Published:Updated:

கோலியின் ரொட்டேஷன் பாலிஸி களேபரங்கள்... தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து! #INDvENG

#INDvENG

இஷானை முன்னதாகக் களமிறக்கி, ராகுலைப் பின்வரிசையில் இறக்கிப் பார்ப்பதன் மூலம், புதுப்பந்தை எதிர்நோக்கும் இக்கட்டிலிருந்து அவரைத் தப்பிக்கவைக்கலாம். இது அவர் இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும்.

கோலியின் ரொட்டேஷன் பாலிஸி களேபரங்கள்... தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து! #INDvENG

இஷானை முன்னதாகக் களமிறக்கி, ராகுலைப் பின்வரிசையில் இறக்கிப் பார்ப்பதன் மூலம், புதுப்பந்தை எதிர்நோக்கும் இக்கட்டிலிருந்து அவரைத் தப்பிக்கவைக்கலாம். இது அவர் இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும்.

Published:Updated:
#INDvENG

மினி டி20 உலகக் கோப்பையாக, ரேங்கிங் பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் இங்கிலாந்தும், இந்தியாவும் மோதும் டி20 தொடர், இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது. தொடரை உயிர்ப்போடு வைத்துக் கொள்ள, நான்காவது போட்டியை வென்றேயாக வேண்டுமென்ற கட்டாயத்தில் இருக்கும் இந்தியாதான் இங்கிலாந்தைவிட, அதிக நெருக்கடியையும் சவாலையும் சந்திக்க இருக்கிறது.

டாஸ்தான் பாஸ்!

டாஸை வென்ற அணியே, கடந்த மூன்று போட்டிகளிலும் வென்றிருப்பதும், ஒருபக்கமாகவே போட்டி, தொடக்கம்முதல், இறுதிவரை பயணித்து முடிவதும், "டாஸோடே போட்டியை முடித்துக் கொண்டு விடலாமே?!" எனுமளவுக்கு, ரசிகர்களிடம் ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது‌. எனினும், டாஸை எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல், எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளத் தகுந்தவாறு தங்களைத் தயார்படுத்திக் கொள்வதே சரியான அணுகுமுறையாக இருக்கும்!

ராகுலும், சஹாலும்!

தொடர்ந்து சொதப்பி வரும் ராகுல் வெளியேற்றப்பட்டு, சூர்யகுமாருக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டுமென்ற குரல், மிகச் சத்தமாய் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. ஆனால், கோலி மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், முன்னாள் பேட்ஸ்மேன் வாசிம் ஜாஃபர் உள்ளிட்ட பலர், ராகுலுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள். இஷானை முன்னதாகக் களமிறக்கி, ராகுலைப் பின்வரிசையில் இறக்கிப் பார்ப்பதன் மூலம், புதுப்பந்தை எதிர்நோக்கும் இக்கட்டிலிருந்து அவரைத் தப்பிக்கவைக்கலாம். இது அவர் இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும். ஆனாலும், கடந்த ஐபிஎல் தொடரில் 145 ஸ்ட்ரைக் ரேட்டோடு, 480 ரன்களைக் குவித்து, சர்வதேசக் கிரிக்கெட்டில் தனது முதல் பந்தைச் சந்திக்க, வருடக்கணக்காய்க் காத்திருக்கும் சூர்யக்குமாருக்கு ஒரு வாய்ப்பளிக்கப்பட்டே ஆகவேண்டும்.

கோலியின் ஆஸ்தான ஸ்பின்னராக விளங்கும் சஹாலின் எக்கானமி, இந்தத் தொடரில், 9.92. மொத்தமாக இந்தத் தொடரில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார் சஹால். போன போட்டியில், பட்லர் ஒருவரே, சஹாலின் 15 பந்துகளில், 33 ரன்களைச் சுலபமாக எடுத்திருந்தார். சுழலுக்கு ஒத்துழைக்கும் எனச் சொல்லப்பட்ட Red Soil- லிலேயே, சஹால் சாதிக்கத் தவறியிருப்பது, ஏன் அக்ஸருக்கு வாய்ப்பளிக்கப்படக் கூடாதென்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

கோலி
கோலி

கோலி ராஜ்யம்!

அதிகமுறை டக் அவுட் ஆன கேப்டன் என்ற அவமானங்களை எல்லாம் துடைத்து தூக்கிப்போட்டு, கடந்த இரண்டு போட்டிகளில் விஸ்வரூபம் எடுத்தது கோலியின் பேட்டிங். போன போட்டியில், இடம்மாறி இறங்கினாலும் தடம் மாறாதென ஜொலித்த கோலி, அதிகமுறை இந்தியாவுக்காக 50+ ரன்களை எடுத்த வீரர் (50 முறை) என்ற சாதனையையும் நிகழ்த்தி இருக்கிறார். டி20 தரவசைப்பட்டியலில் டாப் 5-ல் நுழைந்ததன் வாயிலாக, சமகாலத்தில், மூன்று ஃபார்மேட்டிலும் டாப் 5-ல் உள்ள ஒரே வீரர் எனும் பெருமையையும் தனதாக்கிக் கொண்டுள்ளார். நான்காவது போட்டியில், தனது ஹாட்ரிக் அரைச்சதம் மூலமாக, தொடரைச் சமன் செய்ய வேண்டும் என்பதே ரசிகர்களின் பேராவலாக உள்ளது.

வேகத்துக்கென்ன விடை?!

இந்திய பேட்ஸ்மென்கள், வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வதற்குத் திணறியதை, கண்கூடாகவே காண முடிந்தது. மணிக்கு 150 கிமீட்டரை நெருங்கும் வேகத்தில் வீசப்படும் உட் மற்றும் ஆர்ச்சரின் வேகத்தைச் சமாளிக்க முடியாமல், தங்களது விக்கெட்டுகளை பறிகொடுக்கின்றனர் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள். பவர்ப்ளே ஓவர்களில் இந்தியாவால் அதிரடி ஆட்டம் ஆடவே முடியவில்லை. இன்று இதற்குரிய தீர்வைக் கண்டறிந்தால் மட்டுமே, நல்ல தொடக்கத்தை இந்திய இன்னிங்ஸ் சந்திக்கும்.

இந்திய பௌலிங்!

இங்கிலாந்தின் மிகப்பெரிய பலமே, மிரட்டும் பௌலிங்கும், அட்டாக்கிங் பேட்டிங் லைன் அப்பும்தான். இந்தியாவைப் பொறுத்தவரை, முன்வரிசை வீரர்கள் பவர்ப்ளேவில் ஏமாற்றினாலும், பின்வரிசை வீரர்கள், டெத் ஓவர்களில் ரன்களைக் குவிக்க முனைகின்றனர். ஆனால் பௌலிங்கிலோ, இந்தியா பலமற்றே காணப்படுகிறது. நடந்து முடிந்துள்ள மூன்று போட்டிகளில், இங்கிலாந்து பௌலர்கள், 16 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்க, சொந்த மண்ணில் பந்து வீசும் இந்திய பௌலர்களாலோ, இங்கிலாந்தின் 10 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்த முடிந்துள்ளது. புவனேஷ்வர் ரன்களைக் கட்டுப்படுத்துகிறார். ஆனால், விக்கெட் எடுக்கத் தவறுகிறார். சஹாலோ, மூன்று விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி, ரன்வரம் தரும் வள்ளலாய் இருக்க, தாக்கூரும், பாண்டியாவும் கிட்டத்தட்ட புவனேஷ்வரின் பாதையிலேயே பயணிக்கிறார்கள். பார்ட் டைம் பௌலரான சுந்தர்தான் இப்போது இந்தியாவின் சார்பில் அதிக விக்கெட்டுகளை (4) வீழ்த்தியவராகவும், குறைந்த எக்கானமியை (6.95) உடையவராகவும் இருக்கிறார். எனினும் கோலி அவரை சரியான முறையில் பயன்படுத்துவதுமில்லை. இந்தியாவின் தற்போதைய உடனடித் தேவை, விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் எடுத்துத் தரும் ஒரு பௌலர்.

பார்ட்னர்ஷிப் பற்றாக்குறை!

இந்திய வெற்றிக்கு மிகப்பெரிய தடையாக இருந்த இன்னொரு விஷயம், பார்ட்னர்ஷிப் பில்டப் ஆக விடாமல், இங்கிலாந்து உடைத்துக் கொண்டே இருந்தது. இந்தியா தோற்ற போட்டிகளில், முதல் போட்டியில், ஷ்ரேயாஸ் - பாண்டியா கூட்டணி, 44 பந்துகளில், 54 ரன்களைச் சேர்த்திருந்தது‌. மூன்றாவது போட்டியில், கோலி - பாண்டியா கூட்டணி, 33 பந்துகளில் 70 ரன்களை விளாசியது. இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால், கோலி - பன்ட் இடையிலேயான, ஒரு மினி பார்ட்னர்ஷிப் வந்து போனது. இவற்றை தள்ளிவைத்துப் பார்த்தால், இந்திய விக்கெட்டுகள், வரிசையாக விழுந்து கொண்டே இருந்தன.

பட்லர்
பட்லர்

போதாக்குறைக்கு, முதல் பத்து ஓவர்களுக்குள், பிட்ச் சிறிதளவு பவுன்சை பரிசாக அளிக்க, இங்கிலாந்து பௌலர்களின் பாடு கொண்டாட்டமாகவும், இந்திய பேட்ஸ்மேன்களின் பாடு திண்டாட்டமாகவும் முடிந்தது. இந்தத் தொடரில் இதுவரை, 14 ரன்களை மட்டுமே உதிரிகளாக, இங்கிலாந்து கொடுத்துள்ளது. இந்தியாவோ, கிட்டத்தட்ட 27 ரன்களை, அதாவது இங்கிலாந்துடையதைப் போல, இருமடங்கை, உதிரிகளாகக் கொடுத்துள்ளது. இந்தப் புள்ளிவிபரம் சொல்லுகின்றது, இங்கிலாந்து பௌலிங் எந்தளவு இந்தியாவுடையதை விட கட்டுக்கோப்பானதாக இருக்கிறது என்பதை.

இந்தியாவின் ஃபீல்டிங் பரிதாபங்கள்!

கடந்த ஆஸ்திரேலியத் தொடரைப் போல, கேட்ச் டிராப், மிஸ் ஃபீல்ட், ரன்அவுட் வாய்ப்பைத் தவற விடுதல் என ஃபீல்டிங்கின் போது, ஒரு அணி எந்த இடத்தில் எல்லாம் கோட்டை விடக் கூடாதோ, அங்கே எல்லாம், தவறாது தவறிழைத்து வருகிறது, இந்திய அணி. கடந்த போட்டியில், 156 ரன் இலக்கை இந்தியா டிஃபெண்ட் செய்ய முயன்று கொண்டிருந்த போது கூட, இந்திய இளம்படையிடமிருந்து ஒரு உயிரோட்டமான ஃபீல்டிங்கைப் பார்க்க முடியவில்லை. மற்ற வீரர்கள் தவறிழைத்தால் கோபப்படும் கோலியே மிஸ்ஃபீல்ட் செய்கிறார். 2019ல் இருந்து இதுவரை 6 கேட்ச்களை டி20 ஃபார்மேட்டில் மட்டும் கோட்டை விட்டிருக்கிறார் கோலி.

மாற்றமின்மையே மாறாதது!

இங்கிலாந்தைப் பொறுத்தவரை, தனது பிளேயிங் லெவனை எந்தவிதக் குழப்பமின்றியே, இறுதி செய்கிறது. டெஸ்ட் போட்டிகளில், ரொட்டேஷன் பாலிஸியால், இங்கிலாந்து வீழ்ந்ததைப் போல, ரொட்டேஷன் பாலிஸியின் மூலம் ரோஹித் போன்ற ஒரு கைதேர்ந்த ஒயிட் பால் கிரிக்கெட்டர் வெளியே இரண்டு போட்டிகளில் அமர வைக்கப்பட்டிலிருந்தே ஆரம்பித்து விட்டது, இந்தியாவின் வீழ்ச்சி.

டாப் இரண்டு அணிகளுக்கு இடையிலான ஒரு டி20 தொடர், எந்தளவு திருப்பங்களை உடையதாக இருக்க வேண்டும்?! பரபரப்பு இல்லாமல் நகர்கிறது டி20 தொடர். டாஸில்தான் வெற்றிக்கான வழியிருக்கிறது என்பதால் டாஸ் வெல்வோர் கிட்டத்தட்ட மேட்சை வெல்வார் என எதிர்பார்க்கலாம். டாஸை வெல்லப்போவது கோலியா, மார்கனா?!