Election bannerElection banner
Published:Updated:

மிரட்டும் ஆர்ச்சர் - உட்... இங்கிலாந்தின் வேகத்தடை... சமாளிக்க கோலியின் வியூகங்கள் என்ன?! #INDvENG

#INDvENG
#INDvENG

ஆஸ்திரேலியத் தொடரில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் செய்ததைப்போல, பால் ஒன்றிலிருந்து அட்டாக்கிங் பௌலிங்கோடும், ஃபீல்ட் செட்டப்போடும் இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்.

உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கான பரபரப்போடு இந்தியா - இங்கிலாந்துக்கு இடையேயான இன்றைய ஐந்தாவது டி20 போட்டி நடைபெற இருக்கிறது. பந்துக்குப் பந்து பரபரப்பைப் பற்றவைத்த நான்காவது டி20-ல் இந்தியா அட்டகாசமான வெற்றியைப் பெற்று, தொடரைச் சமன் செய்ததால் இன்றையப் போட்டிக்கான எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியிருக்கிறது.

இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும், டி20 உலகக்கோப்பைக்கான ரிகர்சலாகவே இன்றையப் போட்டியிருக்கும் என்கிற கணிப்புகளும் கூடியிருப்பதால் இன்றையப் போட்டி மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

நம்பர்கள் சொல்வது என்ன?!

டி20-க்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இங்கிலாந்து இருக்க, இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இவர்களது பலத்தை நிரூபணம் செய்யும் வண்ணம் இந்தத் தொடர் மட்டும் 2/2 என சமமாக இல்லை. இதுவரை டி20-ல் 18 முறை நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ள இந்த இரு அணிகளுமே தலா ஒன்பது முறை இதுவரை வெற்றியைப் பதிவு செய்துள்ளன. எனினும், தொடர்கணக்கில் பார்த்தால், சந்தித்துக் கொண்ட, மூன்று தொடர்களில், இங்கிலாந்து ஒரு தொடரில் வென்றிருக்க, இந்தியா இரு தொடரைக் கைப்பற்றி, ஒரு அடி முன்னிலையில் உள்ளது.

முடக்கும் தொடக்கம்!

இந்தத் தொடரில், நடந்து முடிந்துள்ள நான்கு போட்டிகளையும் சேர்த்து, இந்திய ஓப்பனர்களில், இருவரில் ஒருவர் ஆட்டமிழப்பதற்குமுன் இந்திய அணி மொத்தமாக எடுத்துள்ள ரன்கள் வெறும் 30 மட்டும்தான். இங்கிலாந்துக்கோ இது 111 ரன்களாக இருக்கிறது. இதிலும் மூன்று முறை முதல் விக்கெட்டாக விழுந்தவர் கேஎல் ராகுல். மேலும், இதுவரை மூன்று வெவ்வேறான ஓப்பனர்களை இந்தியா முயற்சித்துப் பார்த்தும், பலன் கிடைக்கவில்லை.

பவர்ப்ளே பிரச்னை!

22, 50, 24, 45... இவைதான் இந்தியா இந்தத் தொடரில் இதுவரை எடுத்துள்ள பவர்ப்ளே ஓவர்களின் ரன்கள். பவர்ப்ளேவில் அதிக ரன்கள் சேர்த்த இரண்டு போட்டிகளுமே இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளது. எனவே அதிரடியாக ரன்களைக் குவிக்க, ஃபினிஷரைப் போல, ஒரு பிகினரும் தேவைப்படுகிறார். இந்நிலையில், வென்றேயாக வேண்டிய போட்டி என்பதால், ஓப்பனிங்கில் இறங்கி, சாதிக்கத் தவறி வரும், ராகுலுக்கு பதிலாக, காயம் சரியாகும் பட்சத்தில், இஷானை ஓப்பனராக, களமிறக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் கோலியோ, ''நாங்கள் ராகுலுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் அளிப்போம்'' என்று சொல்லியிருக்கிறார். ஒருவேளை இந்த மாற்றம் நடந்தால், இந்தியா, பவர்ப்ளேவில் ரன்களைக் குவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

#INDvENG
#INDvENG

பவர்ப்ளே விக்கெட்டுகள்!

இங்கிலாந்து, இந்தியா பேட்டிங் செய்யும்போது, பவர்ப்ளேவில், எட்டு விக்கெட்டுகளை இதுவரை வீழ்த்தியுள்ளது. ஆனால், இந்தியாவோ, இங்கிலாந்தின் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருந்தது‌. அதிரடியாக விக்கெட் வேட்டை நிகழ்த்தாமல், எதிரணி பேட்ஸ்மேன்களை இந்தியா செட்டில் ஆக விட்டு, அவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்கான கால அவகாசத்தைத் தந்து விடுகிறது. இந்தியா, இந்தத் தவற்றை மீண்டும் செய்யாமல், கடந்த ஆஸ்திரேலியத் தொடரில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் செய்ததைப்போல, பால் ஒன்றிலிருந்து அட்டாக்கிங் பௌலிங்கோடும், ஃபீல்ட் செட்டப்போடும் இங்கிலாந்துக்கு, இந்தியா நெருக்கடி கொடுக்க வேண்டும்.

உட்டும் ஆர்ச்சரும்!

பவர்ப்ளேவில் இங்கிலாந்து சாதிக்க முக்கிய காரணம், 145+Kmph வேகத்தில் தோட்டாக்களாய்ப் பந்தைப் பாயச் செய்து, எதிரணி வீரர்களைத் காலி செய்யும் உட் - ஆர்ச்சர் கூட்டணிதான். வீசும் ஒவ்வொரு பந்தின் மூலமாகவும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது இந்தக் கூட்டணி. இதுவரை, இந்த இருவர் கூட்டணியின் கூட்டுச்சராசரி எக்கானமி 6.71 மட்டுமே. இவர்கள் எடுத்திருக்கும் மொத்த விக்கெட்டுகள் 12. இதுவரை இந்ததொடரில் 168 பந்துகளை வீசி, அதில் 188 ரன்களை மட்டுமே கொடுத்துள்ளது இந்த இருவரணி. அந்த 168 பந்துகளில், 88 பந்துகள் டாட் பால்கள். எனவே, இவர்களே இங்கிலாந்தின் ப்ரைம் பிளேயர்களாக இன்றும் இருக்கப் போகிறார்கள்.

ஆஃப் கட்டர்களே ஆயுதம்!

தொடரின் முதல் போட்டியிலேயே, பிட்சை சரியாகக் கணித்த மார்கன், தொடர்ந்து வேகத்தையே நம்பி இறங்குகிறார். ஆதில் ரஷீத்துடன் சேர்த்தோ அல்லது அவருக்கு மாற்றாகவோ மொயின் அலியை களமிறக்கும் எண்ணம் மார்கனுக்கு இல்லை. இந்திய பேட்ஸ்மேன்களைச் சமாளிக்க, வேகமே போதுமென அவர் முடிவு செய்துவிட்டார். அதனால்தான் ஒரே ஸ்பின்னரோடு இந்திய பிட்ச்சில் கெத்தாக களமிறங்குகிறது இங்கிலாந்து.

இப்போது இந்தியாவும் ஸ்பின்னர்களால் இங்கிலாந்துக்குப் பெரிய நெருக்கடி தரமுடியாது என்பதைப் புரிந்துகொண்டுவிட்டது. வேகப்பந்து வீச்சாளர்களை ஆஃப் கட்டர்களை வீசச் செய்து அதை தங்களது ஆயுதமாக்கி அச்சுறுத்தி வருகிறது. புவனேஷ்வர், தாக்கூர், பாண்டியா என இந்த மூவர்கூட்டணிதான் இந்தியாவின் பலம்.

ஒன் டவுன் யார்?!

இந்தத் தொடரில் அதிக ரன்களை, அதுவும் அதிக பேட்டிங் சராசரியோடு எடுத்த வீரராக கோலியே இருக்கிறார். 151 ரன்களை, 75.50 ஆவரேஜோடு எடுத்துள்ளார் கோலி. இதுவரை சர்வதேசப் போட்டிகளில், இருபது முறை, தன்னுடைய மூன்றாம் இடத்தை, மற்றவர்களுக்காக விட்டுக் கொடுத்துள்ள கோலி, மூன்றாவது போட்டியில், இஷானுக்காகவும், நான்காவது போட்டியில், சூர்யகுமாருக்காகவும் அதைச் செய்தார். இதனால் முந்தைய போட்டியில், இஷான் கலக்கினார் என்றால், கடைசிப் போட்டியில், சூர்யகுமார் மிகச் சிறப்பாக ஆடினார். இன்றைய போட்டியில், ஒருவேளை இஷான் வரும் பட்சத்தில், அவரை ஓப்பனராகக் களமிறக்கி, சூர்யகுமாரை தனது இடத்தில் இறக்கி, கோலி, நான்காவது பேட்ஸ்மேனாக உள்ளே வரலாம்.

#INDvENG
#INDvENG

டாஸுக்கு பயமில்லை!

டாஸை வென்றவரே மேட்சை வெல்வார்கள் என்ற முதல் மூன்று போட்டிகளிலும் நடந்த கதையை, நான்காவது போட்டியில் மாற்றி எழுதியுள்ளது இந்தியா. இது எத்தகைய சவாலையும் சந்திக்கும் மனோதிடத்தை இந்தியாவுக்கு ஏற்படுத்தியுள்ளது. போன போட்டியில், பனிப்பொழிவு, சற்று அதிகமாகவே ஏற்பட்டு, போட்டி இங்கிலாந்தின் பக்கமாய்ச் செல்வதாய்ப் போக்குக் காட்ட, இந்திய பௌலர்கள் அதைத் திரும்பவும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துனர். எனவே மனதளவில், இது இந்திய வீரர்களை மிகவும் வலுப்படுத்தி உள்ளது.

வருவாரா நடராஜன்?!

காயத்திலிருந்து மீண்டு, குவாரன்டைனையும் தாண்டி வந்து விட்டார், யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் நடராஜன். கடைசிப் போட்டியில், அவரை இறக்குவதற்கு வாய்ப்புகள், மிகமிகக் குறைவே. மற்ற வீரர்களைப் பொறுத்தவரை, சஹாலுக்கு பதிலாக இறக்கப்பட்ட சஹார், இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியதால், கோலி, சஹாலிடம் திரும்பச் செல்லாமல், சஹாரையே தொடர்வார் என்றே தெரிகிறது. அணியில் வேறு மாற்றங்களுக்கும் வாய்ப்பில்லை. அதேப்போல், இங்கிலாந்தின் ப்ளேயிங் லெவனிலும், மாற்றங்களுக்கு வாய்ப்புகள் குறைவே.

மேட்ச் வின்னர்?!

இந்தியாவின் சார்பில், ஒவ்வொரு போட்டியிலும், யாரோ ஒருவர் கேம் சேஞ்சராகவும், மேட்ச் வின்னராகவும் மாறிக் கொண்டே இருக்கின்றனர். பன்ட், ஷ்ரேயாஸ், சூர்யகுமார், தாக்கூர் என ஒவ்வொரு வீரரும் ஐபிஎல்-ல் தங்கமாக ஜொலித்து வருகின்றனர். இன்றைய போட்டியிலும், அதே அதிரடியை யாரோ ஒருவர் நிகழ்த்திக் காட்டுவார் என நம்பலாம்.

டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, டி20 கோப்பையை வெல்வதில் முனைப்பு காட்டும். அதே நேரத்தில், இங்கிலாந்தும் அவவளவு சீக்கிரத்தில், சுலபமாக விட்டுக் கொடுக்காது என்பதால், இன்றைய போட்டியில், சவால்கள் காத்திருக்கின்றன!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு