Published:Updated:

மாஃபியா நியூசிலாந்தும் மரண அடி ஷெஃபாலியும்... கடைசி ஓவரில் த்ரில் கூட்டி, கெத்துகாட்டிய இந்தியா! #INDVsNZ

#INDVsNZ T20
#INDVsNZ T20

ஆஸ்திரேலியா, வங்கதேசத்தை எளிதில் தோற்கடித்த இந்தியா வலுவான நியூசிலாந்துடன் கடைசி ஓவரின் கடைசிப் பந்து வரை சென்று த்ரில் வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

மெல்போர்னின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் சோஃபி டிவைன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த உலகக்கோப்பையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக டாஸில் தோற்ற இந்தியா தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலில் பேட் செய்தது.

கடந்த ஆட்டத்தில் காய்ச்சல் காரணமாக விளையாடாத ஸ்மிருத்தி மந்தனா இந்த ஆட்டத்தில் களமிறங்கியதால் அவருக்கு பதிலாகச் சேர்க்கப்பட்டிருந்த ரிச்சா கோஷ் நீக்கப்பட்டிருந்தார். மேலும், வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி ரெட்டிக்குப் பதிலாக இடக்கை ஆஃப் ஸ்பின்னர் ராதா யாதவ் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார்.

#INDVsNZ T20
#INDVsNZ T20

`பவர்ரேஞ்சர்' ஷெஃபாலியும் ஸ்மிருத்தி மந்தனாவும் ஓப்பனிங் இறங்க முதல் ஓவரை வேகப்பந்து வீச்சாளர் டஹூகு வீசினார். முதல் ஓவரில் மந்தனா ஒரு பவுண்டரி அடிக்க அடுத்து மயர் வீசிய இரண்டாவது ஓவரில் ஷெஃபாலி மந்தனா இருவரும் ஆளுக்கொரு பவுண்டரி அடித்து சியர்ஸ் சொல்ல நியூஸி பௌலர்களுக்கு குப்பென்று வியர்க்கத் தொடங்கியது. இங்கே `அடிச்சா சிக்ஸர்தான்' என ஒற்றைக்காலில் ஷெஃபாலி ஒரு பக்கமும் மந்தனா ஒரு பக்கமும் நிற்க பவர்ப்ளேயில் இந்தியா எப்படியும் 60-ஐ தாண்டிவிடும் என நினைத்துக்கொண்டிருக்கும்போதே டஹூகு வீசிய 3 வது ஓவரில் வைடுலைன் பக்கம் ஓரமாக சென்ற பந்தை மந்தனாவின் பேட் உரசிப்பார்க்க விக்கெட்டைப் பறிகொடுத்தார் மந்தனா.

அடுத்ததாக முதல் மேட்சில் லோயர் மிடில் ஆர்டரிலும் இரண்டாவது மேட்ச்சில் ஓப்பனராகவும் இறங்கிய விக்கெட் கீப்பர் டானியா பாட்டியா இந்த முறை ஒன்-டவுனாக இறங்கினார். இந்த இடத்தில் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு ஒரு சின்ன அட்வைஸ். மகளிரணிக்கு ஒரு லேடி கே.எல்.ராகுல் தேவையென்பது உண்மைதான். அதற்காக நியூசிலாந்து போன்ற முக்கிய அணிகளுக்கு எதிராகவெல்லாம் இதுபோன்ற பரிட்சார்த்த முயற்சியில் இறங்க வேண்டாம். நல்ல டச்சில் இருந்த ஷெஃபாலிக்கு ஸ்ட்ரைக்கை கொடுக்காமல் லேடி ராகுலாகும் முயற்சியில் டாட் பாலாக ஆடித்தள்ளினார் டானியா. இடையே பீட்டர்சன் வீசிய 5-வது ஓவரில் கிடைத்த கேப்பில் பௌலர் தலைக்கு மேல் இரண்டு சிக்ஸர்களை விளாசினார் ஷெஃபாலி. இப்படியாக டானியாவின் ஸ்ட்ரைக்கில் பலவை டாட் பால்களாகவும், ஷெஃபாலியின் ஸ்ட்ரைக்கில் சில பவர் 'ஷாட்'களாகவும் கலக்க, பவர்ப்ளேயில் இந்திய அணி 49 ரன்களை எடுத்தது.

38-ஐ தொட்ட பலி எண்ணிக்கை.. டெல்லி வன்முறையில் தொடரும் சோகம்! #NowAtVikatan

பவர்ப்ளேவில் ஒரு ஓவருக்கு ஒரு பவுண்ட்ரி கணக்கில் சீராக ரன்கள் சேர்த்துக்கொண்டிருந்த இந்த ஜோடியை 10வது ஓவரில் மயர் பிரித்தார். பாட்டியா தூக்கியடித்த அந்தப் பந்தை கல்லி ஃபீல்டர் அமெலியா கெர் கேட்ச் பிடித்தார். கடந்த இரண்டு ஆட்டத்திலும் ஓரளவுக்கு பார்ட்னர்ஷிப் போட்டு விளையாடிய ஜெமிமா இந்த முறை வந்தவுடனே ஒரு பவுண்ட்ரியும் சில சிங்கிள்களையும் எடுத்துவிட்டு பத்தே ரன்னில் மயர் வீசிய 12வது ஓவரில் அமெலியா கெர்ரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த கேப்பில் ஷெஃபாலிக்கு மட்டும் மூன்று கேட்ச்களை டிராப் செய்திருந்தனர் நியூஸி கேர்ள்ஸ். யார் அவுட் ஆனால் எனக்கென்ன? என 'ஹக்கூனா மட்டாட்டா' மூடில் இருந்த ஷெஃபாலி, ஜெமிமா அவுட்டான அதே ஓவரில் மயரின் தலைக்கு மேல் ஒரு சிக்ஸரை விளாசினார்.

கடந்த சில மேட்சுகளாகவே ஃபார்மில் இல்லாமல் தவித்து வரும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் இந்த முறையும் ஏமாற்றினார். இப்பதானப்பா விக்கெட் விழிந்திருக்கு கொஞ்சம் நேரம் கழிச்சு அடுத்த விக்கெட் எடுத்துக்கலாம் என நினைத்து கேஸ்பர்க் ஸ்லோவாகக் கண்ணை மூடிக்கொண்டு ஒரு பந்தைப் போட அந்தப் பந்தில்கூட பந்து போட்ட பௌலரின் கையிலேயே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ஹர்மன்ப்ரீத். கொஞ்சநேரத்தில் ஜென்சனிடம் க்ளீன் கேட்ச் கொடுத்து ஷெஃபாலியும் அவுட். ஷெஃபாலியின் இந்த 46 ரன்கள்தான் இந்தியா ஓரளவுக்கு கெளரவமான ஸ்கோரை எட்ட உதவியது. அடுத்தடுத்து களமிறங்கிய தீப்தி, வேதா ஆகியோர் சொதப்ப இறுதி ஓவரில் ராதா யாதவ் ஒரு சிக்ஸர் அடிக்க 20 ஓவர் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 133 ஆனது.

#INDVsNZ T20
#INDVsNZ T20

134 என்ற இலக்குடன் சேஸிங்கைத் தொடங்கிய நியூஸியின் ஓப்பனர்களாக ரேச்சல் ப்ரீஸ்ட்டும் கேப்டன் டிவைனும் களமிறங்கினர். முதல் ஓவரை ஆஃப் ஸ்பின்னர் தீப்தியோடு இந்தியா ஆரம்பிக்க இரண்டாவது பந்தில் இருந்தே அதிரடியைத் தொடங்கினார் ப்ரீஸ்ட். இரண்டு பவுண்டரிகளுடன் முதல் ஓவரில் மட்டும் 12 ரன்கள். 10-வது ஓவரிலேயே மேட்ச்சை முடித்து ரெகார்ட் செய்கிறேன் என்ற தோரணையோடு பேட் பிடித்துக்கொண்டிருந்த ப்ரீஸ்ட் ஷிகா பாண்டே வீசிய அடுத்த ஓவரில் ராதா யாதவிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார்.

அடுத்ததாக சூசி பேட்ஸ் களமிறங்க டி20 தரவரிசையில் முதல் இரண்டு இடங்களை வகிக்கும் பேட்ஸ்வுமன்கள் திகில் கூட்டணி போட்டனர். பெரிய ஷாட்டுக்குச் செல்லாமல் சிங்கிள்களாக எடுத்துக்கொண்டு செட்டில் ஆகிக்கொண்டிருந்த இந்தத் திகில் கூட்டணியை 6வது ஓவரில் பிரித்து பிகில் போட்டார் தீப்தி ஷர்மா. வித்தியாசமான ஷாட் ஆட முயன்ற சூசி பேட்ஸின் பேடில் பட்டு ஸ்டம்பைத் தாக்கியது பந்து. பவர்ப்ளே முடிவில் நியூஸி வெறும் 30 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. பவர்ப்ளே முடிந்த உடனே பூனம் யாதவ் அறிமுகமாக நியூஸியின் ரன்ரேட் மேலும் இறங்கியது. ராதா யாதவ் வீசிய எட்டாவது ஓவரில் மட்டும் 5 டாட் பால்கள். பெரிய ஷாட்டுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் பூனமின் 9-வது ஓவரில் கேப்டன் டிவைன் ஆஃப் சைடில் தூக்கியடித்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக கூட்டணி போட்ட மார்ட்டினும் க்ரினும் ஓவருக்கு ஒரு பவுண்டரி என அடித்து மெதுமெதுவாக பார்ட்னர்ஷிப் பில்ட் செய்தனர். 15-வது ஓவரில் ராஜேஷ்வரி வீசிய பந்தில் ஸ்டம்ப்பிங் ஆகி வெளியேறிய நிலையில் அமெலியா கெர் களமிறங்கினார்.

#INDVsNZ T20
#INDVsNZ T20

17-வது ஓவரில் ராதாவின் பந்தில் தீப்தியும் அவுட் ஆகிவிட கடைசி 2 ஓவரில் நியூஸியின் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. `இந்தியாதான்ப்பா ஜெயிக்கும்' என ரசிகர்கள் முடிவுக்கு வந்து செலிப்ரேஷன் மூடுக்கு சென்ற அந்த நிமிடத்தில் பூனம் யாதவ் வீசிய 19வது ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசினார் அமெலியா கெர். அந்த ஓவரில் மட்டும் மொத்தம் 18 ரன்கள். யார்ரா அது லோயர் மிடில் ஆர்டரில் இந்த அடி அடிப்பது என வாய்பிளந்த இந்திய ரசிகர்களுக்கு `இந்த மேட்ச்ல அடிச்சதுதான சார் தெரியும்... இதுக்கு முன்னாடி எப்படி அடிச்சிருக்கேனெல்லாம் தெரியாதுல்ல' என மாஸாக காட்சிக்கொடுத்தது கெர்னின் புரொஃபைல்.

2018-ல் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 232 ரன்கள் அடித்து அதே மேட்சில் 5 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார் என்பது தெரியத் தொடங்கும்போது இறுதி ஓவரை ஷிகா பாண்டே வீசத்தொடங்கினார். முதல் பந்தில் ஜென்சன் ஒரு பவுண்டரி அடுத்து அடுத்து சிங்கிளுக்கு தட்டி கெர்ருக்கு ஸ்ட்ரைக்கைக் கொடுக்க இந்திய ரசிகர்களுக்கு பிளட் பிரஷர் எகிறத் தொடங்கியது. அடுத்தடுத்து இரண்டு சிங்கிள்களுக்குப் பிறகு கடைசி இரண்டு பந்தில் 9 ரன்கள் என்றிருக்கும்போது கெர் ஒரு பவுண்டரி அடிக்க கடைசிப்பந்தில் 5 ரன் தேவைப்பட்டது. கடைசிப்பந்தில் கெர் நகர்ந்து வருவதைக் கணித்து வைட் லைனில் ஷிகா பந்துவீச கெர்னின் காலில் பட்டு ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. தொடக்கத்தில் சுமாராகச் சென்று க்ளைமாக்ஸில் சீட் எட்ஜூக்கு கொண்டு வந்து ஒரு ட்விஸ்ட் கொடுத்த இந்த 'மாஃபியா' ஸ்டைல் ஆட்டத்தில் இறுதியில் 3 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடிய ஷெஃபாலி வர்மா-க்கு பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருது வழங்கப்பட்டது.

மகளிர் உலகக்கோப்பை டி20 தொடரில் முதல்முறை! - சாதனை வெற்றியை வசமாக்கிய தென்னாப்பிரிக்கா #ENGvSA
 #NowAtVikatan

இந்த வெற்றியின் மூலம் தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்ட இந்திய அணி, தனது அடுத்த ஆட்டத்தில் இலங்கையுடன் நாளை மறுநாள் மோதுகிறது.

அடுத்த கட்டுரைக்கு