Published:Updated:

பயமுறுத்தும் பிட்ச்... ஃபார்முக்கு வருவாரா கோலி... விக்கெட் எடுப்பாரா பும்ரா?! #INDVsNZ

விராட் கோலி
விராட் கோலி

முதல் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்விங்கிற்குத் திணறிய நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நடக்க இருக்கும் மைதானமோ, அதைவிட இரண்டு மடங்கு ஸ்விங்கிற்கு சப்போர்ட் செய்வதுபோல் இருக்கிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தோல்வியே காணாமல் தொடர் வெற்றிகளைப் பெற்றுக்கொண்டிருந்த இந்திய அணிக்கு, முதல் தோல்வியைப் பரிசளித்திருக்கிறது நியூஸிலாந்து. இதோடு முடியாது... இரண்டாவது டெஸ்ட்டிலும் இந்தியா தோல்வியடைவதற்கான வாய்ப்புகளே அதிகம் என்பதுதான் கள நிலவரம்.

இந்தியா-நியூஸிலாந்துக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, க்ரைஸ்ட் சர்ச்சில் நாளை தொடங்குகிறது. நியூஸிலாந்து மண்ணில் சிவப்பு பந்து எக்குத்தப்பாக ஸ்விங் ஆகும் என்று தெரிந்திருந்தும், அதற்கு உரிய பயிற்சிகள் எடுக்காமல், எக்குத்தப்பாக ஆடி விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. டெஸ்ட் பேட்ஸ்மேன்களான புஜாரா, ரஹானே, விஹாரி போன்ற ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்கள்கூட பந்தை பேட்டில் சந்திக்க முடியாமல் திணறியது பரிதாபகமாகத்தான் இருந்தது. சரி, டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்கள்தான் ஆடவில்லை... நியூஸிலாந்திலேயே தங்கியிருக்கும் மற்ற 3 பேட்ஸ்மேன்களும் சீதோஷ்ண நிலைகளை அறிந்திருப்பார்கள், ஒயிட் பால் கிரிக்கெட்டிலும் ஆடி, மைதானத்தின் தன்மையை அறிந்திருப்பார்கள் என நினைத்தால், முதலுக்கே மோசமானது நிலைமை. அவர்களும் அரை சதம்கூட அடிக்காமல் நடையைக் கட்டினார்கள்.

கோலி - வில்லியம்சன்
கோலி - வில்லியம்சன்

பொறிவைத்துப் பிடிப்பார்களே... அப்படித்தான் இந்திய பேட்ஸ்மேன்களைப் பிடித்து பெவிலியனுக்கு அனுப்பியது நியூஸிலாந்து. இந்தியாவின் ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் ஒவ்வொரு பிளான் வைத்திருந்தார்கள், நியூஸிலாந்து பெளலர்கள். யாருக்கு எந்த லைனில் வீசினால் அவுட் ஆவார்கள் எனச் சரியான கேம் பிளானை வகுத்து, ஒவ்வொருவரையும் சொல்லிச்சொல்லி தூக்கியது பெளலிங் டீம். டெஸ்ட் கிரிக்கெட்டின் நம்பர் 1 பேட்ஸ்மேனே ஒற்றை இலக்கங்களில் நடையைக் கட்டும்போது, நாம் வேறு யாரை குறை கூற முடியும்?

ஒயிட் பால் கிரிக்கெட்டில் மீம் கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் ஆக இருந்த டிம் சவுதி, ரெட் பால் கிரிக்கெட்டில் வில்லனாக மாறி மொத்தம் 9 விக்கெட்டுகளைத் தூக்கி, மேன் ஆஃப் தி மேட்ச் விருதை தட்டிச்சென்றார். சரி, பேட்டிங்கில்தான் கோட்டை விடுகிறார்கள் நமது வீரர்கள் பெளலிங்கில் சூப்பராச்சே என எண்ணிக்கொண்டிருந்த வேலையில்தான், நமது பெளலர்கள் அந்த எண்ணத்தில் மொத்தமாக மண்ணை அள்ளிப் போட்டு, குழி தோண்டிப் புதைத்துவிட்டனர். கடந்த 3 வருடங்களாக, வெளிநாடுகளில் விடாது கறுப்பு போல் தூரத்திக்கொண்டிருக்கும் டெயில் எண்டர்களுக்கு ரன்களை வாரி வழங்கும் பழக்கத்தை இந்த டெஸ்ட்டிலும் தொடர்ந்தனர். கடைசி 3 விக்கெட்டுகளுக்கு 123 ரன்கள் கொடுத்து, இந்த டெஸ்ட்டையும் வழக்கம்போல கோட்டைவிட்டனர் பெளலர்கள்.

கோலி
கோலி

இந்த நிலையில்தான், நாளை க்ரைஸ்ட் சர்ச்சில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. முதல் போட்டியில், குழந்தை பிறந்ததன் காரணமாக ஆடாமல் இருந்த நீல் வாக்னர், இந்தப் போட்டியில் திரும்புகிறார். ஏற்கெனவே, அறிமுக வீரராகக் களம் இறங்கி மிரட்டிய ஜேமிசன் ஒருபக்கம், மறுமுனையில் டெஸ்ட் போட்டிகளில் பழம் தின்று கொட்டைபோட்ட போல்ட் மற்றும் சவுதி எனத் திரும்பும் பக்கமெல்லாம் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு வில்லன்களாகவே காட்சி அளித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை சமாளித்து வாகை சூடவேண்டும் என்ற நிலையில் இருக்கும்போது, பிசிசிஐ வெளியிட்டுள்ள க்ரைஸ்ட் சர்ச் மைதான புகைப்படம், புற்கள் நிறைந்த பூமியாகக் காட்சியளித்து மிரட்டுகிறது.

முதல் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்விங்கிற்குத் திணறிய நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நடக்க இருக்கும் மைதானமோ, அதைவிட இரண்டு மடங்கு ஸ்விங்கிற்கு சப்போர்ட் செய்வதுபோல் இருக்கிறது. இந்தப் போட்டியில் இந்தியா ஜெயிக்க வேண்டும் என்றால், இவற்றை எல்லாம் நிச்சயம் செய்தாக வேண்டும். கோலி பேட்டிங் பயிற்சி செய்கிறாரரோ இல்லையோ, டாஸில் ஜெயிக்கும் பயிற்சியை செய்தே ஆக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். டாஸ் வென்று ஃபீல்ட்டிங்கைத் தேர்வுசெய்து, கிரீன் ட்ராக்கில் பேட்ஸ்மேன்களுக்கு ஆட்டம்காட்டி, பின்பு பிட்ச் சிறிது தேய்ந்தவுடன் சாவகாசமாக ஆடும் நியூஸிலாந்து அணியின் பாணியையே நாமளும் கடைபிடிக்க வேண்டும்.

இஷாந்த் சர்மா
இஷாந்த் சர்மா

ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்:

எந்த ஒரு டெஸ்ட் போட்டியையும் வெல்வதற்கு, ஓப்பனிங் பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். அது, முதல் டெஸ்ட்டில் இரண்டு இன்னிங்ஸிலும் நமக்கு அமையவில்லை. மயாங்க் அகர்வால் சற்று நம்பிக்கையளித்தாலும், பெரிய ஸ்கோர் எதுவும் வரவில்லை. முதல் இன்னிங்ஸில் அவுட் ஆகிய புல் ஷாட் டெஸ்ட் போட்டிகளில் ஆடவேண்டிய ஷாட்டே அல்ல. ப்ரித்வி ஷாவை அடுத்த ஷேவாக் என்று வர்ணித்துக் கொண்டிருந்தவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார், ஷா. ஸ்விங் பந்தை சமாளித்து ஆடும் ஆட்டத்திறன், இரண்டு இன்னிங்ஸிலும் அவரிடமிருந்து வெளிப்படவில்லை. ஏற்கெனவே, ஓப்பனிங் பேட்டிங்கிற்கு ரோஹித் , ராகுல், ஷுபம் கில் என பேட்ஸ்மேன்கள் படையெடுத்து நிற்கும் நிலையில், ப்ரித்வி ஷா-வின் இத்தகைய ஆட்டம் அவரது இடத்தை கேள்விக்குறியாக்கிவிடும்.

பயிற்சியின்போது காலில் அடிபட்டு வீக்கம் இருப்பதால், ப்ரித்வி ஷா நேற்று பயிற்சியில் ஈடுபடவில்லை என்று செய்திவருகிறது. அவர் ஆட முடியாத பட்சத்தில், ஷுபம் கில்லுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் . யார் இறங்கினாலும் முதல் 15 டு 20 ஓவர்கள் தாக்குப்பிடித்தால் மட்டுமே நல்ல பார்ட்னர்ஷிப் அமையும். பின்னால் வரும் பேட்ஸ்மேன்களும் ரன்கள் குவிக்க முடியும் .

பும்ரா
பும்ரா

மிடில் ஆர்டர் :

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் தற்போதைய மும்மூர்த்திகள், புஜாரா, கோலி, ரஹானே ரன்களை குவித்தே ஆக வேண்டும். 3 பேரில் யாராவது ஒருவர் சதம் அடித்தால் மட்டுமே இந்த டெஸ்ட்டில் நாம் ஜெயிக்க முடியும். கோலி, தன்மீது பிரஷர் ஏற்றிக்கொண்டு பந்துகளை நோக்கி செல்வதைத் தவிர்த்து, தன்னை நோக்கி பந்துகள் வருமாறு பெளலர்களைப் பந்து வீச வைக்க வேண்டும். மைண்ட் கேமான டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி பல பெளலர்களைச் சமாளித்து வெற்றிகண்டிருக்கிறார். ஆனால், கடந்த 20 இன்னிங்ஸ்களாக சதம் அடிக்காமல் இருந்து வருகிறார். 4 டு 5 இன்னிங்ஸ்களுக்கு ஒருமுறை சதம் அடித்து வந்தவரின் நிலைமை இப்போது தலைகீழாக மாறியிருக்கிறது. இது, இந்த டெஸ்ட்டில் மாற வேண்டும். அப்படி மாறினால், இந்த டெஸ்ட் போட்டி நம் வசப்படும். புஜாரா 2018 ஆஸ்திரேலியா சீரிஸ்க்கு பிறகு பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. அடுத்த போட்டியில், இந்த நீண்ட வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். முதல் போட்டியில் நல்ல தொடக்கம் கண்ட ஒரே பேட்ஸ்மேன், ரஹானே மட்டும்தான். அது, இந்த டெஸ்ட்டிலும் தொடர வேண்டும். ஏற்கெனவே, நியூஸிலாந்து மைதானங்களில் சதம் அடித்துள்ளதால் அவரது அனுபவத்தைக் கொண்டு கரைசேர்க்க வேண்டும்.

வேகப்பந்து வீச்சு :

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நம்பர் 1 பெளலர் பும்ரா, காயத்திலிருந்து மீண்டு வந்ததிலிருந்து பழைய பும்ராவாக இல்லை. விக்கெட்டுகள் எடுக்க திணறிக்கொண்டிருக்கிறார். பழைய வேகம் இல்லை என்றாலும்கூட பரவாயில்லை. ஆனால், தனது டிரேட்மார்க் லைன் அண்டு லெங்த்களையும், யார்க்கர்களையும் தொடர்ந்து மிஸ் செய்துகொண்டிருக்கிறார். பேட்ஸ்மேன்கள் இவரது பந்தை கணித்து அடிக்க ஆரம்பித்துவிட்டனர். இது தொடரக்கூடாது. பழைய பும்ராவாக வரவேண்டும் எனப் பல ஜாலங்கள் செய்ய வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை. முதல் டெஸ்ட்டில் மற்றுமொரு பெரிய ஏமாற்றம், முகமது ஷமியின் பெளலிங். அவரது பெளலிங்கில் ஸ்விங்கும் இல்லை, சரியான இடத்தில் பிட்ச் செய்யவும் இல்லை. முடிவு, விக்கெட்டுகள் எதுவும் இல்லை. இந்தியாவின் இரண்டு சாம்பியன் பெளலர்கள் இப்படி இருப்பது நல்லதில்லை. இது, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மாறவேண்டும். இருவரும் எங்கு தவறு செய்கிறோம், எதைச் சரி செய்ய வேண்டும் என்பதை அறிந்து களம்காண வேண்டும்.

புஜாரா
புஜாரா

க்ரைஸ்ட் சர்ச் மைதானத்தில், நியூஸிலாந்து 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பின்னருக்கு பெரிதாக வேலை இருக்காது என்ற நிலையில் இந்தியாவுக்கு இரண்டு ஆப்ஷன்கள் இருக்கின்றன. ஒன்று, அஷ்வினுக்குப் பதில் உமேஷ் யாதவை இறக்குவது. இரண்டாவது, ரன்கள் கொடுக்காமல் ஒரு எண்டில் தொடர்ந்து ஸ்டம்ப் டு ஸ்டம்ப் லைனில் ஜடேஜாவை பந்து வீசவைப்பது. ஜடேஜா, பேட்டிங்கும் ஆடுவார் என்பது கூடுதல் பலம். கோலி யாரைத் தேர்வுசெய்கிறார் என்பதைப் பொறுத்தே வெற்றி இருக்கிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில், ஒவ்வொரு போட்டியும் முக்கியம். அதைவிட, வெற்றிபெற்றால் கிடைக்கும் 60 பாய்ன்ட்டுகள் மிகவும் முக்கியம் . இந்தியா வெற்றிபெற்று தொடரை சமன் செய்யுமா... இல்லை, தொடரை இழக்குமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமென்ட்டில் பதிவு செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு