Published:Updated:

கோலி VS ரூட்|பயமுறுத்தும் மான்செஸ்டர் மழையும், இதுவரை வெற்றியில்லா வரலாறும்… தொடரை வெல்லுமா இந்தியா?

அஷ்வினுக்குத் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வரும் வாய்ப்பு, ரஹானேவுக்குக் கணக்கின்றிக் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் போட்டியில், அவருக்கு பதிலாக விஹாரி, சூர்ய குமார் யாதவ், மயங்க் அகர்வால் ஆகியவர்களில் யாரோ ஒருவருக்கு வாய்ப்புக் கிடைக்கலாம்.

கொரோனா கருமேகங்கள் ஒருபக்கம் இருள்சூழ பயமுறுத்தினாலும், எந்த அச்சுறுத்தலுக்கும் இரையாகாமல், திட்டமிட்டபடி நடைபெற இருக்கிறது, இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான இறுதிச் சுற்று.

2-1 என தொடரில் முன்னிலை வகிப்பதோடு மட்டுமில்லாமல், ஓவலில் 50 ஆண்டுகள் கழித்து, ஒரு அபார வெற்றியைப் பதிவு செய்த பெருமிதத்தோடு இந்திய அணி இப்போட்டியை எதிர் கொள்கிறது. கோலியோ, SENA நாடுகளில், அதிக டெஸ்ட் வெற்றிகளைக் கையகப்படுத்திய ஆகச்சிறந்த ஆசியக் கேப்டன் என்னும் சாதனையை சுமந்தபடி, அடுத்த வெற்றி மீது கண் வைத்து களமிறங்குகிறார்.

நாடகக் காட்சிகள்!

அணியின் இரண்டாவது நிலை பிஸியோவான யோகேஷ் பர்மார், கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஐபிஎல்லையும், வீரர்கள் நலனையும் மனதில் வைத்து பிசிசிஐ, இப்போட்டியில் இருந்து பின் வாங்கலாம் என்ற யூகங்கள், வீரர்களுக்கான கொரோனா சோதனை முடிவுகள் கோவிட் டெஸ்ட் நெகட்டிவ் என கொண்டு வந்த நல்ல தகவல் என ஒரே நாளுக்குள், லார்ட்ஸ் டெஸ்ட் ஏற்படுத்திய கடைசி நொடி திருப்பு முனைகளையும் பரபரப்பையும், போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே ஏற்படுத்தி விட்டது ஐந்தாவது டெஸ்ட் போட்டி. போட்டியின் முடிவை எதிர்பார்த்த காட்சி நகர்வுகள் எல்லாம் பழையதாக, போட்டி நடைபெறுமா இல்லையா என்பதிலேயே சந்தேகத்தைக் கிளப்பி, அடுத்தடுத்து வந்த செய்திகள் அச்சமூட்டி விட்டன.

ENG Vs IND
ENG Vs IND
Martin Rickett

சரித்திரம் திரும்புமா?

1971, 1986 மற்றும் 2007-ம் ஆண்டு, இங்கிலாந்தில், டெஸ்ட் தொடரை வென்று காட்டிய சாதனையை, மறுபடி ஒருமுறை நிகழ வைக்க, இந்திய அணி, உறுதி பூண்டுள்ளது. குறிப்பாக, 2007-ம் ஆண்டுக்குப் பின்னர், இங்கிலாந்து மண்ணில், டெஸ்ட் அரங்கில், மோசமான தோல்விகளை மட்டுமே தனதாக்கிக் கொண்டிருந்த இந்தியாவுக்கு, இந்த வெற்றி, மிக மிக அவசியமானதாகவும், டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புதிய சுற்றை, நம்பிக்கையாகத் தொடங்குவதற்கான அச்சாரமாகவும் இருக்கும்.

மழையும் மைதானமும்!

"பள்ளி இருக்குமா, விடுமுறை கிடைக்குமா?!" என்ற கேள்வியோடு, வானிலை அறிக்கையை உற்று நோக்கும் மாணவனின் மனநிலைக்கு, ரசிகர்களைத் தள்ளி விடுகிறது, இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகள். முதல் டெஸ்டைப் போலவே, இந்தக் கடைசிப் போட்டியிலும், மழை குறைந்தது இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஆட்டத்தைக் கலைத்துப் போட்டு விளையாடும் என வானிலை அறிக்கை, அடிக்கோடிட்டுள்ளது. அது போட்டி பாதிக்கப்படும் என்ற கலக்கத்தையும், எத்தனை விக்கெட்டுகளை, அத்தகைய தட்ப வெப்பநிலை, ஸ்விங் என்னும் பரிசுப் பெட்டகத்தில் வைத்து, ஆண்டர்சனின் கணக்கில் ஏற்றப் போகிறதோ என்ற அச்சத்தையும், ஒரு துளி சேர்க்க, மான்செஸ்டரில் இந்தியா வென்றதே இல்லை என்ற புள்ளி விபரமும் பயமுறுத்துகிறது. இதுவரை இங்கே நடந்துள்ள ஒன்பது போட்டிகளில், ஐந்து முறை டிரா செய்து, நான்கு முறை தோல்வியையே தழுவி உள்ளது இந்தியா. இங்கிலாந்து, இங்கே நடந்துள்ள 81 போட்டிகளில், 31-ல் வென்று, 35-ல் டிரா செய்து, 15-ல் மட்டுமே தோற்றுள்ளது.

ஃபார்முலா மாறுமா?

இங்கிலாந்து கூட, ஐந்தாவது டெஸ்டுக்காக 'எதற்கும் இருக்கட்டுமே!' என கடைசிப் போட்டிக்கான 16 வீரர்கள் அடங்கிய அணியிலாவது, ஜாக் லீச் பெயரையும் சேர்த்து வைத்துள்ளது. ஆனால், ஆல் ரவுண்டர் ஜடேஜாவின் மீதுள்ள அபார நம்பிக்கையால், இந்தியா, மீண்டும் 4 வேகப்பந்து வீச்சாளர்களோடே களமிறங்கும் பழைய சூத்திரத்தையே பயன்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அஷ்வின்
அஷ்வின்
Martin Rickett

வருவாரா அஷ்வின்?!

2015-ம் ஆண்டுக்குப் பின், சராசரியாக, இந்தக் களத்தில் விழும் நான்கு விக்கெட்டுகளுக்கு ஒன்று மட்டுமே, சுழல் பந்து வீச்சாளர்களால் விழுகிறது என்னும் புள்ளி விபரம் அஷ்வினுக்கான வாய்ப்பை, இப்போட்டியிலும் மங்கச் செய்கிறது. "இருள் குகையின் முடிவில் வெளிச்சம் தெரியும்" என டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றதற்காக, அஷ்வின் ட்வீட் செய்திருந்தார். விலக்கி வைக்கப்பட்ட லிமிடெட் ஃபார்மட்டிலேயே, ஸ்பின்னுக்கு ஆதரவளிக்கும், அரபு மண்ணைக் கணக்கில் கொண்டு, அஷ்வினுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டு விட்டது. எனினும், டியூக்ஸ் பந்துகளைச் சுழல விடும் வாய்ப்பு, கவுன்ட்டியில் நிரூபித்தும், அஷ்வினுக்கு, இத்தொடரில் இதுவரை கிட்டவில்லை. இந்தப் போட்டியிலும், அது கிடைக்குமா என்பது சந்தேகத்திற்குரியதே.

ரஹானே தொடர்வாரா?!

அஷ்வினுக்குத் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வரும் வாய்ப்பு, ரஹானேவுக்குக் கணக்கின்றிக் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் போட்டியில், அவருக்கு பதிலாக ஹனுமா விஹாரி, சூர்ய குமார் யாதவ், மயங்க் அகர்வால் ஆகியவர்களில், யாரோ ஒருவருக்கு வாய்ப்புக் கிடைக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. எனினும், முக்கியப் போட்டியில், அப்படி ஒரு முடிவை, கோலி எடுப்பாரா என்பதுவும் கவனத்தில் கொள்ள வேண்டியதே. இத்தொடரில் மொத்தம், நான்கு போட்டிகளில், 109 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார் ரஹானே. இப்போட்டியில், ஒருவேளை அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டாலும், உண்மையில், அவரது தலைக்கு மேல் தொங்கிய கத்தி, தற்போது, இறங்கி, கழுத்துக்குக் குறி வைத்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரன்னப் யாருக்கு?!

சென்ற போட்டியில், கடைசி நேரப் பயணியாக, தட்கலில் வந்து சேர்ந்த ஷர்துல் தாகூர், தொடர்வண்டி ஓட்டுனராகவே மாறி, இந்தியாவை வெற்றி பிளாட்ஃபார்மில், தனது இரட்டை அரை சதங்களாலும், மூன்று விக்கெட்டுகளாலும் கொண்டு சேர்த்து விட்டார். ஆட்டநாயகனாக முடியாமல் போனாலும், அந்தப் போட்டியின் வாயிலாகவே, அவருக்கான முதல் வகுப்புப் பயணச் சீட்டை இந்தப் போட்டியிலும் அவர் முன்பதிவு செய்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். அதே நேரத்தில், ஷமி குணமாகி, விளையாடத் தகுதி பெற்றுள்ள நிலையில், அவருக்கு யார் வழிவிடுவார்கள் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஓய்வு தர வேண்டுமென்பதைக் கருத்தில் கொண்டு பும்ராவாவுக்கு ஓய்வளிக்கப்படலாம்.

சதமில்லா கோலி!

ஐந்து போட்டிகள் இருப்பதனால், எப்படியும் வந்து சேர்ந்து விடும் என்று எதிர்பார்த்த கோலியின் சதம், இப்போட்டியில் ஏழு இன்னிங்சை பார்த்தும் வந்து சேரவில்லை. சதமின்றி, இந்தத் தொடர் முடிவுக்கு வரும் பட்சத்தில், அடுத்ததாக சில மாதங்கள், கோலி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்காகக் காத்திருக்க வேண்டும். அவர் பழைய ஃபார்முக்குத் திரும்பும் கட்டத்தில், டி20 உலகக் கோப்பையில் கூட, சதம் சாத்தியம்தான் என்றாலும், இந்தப் போட்டியில், அதனைப் பார்க்க வேண்டுமென்பதே ரசிகர்களின் விருப்பம்.

ENG Vs IND
ENG Vs IND
Jon Super

கண்ணாடி அரண்!

தோட்டாக்களைத் தெறிக்க விடும், பீரங்கிகளாக, இங்கிலாந்தின் பௌலிங் லைன் அப் இருந்தாலும், அவர்களது பேட்டிங் வரிசை, கண்ணாடிக் கோட்டையாக, நிலையற்றதாக, ரூட்டைத் தாண்டி எதுவுமே இல்லை எனுமளவே இருக்கிறது. பர்ன்ஸ், போப், வோக்ஸ் என யாரோ ஒருவர், ஏதோ ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடுகிறார்களே தவிர, அணியை ரூட்டோடு சேர்ந்து, எல்லாச் சமயமும் தூக்கிச் சுமக்க யாரும் இல்லை. பட்லர் மறுபடியும் இணைந்திருப்பது பலம்தான் என்றாலும், மற்ற வீரர்களது செயல்பாடும் மிக அவசியம். பென் ஸ்டோக்ஸை நிரம்பவே தேடித் தவிக்கிறது அவர்களது பேட்டிங் படையின் லைன் அப்.

உட் உள்ளே, ஓவர்டன் வெளியே!

காயம் காரணமாக ஓவர்டனுக்கு பதிலாக, உட் சேர்க்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படி இருப்பின், தனது வேகத்தாலும், ஷார்ட் பால்களாலும், மார்க் உட் மிரட்டலாம். பட்லருக்கு இடத்தைத் தந்து, பேர்ஸ்டோ விலக்கி வைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

மழை மனம் இறங்காமல், கொட்டித் தீர்த்து, போட்டி டிராவில் முடிவடைந்தாலும், 2/1 என இந்தியா தொடரைக் கைப்பற்றும்தான். எனினும், டிராவுக்காக ஆடுவது, தற்போதைய இந்திய அணியின், கேம் பிளானில் காண முடியாத அம்சம்!

லார்ட்ஸ் மற்றும் ஓவலில் காட்டிய அதே உத்வேகத்தை இந்தியா, மான்செஸ்டரிலும் காட்டினால், இரண்டு டெஸ்ட் போட்டி வெற்றிகளை, இங்கிலாந்தில் ஒரே தொடரில் கண்டதில்லை என்பதை மாற்றி எழுதியதையும் தாண்டிச் சாதிக்கலாம். மூன்று வெற்றி என்பது, இந்தியாவின் ஓவர்சீஸ் தொடர்களுக்கான சாதனைக் கதைக்கான முன்னுரையாக இருக்கும். எனினும், லார்ட்ஸ் தோல்விக்கு எப்படி இங்கிலாந்து சேர்த்து வைத்துத் திரும்பி பதிலடி கொடுத்தது என்பதும் நினைவில் நிழலாடுவதால், போட்டி சுவாரஸ்யப் பாதையிலேயே நகரும்.

கோவிட் டெஸ்ட் நெகட்டிவ் என இந்தியாவுக்குச் சாதகமாகத் தொடங்கும் டெஸ்ட், இந்தியாவுக்குப் பாசிட்டிவாக முடிகிறதா என காத்திருந்து காண்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு