Election bannerElection banner
Published:Updated:

டாப் கியரில் இங்கிலாந்து... திணறும் இந்தியா... காப்பாற்றப்போவது கோலியா, பன்ட்டா?! #INDvENG

அஷ்வின், #INDvENG
அஷ்வின், #INDvENG

இஷாந்த், லாரன்ஸின் விக்கெட்டை எல்பிடபிள்யூவில் வீழ்த்தினார். ஸ்டோக்ஸ் இறங்கினார்‌. இது இஷாந்தின் 300-வது விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்தத் தருணத்திலேயே போட்டி இந்தியாவின் பிடியிலிருந்து மொத்தமாக நழுவத் தொடங்கி விட்டது.

க்ளைமேக்ஸைத் தொட்டுவிட்டது சென்னையின் முதல் டெஸ்ட். முதல் மூன்று நாள் ஃபிளாட்டாக இருந்த சேப்பாக்கம் பிட்ச் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டது. பிட்ச்சில் ஏற்பட்டுள்ள வெடிப்புகள் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக மாறியுள்ள சூழலில் அதிரடி ஆட்டம் ஆடி இந்தியா வெற்றிபெறுமா இல்லை சுழல் சாட்டையை சுழற்றி இங்கிலாந்து வெற்றிபெறுமா என்கிற சஸ்பென்ஸை எதிர்நோக்கியிருக்கிறது கடைசி நாள் ஆட்டம்.

இந்தியா சரிவில் இருந்து மீண்டெழுந்து சாதிக்குமா அல்லது இங்கிலாந்து அணி இந்தியாவை ஃபாலோ ஆன் ஆக வைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது.

257 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என முந்தைய நாள் களத்தில் இருந்த சுந்தரும், அஷ்வினும் தனது பேட்டிங்கைத் தொடர்ந்தார்கள். இந்த இருவரிடம் இருந்து, பெரிய பார்ட்னர்ஷிப் வந்தால் மட்டுமே, இந்திய அணி ஃபாலோ ஆனைத் தவிர்க்க முடியும் என்ற சூழலில், இருவரும் தங்களது பொறுப்பை உணர்ந்து, ஆட ஆரம்பித்தார்கள் .

புதுப் பந்துக்கு 6 ஓவர்களே இருந்ததால், அஷ்வின் மற்றும் சுந்தர், சீரான இடைவெளியில் பவுண்டரிகளை அடிக்க ரன்கள் வரத்தொடங்கியது. அஷ்வின் ஒருபடி மேலே போய், பெஸ் பந்தில் இறங்கி வந்து சிக்ஸ் அடித்து அசத்தினார். சுந்தரோ லீச் பந்தில், பவுண்டரி அடித்து, தனது இரண்டாவது அரை சதத்தை நிறைவுசெய்தார். அறிமுகமான வெளியூர் மற்றும் உள்ளூர் போட்டிகளில், அரைசதமடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

#INDvENG
#INDvENG

இந்தியாவின் ஆட்டம், 80 ஓவர்கள் முடிந்திருந்த நிலையில், இங்கிலாந்தும் புதுப்பந்தை எடுத்து, விக்கெட் எடுக்கத் தயாரானது. புதுப்பந்தை லீச் வீச, அஷ்வின் பட்லரிடம் கேட்ச் கொடுத்து, ஆட்டமிழந்தார். சுந்தரும், அஷ்வினும் சேர்ந்தெடுத்த 80 ரன்கள் பார்ட்னர்ஷிப், இந்திய அணியின் ஸ்கோரை 305 ரன்கள் என உயர்த்தியது, ஆனால், ஃபாலோ ஆனைத் தவிர்க்க, இந்த ஸ்கோர் போதாது என கண்கூடாகத் தெரிய, சுந்தர் அதிரடியைக் கையிலெடுத்தார் .

நமது டெயில் எண்டர்கள் வழக்கம்போல அவுட் ஆகி, பெவிலியனை நோக்கி நடக்க ஆரம்பித்தனர், லீச் பந்தில் நதீம் டக் அவுட் ஆனார். அடுத்து வந்த இஷாந்த் ஷர்மா, 4 ரன்கள் எடுத்து ஆண்டர்சன் பவுன்சரில் அவுட் ஆனார். மறுமுனையில் சுந்தர், ஆண்டர்சன் பந்தில் நடந்து வந்து சிக்ஸர் அடித்தும், ஜோ ரூட் வீசிய ஒரே ஓவரில், பவுண்டரி, சிக்ஸர் என 13 ரன்கள் அடித்து, ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இருந்தார். ஆனால் பும்ரா, ஆண்டர்சன் பந்தில், எட்ஜ் வாங்கி, பந்து ஸ்லிப்பில் நின்று கொண்டிருத்த ஸ்டோக்ஸ் கைகளுக்குப் போக, அதை அபாரமாகப் பிடித்து பும்ராவை டக் அவுட் ஆக்கினார். சுந்தர் மட்டும் ஆட்டமிழக்காமல், 12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடித்து, 85 ரன்களுடன் நாட் அவுட்டாக பெவிலியன் திரும்பினார்.

டெஸ்ட் போட்டிகளை வெல்ல வேண்டும் என்றால் கிடைக்கும் அரிதான வாய்ப்புகளைக் கூடத் தங்களுக்கு சாதகமாக மாற்ற வேண்டும். அதை இங்கிலாந்து இந்த இன்னிங்ஸில் சரியாகச் செய்தது. ரஹானே மற்றும் பும்ராவுக்குப் பிடித்த மிகவும் கஷ்டமான கேட்ச்கள்தான் போட்டியின் போக்கையே மாற்றிவிட்டது‌. ஆனால் இந்திய வீரர்கள் கைக்கு வரும் கேட்ச்சையே கோட்டைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய அணி 337 ரன்களுக்கு நடையைக்கட்டி, 241 ரன்கள் பின்தங்கி இருந்தது, ஃபாலோ ஆன் கொடுப்பார்களா அல்லது பேட்டிங் ஆடி டார்கெட் செட் செய்வார்களா என்ற கேள்வி எழுந்த நிலையில், இங்கிலாந்து இரண்டாவது ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தது.

#INDvENG
#INDvENG

நான்காவது இன்னிங்ஸில் பேட்டிங் என்பது மிகக் கடினமானதாக மாறும் என்பதாலோ, தங்களது பெளலர்களுக்கு சற்று ஓய்வளித்து, நாளின் இறுதியில், தாக்குதலைத் தொடரலாம் என்ற எண்ணத்தாலோ, ஃபாலோ ஆன் ஆகியும், இரண்டாவது இன்னிங்ஸைத் தாங்களே தொடர்வதாய் முடிவெடுத்தார் ரூட்‌. ஓப்பனர்களாகக் களம் கண்டனர் பர்ன்ஸும், சிப்லியும்! சுழலின் சொர்க்கமாக மாறியிருக்கும், சேப்பாக்க மைதானத்தில், சுழலின் சூரர் அஷ்வினைக் கொண்டு தொடங்கினார் கோலி! அதற்குப் பலனாக முதல் பந்திலேயே விக்கெட்டும் கிடைத்தது. பர்ன்ஸை ஆட்டமிழக்கச் செய்து அஷ்வின் ஆர்ப்பரிக்க, உணவு இடைவேளைக்கு முன்னதாக வீசப்பட்ட இரண்டு ஓவர்களில், தங்களது முதல் விக்கெட்டை இழந்திருந்து இங்கிலாந்து. 1907-ம் ஆண்டுக்குப் பின் ஸ்பின்னர் ஒருவரால், இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்ந்திருப்பது இதுவே முதல் முறை.

இதற்கடுத்து இணைந்திருந்த சிப்லி-லாரன்ஸ் கூட்டணி, சற்று நேரம் தாக்குப்பிடித்தது‌. சிப்லியின் விக்கெட்டை அஷ்வினே வீழ்த்தி, இந்தக் கூட்டணியை முறித்தார். இதன்பின் உள்ளே வந்து லாரன்ஸுடன் இணைந்த ரூட், அடித்து ரன் ஏற்றும் எண்ணத்தில் இருந்தார். ரன்கள் மளமளவென ஏறத் தொடங்கிய சமயத்தில், இஷாந்த், லாரன்ஸின் விக்கெட்டை எல்பிடபிள்யூவில் வீழ்த்தினார். ஸ்டோக்ஸ் இறங்கினார்‌. இது இஷாந்தின் 300-வது விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்தத் தருணத்திலேயே போட்டி இந்தியாவின் பிடியிலிருந்து மொத்தமாக நழுவத் தொடங்கி விட்டது.

ரொம்பவே கலங்கிய இந்திய முகாம், அஷ்வினின் சுழலில் மொத்த நம்பிக்கையையும் வைக்க, அதைப் பொய்யாக்காது, ஸ்டோக்ஸின் விக்கெட்டை வீழ்த்தினார் அஷ்வின். அவரைத் தொடர்ந்து உள்ளே வந்தார் போப்.

அதிரடி ஆட்டத்தோடு அரை சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த ரூட்டை, பும்ராவே எல்பிடபிள்யூவில் வெளியேற்ற, ஐந்தாவது விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து. அதற்கடுத்தாக அதிரடி மன்னனாக களத்தில் கலக்கத் தொடங்கினார் பட்லர். தேநீர் இடைவேளையின் போதே, இவர்கள், அணியை 360 ரன்கள் முன்னிலை வகிக்க எடுத்துச் சென்று விட்டனர்.

பன்ட் மேல் உள்ள பயமோ, சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேச-மேற்கிந்தியத்தீவு அணிகளுக்கிடையேயான ஆட்டத்தின் பாதிப்போ, ஏதோ ஒன்று இங்கிலாந்தை டிக்ளேர் செய்ய விடாமல் தடுத்தது. உத்தேசிக்கவே முடியாத இந்திய அணி, எப்பொழுது எழுச்சியுறும் என்பதனைக் கணிக்கவே முடியாது, எனவே எதற்கு வம்பு... விக்கெட் இருக்கும் வரை விளையாடிக் கொண்டே இருப்போம் எனத் தொடர்ந்தது இங்கிலாந்து.

அடுத்ததாக நதீம் பந்தில் போப் நடையைக் கட்ட, வழக்கம் போல, பெஸ்ஸுக்கான ஸ்டம்பிங் வாய்ப்பை பன்ட் தவறவிட, நிறைய திருப்புமுனைகளைக் கொண்டதாகத் தொடர்ந்தது போட்டி. எனினும் அது எப்பொழுதோ இங்கிலாந்துடன் இருக்கை போட்டு அமர்ந்து விட்டதென்பதால், கலங்கித்தான் போய் இருந்தது இந்தியப் பக்கம்.

உடைக்க முடியாதிருந்த இந்தக் கூட்டணியை, பட்லரை ஸ்டம்பிங் மூலமாக ஆட்டமிழக்கச் செய்து, பன்ட் முறித்து, தன்னை விக்கெட் கீப்பராக அறிமுகப்படுத்திக் கொண்டார். வெகுநேரமாக ஆட்டம் காட்டிய பெஸ்ஸை அஷ்வின் வீழ்த்தி, அதோடு ஆர்ச்சரையும் வீழ்த்தி, தனது ஐந்தாவது விக்கெட் ஹாலைப் பதிவு செய்தார். ஆறாவது விக்கெட்டாக ஆண்டர்சனின் விக்கெட்டும் அஷ்வினுக்குக் கிடைத்தது. 420 ரன்களை இந்தியாவுக்கு இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து.

நினைத்துக்கூடப் பார்க்க முடியாத சாதனைகளை ஆஸ்திரேலியாவில் வைத்து நிகழ்த்திய இந்தியாவால், இந்த இலக்கைக் கூட எட்டித் தொட முடியும் என்ற பேராசை ரசிகர்களுக்கு எட்டிப் பார்க்க, இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது இந்தியா. எனினும் ரூட் சதமடித்த போட்டிகளில், இங்கிலாந்து தோல்வியைத் தழுவியதில்லை என்ற புள்ளிவிபரம் வேறு அவ்வப்போது அடிவயிற்றில் அமிலத்தைச் சுரக்கச் செய்தது.

ஓப்பனிங் இறங்கினர் கில்லும் ரோஹித்தும்! வழக்கம் போல, கில்லின் ஆட்டம் தொடக்கம் முதலே சிறப்பாக இருக்க, ரோஹித்தோ பாரம்பரியம் மாறாமல், எனக்கும் ரெட் பால் கிரிக்கெட்டுக்குமான இடைவெளி மிகவும் அதிகம் என்பதைப் போல், ஆர்ச்சரின் ஓவரில், ஒரு பவுண்டரியையும் சிக்ஸரையும் பதிவு செய்ததோடு, வந்த வேலை முடிந்ததென லீச்சின் பந்தில் விடைபெற்றுச் சென்றார்‌.

#INDvENG
#INDvENG

நைட் வாட்ச்மேனாக பௌலர்கள் வருவார்களென்ற எதிர்பார்ப்பைப் பொய்யாக்கி, புஜாரா உள்ளே வந்து கில்லுடன் கூட்டணி அமைத்தார். ஆட்ட நேர இறுதிவரை தங்களது விக்கெட்டுகளைப் பொன்னாய் பாதுகாத்த இந்தக் கூட்டணி, நாளின் இறுதியில், 39 ரன்களுடன் முடித்துள்ளது.

வெற்றிக்கு இந்தியாவுக்குத் தேவை, இன்னமும் 381 ரன்கள்‌, இங்கிலாந்துக்கோ இன்னும் ஒன்பதே விக்கெட்டுகள்‌! 90 ஓவர்கள் முழுதாய் மிச்சமிருக்கும் நிலையில், களமும் நாளை இங்கிலாந்து பௌலர்கள் கேட்டதை எல்லாம் கொடுக்கப் போகிறது என்னும் பட்சத்தில், இந்தப் போட்டியை இந்தியா டிரா செய்தாலே, டெஸ்ட் சாம்பியன்ஸுப்புக்கான ரேஸில் ஓட, தகுதி வாய்ந்தாக உள்ளதாய், மார்தட்டிக் கொள்ளலாம்‌. காத்திருப்போம் நம்பிக்கையுடன்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு