது வழக்கமான ஃப்ரண்ட்-ஃபூட் டிஃபன்ஸ் ஆட LBW முறையில் ஆட்டமிழந்தார்.

நடுவரின் தீர்ப்பை பரிசீலிக்க மூன்றாவது நடுவரிடம் முறையிட்டார் கோலி. ஹாட் ஸ்பாட்டில் பந்து பேட்டிற்கும் பேடிற்கும் இடையில் ஒரே நேரத்தில் செல்வது போல காட்சியளித்தது. ஃப்ரண்ட் கேமிராவிலும் பந்து முதலில் பட்டது பேட்டிலா லெக்-பேடிலா என்பதற்கான போதிய சாட்சியம் இல்லாததால் கள நடுவரின் தீர்ப்பையே மீண்டும் அறிவித்தார் மூன்றாம் நடுவர். இத்தீர்ப்பினால் மிகுந்த ஏமாற்றமடைந்த கோலி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியவாறே பெவிலியன் திரும்பினார்.
Controversial dismissal of Virat Kohli
Controversial dismissal of Virat Kohli

அவர்கள் இருவருமே ரன் கணக்கை தொடங்காமலேயே வெளியேறியதால் 80-0 என்றிருந்த இந்திய அணியின் ஸ்கோர் அடுத்த இரண்டே ஓவர்களில் 80-3 என்றானது. அடுத்து களமிறங்கியவர் முதல் டெஸ்டின் நாயகன் ஷ்ரேயாஸ் ஐயர். அவரும் 18 ரன்களில் ஏமாற்ற மறுமுனையில் நங்கூரமாய் நின்றார் மயங்க் அகர்வால். மயங்க்-ஷ்ரேயாஸ் இணைந்து 80 ரன்களை சேர்ந்திருந்தாலும் அதில் 75 சதவிகித ரன்களை அடித்தவர் மயங்க். ஷ்ரேயாஸுக்கு பிறகு கீப்பர் சஹாவுடன் இணைந்து மற்றுமொரு பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க தொடங்கினார் அவர்.

கிரீஸுக்கு வெளியே ஸ்டான்ட்ஸ் எடுத்து ஸ்விங்கை சமாளித்தது, பவுண்டரிகள் மட்டுமின்றி அவ்வப்போது சிக்ஸர்களையும் பறக்கவிட்டு பௌலர்களின் நம்பிக்கையை குலைத்தது என இன்றைய நாளில் அனைத்தையும் மிக சிறப்பாக செய்த மயங்க் தன் நான்காவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். நியூசிலாந்தின் பந்துவீச்சை பொறுத்தவரையில் தனது பிறந்த மண்ணில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் அஜாஸ் படேல்.

இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 221-4. மயங்க் 120 ரன்களுடனும் சஹா 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மூன்றாவது நாளின் இறுதியில்தான் ஆடுகளம் சுழற்பந்துவீச்சிற்கு சாதகமாக மாறும் என்று முதலில் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் முதல் நாளான இன்றே ஆடுகளம் ஸ்பின்னுக்கு மாறிவிட்டது. முதல் இன்னிங்ஸில் நல்ல ஸ்கோரை எட்டி நியூசிலாந்து பேட்டர்களுக்கு எதிராக தொடக்கத்திலிருந்தே ஸ்பின் அட்டாக்கை இந்திய அணி தொடங்கக்கூடும்.