Election bannerElection banner
Published:Updated:

சூப்பர் ஃபார்மில் பேட்ஸ்மேன் கோலி... ஆனால், கேப்டன் கோலியோ செம சொதப்பல்! #INDvENG

கோலி #INDvENG
கோலி #INDvENG

முதல் போட்டியில் நடந்ததைப் போலவே, பவர்ப்ளே ஓவர்களில் வெறும் 23 ரன்களை மட்டும் எடுத்து மூன்று விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, திணறத் தொடங்கியது இந்தியா. பவர்ப்ளே ஒவர்களிலேயே போட்டி இந்தியாவின் கையை விட்டு சென்றுவிட்டது.

கோலியின் பேட்டிங் கோலாகலத்துடன் தொடங்கிய மூன்றாவது டி20, பட்லரின் பட்டாசு பேட்டிங்கினால் இங்கிலாந்துக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளது. 5 டி20 போட்டிகள் கொண்டத்தொடரில் இப்போது இங்கிலாந்து 2-1 என முன்னிலைப்பெற்றுள்ளது.

ஐந்து பௌலர்களை மட்டுமே வைத்துக் கொண்டு ஆடும், இந்தியாவின் பழைய டெக்னிக் பலனலிக்காது போக, தோல்வியைத் தொட்டிருக்கிறது இந்தியா. மற்ற அணிகளில், பார்ட் டைம் பௌலர்களையும் சேர்த்துக் கணக்கிட்டால், 7 பௌலர்கள் பந்து வீசிக் கொண்டுள்ளனர். இந்திய அணியோ, கடந்த இரண்டு போட்டிகளாக, வெறும் ஐந்து பௌலர்களோடே வேரியேஷன்ஸ் இல்லாமல் போக, அது பௌலிங் யூனிட்டைப் பலவீனமாக்கி, அணிக்கு பலவீனத்தை ஏற்படுத்துகிறது.

டாஸை வெல்வது, பௌலிங்கைத் தேர்ந்தெடுப்பது, போட்டியில் வெல்வது, இதுவே கடந்த இரண்டு போட்டிகளில் திரும்பத்திரும்ப நிகழ்ந்து கொண்டிருப்பதால், நேற்றைய போட்டியில் டாஸை வென்ற மார்கன் என்ன செய்வார் என்பது அனைவரும் அறிந்ததாகவே இருந்தது. பௌலிங்கைத் தேர்ந்தெடுத்த இங்கிலாந்தில், டாம் கரணுக்கு பதில், மார்க் உட் உள்ளே வந்திருந்தார். இந்தியாவின் சார்பிலோ, ரோஹித் உள்ளே வர, அறிமுகப் போட்டியில், ஒரு பந்தைக் கூடச் சந்திக்க முடியாமல் போன சூர்யகுமார் வெளியே உக்கார வைக்கப்பட்டிருந்தார். தனது நூறாவது டி20 போட்டியான இன்றைய போட்டியில் வென்றே ஆக வேண்டுமென்ற முனைப்போடு இறங்கினார், மார்கன்.

ஆதில் ரஷித்துடன் இங்கிலாந்து தொடங்க, ராகுல் ரோஹித்துடன் இந்தியா தொடங்கியது. ரஷித்தின் ஓவரை, ஐந்து ரன்களோடு தொடங்கிய இந்தியா, அடுத்த ஓவரில், ஆர்ச்சரைச் சந்தித்தது. வீசிய முதல் பந்திலேயே, ரோஹித் கொடுத்த ஒரு கேட்ச் வாய்ப்பை ஆர்ச்சரே தவறவிட்டார். அதற்கடுத்த ஓவரிலேயே, மார்க் உட்டை மார்கன் இறக்க, வேகத்தில் மிரட்டத் தொடங்கிய உட், முதல் விக்கெட்டாக ராகுலை காலி செய்தார். க்ளீன் போல்ட் ஆன ராகுல், டக் அவுட் ஆகி வெளியேறினார். கடைசியாக விளையாடிய நான்கு டி20 இன்னிங்ஸ்களில், மூன்றில் டக்அவுட் ஆகியுள்ள ராகுல், மற்றொன்றில் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்தார். சிறந்த டி20 பேட்ஸ்மேனான ராகுலின் தற்போதைய ஃபார்ம்தான், இந்தியாவுக்கு இப்போது பெருங்கவலையாக மாறியிருக்கிறது.

ஒன்டவுனில், கோலியை எதிர்பார்த்த கண்களுக்கு, இஷானின் வரவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மறுபுறம் ரோஹித் இரண்டு பவுண்டரிகளை விளாச, இன்று ரோ'ஹிட்' ஷோ என எழுந்த நம்பிக்கையை உடனே பொய்யாக்கி, உட் வீசிய பந்தை, புல் ஷாட் ஆட முயற்சித்து ஷார்ட் ஃபைன் லெக்கில் நின்றிருந்த ஆர்ச்சரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஓப்பனர்கள் இருவரையும் அடுத்தடுத்து வீழ்த்தி, பவர்ப்ளே ஓவர்களைக் கபளீகரம் செய்தார் உட்.

#INDvENG
#INDvENG

கோலி உள்ளே வந்து, சந்தித்த இரண்டாவது பந்தையே பவுண்டரிக்கு விரட்டி, சென்ற போட்டியில் சிக்ஸரோடு விட்ட இடத்தில், இன்று பவுண்டரியோடு கணக்கைத் தொடங்கினார். ஆனால், ஜோர்டன் வீசிய பவுன்சரில், தவறான ஷாட் ஆடி, தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார் இஷான். இந்திய வீரர்கள் அதிவேக பந்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் தொடர்ந்து வீழ்ந்து கொண்டிருப்பதும் வேதைனக்குரியதாக இருக்கிறது.

முதல் போட்டியில் நடந்ததைப் போலவே, பவர்ப்ளே ஓவர்களில் வெறும் 23 ரன்களை மட்டும் எடுத்து மூன்று விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, திணறத் தொடங்கியது இந்தியா. பவர்ப்ளே ஒவர்களிலேயே போட்டி இந்தியாவின் கையை விட்டு சென்றுவிட்டது.

கோலி - பன்ட் கூட்டணி மீது மொத்த நம்பிக்கையையும் வைத்தனர் இந்திய ரசிகர்கள். நினைத்ததைப் போலவே, ரன்களை அதிரடியாகச் சேர்க்கத் தொடங்கியது இந்தக் கூட்டணி. ரஷித்தின் பந்தில், ஃபைன் லெக்கில் ஒன்று, எக்ஸ்ட்ரா கவரில் ஒன்று என இரண்டு பவுண்டரிகளை பயமின்றி விளாசிய பன்ட், துரதிர்ஷ்டவசமாக 11-வது ஓவரில், ரன்அவுட் ஆனார். இரண்டு ரன்களை ஓடி எடுத்திருந்த நிலையில், பட்லர் பந்தை எடுத்தெறிய தாமதமாவதை கவனித்து, மூன்றாவது ரன்னுக்கு ஓட கோலி அழைக்க, பன்ட் போய்ச் சேர்வதற்குள் பந்து பெய்ல்ஸை பெயர்த்துவிட்டது. 20 பந்துகளில், 25 ரன்களைக் குவித்திருந்த பன்ட், மிகுந்த ஏமாற்றத்தை முகத்தில் காட்டியபடியே வெளியேற, தற்போது ஒட்டுமொத்த சுமையும் கோலியின் தலையில் இறங்கியது.

அதற்கடுத்து வந்த ஷ்ரேயாஸும் வெகுநேரம் தாக்குப் பிடிக்காமல், மூன்றே ஓவர்களின் முடிவில் வெளியேற, பாண்டியா உள்ளே வர, அதற்கடுத்தாகத்தான் ஆரம்பித்தது, கோலியின் வெறியாட்டம்‌. 145-க்கு மேலான வேகத்தில் வரும் பந்தைக் கண்டு கொஞ்சமும் அஞ்சாமல், சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசத் தொடங்கினார். உட்டின் ஓவரில் வரிசையாக, 6, 6, 4 ரன்களை விளாசியதோடு மட்டுமில்லாது, அடுத்த பந்தையும், பெரிய ஷாட்டாக மாற்ற முடியவில்லை என ஆக்ரோஷத்தில் கத்தியது பழைய அக்ரசிவ் பேட்ஸ்மேன் மீண்டும் வந்துவிட்டார் என்பதை. உட் தனது கடைசி ஓவரான இதனை வீச வரும்போது, அவரது எக்கானமி, வெறும் 5.3 தான். அதை 7.8-க்கு எகிறச் செய்து பாடம் கற்பித்து அனுப்பி வைத்தார், கோலி.

#INDvENG
#INDvENG

இந்த இடைவெளியில், கோலியின் 27-வது டி20 அரைசதமும் வந்து சேர்ந்தது. இங்கிலாந்து பௌலர்களின் பந்துகளைச் சொல்லி வைத்து அறைவது போல் அடிக்கத் தொடங்கினார் கோலி. ஆர்ச்சர், ஜோர்டன் என எல்லோருடைய பந்தும் அடி வாங்க, இறுதியில், 46 பந்துகளில், 77 ரன்களைக் குவித்த கோலி, அணியின் ஸ்கோரை, 156-க்கு கொண்டு வந்து நிறுத்தினார். ஒரு கட்டத்தில், 24/3 என இருந்த இந்த அணியின் ஸ்கோர், 150ஐ தாண்ட, கோலியே காரணம். முதல் 15 பந்துகளில், 93ஆக இருந்த கோலியின் ஸ்ட்ரைக் ரேட், அதற்கடுத்த பதினைந்து பந்துகளில், 120ஐ தொட்டு, அதற்கடுத்ததாக, 281 -ஆக எகிறியது. 'டெஸ்டிரக்டிவ் பேட்ஸ்மேன்' என்னும் வார்த்தைக்கான அர்த்தத்தை மீண்டுமொரு முறை கற்பித்தார் கோலி. எனினும், இங்கிலாந்தைச் சுருட்ட இந்த ரன்கள் போதுமா எனும் சந்தேகத்துடனேதான் தொடங்கியது இரண்டாவது பாதி ஆட்டம்.

பவர்ப்ளே ஓவர்களில் இங்கிலாந்து பந்துவீசியது போல், இந்தியா வீசினால் மட்டுமே வெற்றி என்ற நிலையில் புவ்னேஷ்வரைக் கொண்டு முதல் ஓவரைத் தொடங்கியது இந்தியா. விக்கெட் வீழ்த்தும் வியூகத்துடன், பௌலர்களை மாற்றி மாற்றிப் பயன்படுத்தத் தொடங்கினார் கோலி. நான்காவது ஓவரில் வந்த சஹாலுக்கு, சிக்ஸரோடு பட்லர் வரவேற்புக் கொடுக்க, பதில் மரியாதையாக, அதே ஓவரில், ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயற்சித்த ராயை, ரோஹித்திடம் கேட்ச் கொடுக்கச் செய்து ஆட்டமிழக்க வைத்தார் சஹால். எனினும் பட்லரோ, வீசப்பட்ட சஹாலின் அந்த ஓவரின் இன்னொரு பந்தையும் சிக்ஸருக்கு அனுப்பி, சுழல் பந்துக்கு சரிந்து விடுவேனா என லாவகமாக ஆடினார். அடுத்தாக வந்த தாக்கூரின் ஓவரில், இரண்டு பவுண்டரிகளையும் ஒரு சிக்ஸரையும் விளாசி தாக்கூரை தாக்கினார், பட்லர். இந்திய பௌலர்கள் பந்துவீச்சில் மிரட்டுவார்கள் என்று பார்த்தால், பந்து வீச்சாளர்களையே அட்டாக் செய்து பயமுறுத்திக் கொண்டிருந்தார் பட்லர்.

ரன்ரேட் எட்டுக்கு மேல் எகிறிக் கொண்டிருக்க, சுந்தரை மிகத் தாமதமாக எட்டாவது ஓவரில்தான் உள்ளே கொண்டு வந்தார் கோலி. அந்த ஓவரில், நான்கு ரன்களை மட்டுமே கொடுத்தார் சுந்தர். இதற்கிடையில் பட்லரின் அரைச்சதமும், 26 பந்துகளிலேயே வந்துவிட, சூறையாடிக் கொண்டிருந்தார் பட்லர். தனது இரண்டாவது ஓவரை வீச வந்த சுந்தரின் பந்தில், மலானை ஸ்டெம்பிங் ஆக்கி அனுப்பி வைத்தார், பன்ட். எனினும் இன்னொருபக்கம், பயங்காட்டிக் கொண்டிருந்த பட்லரை, இந்தியாவால் ஒன்றும் செய்ய முடியாமல் போக, 71 பந்துகளில் சதமடித்தது இங்கிலாந்து ஸ்கோர்.

இன்னும் 49 பந்துகளில், 57 பந்துகள் மட்டுமே தேவை என்பதால், ஆட்டம் ஒருபக்கமாகவே சென்று கொண்டிருந்தது‌. பட்லரும், பேர்ஸ்டோவும் இங்கிலாந்தை வெற்றியை நோக்கி நகர்த்திக் கொண்டே இருந்தனர்.

வென்றாக வேண்டுமென்றால் விக்கெட்டுகள் வேண்டும் என்பது நன்றாகத் தெரிந்திருந்தும், அதை நிகழ்த்திக் காட்டத்தான் இந்திய பௌலர்களால் முடியவில்லை. நன்றாக செட் ஆகிவிட்ட பட்லர் பம்பரமாக ஆடத்தொடங்கினார். பந்துவீசிய அனைத்து பௌலர்களின் பந்துகளையும் பவுண்டரிக்கு அனுப்பிக் கொண்டே இருந்தார், யாராலும் பட்லரைக் கட்டுபடுத்தவே முடியவில்லை, மறுபுறம் பேர்ஸ்டோவும் தன் பங்குக்கு பவுண்டரிகளை விளாச, வெற்றி எளிதாக வந்து சேர்ந்தது. அடுத்தடுத்து விக்கெட் இழப்பு, பனிப்பொழிவு, 6-வது பௌலர் இல்லாதது, பெரிய ஸ்கோர் எடுக்காதது என்ற பல காரணங்களினால் இந்தியா இந்தப் போட்டியை இங்கிலாந்திடம் கோட்டைவிட்டு 2-1 என்ற நிலையில் உள்ளது.

#INDvENG
#INDvENG

பேட்ஸ்மேன் கோலி செம ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு பெரிய ப்ளஸ். ஆனால், கேப்டன் கோலியோ கன்னாபின்னா ஆட்டம் ஆடுகிறார். கடந்தப்போட்டியில் உள்ளே கொண்டுவரப்பட்ட சூர்யகுமார் யாதவுக்கு பேட்டிங் ஆடும் வாய்ப்பே கிடைக்கவில்லை. ஆனால், மூன்றாவது டி20-க்கு அவரை வெளியே அனுப்பிவிட்டு ரோஹித்தை உள்ளே கொண்டுவந்துவிட்டார். நியாயப்படி அவர் ராகுலை வெளியே உட்காரவைத்திருக்கவேண்டும். அதேப்போல் வாஷிங்டன் சுந்தர்தான் பவர்ப்ளே ஸ்பெஷலிஸ்ட் பெளலர். ஆனால், அவரைத்தொடர்ந்து பவர்ப்ளே முடிந்ததும் பந்துவீசவைக்கிறார் என கேப்டன் கோலியின் சொதப்பல்கள் தொடர்வது இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவு!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு