Published:Updated:

சீனியர்கள் இல்லை. ஆனால் சுவர் உண்டு! நியூசிலாந்தை சமாளிக்குமா இந்திய இளம் படை?

India vs New Zealand

ஐசிசி தொடர்களில் இந்தியாவை தொடர்ந்து நாக் அவுட் செய்து வரும் நியிசிலாந்தை தனது சொந்த மண்ணில் சந்திக்க போகிறது இளம் இந்தியப்படை. ஸ்ரேயாஸ் ஐயர் நாளை அறிமுகமாவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் இளம் இந்திய அணி பலம் வாய்ந்த நியிசிலாந்தை வீழ்த்துமா!

சீனியர்கள் இல்லை. ஆனால் சுவர் உண்டு! நியூசிலாந்தை சமாளிக்குமா இந்திய இளம் படை?

ஐசிசி தொடர்களில் இந்தியாவை தொடர்ந்து நாக் அவுட் செய்து வரும் நியிசிலாந்தை தனது சொந்த மண்ணில் சந்திக்க போகிறது இளம் இந்தியப்படை. ஸ்ரேயாஸ் ஐயர் நாளை அறிமுகமாவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் இளம் இந்திய அணி பலம் வாய்ந்த நியிசிலாந்தை வீழ்த்துமா!

Published:Updated:
India vs New Zealand

இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை, இந்தியா பல ஆண்டுகளாகவே, அசைக்க முடியாத அணியாக வலம் வருகிறது. 2012-ம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியாவில் நடைபெற்ற 13 தொடர்களையுமே, இந்தியா கைப்பற்றியுள்ளது. அதிலும், ஆறு முறை எதிரணியை, ஒரு போட்டியில் கூட வெல்ல விடாமல் வீழ்த்தி உள்ளது. குறிப்பாக, 2017 மார்ச் மாதத்திற்குப் பிறகு, இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில், ஒரே ஒரு முறை மட்டுமே இந்தியா தோற்றுள்ளது. அது தவிர்த்து, ஒட்டுமொத்தமாக இந்த இரு அணிகளுக்கும் இங்கு மோதிய டெஸ்ட் போட்டிகளில், 6 சதவிகிதம் போட்டிகளில் மட்டுமே நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது. 47 சதவிகிதம் போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. 47 சதவிகிதம் போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டைக் கட்டி ஆண்ட ராகுல் டிராவிட், முனைவர் பட்டம் தருமளவு அந்த ஃபார்மட்டில் கை தேர்ந்தவர். எனவே, இத்தொடரில் அவர் எத்தகைய வியூகங்களை வகுக்கப் போகிறார் என்பதுதான் சுவை சேர்க்கும் நிகழ்வாக இருக்கப் போகிறது. அதுவும், முதல் போட்டியில் இணைந்துள்ள டிராவிட் - ரஹானே கூட்டணி, ஆர்ப்பரிக்கும் வெற்றியைப் பதிவு செய்ய, ஆர்ப்பாட்டமின்றி காய்களை நகர்த்தும். மேலும், கில், மயாங்க் அகர்வால் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கும், டிராவிட்டின் கீழ் பயிற்சி பெறுவது, அவர்களை மெருகேற்றிக் கொள்ள உதவும்.

அதேசமயம், இதுவரை தான் தலைமையேற்ற டெஸ்ட் போட்டிகளில், ஒன்றில் கூட தோல்வியைத் தழுவியதில்லை என ரஹானே வெற்றிவலம் வந்தாலும், பேட்டராக, அவர் சொதப்பியே வருகிறார். அணியில் அவரது இடமே பறிபோகுமோ எனக் கருதப்பட்டு வந்த நிலையில், கோலிக்கான விடுமுறை, ரஹானேவுக்கான கடைசி வாய்ப்பாகவும் அமையலாம். கேப்டன் ரஹானேவை விட, பேட்டர் ரஹானேவுக்குத்தான், இப்போட்டி முக்கியமானது. ஒரு பெரிய இன்னிங்ஸ்தான் அவரிடமிருந்து தற்போதைய தேவையாக உள்ளது.

பயோ பபிள் வீரர்களுக்குத் தந்த மன அழுத்தத்தைக் கையாள, சுழற்சி முறையில் வீரர்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது பி.சி.சி.ஐ. விளைவு, பல பிரதான வீரர்களின்றி நியூஸிலாந்து சந்திக்க இருக்கிறது. இப்போட்டியில் ஆடவிருக்கும் இந்திய பேட்ஸ்மேன்களில், பெரும்பாலானோரது டெஸ்ட் அனுபவமே பத்து டெஸ்ட் போட்டிகளுக்கும் கீழ்தான். இது, சமீபத்திய ஆஸ்திரேலிய சுற்றுப் பயணக் காட்சிகளை கண்கள் முன் விரிய வைத்து, இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பை எல்லையற்றதாக்கி இருக்கிது.

Ravindra Jadeja
Ravindra Jadeja

தற்போதைய அணியிலுள்ள, கோலி, ரோஹித் உள்ளிட்ட பல வீரர்களின் வயது, 30-களில் இருப்பதால், அவர்களுக்கான மாற்று வீரர்களைத் தேடும் முக்கிய பொறுப்பு, பிசிசிஐ & புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வசம் உள்ளது. சமீபத்தில், இங்கிலாந்து முயற்சி செய்த ரொட்டேஷன் பாலிசியைப் பின்பற்றிப் பார்த்து விடும் நிலைதான் இந்தியாவுக்கும். அணியில், இன்னும் சில வருடங்களில் காலியாக இருக்கும் இடங்களுக்குப் பொருத்தமான வீரர்கள் தேர்வுக்கான முன்னோட்டமாக இத்தொடர் அமையும்.

இந்தியாவின் ஆஸ்தான ஓப்பனர்களான ரோஹித் ஷர்மா & கே.எல்.ராகுல் இல்லாத நிலையில், மயாங்க் அகர்வால் மற்றும் கில்லுக்கு ஓப்பனிங் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. விக்கெட் கீப்பராக சாஹா மற்றும் பரத் இருந்தாலும், அனுபவத்திற்கே முன்னுரிமை கொடுத்து சாஹாவே விக்கெட் கீப்பராக இறக்கப்படலாம்.

உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆடிய பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்த ஆறு நாட்களில் மூன்று போட்டிகளில் ஆடுவது, நியூஸிலாந்துக்கு சுலபமான காரியம் இல்லை. நமது கால்கள் தரையில் இருக்க வேண்டும்
ராகுல் டிராவிட்

ஓவர்சீஸ் போட்டிகளில் களமிறங்கும்போது, வேகப் பந்து வீசும் ஆல்ரவுண்டர்கள், அணியின் மிகப்பெரிய சொத்தாக பார்க்கப்படுவார்கள். அதேநேரம், துணைக் கண்ட சூழலில், அஷ்வின், ஜடேஜா, அக்சர் படேல் ஆகிய சுழல் ஆல் ரவுண்டர்கள், அணிக்கு மிகப்பெரிய போனஸாக, இருப்பார்கள் என்பது உறுதி. மூன்று ஸ்பின்னர்களோடு களமிறங்க இருப்பதாக நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் முற்பகுதியில், இங்கிலாந்துப் படையை இந்திய ஸ்பின்னர்கள் சுற்றலில் விட்டதன் நினைவலைகளும் சேர, இப்போட்டி பேட்டர்களும் ஸ்பின்னர்களும் மோதும் குத்துச் சண்டை ரிங்காக மாற்றி உள்ளது.

கான்பூர், எப்போதும் ஸ்பின்னர்களின் சொர்க்க பூமி. அதனால், பும்ரா, ஷமி உள்ளிட்ட பிரம்மாஸ்திரங்கள் இல்லாமல் இந்தியா களமிறங்குவது பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடப் போவதில்லை. அதேபோல், நியூஸிலாந்தும், போல்ட்டுக்கு ஓய்வளித்துள்ளது. சிராஜின் காயத்தால், அவர் ஆடுவது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. உமேஷ்/ இசாந்த் அல்லது உமேஷ்/ சிராஜ் காம்போவில் எது என்பது நாளை தெரியவரும்.

நியூஸிலாந்தின் பக்கமும் புதிய வீரர்களின் தலை தென்பட்டாலும், கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், டாம் லாதம், ஹென்ரி நிக்கோல்ஸ் ஆகியவர்களால், அவர்களது பேட்டிங் லைன் அப் பல்மடங்கு பலம் கொண்டு இருக்கிறது. ஜடேஜா, அஷ்வின், அக்ஸர் என இறுதிவரை இந்திய பேட்டிங் நீண்டாலும், நியூசிலாந்தின் அனுபவத்தோடு ஒப்பிடுகையில், இந்தப் புள்ளியில்தான் இந்தியா, சற்றே பின்தங்குகிறது. ரஹானே மற்றும் புஜாரா, முழுப் பொறுப்பை உணர்ந்து ஆட வேண்டிய கட்டாயம் மிக அதிகமாகவே உள்ளது.

இந்திய மண்ணில் நியூஸிலாந்துடனான வரலாறும், ஓரளவு வானிலையும், களமும் என எல்லாமே இந்தியாவுக்குச் சாதகங்களான அம்சங்கள்தான். ஆனால், இச்சமயம், இரண்டாம் நிலை வீரர்களே அதிகமுள்ள இந்திய அணியோடு, சமபலம் கொண்டே நியூசிலாந்தும் மோத உள்ளது என்பதால், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு செஷனும், திருப்பங்கள் நிறைந்ததாகவே இருக்கப் போகிறது.