Published:Updated:

இந்தியா தோற்றால், இங்கிலாந்து வென்றால்... வெயிட்டிங்கில் ஆஸ்திரேலியா... பரபர நான்காவது டெஸ்ட்!

இந்தப் போட்டி, கேப்டனாக கோலியின் 60-வது போட்டி. கேப்டனாக 12,000 ரன்களைக் கடந்தவர் என்ற பெருமையைப் பெற இன்னும், 17 ரன்களே தேவை எனப் பல சாதனைகள், கோலிக்காகக் காத்திருக்கின்றன.

சர்ச்சைகள், சச்சரவுகள் எனப் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

3-1 என தொடரை வென்று, உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும் முனைப்பில் இந்தியாவும், போட்டியை வென்று தொடரை 2-2 என சமன் செய்ய இங்கிலாந்தும், நாளை அகமதாபாத்தில் போட்டிப்போடத் தயாராகின்றன.

பிங்க் பால் டெஸ்ட் இரண்டு நாட்களில் முடிய, ரெட் பால் ஆட்டமாவது 5 நாளை அகமதாபாத்தில் தொடுமா என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

பழிக்குப் பழி!

#INDvENG | Joe Root
#INDvENG | Joe Root

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான, இறுதிப் போட்டி நடைபெற இருப்பது இங்கிலாந்தில்தான். ஆனால், அந்தப் போட்டியில் விளையாடும் இங்கிலாந்தின் வாய்ப்பினையே, பிங்க் பால் டெஸ்டில், பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலமாக, முடிவுக்குக் கொண்டு வந்தது இந்தியா. தங்களது ஆசைக்கோட்டையைத் தகர்த்தெறிந்த இந்தியாவினைப் பழி தீர்க்க இங்கிலாந்துக்கு ஒரு வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. இந்தப் போட்டியில், இந்தியா வென்றாலோ, டிரா செய்தாலோ, இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுவிடும். மாறாக, இங்கிலாந்து வெற்றி பெற்றுவிடும் பட்சத்தில், ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்று நியூஸிலாந்தை எதிர்த்து ஆடும். இதனால் நான்காவது டெஸ்ட்டுக்கான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. உலகக் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக, இங்கிலாந்து, ஒரு போட்டியில் வெற்றி பெற வேண்டுமென ஆஸ்திரேலியா மொத்தமும் பிரார்த்திக்கும் அதிசயம் நிகழ்ந்துள்ளது.

பிட்ச் மோதல்கள்!

மூன்றாவது டெஸ்ட் போட்டி, நடந்து முடிந்து சில நாட்கள் நகர்ந்து விட்ட போதிலும், பிட்ச் குறித்த குறைதேடல்களுக்கும், கருத்துச் சிதறல்களுக்கும் இன்னமும் விடுமுறை கிடைக்கவில்லை. ரோஹித், ரஹானே உள்ளிட்ட இந்திய வீரர்கள், தவறு பிட்சில் இல்லை, பேட்ஸ்மேன்கள் விளையாடும் முறையில்தான் இருக்கிறது என்ற கருத்தில் உறுதியாக நிற்கின்றனர். மைக்கேல் வாஹன் உள்ளிட்ட சில வீரர்கள், தொடர்ந்து களம் குறித்த எதிர்க்கருத்துக்களை அள்ளித் தெளித்துக் கொண்டே இருக்கின்றனர். மான்ட்டி பனேசர் இங்கிலாந்துக்கு ஆதரவான குரலாக, "நான்காவது போட்டியிலும், இதே போன்ற பிட்ச் தயார் செய்யப்பட்டால், உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளிப் பட்டியலில், இந்தியாவின் புள்ளிகள் குறைக்கப்பட வேண்டும்" எனவும் குறிப்பிட்டிருந்தார்.

களிமண் தரை, புல்தரை என இரண்டு வித்தியாசமான களங்களை, டென்னிஸ் ஜாம்பவான்கள் ஃபெடரர், நடால், தங்களது கோட்டையாக்கிக் கொண்டு, அவரவர் களங்களில், அவரவர் முடிசூடா மன்னன்களாக இருப்பதைப் போல, அவரவருடைய நாடுகளில் விளையாடுவது, எந்த அணியாக இருந்தாலும், அது ஒரு கூடுதல் பலமாக இருக்கும் என்பதே மறுக்க முடியாத உண்மை. அது இந்தியாவாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே கேள்விகள் எழுகின்றன என்பதே இந்திய வீரர்களின் வாதமும் ஆதங்கமும்.

#INDvENG
#INDvENG

எங்கே தவறியது இங்கிலாந்து?

இந்தியா இங்கிலாந்து மோதிக் கொண்டுள்ள கடைசி ஐந்து போட்டிகளில், முதல் மூன்று போட்டிகளில் இங்கிலாந்து வென்று, தனது வலிமையை நிரூபித்திருந்தாலும், கடைசியாக நடந்து முடிந்த, இரண்டு போட்டிகளிலும், பேக் டூ பேக் வெற்றியைப் பதிவு செய்து, அசத்தி இருந்தது இந்தியா. சுழற்பந்து வீச்சை சமாளிக்கத்திணறவது, பிங்க் பால் டெஸ்ட்களில் போதிய அனுபவம் இல்லாதது, 'ரொட்டேஷன் பாலிசி' எனப்படும் வீரர்களைச் சுழற்சி முறையில் பயன்படுத்தியது ஆகியவை இங்கிலாந்தின் வீழ்ச்சிக்கு வித்திட்டது. சாம்பியனாக மிளிரும் வாய்ப்பை இறுதி செய்யும் ஒரு தொடரில், தன்னுடைய ஆகச்சிறந்த பதினோரு வீரர்களுடன் இங்கிலாந்து களமிறங்காமல் போனது, இந்தியாவுக்குச் சாதகமாக முடிந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான்காவது போட்டிக்கான களம்!

இந்த நான்காவது போட்டியும், மூன்றாவது போட்டி நடைபெற்ற அதே நரேந்திர மோடி மைதானத்தில்தான் நடைபெற இருக்கிறது. கடந்த போட்டியில் இருந்ததைப் போலவே, சுழல் பந்து வீச்சாளர்களின் சொர்க்கமாகவே, இந்த பிட்ச் அமையப் போகிறது என்பதே பெரும்பாலானவர்களின் பார்வையாக இருக்கிறது. எனினும் மூன்றாவது போட்டி போல, இது பிங்க் பால் டெஸ்டாக, பகலிரவாக நடைபெறாத காரணத்தால், சென்ற போட்டி சென்ற வழித்தடத்தில், இந்தப் போட்டி நகர வாய்ப்புகள் மிக மிகக் குறைவே!

என்ன என்ன மாற்றங்களோ?!

இங்கிலாந்தைப் பொருத்தவரை, கடந்த போட்டியில், இருந்த ப்ளேயிங் லெவனின் பேட்டிங் லைன் அப்பில், பெரிய மாற்றங்களைக் கொண்டு வர வாய்ப்புகள் குறைவே. கடந்த முறை, லீச்சை மட்டுமே நம்பி, ஒரு ஸ்பின்னரோடு களம் கண்டது, இங்கிலாந்து. ரூட் பகுதி நேர பௌலிங்கில் ஈடுபட்டு மிரட்டினாலும், ஒரு முழுநேர சுழல் பந்துவீச்சாளரால் மட்டுமே எதிரணி பேட்ஸ்மேனுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். அதனால் பெஸ்ஸை, இந்தப் போட்டியில் ரூட் கொண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.

#INDvENG | Jasprit Bumrah
#INDvENG | Jasprit Bumrah

இந்தியப் பிளேயிங் லெவன்?!

இந்தியாவைப் பொறுத்தவரை, சொந்தக் காரணங்களுக்காக, இந்தப் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக பும்ரா வேண்டுகோள் விடுக்க, அதனை ஏற்றுக் கொண்டுள்ளது, பிசிசிஐ. எனவே, பும்ராவின் இடத்தில், இஷாந்துடன் இணைந்து, வேகத்தில் மிரட்டப் போகும் வாய்ப்பு, உமேஷ் அல்லது சிராஜுக்குக் கிடைக்கலாம். அஷ்வின் மற்றும் அக்ஸர் படேல் ஆகிய இரு சுழல்பந்து வீச்சாளர்களின் சுழல்வலைப்பின்னலே விக்கெட்டுகளை வீழ்த்தப் போதுமானதாக இருக்கும். எனவே கடந்த போட்டியில், அதிகமான அளவில், பேட்டிங் மற்றும் பந்துவீச்சால், பெரிய அளவில் சோபிக்காத சுந்தருக்கு விடைகொடுக்கப்பட்டு குல்தீப்புக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

''என் பெயர் பும்ரா... எனக்கு கல்யாணம்!'' BCCI-க்கு திடீர் லீவ் லெட்டர்... மணப்பெண் யார்?! #Bumrah

ரோஹித் ராஜ்ஜியம்!

இந்தத் தொடரில், குறைந்தது 100 ரன்களை எடுத்த வீரர்களைக் கணக்கில் கொண்டு பார்த்தால், அதிக சராசரி (59.20) கொண்டவராக ரோஹித்தான் இருக்கிறார்‌. இதற்கடுத்தாக ஜோ ரூட் 55.50 சராசரியுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

கோலிக்காகக் காத்திருக்கும் சாதனைகள்!

#INDvENG | Virat Kohli
#INDvENG | Virat Kohli

இந்தப் போட்டி, கேப்டனாக கோலியின் 60-வது போட்டி. கேப்டனாக 12,000 ரன்களைக் கடந்தவர் என்ற பெருமையைப் பெற இன்னும், 17 ரன்களே தேவை எனப் பல சாதனைகள், கோலிக்காகக் காத்திருக்கின்றன. ரோஹித் சாதித்தாலும், மறுபக்கம் கிங் கோலி எப்போது வெகுண்டெழுந்து வந்து, சதத்தைத் தொட்டு சாதிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது.

2007-ல், அறிமுக டி20 உலகக் கோப்பையை வென்று அசத்திய இந்தியாவுக்கு, அதே போன்றதொரு வாய்ப்பு, மீண்டும் ஒருமுறை அமைந்து வருகிறது. அறிமுக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையைத் தூக்குவதற்கான வாய்ப்புதான் அது. இந்தப் போட்டியில் வென்று, தொடரையும் கோப்பையையும், கூடவே லார்ட்ஸில் இறுதிப் போட்டிக்கான இடத்தையும் ஒருங்கே இந்தியா கைப்பற்றும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

எனினும் கடந்த போட்டிபோல, ஒருபக்கமாய், அதுவும் இரண்டு நாட்களில், முடிந்து போகாமல் ஐந்து நாட்கள் நீடித்தால் இப்போட்டி ரசிகர்களுக்கான விருந்தாய் அமையும் என்பது உறுதி.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு