Published:Updated:

உள்ளே கோலி, வெளியே யார்? மழை அச்சுறுத்தலுக்கு நடுவே தொடங்கும் இரண்டாவது டெஸ்ட்! #INDvNZ

Virat Kohli ( AP )

முதல் ஆட்டத்தில் ஷ்ரேயாஸின் அபார ஆட்டம் குறிப்பாக ரஹானேவின் இடத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. ரஹானேவுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளில் கொஞ்சமேனும் அகர்வாலுக்கும் கொடுக்கப்படவேண்டும் என்ற வாதமும் எழுந்திருக்கிறது.

உள்ளே கோலி, வெளியே யார்? மழை அச்சுறுத்தலுக்கு நடுவே தொடங்கும் இரண்டாவது டெஸ்ட்! #INDvNZ

முதல் ஆட்டத்தில் ஷ்ரேயாஸின் அபார ஆட்டம் குறிப்பாக ரஹானேவின் இடத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. ரஹானேவுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளில் கொஞ்சமேனும் அகர்வாலுக்கும் கொடுக்கப்படவேண்டும் என்ற வாதமும் எழுந்திருக்கிறது.

Published:Updated:
Virat Kohli ( AP )

இந்தியா நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ளது. முதல் போட்டி டிராவில் முடிந்துள்ளதால் தொடரின் வெற்றியை நிர்ணயிக்கபோகும் இப்போட்டியை வெல்ல இரு அணிகளும் தீவிர முனைப்புடன் உள்ளன.

முதல் ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்ட இந்திய கேப்டன் விராட் கோலி தற்போது மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். கோலியின் கரியரை பொறுத்தவரை கடந்த இரண்டாண்டு காலம் என்பது மிக சுமாராகவே அமைந்துள்ளது. மூன்றிலக்க ஸ்கோரை கோலி தொட்டு 750 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டன. என்னதான் கோலி தொடர்ந்து அரைசதங்கள் அடித்து தனது சராசரியை 50க்கு அருகில் வைத்திருந்தாலும் அவரின் திறமைக்கு இது ஃபார்ம் அவுட்டாகவே கருதப்படுகிறது. தற்போது பணிச்சுமை காரணமாக டி20 போட்டிகளில் இருந்து கேப்டன் பதவியை விடுத்துள்ள அவர், சதத்திற்கான தனது நீண்ட நாள் தாகத்தை தணிக்க இப்போட்டியில் நிச்சயம் முயல்வார்.

கோலியின் வருகை அணித்தேர்வில் சில முக்கிய மாற்றங்கள் ஏற்படுத்தப்போவது உறுதி. இந்தியாவின் தொடக்க வீரர்களை பொறுத்தவரை சுப்மன் கில், மயங்க் அகர்வால் இருவருமே தடுமாறி வருகின்றனர். ஆனால் ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல் ராகுலே அணியின் பிரதான ஒப்பனர்கள் என்பதால் இந்த இளம் வீரர்களின் ஆட்டம் அணியில் தங்களின் இடத்தை தக்கவைத்து கொள்ள முக்கியம் வாய்ந்ததாக இருக்கும்.

ஆனால் இந்தியாவின் முக்கிய சிக்கலாக இருப்பது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் தொடர் சொதப்பலே. புஜாரா மற்றும் ரஹானேவிற்கு மாற்றாக புதிய வீரர்கள் இல்லாதலால் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்பட்டு வந்த நிலையில் முதல் ஆட்டத்தில் ஷ்ரேயாஸின் அபார ஆட்டம் குறிப்பாக ரஹானேவின் இடத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. மெல்போர்ன் சதத்தினால் தன் பழைய ஃபார்மிற்குத் திரும்பிய அவர் அதை தக்கவைத்து கொள்ள முழுமையாகத் தவறவிட்டார். அதற்கு பிறகு விளையாடிய 20 இன்னிங்க்ஸ்களில் இரண்டே முறைதான் அரைசதத்தைத் தாண்டினார் ரஹானே. அவர் கடைசியாக ஆடிய ஆறு இன்னிங்ஸ்களில் அடித்த ரன்கள் 18, 10, 14, 0, 35, 4.

Ajinkya Rahane
Ajinkya Rahane
AP

ஆனால், சஹாவின் காயம் ரஹானேவின் இடத்தைக் காப்பாற்றலாம் என்று தெரிகிறது. சஹாவுக்குப் பதிலாக கே.எஸ்.பரத் அறிமுகம் ஆகலாம் என்றும், அவர் மயாங்க் அகர்வாலின் இடத்தில் ஓப்பனராக இறக்கப்படலாம் என்றும் செய்திகள் வருகின்றன. அப்படி நடக்கும்பட்சத்தில் மயாங்க் இடத்தில் கோலி வந்துவிடுவார். ரஹானே தப்பித்துவிடுவார். அதேசமயம் ரஹானேவுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளில் கொஞ்சமேனும் அகர்வாலுக்கும் கொடுக்கப்படவேண்டும் என்ற வாதமும் எழுந்திருக்கிறது. யார் விளையாடப்போகிறார் என்பது கோலியின் கையில் தான் இருக்கிறது.

துணைக்கண்ட ஆடுகளங்களில் நடக்கும் போட்டி என்றாலே இந்திய பந்துவீச்சை பற்றி சொல்ல என்ன இருக்கிறது. ஜடேஜா, அஷ்வின் இருவர் கூட்டணி, தற்போது அக்ஸர் படேலுடன் சேர்ந்து மூவர் கூட்டணியாக எதிரணி பேட்டர்களை மிரட்டி வருகிறது. முதல் போட்டியில் எதிரணியின் 19 விக்கெட்டுகளில் பதினேழை இவர்கள் மட்டுமே வீழ்த்தியுள்ளனர். வேகப்பந்துவீச்சைப் பொறுத்தவரை உமேஷ், இஷாந்த் இருவரும் பெரிய தாக்கம் ஏற்படுத்தவில்லை. அதனால் நாளை சிராஜுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

வான்கடே ஆடுகளத்தைப் பொறுத்தவரையில் சுமார் இரண்டாண்டு காலம், குறைவான போட்டிகளே நடைபெற்றதால் ஆடுகளம் முழுவதும் பச்சை புற்களால் நிறைந்து காணப்படுகிறது. புற்களின் உயரம் குறைக்கப்பட்டாலும் அதிக அளவிலான மாற்றங்கள் செய்யப்படாது. மேலும் மழை பெய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. இதனால் ஆடுகளத்தின் தன்மைக்கேற்றவாறு கூடுதல் வேகப்பந்துவீச்சாளர் சேர்க்கப்படுவாரா அல்லது பழைய கூட்டணியே தொடருமா என்பதையும் அணி நிர்வாகம் தான் முடிவு செய்யவேண்டும்.

மறுபக்கம், நல்ல தொடக்கம் கிடைத்தும் இந்திய மண்ணில் ஸ்பின்னர்களை சமாளிக்க முடியாமல் திணறியது நியூசிலாந்து. தொடக்க வீரர் டாம் லாதம் மிக சிறப்பான தொடக்கத்தை இரு இன்னிங்ஸ்களிலும் வெளிப்படுத்தினார். மேலும் வில் யங், கேப்டன் வில்லியம்சன், ப்லண்டல் போன்றோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். ராஸ் டெய்லர் மற்றும் நிக்கோலஸ் ஆகியோரும் இவர்களுடன் சேர்ந்து சிறப்பாக பங்களிக்கையில் சிறந்த ஸ்கோரை நிச்சயம் எட்டும் நியூஸிலாந்து.

R.Ashwin
R.Ashwin
AP

ஸ்பின்னிங் டிராக்கான கான்பூரிலேயே சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது அந்த அணியின் வேகப்பந்துவீச்சு கூட்டணி. நாளை தொடங்கவுள்ள ஆட்டம் வேகப்பந்துவீச்சிற்கு கூடுதலாக உதவும் என்பதால் ஜேமிசனும் சௌதியும் அதை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளப் பார்ப்பர். இந்திய மண்ணில் தன் முதல் டெஸ்ட் தொடரை நியூஸிலாந்து அணி வெல்லுமா அல்லது சொந்த மண்ணில் தொடர் வெற்றியை நீடிக்க போகிறதா இந்திய அணி.