Election bannerElection banner
Published:Updated:

நம்பர் 1 இங்கிலாந்தும், நம்பர் 2 இந்தியாவும்... டி20 தொடரில் வெற்றி யாருக்கு?! #INDvENG

#INDvENG
#INDvENG

அகமதாபாத் மைதானத்தில்தான், சமீபத்தில் நடந்து முடிந்த சையத் முஸ்தாக் அலி தொடரின், அத்தனை நாக் அவுட் போட்டிகளும் நடந்தன. இதில் அணிகளின் சராசரி ஸ்கோரே வெறும் 136.57 மட்டுமே. காலிறுதிப் போட்டியில், ராஜஸ்தான் அடித்த 164 ரன்கள்தான் இங்கு 20 ஒவரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று விட்ட இந்தியா, தற்போது அக்டோபரில் நடைபெற இருக்கும், டி20 உலகக் கோப்பைக்கான ஒத்திகையை, டி20 ஃபார்மட்டில் முதலிடத்திலுள்ள இங்கிலாந்துடன் மோதிப் பார்க்க இருக்கிறது. டெஸ்ட் தொடரே கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்திருக்க, பத்தே நாள் இடைவெளியில் நடந்து முடிய இருக்கின்றன ஐந்து டி20 போட்டிகள். இத்தொடரின் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு அகமதாபாத்தில் தொடங்குகிறது. #INDvENG

முதல் இடம் யாருக்கு?!

ஐசிசி தர வரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது இங்கிலாந்து. இந்தியா இரண்டாமிடத்தில் இருக்கிறது. போட்டி, இந்த இருவருக்குமான மோதல் என்பதால், இன்னமும் சுவாரஸ்யமானதாகி இருக்கிறது இந்தியா இங்கிலாந்து டி20 தொடர். "இந்த ஃபார்மேட்டின் ராஜா நான்!" என இங்கிலாந்து கெத்தாக இருந்தாலும், சொந்த மண்ணில் விளையாடுவது, இந்தியாவுக்குப் பெரும்பலம்.

மைதானம் எப்படி?!

அகமதாபாத் மைதானத்தில்தான், சமீபத்தில் நடந்து முடிந்த சையத் முஸ்தாக் அலி தொடரின், அத்தனை நாக் அவுட் போட்டிகளும் நடந்தன. இதில் அணிகளின் சராசரி ஸ்கோரே வெறும் 136.57 மட்டுமே. காலிறுதிப் போட்டியில், ராஜஸ்தான் அடித்த 164 ரன்கள்தான் இங்கு 20 ஒவரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள். எனவே, போட்டிகள் லோ ஸ்கோரிங் கேம்களாக முடியவே வாய்ப்புகள் அதிகம் எனப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டினாலும், டெஸ்ட் போட்டியினால் எழுந்த குற்றச்சாட்டை நீக்கவும் உலககோப்பை ஒத்திகையை பார்க்கவும் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு ஆதரவாக அமைக்கப்படும் என்றே தெரிகிறது. குறிப்பாக, பனிப்பொழிவும் கூடுதல் பங்காற்ற இருப்பதால், பேட்ஸ்மேன்களுக்கு அது சாதகமாகவே முடியும்.

இந்திய ஓப்பனர்கள் குழப்பம்!

இந்தியா, ரோஹித், தவான், கேஎல் ராகுல் இவர்களில் யாருடைய ஓப்பனிங்குடன் தொடங்கும் என்ற விவாதங்களுக்கு, ரோஹித் - ராகுல் என்று நேற்றைய செய்தியாளர்களுக்கான சந்திப்பில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கோலி. இந்திய அளவில் டி 20 ஃபார்மேட்டில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருக்கும் கேல் ராகுலும் , அணியின் துணை கேப்டன் ரோஹித்துமே முதல் தேர்வாக இருப்பார்கள். தவான் மூன்றாவது ஓப்பனராக ரிசர்வில் இருப்பார் என்று சொன்னதிலிருந்து, அவர் தற்போதைக்கு ப்ளேயிங் லெவனுக்கு வெளியே உக்கார வைக்கப்படுவார் என்பது தெளிவாகிறது.

நம்பர் 4 யார்?!

மூன்றாவது இடம் சந்தேகமின்றி கோலியால் ஆக்கிரமிக்கப்பட, நான்காவது இடத்தில், இளம்வீரர் ஷ்ரேயாஸா அல்லது வாய்ப்புக்காக வெகு நாட்களாக தவமிருக்கும் சூரியகுமார் யாதவா என்ற குழப்பம் நீடிக்கிறது. மறுபடியும் ஐபிஎல்லை வைத்து, நம்பர் கேம் ஆடினால், சகலமும் சூரியகுமார் யாதவுக்குத்தான் சாதகமாக இருக்கின்றன.

#INDvENG
#INDvENG

வலிமையான மிடில் ஆர்டர்!

இஷான் கிஷன் , ராகுல் திவேதியா உள்ளிட்ட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்களை, இம்முறை அணியில் சேர்ந்திருப்பது, அட்டாக்கிங் கிரிக்கெட் ஆட முடிவு செய்திருக்கும் இந்தியாவின் கேம் பிளானையே காட்டுகிறது. செய்தியாளர்கள் சந்திப்பில் கோலியும், இதையே மறைமுகமாக வெளிப்படுத்தியிருந்தார். நான்காம் இடத்தில் சூரியக்குமாரைத் தொடர்ந்து, ஐந்து, ஆறு மற்றும் ஏழாவது இடத்தில், முறையே பன்ட், பாண்டியா, சுந்தருக்கு ஆட வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன.

நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில், பன்ட்டின் ஸட்ரைக் ரேட் 84.11. டெஸ்ட்டையே ஒருநாள் போட்டி போல் ஆடும் பன்ட், டி20-ல், தனக்கென புதிய வரையறைகளையும் வரலாறுகளையும் வரைவார் என்பதால், மார்கன் இவருக்கான சிறப்புத் திட்டத்தை வகுத்தே ஆக வேண்டும். பவர் ஹிட்டரான பாண்டியாவோ, இம்முறை பௌலிங் பயிற்சியிலும் ஈடுபட்டிருப்பதால் அவர் மீண்டும் முழுமையான ஆல்ரவுண்டராக தயாராகிவிட்டார் என்பது புரிகிறது.

பவர்ப்ளே ஓவர்களில் கோலியின் நம்பிக்கையைச் சம்பாதித்திருந்த சுந்தர், ஆஸ்திரேலியா இங்கிலாந்து தொடர்களில், தான் ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர் என்பதை நிரூபித்திருந்தார். எனவே பவர்ப்ளே ஓவர்களில் சுந்தர் சிறப்பாக செயல்பட்டால், டெத் ஓவர்களில் புவனேஷ்வர்குமார் மிரட்டி விடுவார். மொத்தத்தில் மும்பை இந்தியன்ஸ் போன்றதொரு அணியாகக் கட்டமைக்கப்படுகிறது, இந்திய அணி.

வலுவான பேட்டிங் படை!

ஐசிசி தரவரிசைப் பட்டியலில், முறையே மூன்றாவது மற்றும் ஆறாவது இடத்தில் இருக்கும் ராகுல், கோலி, இந்தியாவின் டாப் ஆர்டரில் இருப்பதனால், இவர்கள் வலிமையான அடித்தளத்தை அமைத்து விட்டால், பின்வரிசை வீரர்கள், மீதமுள்ள பணியை செவ்வனே செய்து முடிப்பார்கள். முதல் மூன்றுப் போட்டிகளில் வென்று, இந்தியா தொடரை வெல்லும் பட்சத்தில், மீதமுள்ள வீரர்களுக்கு வாய்ப்பளித்து, இந்தியா தன்னுடைய சிறந்த ப்ளேயிங் லெவனை உருவாக்கும் முயற்சியில் இறங்கலாம்.

பெளலிங் படை!

சுந்தரின் துணையோடு, ஒருபுறம், சுழல்படைக்கு சஹால் தலைமையேற்றால், மறுபுறம், அக்ஸர் பட்டேல், இதே அகமதாபாத்தில், கடைசியாக நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து, 20 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவுக்குத் தேவையான பெரும்நம்பிக்கையை அளிக்கிறார். வேகப்பந்து வீச்சில் மிரட்ட புவ்னேஷ்வரும், தீபக் சஹாரும் தயாராகக் காத்திருக்கின்றனர். பும்ராவும் இல்லாத நிலையில், காயத்தின் காரணமாக, வெகு நாட்களாக விளையாடாமலிருந்த புவனேஷுக்கு, மறுபடி வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. சஹாரும், ஏழு சர்வதேச டி20 போட்டிகளில், 14 விக்கெட்டுகளை வீழ்த்தி, பௌலிங்படைக்கு பலம் சேர்க்கிறார். இருப்பினும் பும்ரா இல்லாதது, அணிக்குப் பின்னடைவா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

#INDvENG விராட் கோலி
#INDvENG விராட் கோலி

யார் யார் விலகல்?

பும்ரா சொந்தக் காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகியிருந்தார். ஆஸ்திரேலியத் தொடரில் விளையாடக் கிடைத்த வாய்ப்பை, காயத்தின் காரணமாக தவறவிட்ட வருண் சக்கரவர்த்தியால், தன்னுடைய ஃபிட்னஸை இன்னமும் என்சிஏ-வில் நிரூபிக்க முடியாமல் போனதால், இந்த டி20 தொடரில் பங்கேற்கும் வாய்ப்பையும் பறிகொடுத்தார். யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் நடராஜனும், முதல் போட்டியில் பங்கேற்பது சந்தேகமே.

மிரட்டும் மார்கன்!

தரவரிசைப் பட்டியலில், முதலிடத்தில் தன்னுடைய அணியை ஏற்றி நிறுத்தி இருக்கும், லிமிடெட் ஓவர் ஃபார்மேட்டின் கேப்டனான மார்கன், இதுவரை, தான் தலைமையேற்ற 54 டி20 போட்டிகளில், 33-ல் வெற்றி பெற்று, சத்தமில்லாமல் சாதித்துக் கொண்டிருக்கிறார். டி20 கேப்டனாக, இவர் ஜெயித்த போட்டிகளின் விகிதம் 61.11. இந்த எண்கள் சொல்லும், மார்கன் மிகப்பெரிய இம்பேக்ட்டை ஏற்படுத்தும் வீரராக அசுரபலம் அடைந்திருக்கிறார் என்பதனை. கடைசியாக தான் கேப்டன்ஷிப் ஏற்றிருந்த, ஏழு தொடர்களையும் வென்று அசத்தி இருக்கிறார் மார்கன்.

அசைக்க முடியாத பேட்டிங் படை!

இங்கிலாந்தின் பேட்டிங் படை, மிக வலுவானதாக இருக்கிறது. இந்தியாவிற்கு, தன்னுடைய ப்ளேயிங் லெவனை இறுதி செய்வதில் இருக்கும் குழப்பம், இங்கிலாந்தின் பக்கம் சிறிதும் காணப்படவில்லை. ஜேசன் ராயும், பேர்ஸ்டோவும் ஓப்பனிங்கில் வலு சேர்த்தால், உலகின் நம்பர் ஒன் டி20 வீரரான மலான் மூன்றாமிடத்திலும், மார்கன் நான்காமிடத்திலும் இறங்க வாய்ப்புள்ளது‌. ஃபினிஷிங் வேலையைப் பார்த்துக் கொள்ள பட்லரும், ஸ்டோக்ஸும், கூடவே சாம் கரணும் இருப்பதால், இந்திய பௌலர்களுக்கு சவாலாகவே இருக்கும்.

இங்கிலாந்தின் பௌலிங் படை!

இங்கிலாந்தைப் பொறுத்தவரை, சுழலைப் பார்த்துக் கொள்ள ஆதில் ரஷித்தும், புதுப்பந்தை வேகத்தோடு வீசி மிரட்ட ஆர்ச்சரும், ஜோர்டனும் தயாராக உள்ளனர். இவர்களைத் தவிர, மார்க் வுட்டும் சேர்க்கப்படலாம். அப்படி இல்லாமல், கூடுதலாக ஒரு ஸ்பின்னர் தேவையென மார்கன் நினைப்பாரேயானால், அவருடைய தேர்வு, மொயின் அலியாக இருக்கும்.

இந்தியா எதிர்கொள்ள இருக்கும் சவால்கள்!

கடந்த மூன்றாண்டுகளாக, உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் மலான்தான் இங்கிலாந்தின் எக்ஸ் ஃபேக்டராக இருக்கப்போகிறார். 1,000 ரன்களை நெருங்கிக் கொண்டிருக்கும் மலான், வெறும் 19 போட்டிகளில், 855 ரன்களைக் குவித்துள்ளார். இதற்கு முன்பு, 26 போட்டிகளில், 1000 ரன்களை டி20-ல் அதிவேகமாக பாகிஸ்தானின் பாபர் அசாம்தான் கடந்திருந்தார். இன்னும் 145 ரன்களை, வேகமாக பூர்த்தி செய்யும் பட்சத்தில், பாபர் அசாமின் சாதனை, இந்திய மண்ணிலேயே, மலானால் முறியடிக்கப்படும் . எனினும் பொதுவாக, லெஃப்ட் ஆர்ம் ஸ்பின் பௌலிங்கை எதிர்கொள்வதில் மலானுக்கு சிரமம் இருப்பதால், அக்ஸர் பட்டேலை வைத்து, இந்தியா அவருக்கு குறி வைக்கலாம்.

டேவிட் மலான், #INDvENG
டேவிட் மலான், #INDvENG

இங்கிலாந்தின் வலிமையான பேட்டிங் லைன் அப் அவர்களுக்கு பெரிய பலம். ஒருவர் தவறினால் இன்னொருவர் என கிளம்பி வந்து அடித்துக் கொண்டே இருப்பார்கள் என்பதால், இந்திய பௌலர்களால் ஓய்ந்து உட்காரவே முடியாது. அவர்களது ஸ்வீப் ஷாட்கள் மூலமாக ரன் குவிக்கும் டெக்னிக்குக்கு எதிரான ஒரு திட்டத்தையும் இந்தியா கைவசம் வைத்திருக்க வேண்டும்.

இங்கிலாந்தின் வேகமே இந்தியாவுக்கு வினையாகலாம். கடந்த ஐபிஎல்-ல் வீசப்பட்ட வேகமான பத்து பந்துகளில், ஒன்பது ஆர்ச்சர் வீசியதுதான். அவ்வளவு வேகத்திலும் துல்லியமாக வீசப்படும் அவரது பந்துகளை, எதிர்கொள்வது கடினமானதாகவே இருக்கும்.

இங்கிலாந்து முன் உள்ள சவால்கள் !

இந்திய வீரர்களின் சுழல் பந்து காட்டும் ஜாலத்தை எதிர்கொள்ள, இங்கிலாந்து வீரர்கள் திணறலாம். பேர்ஸ்டோவின் கவலை தரும் ஃபார்ம்.

2928 ரன்களுடன் இருக்கும் கோலி, 3000 ரன்களை, டி20 -ல் அடையும் முதல் இந்திய வீரராக இருக்கிறார். கோலியின் ரன்குவிப்பை இங்கிலாந்து வீரர்கள் தடுத்து நிறுத்தா விட்டால், இந்தியா ஒரு பெரிய ஸ்கோரை எட்டித் தொடுவதை யாராலும் தடுக்க முடியாது.

இதுவரை இந்தியாவும், இங்கிலாந்தும் மோதிக் கொண்டுள்ள டி20 போட்டிகளில், இரு அணிகளுமே தலா, ஏழு முறை வென்றுள்ளன. இப்போது நடக்க இருக்கும் தொடர் உண்மையிலேயே பலப் பரிட்சையாகத்தான் இருக்கப் போகிறது. டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்த்து, டி20 கோப்பையால் ஆறுதல் அடைந்து கொள்ள இங்கிலாந்தும், இன்னொரு கோப்பையை தன்பெயரில் வரவு வைத்துக் கொள்ள இந்தியாவும், அனல் தெறிக்க முட்டி மோதிக் கொள்ள இருக்கின்றன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு