Published:Updated:

நியூஸிலாந்தின் மாஸ்டர் பிளான்.. பம்மிய கோலி... பேட்டிங் சொதப்பலுக்குக் காரணம் என்ன?! #Kohli

கோலி - வில்லியம்சன்
கோலி - வில்லியம்சன் ( Image courtesy : ESPN cricinfo )

இந்தியா நியூசிலாந்து டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன் 'கோலியின் விக்கெட்டை நான் நிச்சயம் எடுப்பேன்' என்ற டிரென்ட் போல்ட் சொன்னதைப் போன்றே கோலியின் விக்கெட்டை காலி செய்துவிட்டார்.

கோலியின் கேரியரில் இது கவலைக்காலம். கிங் கோலியாக நியூசிலாந்து மண்ணில் நுழைந்த கோலிக்கு 5-0 என டி20 தொடரில் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. ஆனால், அடுத்து நடந்ததுதான் சோகம். ஒருநாள் தொடரில் 3-0 என இந்தியாவை வீழ்த்தி பழிதீர்த்தது நியூசிலாந்து. இந்த சீரிஸில் கோலியின் டாப் ஸ்கோரே 51 ரன்கள்தான். மொத்தமாக 100 ரன்களைக்கூட கோலி தொடவில்லை. அடுத்தது டெஸ்ட் தொடர். முதல் போட்டியில் அவமானகரமான தோல்வி. முதல் இன்னிங்ஸில் 165 ரன்கள்... இரண்டாவது இன்னிங்ஸில் 191 ரன்கள் என மீண்டும் பேட்டிங் ஃபெயிலியர். கோலியின் பேட்டிங்கும். முதல் இன்னிங்ஸில் 2 ரன்கள் அடித்தவர் இரண்டாவது இன்னிங்ஸில் 19 ரன்கள் அடித்தார்.

இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன் `கோலியின் விக்கெட்டை நான் நிச்சயம் எடுப்பேன்' என்ற டிரென்ட் போல்ட் சொன்னதைப் போன்றே கோலியின் விக்கெட்டை காலி செய்துவிட்டார். சில மாதங்களுக்கு முன் இப்படி யாராவது பிரஸ்மீட்டில் வாய் சவடால்விட்டால் ஆங்க்ரி பேர்ட் கோலி அந்த மேட்சிலேயே செஞ்சுரி அடித்து வீரவார்த்தைகள் விட்ட பௌலரின் முன்னே சென்று ஆர்ம்ஸை முறுக்கி காற்றில் இரண்டு பன்ச் கொடுத்து ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியிருப்பார். ஆனால், இப்போது இருப்பதோ கடந்த 20 இன்னிங்ஸ்களில் ஒரு செஞ்சுரி கூட அடிக்காத அவுட் ஆஃப் ஃபார்ம் கோலி. இந்த டெஸ்ட் மேட்ச் மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக இந்த நியூசிலாந்து தொடரே கோலிக்கு மிகப்பெரிய சோதனைதான்.

நியூஸிலாந்தின் மாஸ்டர் பிளான்.. பம்மிய கோலி... பேட்டிங் சொதப்பலுக்குக் காரணம் என்ன?! #Kohli
Image courtesy : ESPN cricinfo

89, 45, 11, 38, 11, 51, 15, 9, 2, 19 என கையேந்திபவனின் மெனு கார்டு போல எக்கனாமிக்கலாக இருக்கும் இந்த லிஸ்ட்தான் நியூசிலாந்து தொடரில் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் கோலி இதுவரை அடித்துள்ள ரன்கள். பேட்ஸ்மேனாக மட்டுமின்றி இந்தத் தொடரில் கோலியின் கேப்டன்ஷிப் முடிவுகளும் பெரிய விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. ஒருநாள் போட்டிகளில் ஷமியை பென்ச்சில் உட்கார வைத்துவிட்டு ஷர்துல் தாகூரை களம் இறக்கியதில் தொடங்கி முதல் டெஸ்ட்டின் ஃபீல்ட் செட்அப் வரை கோலியின் கணக்கு தப்புக்கணக்காகியுள்ளது. ``புதுப்பந்தில் வேகப்பந்து வீச்சாளர்களை முழுமையாக பயன்படுத்துவதற்கு மாறாக அஷ்வினிடம் பந்தைக் கொடுத்து நியூசியின் டெய்ல் எண்டர்களை ரன் சேர்க்க வைத்துவிட்டார் கோலி. கோலியின் தவறான முடிவுகளால் இந்திய அணி இந்த டெஸ்ட்டை இழக்கலாம்'' என முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணன் பேசியது மறுநாள் செய்தித்தாள்களில் செய்தி ஆவதற்குள் இந்திய அணி முதல் டெஸ்ட்டை இழந்தது.

நியூசிலாந்தின் வில்லியம்சன் & கோ-விடம் முதலிலிருந்தே ஒரு சரியான திட்டமிடல் இருந்தது. அதுதான் கோலியையும், பும்ராவையும் காலி செய்வது. இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக டாப் ஆர்டரில் தவான் கொஞ்சம் அதிரடி காட்ட ரோஹித் ஸ்லோவாக நிலைத்து நிற்க பவர்ப்ளே-க்குப் பிறகு அந்த ரோலை கோலியிடம் கொடுத்துவிட்டு ரோஹித் அதிரடியில் இறங்குவார். கோலி செட்டில் ஆன பிறகு தனது வேலையை தொடங்கிவிடுவார். அதன்பிறகு கடைசி ஓவர்களில் ஹர்திக் பாண்ட்யா நல்ல ரன்ரேட்டில் இன்னிங்ஸை முடித்து சுபம் போடுவார். ஆனால், நியூசிக்குச் சென்றுள்ள தற்போதைய அணியில் ரோஹித், தவான், ஹர்திக் பாண்ட்யா என முன்னும் பின்னும் கோலிக்கு சப்போர்ட் செய்ய யாரும் இல்லை என்பதால் முதுகெலும்பாக இருக்கும் கோலியின் அந்த ஒரு விக்கெட்டை தூக்கிவிட்டால் இந்தியா அதன்பிறகு எழவே முடியாது என்பதை நியூசி வீரர்கள் கச்சிதமாக கணித்து அனைத்து ஆட்டங்களிலும் கோலியை நிற்கவிடாமல் சீக்கிரமே பெவிலியனுக்கு அனுப்பிவிட்டனர். ஷ்ரேயாஸ், ராகுல் ஒரு பக்கம் சிறப்பாக ஸ்கோர் செய்தாலும் அவையெல்லாம் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸாக மாறாமல் போனதற்கு கோலியின் ஃபெயிலியர்தான் மிகமுக்கியக் காரணம்.

நியூஸிலாந்தின் மாஸ்டர் பிளான்.. பம்மிய கோலி... பேட்டிங் சொதப்பலுக்குக் காரணம் என்ன?! #Kohli
Image courtesy : ESPN cricinfo

கோலியின் கவர் டிரைவ்களும், ப்ரன்ட் ஃபுட் டிரைவ்களும் அவ்வளவு நேர்த்தியாக ஸ்ருதி சுத்தமாக இருக்கும். கோலியின் இந்த இரண்டு பலங்களையும்தான் கோலியின் பலவீனமாக மாற்றிவிட்டார் டிம் சௌதி. இரண்டாவது ஒருநாள் போட்டியில் எட்டாவது ஓவரில் கோலிக்கு ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே கவர் டிரைவ் ஆடும் லென்த்திலேயே மூன்று பந்துகளை வீசினார். கோலியும் தடுமாற்றத்துடன் கவர் டிரைவ் ஆடியிருப்பார். அடுத்து 10-வது ஓவரில் மீண்டும் சௌதி பௌலிங். கோலி அதேமாதிரி கவர் டிரைவ் லென்த்தில் பந்தை எதிர்பார்க்க, சௌதி ஸ்டம்ப் லைனில் நேர்த்தியாக வீசி அரைகுறையாக ஃப்ரன்ட் ஃபுட் டிரைவுக்குச் செல்ல வைத்தார். பந்து மீட் ஆகாமல் பேடில் பட்டுவிடும். சௌதி எல்பிடபிள்யு அப்பீலுக்குச் செல்ல அம்பயர் கை உயர்த்தவில்லை. அடுத்த பந்து மீண்டு அதே லைன் & லெந்தில் வீச கவர் டிரைவா, ஃப்ரன்ட் ஃபுட் டிரைவா என குழம்பிப்போய் ஃப்ரன்ட் ஃபுட்டில் வந்த கோலியின் பேட்டுக்கும், பேடுக்கும் இடைப்பட்ட கேப்பில் பந்து சென்று போல்டாகிவிடும். டிரைவ் ஆடும்போது கால், கை, தலை, கண் இவற்றின் கோர்டினேஷன் ரொம்ப முக்கியம் என்று ஒரு ஐபிஎல் போட்டியின்போது கோலி குறிப்பிட்டிருப்பார். அந்த கோர்டினேஷன் கோலிக்கு இந்த சீரிஸில் மிஸ்ஸிங். கோலிக்கு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பந்துவீச எட்ஜ் எடுக்கும் திட்டம் பொதுவாக எல்லா அணியும் பயன்படுத்தும் யுக்தி. ஆனால் இங்கே கோலியே எந்த ஷாட் ஆடுவது எனத்தெரியாமல் அவரின் பலமான இரண்டு ஷாட்களை வைத்தே குழப்பிவிட்டதுதான் நியூசிலாந்தின் வெற்றி. இதேபோலத்தான் டிரைவ் ஷாட்களுக்குத் தயாராக இருந்து ஷார்ட் பிச் பாலில் சில ஆட்டங்களில் கோட்டைவிட்டார் கோலி.

`கண்ணா, நான் யானை இல்ல... குதிர... விழுந்தா டக்குனு எழுந்திருச்சுருவேன்' என `சந்திரமுகி' வெற்றி விழாவில் ரஜினிகாந்த் பேசியது எல்லோருக்கும் ஞாபகமிருக்கும். கோலியின் கேரியர் கிராஃபை முன்னால் வைத்துப்பார்த்தால் அது இந்த கிரிக்கெட் சூப்பர் ஸ்டாருக்கும் பொருந்தும். 2014-ல் இங்கிலாந்து தொடரில் இதே மாதிரிதான் 1, 8, 25 என சிங்கிள் டிஜிட்டில் ஸ்கோர் செய்து அவுட் ஆஃப் பார்மில் இருந்தார் கோலி. கோலியின் ஃபார்மையும் அனுஷ்காவுடனான காதலையும் கோத்து ஊடகங்கள் சர்ச்சையைக் கிளப்ப அதன் பிறகான ஆஸ்திரேலிய சீரிஸில் கோலி செய்ததுதான் வரலாற்றில் பதிக்க வேண்டிய தரமான சம்பவம்.

``சம்பவம் நடந்து 5 வருஷம் இருக்கும் சார்... அதுவரை ரைஸிங் ஸ்டாரா இருந்த கோலி நம்பர் ஒன் பேட்ஸ்மேனானது அந்த சீரிஸில்தான். அதுக்கப்புறம் அவர் வேற லெவல் சார்'' என அத்தனை ஹீரோக்களின் மாஸ் டையலாக்குகளுக்கும் பொருந்தும் பர்ஃபாமன்ஸ் அது. தோனி ஓய்வுபெற்ற அந்த ஆஸி தொடரில் மட்டும் 4 சதங்களுடன் 692 ரன்களை அள்ளிக்குவித்தார் கோலி. சொதப்பிய இங்கிலாந்து தொடரில் கோலியின் ஆவரேஜ் 13. ஆனால் ஆஸியில் ஆவரேஜ் 86.50. அதுவும் முதல் டெஸ்ட் போட்டியில் கடைசி நாளில் 360 ரன்னை டிரா செய்ய முயலாமல் சேஸுக்குச் சென்றார் கோலி. இந்தப் போட்டியிலிருந்துதான் இந்திய கிரிக்கெட் தனது அடுத்த பரிமாணத்தை தொடத் தொடங்கியது என கங்குலியே கூறியிருக்கிறார். விழும்போதெல்லாம் எழுந்தார் என்பதுதான் வரலாறு. இந்த முறை அது அடுத்த நியூஸி டெஸ்ட்டாகவும் இருக்கலாம் அல்லது அடுத்த தென்னாப்பிரிக்கா சீரிஸாகவும் இருக்கலாம்.

நியூஸிலாந்தின் மாஸ்டர் பிளான்.. பம்மிய கோலி... பேட்டிங் சொதப்பலுக்குக் காரணம் என்ன?! #Kohli
Image courtesy : ESPN cricinfo

கோலியின் எழுச்சிக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரைக்கு