Published:Updated:

கோலி படையின் இங்கிலாந்து யுத்தம்… பெஸ்ட் கிரிக்கெட்டான டெஸ்ட் கிரிக்கெட்டில் வெல்லப்போகும் அணி எது?

விராட் கோலி - ஜோ ரூட் ( Rui Vieira )

முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கோட்டைவிட்ட இந்தியாவுக்கு, அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான முதல் தொடராக இது அமையப் போகிறது. இங்கிலாந்துக்கும் இதே நிலைதான் என்பதால், இருவருமே இதை வெற்றிக் கணக்கோடு தொடங்க விரும்புவார்கள்.

கோலி படையின் இங்கிலாந்து யுத்தம்… பெஸ்ட் கிரிக்கெட்டான டெஸ்ட் கிரிக்கெட்டில் வெல்லப்போகும் அணி எது?

முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கோட்டைவிட்ட இந்தியாவுக்கு, அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான முதல் தொடராக இது அமையப் போகிறது. இங்கிலாந்துக்கும் இதே நிலைதான் என்பதால், இருவருமே இதை வெற்றிக் கணக்கோடு தொடங்க விரும்புவார்கள்.

Published:Updated:
விராட் கோலி - ஜோ ரூட் ( Rui Vieira )

இலங்கையிடம் வாங்கிய அடியின் மனவலிக்கும், அதீத கொண்டாட்டங்கள் நிறைந்த ஐபிஎல் 20/20 கிரிக்கெட்டுக்கும் நடுவில், வெள்ளை ஆடையில் உலா வரும் உண்மையான கிரிக்கெட்டைக் காண இருக்கிறோம். இந்திய கிரிக்கெட் காதலர்கள், ஆஸ்திரேலியத் தொடருக்கு அடுத்தபடியாக, ஆவலுடன் எதிர்நோக்கும் தொடர், இந்தியா இங்கிலாந்தில் ஆடும் டெஸ்ட் தொடர்கள்தான்.

ஆஸ்திரேலியாவின் பவுன்சர்கள் முன்வைக்கும் அதே சவாலினை, இங்கிலாந்தின் டியூக் பாலின் ஸ்விங்குகளும் சரிசம அளவில் வைக்கும். இதையும் தாண்டி, ராகுல் டிராவிட் தொடங்கி, கோலி வரை, ஃப்ளின்டாஃப் தொடங்கி, ஆன்டர்சன் வரை, எல்லோருக்குள்ளும் தீர்க்கப்படாத கணக்குகளும், பரிசல் செய்யப்படாத பகையும், அதை நேர் செய்வதற்கான யுத்தங்களும், களத்தில் நடந்தேறி, போட்டியின் சுவாரஸ்யத்தை, வேறு தளத்துக்கு எடுத்துச் செல்லும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட்டில் வெல்வதையே இந்தியா, சாதனையாகப் பார்க்கும் சூழ்நிலைதான் இதுவரையிலும் நடந்திருக்கிறது. இங்கிலாந்து மண்ணில், இந்தியா ஒரு தொடர் வெற்றியைப் பதிவு செய்து, 14 ஆண்டுகள் முடிந்துவிட்டன. அப்படி இருக்க, ஐந்து போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில், இந்தியாவின் பலம், பலவீனம், வெற்றி வாய்ப்புகள் என்னென்ன?

ரூட் - கோலி
ரூட் - கோலி
Rui Vieira

21-ஆம் நூற்றாண்டின் கதை!

இந்தியாவும் - இங்கிலாந்தும், 2000-வது ஆண்டுக்குப் பின், இங்கிலாந்தில் மோதியுள்ள போட்டிகளில், இங்கிலாந்தின் கையே ஓங்கி உள்ளது. 2002-ம் ஆண்டு நடைபெற்ற தொடரை சமன் செய்திருந்த இந்தியா, 2007-ம் ஆண்டு மட்டுமே வெற்றியைத் தொட்டிருந்தது. அதற்கு அடுத்தபடியாக, 2011, 2014, 2018 ஆகிய கடைசி மூன்று சுற்றுப்பயணங்களிலும், வெறுங்கையோடுதான் இந்தியா வீடு திரும்பியது. கடைசியாக விளையாடிய நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், பாகுபாடே இல்லாமல், உதை வாங்கியிருந்தன இரு நாடுகளுமே.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்!

முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கோட்டைவிட்ட இந்தியாவுக்கு, அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான முதல் தொடராக இது அமையப் போகிறது. இங்கிலாந்துக்கும் இதே நிலைதான் என்பதால், இருவருமே இதை வெற்றிக் கணக்கோடு தொடங்க விரும்புவார்கள்.

காயக் கதைகள்!

சிராஜின் அற்புதப் பந்து வீச்சில், டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பே, தனது அணியைச் சேர்ந்த இரு விக்கெட்டுகளை இழந்து விட்டது இந்தியா. ஏற்கனவே, வாஷிங்டன் சுந்தர், சிராஜால், விரலில் காயம்பட்டு இந்தியா திரும்பிய நிலையில், தற்போது, மயங்க் அகர்வாலும் சிராஜின் ஷார்ட் பாலினால், தலையில் காயம்பட்டு, முதல் டெஸ்ட்டில் இருந்து விலகி உள்ளார். "கரம் சிரம் சிராஜிடம் பத்திரம்" என சக வீரர்களையே சொல்ல வைத்ததோடு, தனது ஸ்விங்கிங் திறனாலும், ரெட் பால் கிரிக்கெட்டில் அவருடைய ரெகார்டுகளாலும், தவிர்க்க முடியாத வீரராகி விட்டார், சிராஜ்.

ஃபேப் 4-ல் இருவர்!

கோலியின் சதத்துக்கான காத்திருப்பு, மாதங்களைத் தாண்டி, ஆண்டுக் கணக்கைத் தொட்டுவிட்டது. இத்தொடரில், பத்து இன்னிங்ஸ்களில் களமிறங்க இருக்கும் கோலி, அதில் நிச்சயம் ஒன்றல்ல பல சதங்களை அடிக்க வேண்டுமென்பதே ரசிகர்களின் ஆசை. 16 போட்டிகளாக சதத்தையே பார்க்காமல் இருந்த மேத்யூ ஹேடனின் பேட், அந்த விரதத்தை, ஓவலில் வைத்து முடித்துக் கொண்டு, அதன்பின் வரிசையாக மூன்று சதங்களை விளாசியது. அதேபோல, இத்தொடர், கோலியின் சதத்துக்கான ஏக்கத்தை கண்டிப்பாகத் தீர்க்கும் என நம்பலாம். ஜோ ரூட்டை பொறுத்தவரை, கடந்த 11 டெஸ்ட் இன்னிங்ஸ்களில், ஒருமுறை கூட அவர், அரைசதத்தைக் கடக்கவில்லை. அது இந்தத் தொடரில் மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா
Rui Vieira

ஓப்பனர்களின் ஓப்பனிங் தகராறு!

இந்தியாவின் ஓப்பனர்கள் ஸ்லாட்டில், ஒன்றில் ரோஹித்தின் பெயர் எழுதப்பட வேண்டும் என்பது எழுதப்படாத விதி. எனினும், அந்த மற்றொருவர் யார் என்ற குழப்பம் நீடித்தது. கில் இல்லாத நிலையில், மயங்க் அகர்வாலும் காயத்தால் விலக, கே.எல். ராகுலைத் தவிர அது வேறு யாராக இருக்க முடியும்?! ராகுலைப் பொறுத்தவரை, 2018-ல் இங்கே வைத்து சதம் அடித்த பின்பு, தன்னை நிரூபிக்க, போதுமான போட்டிகள், அவருக்குக் கிடைக்கவில்லை. அப்படி இருக்க, இந்தத் தொடர், அவருக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இன்னமும் சொல்லப் போனால், அயல்நாடுகளில், டெஸ்ட் போட்டிகளில், தன்னை நிலைநிறுத்திக் கொள்ள போராடும் ரோஹித்துக்கும், இது ஒரு முக்கிய தொடர்தான்.

டியூக் பந்துகளும் புஜாராவும்!

‘’புஜாரா, ஒன் டவுனில் இறங்கி பந்துகளை வீணடிக்கிறார், அதனால், அவர் சென்றபின், பின்வரிசை வீரர்களும், புதுப்பந்தும் சேர்ந்தே வருவது இந்திய அணிக்குச் சவாலாகிறது. எனவே, அவரை முன்னால் இறக்கலாம்’’ என கருத்துகள் வெளியானது. ஆனால், இந்த கருத்துக்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளிவைத்து "ஒன்டவுன்தான் அவருக்கான இடம்" எனச் சொல்லியிருக்கிறார் துணை கேப்டன் ரஹானே. எனினும், ஆஸ்திரேலியாவின் பவுன்சர்களை பதறாது எதிர்கொள்ளும் புஜாரா, ஸ்விங் பந்துகளை நேர்கொள்வதில், தொடர்ந்து திணறி வருகிறார். அதை இந்தத் தொடரில் மாற்றுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

துளைகளுள்ள கப்பல்!

இந்தியாவின் பேட்டிங் லைன் அப், ஏழு அல்லது எட்டாவது வீரர் வரை நீளுமென்றாலும், அது எந்தளவுக்கு வலிமையாக இருக்கிறது என்பதுதான், எல்லாவற்றையும் தீர்மானிக்கப் போகிறது. இந்திய பேட்ஸ்மேன்கள் யாருமே, சமீப காலங்களில், மிகப் பிரமாதமாக ஆடிவிடவில்லை. குறிப்பாக, தற்போதைய அணியிலுள்ள வீரர்களில், 2018-ஆம் ஆண்டிற்குப் பிறகு, SENA நாடுகளில், 40-க்கும் அதிகமான ஆவரேஜை வைத்திருப்பது, கோலி, பன்ட் மற்றும் ஜடேஜா மட்டுமே.

ரஹானேவிடம் இருந்து ஒரு நிலைத்தன்மை உடைய ஆட்டத்தைப் பார்க்க முடியவில்லை. கடந்த ஆஸ்திரேலிய தொடரில் அடித்த சதத்தைப் பற்றித்தான் இன்னமும் பேசிக் கொண்டுள்ளோம். ஹனுமா விஹாரியைப் பொதுவாக நம்பலாம் என்றாலும், அவர் இங்கிலாந்து சூழ்நிலைகளை எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்பதை உறுதியாகச் சொல்லிவிட முடியாது. பன்ட்டின் அதிரடி அணுகுமுறை, எல்லா நேரத்திலும் கை கொடுக்காது. எனவே, ஒவ்வொரு போட்டியிலும், ஏதோ மூன்று அல்லது நான்கு பேட்ஸ்மேன்கள், சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே, இந்தியா, தொடர் வெற்றி இல்லை, ஒரு போட்டியில் வெல்வதை பற்றியாவது கனவு காண முடியும். நியூஸிலாந்தின் ஸ்விங் பௌலிங்கைச் சமாளிக்கவே திணறிய இந்தியாவை இங்கிலாந்து, இன்னமும் அதிக இக்கட்டில் தள்ளும்.

ஜேம்ஸ் ஆண்டர்சன்
ஜேம்ஸ் ஆண்டர்சன்
Rui Vieira

தொடரும் டெய்ல் எண்டிங் சோகம்!

இந்தியாவால், எண்ட் கார்டு போட முடியாத முக்கிய பிரச்னை, டெய்ல் எண்டர்கள் பிரச்னைதான். இந்தியாவின் பௌலர்கள் டாப் 3 வீரர்களைக் கூட, சுலபமாக வீழ்த்துவார்கள். ஆனால், பின்வரிசை வீரர்களை அனுப்புவது தான் அவர்களுக்குக் கடினமான காரியம். அதே நேரத்தில், இந்திய வீரர்கள், பேட்டிங் செய்யும் போதும், மற்ற அணிகளைப் போல், டெய்ல் எண்டர்கள் இணைந்து, 60 - 80 ரன்கள் குவித்தது எல்லாம் இங்கே எட்டாவது அதிசயமே.

அஷ்வினா, ஜடேஜாவா?

இங்கிலாந்து என்னதான் வேகப்பந்து வீச்சுக்கு ஆதரவளிக்கும் மைதானங்கள் என்றாலும், பொதுவாக அங்கே, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் நிலவும் தட்பவெப்ப சூழல், ஸ்பின்னருக்கு கை கொடுக்கும். அதனால், ஸ்பின்னர்களது பங்கும் முக்கியமானதாகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, நம்பத்தகுந்த ஆல் ரவுண்டராக, தன்னை பலமுறை ஜடேஜா நிரூபித்திருக்கிறார், அவருக்கு இணையாக தற்சமயத்தில் அஷ்வினுடைய செயல்பாடும் சிறப்பாகவே இருக்கிறது. கவுன்ட்டி போட்டியிலும், அதனைக் காட்டி இருந்தார் அஷ்வின். எனவே இந்த இருவரில் யாரென்பது அணிக்குக் கடினமான முடிவே!

கோலிக்கு செக்!

பேட்ஸ்மேனாக மட்டுமின்றி, கேப்டனாகவும், தன்னை நிரூபிக்கும் அவசியம், கோலிக்கு உள்ளது. ஏனெனில், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பினை இழந்ததில் இருந்து, அவருக்கு எதிராக எழுப்பப்படும் கேள்விகளுக்கான ஒரே பதில், ஒரு பெரிய வெற்றியாக மட்டுமே இருக்க முடியும். எனவே அதையும் கருத்தில் கொண்டே கோலி செயல்படுவார்.

ஜஸ்பிரித் பும்ரா
ஜஸ்பிரித் பும்ரா
Rui Vieira

கிரீன் டாப் விக்கெட்டுகள்!

பச்சைப் பசேலென்ற புல்தரைகள், இந்தியாவை, நான்கு வேகப் பந்து வீச்சாளர்களோடு களமிறங்கத் தூண்டலாம். அப்படி நடந்தால், இஷாந்த், பும்ரா, ஷமி, சிராஜ், முதன்மைத் தேர்வாக இருப்பார்கள்.

டாப் ஆர்டர் வீரர்கள் திணறல்!

இங்கிலாந்துக்கு சமீப காலமாக, டாப் ஆர்டர் வீரர்களின் பேட்டிங் திருப்திகரமானதாக இல்லை. இந்த ஆண்டுத் தொடக்கத்தில் நடைபெற்ற இந்திய தொடரில் இருந்து, அதன்பின் வந்த எல்லா போட்டிகளிலும் இதுதான் நிலைமை. இது அவர்களுக்கு மிகப் பெரிய தலைவலியாக இருந்து வருகிறது.


ஸ்டோக்ஸ் இல்லா குறை!

இங்கிலாந்தைப் பொறுத்தவரை, பென் ஸ்டோக்ஸ் மிக மிக முக்கியமானவர். இதையேதான், ரூட்டும் குறிப்பிட்டிருந்தார். அவர் இல்லாத நிலையில், அங்கே உருவாகி இருப்பது, பெரிய வெற்றிடமே. இது இங்கிலாந்துக்கு, மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.


ஆண்டர்சன் என்னும் ஆக்கிரமிப்பாளன்!

இந்தியாவுக்கு எதிராக, இதுவரை 118 விக்கெட்டுகளை சாய்த்துள்ள ஆண்டர்சன், காலம் காலமாக பெரிய அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறார். கோலியை மட்டும் இதுவரை ஐந்து முறை ஆட்டமிழக்கச் செய்திருக்கிறார் ஆண்டர்சன். 2018 தொடரில் கோலி ஆண்டர்சனை சிறப்பாக சமாளித்திருந்தாலும், இந்தமுறை என்ன நடக்கும் என்பதைப் பொருத்திருந்தான் பார்க்கவேண்டும். இன்னும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினால், டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனைக்குரிய மூன்றாவது இடத்தை, கும்ப்ளே உடன் (619) பகிர்ந்து கொள்வார், ஆண்டர்சன். ஸ்டூவர்ட் பிராடும், இந்தியாவிற்கு எதிராக 70 விக்கெட்டுகளை வீழ்த்தி, அச்சுறுத்துகிறார். இந்த இருவருமே, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுப்பார்கள்.

சமீப காலமாக, பிளேயிங் லெவனை, முன்னதாகவே அறிவிப்பதை டிரெண்டாக மாற்றிக் கொண்டிருந்த இந்தியா, இந்த முறை, டாஸின் போது அறிவிப்போம் என்று சொல்லி இருக்கிறது. ஆண்டர்சன், போட்டிக்கு முந்தைய பேட்டியில், ‘’இந்தியா, பிட்ச் புல் நிறைந்ததாக இருப்பதைப் பற்றிக் கேள்வி எழுப்பக் கூடாது. நாங்கள் இந்தியாவுக்குச் சென்ற போது, அவர்களுக்குத் தகுந்தாற்போல் தான் களம் இருந்தது’’ என்று தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே, உரசல்களுக்கும் மோதல்களுக்குமான முன்னோட்டத்தைக் காட்டியுள்ளார்.

இங்கிலாந்தில் 14 ஆண்டுகால தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா கோலியின் படை... உங்கள் கருத்து என்ன?