இந்தியா- நியூசிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2 வெற்றியுடன், இந்தியா ஏற்கனவே தொடரை வென்ற நிலையில், கடைசிப் போட்டியில் நியூசிலாந்து ஆறுதல் வெற்றிப் பெறுமா? என்ற எதிர்பார்ப்புடன் கடைசி ஒருநாள் போட்டி, நேற்று (ஜன. 24) இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது.
பேட்டிங்கில் ரோஹித்-கில் மீண்டும் பட்டைய கிளப்ப, பேட்டிங் பௌலிங் என இரண்டிலும் மிரட்டினார், ஷர்துல் . நியூசிலாந்து அணியில் பேட்டிங்கில் டெவன் கான்வே சதம் விளாச, டிக்கர் அபார பந்து வீச்சை வெளிபடுத்தினார். ஆனால், இந்திய அணி ஆரம்ப முதல் ஆதிக்கம் செலுத்த, 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணியில் சிப்லிக்குப் பதிலாக ஜகோப் டஃபியும். இந்திய அணியில் ஷமி, சிராஜுக்குப் பதிலாக உம்ரான் மாலிக், சஹால் என இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி ரோஹித்- சுப்மன் கில் இணை களமிறங்கியது. முதல் ஒவரை டஃபி வீசினார். தொடக்கமே ஒயிடு பந்து. ஆனால், நன்றாக பந்து வீசிய டஃபி, 3 ரன் விட்டுக்கொடுக்க, முதல் ஓவர் முடிவில் 3/0 என ஸ்கோர் இருந்தது. பிறகு, நிதானமாக பேட்டிங்கில் வேகத்தைக் கூட்டினர், ரோஹித்-கில் இணை. பவுண்டரியும், சிக்ஸரும் வரத் தொடங்கின . 5 வது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் வந்தன அதில் ஒன்று, கில் பேட்டிலிருந்தும் மற்றொன்று ரோஹித் பேட்டில் இருந்து வந்தது. 5 ஓவர் முடிவில் இந்தியா 31/0 என ஸ்கோர் செய்தது. பவுண்டரிகள் கணிசமாக வந்துக்கொண்டிருக்க, 8 ஒவரில் இந்தியா 50 ரன்களைக் கடந்தது. ஃபெர்குசன் வீசிய 8 வது ஓவரில் 4 பவுண்டரியும், 1 சிக்ஸர் என நொறுக்கினார், கில். மெல்ல தொடங்கிய ரோஹித் பேட்டிலும் 10 வது ஓவரில் சிக்ஸர்களும், பவுண்டரியும் வரத் தொடங்க, ரன் குவியத் தொடங்கியது.
பத்து ஓவர் முடிவில் இந்திய அணி 82/0 என ஸ்கோர் செய்தது. பிறகு, 12 வது ஓவரின் 2வது பந்தில் கில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். கடந்த முறைகள் போல் இல்லாமல் இந்த முறை, டாட் பந்துகள் குறைவாக ஆடினர் இந்திய அணி வீரர்கள். இருமுனைக்கும் இடையே நல்ல ஓட்டம் இருந்தது. இதன் காரணமாக 13 ஓவர் முடிவில் இந்தியா 101/0 என ஸ்கோர் செய்ய, 14வது ஓவரில் முதல் பந்தில் சிக்ஸர் விளாசிய ரோஹித் இதன் மூலம் தனது அரைசதத்தை பூர்த்திச் செய்தார். பிறகு, பவுண்டரியும் சிக்ஸருமாய் இணை நொறுக்க 18 ஓவர் முடிவில் இந்தியா 151/0 என ஸ்கோர் இருக்க, நல்ல முறையில் ஸ்ட்ரைக்கை மாற்றி வந்த சிங்கிள் ரன்கள், அவ்வப்போது வந்த பவுண்டரிகள் என ஸ்கோர் கணிசமாக உயர 25 ஓவர் முடிவில் இந்தியா 205/0 என்ற நிலையில் இருக்க, 26 வது ஓவரின் மூன்றாவது பந்தில் ரோஹித் 83 பந்தில் தனது சதத்தையும், ஓவரின் கடைசிப்பந்தில் பவுண்டரி மூலம் கில் 72 பந்தில் தனது சதத்தையும் பூர்த்திச் செய்தனர். ரோஹித் சர்மா நீண்ட நாட்களுக்கு பிறகு தன் ஃபார்மிற்கு திரும்புகிறார். ஆனால்,27வது ஓவரின், முதல் பந்தில், ப்ராஸ்வேல் வீசிய பந்தில் ரோஹித் போல்ட் ஆகி வெளியேறினார். 212 ரன்கள் பார்டனர்ஷிப் முடிவுக்கு வந்தது.

28வது ஓவரின் கடைசிப் பந்தில், கில்லும் 112 ரன்களுக்கு கேட்ச் அவுட் ஆகி வெளியேறினார். பிறகு, ரன்குவிப்பில் தொய்வு இருந்தாலும், கோலியின் பவுண்டரிகள் ரன்ரேட் குறையாமல் பார்த்துக் கொள்ள, 32 ஓவர் முடிவில் இந்தியா 251/2 என ஸ்கோர் செய்தது. கிஷன் நன்கு தொடங்கினாலும், அதை தொடர தவறி 17 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறிறார். பிறகு, கோலி,யாதவ் விக்கெட்டும் சீரான இடைவெளியில் விழ 40 ஓவர் முடிவில் இந்தியா 298/5 என ஸ்கோர் செய்தது. வாஷிங்டன் சுந்தரும் 9 ரன்னுக்கு வெளியேற, பொறுப்புடன் விளையாடி ஹர்த்திக் அரைசதம் விளாசினார். ஷர்துல் தாக்கூரும் 3 பவுண்டரி .1சிக்ஸருடன் 25 ரன்கள் எடுத்து வெளியேற, குல்தீப் வந்த வேகத்தில் நடையைக் கட்டினார். 50 ஓவர் முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் குவித்து, 386 ரன்களை நியூசிலாந்திற்கு இலக்காக நிர்ணயித்தது. ரோஹித்- கில் இணையின் அதிரடி ஆட்டம், இருவரின் சதமும் அணியின் இந்த இலக்கிற்கு காரணமாயின. அடுத்தடுத்த பேட்ஸ்மேன்கள் சற்று நிலைத்திருந்தால், அணி 400 ரன்களைக் கூட கடந்திருக்கும். நியூசிலாந்து பௌலிங்கில் டிக்னர் நன்றாக பந்து வீசியிருந்தார். ஃபெர்குசன் கூட 8 ஓவரை தவிர்த்து ஏனைய ஓவர்கள் நன்றாக வீசினார்.
386 ரன்களை இலக்காகக் கொண்டு ஆலன்- கான்வே இணை களமிறங்கியது. ஆனால், நியூசிலாந்துக்கு ஆரம்பமே சரியில்லை. முதல் ஒவரை ஹர்திக் வீச, ஓவரின் இரண்டாவது பந்திலேயே ஆலன் டக்-அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். பிறகு, நிக்கோல்ஸ் - கான்வே இணை, நிதானித்து ஆடினர். பிறகு, 6 ஓவர் முடிவில் 36/1 என ஸ்கோர் செய்தது. பிறகு, நிக்கோலஸ் அதிரடிகாட்ட, கான்வேயும் அதிரடியாக ஆடத்தொடங்கினர். பவுண்டரிகளும், சிக்ஸர்களும் வரத் தொடங்கி, ஸ்கோரும் உயரத் தொடங்கியது. 9 ஓவர் முடிவில் 68/1 என ஸ்கோர் இருந்தது. ஆரம்பத்தில் தடுமாறினாலும் பிறகு, ஷர்துல் நன்கு பந்துவீசத் தொடங்கினார். உம்ரான் மாலிக், குல்தீப்பும் நல்ல பங்களிப்பை தந்தனர். நிதானமாக ஆடிய கான்வே 14வது ஓவரில் தனது சிக்ஸர் மூலம் தனது அரைசதத்தை எட்டினார் .

15 வது ஓவரில் அணி 100 ரன்களை எட்டியது . ஆனால், அதே ஓவரில், குல்தீப்பின் பந்தில் LBW முறையில் அவுட் ஆனார், நிக்கோலஸ் 42 ரன்கள் எடுத்தநிலையில் வெளியேறினார். டேரில் மிட்செல் அடுத்ததாக களமிறங்கினார். கான்வே பேட்டில் இருந்து அவ்வப்போது பவுண்டரி வந்தன. ஆனால், சிங்கிள் ரன்கள் நிறைய எடுத்தனர். கடந்த பேட்டியில் மெய்டன் ஒவரே பல இருந்தன. இந்த முறை அதனை சரி செய்துயிருந்தனர். கான்வே- மிட்செல் நிதானமான ஆட்டம் காரணமாக 22 ஒவர் முடிவில் நியூசிலாந்து 151/2 என்ற நிலையில் இருந்தது. 24 வது ஓவரின் முதல் இரண்டு பந்திலும் அடுத்தடுத்த சிக்ஸர் மூலம் கான்வே தனது சதத்தை எட்டினார். சிங்கிள்ஸ் மூலம் ரன்களை சிறுக சேர்த்தது இந்த இணை, ஆனால், 26 ஆவது ஓவரை வீச வந்த ஷர்துல் டேரில் மிட்செல் விக்கெட்டை வீழ்த்த, அடுத்த பந்திலேயே நியூசிலாந்து கேப்டன் டாம் லேதமை ''டக் அவுட்" செய்து வெளியேற்றினார், தாகூர்.இது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அடுத்தடுத்து விக்கெட் சாய்ந்தாலும், அதே ஓவரின் இறுதி இரு பந்திலும் கான்வே பவுண்டரிகளை விளாசினார். 27 ஓவர் முடிவில் 197/4 என நியூசிலாந்து அணி ஸ்கோர் செய்தது. 28 வது ஓவரில் பெரிதும் எதிர்பார்த்த பிலிப் விக்கெட்டையும் ஷர்தூல் வீழ்த்தினார். அணி வெற்றிக்காக கான்வே போராட, பிற வீரர்கள் உதவினாலும், நிலைத்து நிற்க தவறினர், 32 வது ஓவரில் தனது விக்கெட்டை, உம்ரான் மாலிக்கிடம் விட்டுக்கொடுத்து 138 ரன்களுக்கு வெளியேறினார், டெவன் கான்வே. 32 ஓவர் முடிவில் நியூசிலாந்து 230/6 ஸ்கோர் செய்தது. ஆனால், இந்திய பௌலர்களின் அட்டகாசமான பந்துவீச்சு அடுத்தடுத்த விக்கெட்டை சீரான இடைவெளியில் எடுக்க 42 வது ஓவரின் 2 வது பந்தில் 10 வது விக்கெட்டாக சாண்டனரின் விக்கெட்டை சஹல் எடுக்க 295 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, நியூசிலாந்து. இதனால் இப்போட்டியை 90 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது இந்தியா.
அதோடு 3-0 என்ற கணக்கில் க்ளின் ஸீவீப்பாக தொடரையும் கைப்பற்றியது, இந்திய அணி. ஆட்டநாயகனாக ஷர்துல் தாகூரும், தொடர் நாயகனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டனர். தொடர் வெற்றிகளின் காரணமாக இந்திய அணி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணி பட்டியலில் முதல் இடத்திற்கும் முன்னேற்றியுள்ளது.