Published:Updated:

கோலி கூட்டாளிகளின் ஃபீல்டிங் பரிதாபங்கள்... ரன் வேட்டையாடிய ஜோ ரூட்! #INDvENG

#INDvENG
#INDvENG

ரூட்டின் விக்கெட்டே இந்தியாவுக்கான விடிவெள்ளி என்ற எதிர்பார்ப்போடு தொடங்கிய இன்றைய நாள், ஒட்டுமொத்த இந்திய பெளலர்களின் உள்நாக்கை உலரச் செய்து, அவர்களைக் களைப்படையச் செய்யும் வறண்ட நாளாக முடிந்திருக்கிறது.

நேற்றைய ஆட்டத்தை விட்ட இடத்திலிருந்து தொடங்கினார் ரூட். புது பேட்ஸ்மேன் பென் ஸ்டோக்ஸ். ஸ்டோக்ஸின் விக்கெட்டை, இதுவரை அதிக முறை வீழ்த்தியவரான அஷ்வின் எனும் சுழலும் ஆயுதத்தைக் கொண்டே ஸ்டோக்ஸைத் தாக்கினார் கோலி. ஆனால், ஆமையாய் நகர்ந்த முதல் ஒரு மணி நேரம் விக்கெட் இல்லாமல் நகர்ந்தது. உணவு இடைவேளைக்கு முந்தைய செஷனின் கடைசி நிமிட ஆட்டத்திலும், இந்தியாவுக்குச் சாதகமான அம்சங்கள் எதுவுமே இடம் பெறவில்லை.

அஷ்வின் ஸ்டோக்ஸுக்கு வீசிய ஒரு பந்துக்கு எல்பிடபிள்யூக்காக இந்தியா ரிவ்யூக்குப் போக, கிளவுஸில் பட்டிருந்ததனால், அதுவும் இந்தியாவுக்கு எதிராகவே முடிந்தது. அதற்கடுத்த சில நிமிடங்களிலேயே, ரூட்டுக்கான ஒரு பந்து எல்பிடபிள்யூக்கு போனதாக மறுபடியும் ரிவ்யூக்குப் போனது இந்தியா. ஆனால், பந்து அதிகமான பவுன்ஸ் ஆகி, ஸ்டம்புக்கு மேலே பறந்திருக்க, இந்தியாவின் இரண்டாவது ரிவ்யூவும் பயனற்றுப் போனது.

#INDvENG
#INDvENG

இதற்கெல்லாம் ஒருபடி மேலே, ஸ்டோக்ஸுக்கு அஷ்வின் ஒருமுறையும் புஜாரா மறுமுறையும் கேட்ச் டிராப் செய்து மறு ஜென்மம் அளித்தனர். இன்றைய நாளும் இந்தியாவுடையதாய் இருக்கப் போவதில்லை என்பதற்கான சாட்சியாய் இருந்தன அந்தக் கைநழுவல்கள்.

ஒருபுறம் அணுவளவு கூட பெளலர்களுக்கு ஒத்துழைக்க மாட்டேன் என ஆடுகளம் அடம்பிடிக்க, மறுபுறம் SG பந்து சலைவா உபயோகப்படுத்த முடியாத விதியால் தனது பொலிவை வெகுவிரைவில் இழக்க, இந்திய முகாமைச் சுற்றி வளைத்துத் தாக்கவே வந்துள்ளேன் என்பதைப் போல, கம்பீரமாய் 150 ரன்களை எட்டித் தொட்டார் ரூட்.

தொடர்ந்து மூன்று போட்டிகளில், அடுத்தடுத்து, 150-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்த ஏழாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதுவரை ரூட் அடித்த 20 சதங்களில், பத்து சந்தர்ப்பங்களில், சதத்தைத் தொட்டும் ரன்பசி அடங்காது அதனை 150க்கும் மேற்பட்ட ரன்களாக மாற்றியுள்ளார் ரூட். ஆலமரமாய் மைதானத்தில் தனது வேரை ஆழமாய் ஊன்றி, இங்கிலாந்து கொடியை மெல்ல மெல்ல ஏற்றிக் கொண்டிருக்கும், இவரை விரட்ட வழி இல்லையா என்ற வெறுப்பு மேலோங்கிய தருணத்தில், கிடைத்த ஒரு ரன்அவுட் வாய்ப்பையும் பொறுப்பின்றி இந்திய வீரர்கள் சுந்தர் மற்றும் பன்ட் கைவிட்டனர். இங்கிலாந்தின் ஸ்கோர் 327 ஆக இருந்த போது, இந்தியா தவறவிட்ட இந்த ரன்அவுட் வாய்ப்பு பெரிய அளவில் பாதிப்பைக் கொண்டு வந்தது.

கொஞ்சமும் கைகொடுக்காத களர்நிலமான களம், கேட்ச் டிராப், ரன் அவுட் வாய்ப்பைத் தவற விடும் ஃபீல்டர்கள் என எதுவுமே சரியாகச் செல்லவில்லை இந்திய பெளலிங் யூனிட்டுக்கு! விக்கெட் இல்லாத வெறுமை விநாடிகளுடன் முடிவை எட்டியது முதல் செஷன்.

#INDvENG
#INDvENG

இரண்டாவது செஷனாவது இருண்ட வானிலையை மாற்றுமா என்னும் ஏக்கத்தோடே தொடங்கியது இந்தியா. 355/3 என இறுமாப்போடு தொடங்கிய சிறுது நேரத்திலேயே, 100 ரன் பார்ட்னர்ஷிப்போடு இந்தியாவுக்கான அழுத்தத்தை அதிகரித்தது இந்தக் கூட்டணி. கடைசியாக, நதீமின் சுழலில் சிக்கினார் ஸ்டோக்ஸ். அரைசதத்தை அவசரகதியில் சேர்த்த அவரது ஆட்டம் சதத்தைத் தொடாமல், 82 ரன்களுடன் முடிவுக்கு வந்தது.

போப் உள்ளே வந்து ரூட்டுடன் கைகோக்க, 400 ரன்களை ரணகளமாக இங்கிலாந்து எட்ட, இரட்டைச் சதம் மட்டுமே என்னுடைய இலக்கு என்பதைப் போல, கொஞ்சமும் அசராது தொடர்ந்தார் ரூட். போப்புக்கு எதிரான இன்னொரு ரிவ்யூவும் இந்தியாவுக்கு எதிராகத் திரும்ப, மூன்று ரிவ்யூக்களையும் வரிசையாக இழந்திருந்தது இந்தியா.

அஷ்வினின் பந்தில் இரட்டைச் சதத்தை எட்டித் தொட்ட ரூட், தன்னுடைய ஐந்தாவது இரட்டைச் சதமாய் இதனைப் பதிவு செய்தார். ஃபேபுலஸ் 4-ல் தனக்கான ராஜசிம்மாசனத்தில் கம்பீரமாய் அமர்ந்தார். ஒரே ஒரு விக்கெட்டுடன் இந்தியா ஆறுதலடைந்து கொள்ள, இங்கிலாந்தோ 99 ரன்களைச் சேர்த்திருந்தது இரண்டாவது செஷனில்‌‌. 454/4 என முன்னிலும் வலிமை பெற்றிருந்தது ரூட் மற்றும் கோ.

டிக்ளேர் செய்யுமா இங்கிலாந்து அல்லது ஒரே இன்னிங்ஸில் இவர்களை வைத்துச் செய்து விட்டு, இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்காமலே வெற்றியைச் சொந்தமாக்கி விடுமா, என்பது மட்டுமே இந்திய ரசிகர்களின் எண்ணமாக இருந்தது‌. கொஞ்ச நஞ்சம் மிச்சமிருந்த இந்திய பெளலர்களின் சக்தியையும் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சத் தொடங்கினர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள். இறுதியில், ஒருவழியாக அஷ்வினின் அபாரப் பந்து வீச்சில், ஐந்தாவது விக்கெட்டாய் போப் ஆட்டமிழக்க, சிறு நம்பிக்கை ஒளி தென்பட்டது இந்தியாவின் கண்ணில்.

#INDvENG
#INDvENG

அந்த ஒளிக்கீற்றை ஒளிக்கதிராய் மாற்றும் வகையில், 218 ரன்கள் குவித்திருந்த ரூட்டை நதீமே, எல்பிடபிள்யூவில் வெளியேற்றினார். பல மணி நேரங்களாக இந்தியர்களுக்குத் தண்ணீர் காட்டிய, இங்கிலாந்து கேப்டனின் அற்புதமான இன்னிங்ஸ் இறுதியாய் முடிவுக் கோட்டை முத்தமிட்டது. ரூட் ரிவ்யூவுக்குப் போக, இன்றைய நாளில் ஒருவழியாக இந்தியாவுக்குச் சாதகமான முதல் ரிவ்யூவாக அது அமைந்தது. அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி நிம்மதிப் பெருமூச்சு விட்டது இந்தியா‌.

அதற்கடுத்த இரட்டை விக்கெட்டுகளாய், பட்லரையும், ஆர்ச்சரையும், இஷாந்த் ஷர்மா போல்டாக்கி, தனது ரீ என்ட்ரியை அமர்க்களமாய் அறிவித்தார்‌. எனினும் இதற்குள் 500 ரன்களைக் கடந்து விட்டது இங்கிலாந்து. பற்றாக்குறைக்கு நோ பால்கள் எனும் உதிரிகளையும் பொட்டலம் பொட்டலமாகக் கட்டித் தந்தனர் இந்திய பெளலர்கள். 19 நோ பால்களை இந்த இன்னிங்ஸில் வீசி இருக்கின்றனர். மூன்றாவது அம்பயருக்கு, நோ பால்களை நிர்ணயம் செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டிப்பதால், சைரன் ஒலி சீரான இடைவெளியில் அவ்வப்போது கேட்டுக் கொண்டே இருந்தது.

போதாக்குறைக்கு, சுந்தருக்கு தனது முதல் ஹோம் விக்கெட்டாய், பெஸ் கிடைக்க வேண்டிய வாய்ப்பையும் ரோஹித் ஷர்மா கோட்டை விட்டார். அவர்கள் நன்றாகச் செய்கிறார்களோ இல்லையோ, நீங்கள் சிறப்பாகவே செய்கிறீர்கள் என நொந்து கொண்டு வெற்றுப் புன்னகையை வீசிச் சென்றார் வாஷிங்டன் சுந்தர்.

ஒருகட்டத்தில் கடைசி பத்து ஓவர்கள், இருக்கும்போது இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்யும் என்று எதிர்பார்க்க இங்கிலாந்து அணியோ டிக்ளேரா அப்படி என்றால் என்ன என்பது போல் ஆடி இன்றைய நாள் ஆட்டத்தை முடித்துள்ளது.

#INDvENG
#INDvENG

மைதானம் ஒத்துழைக்காத கட்டத்திலும், உயிரை வெறுத்து விக்கெட்டை வீழ்த்த முயற்சிக்கும் பௌலர்களின் ஒவ்வொரு முயற்சியும், ஃபீல்டர்களின் ஒழுங்கின்மையால் வீணாய் போனது. இறுதியில், இங்கிலாந்தின் ஸ்கோர், 555/8 என அசைக்க முடியாமல் இன்றைய நாள் முடிவுக்கு வந்தது.

கடுகளவும் கருணை காட்டாத களம், ஃபீல்டிங் பரிதாபங்கள் என இந்தியாவிற்கு எதிரான ஏமாற்றம் இறுகத் தழுவிக் கொண்ட நாளாகவே, இன்றைய நாளும் அமைந்தது‌. டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான கனவைத் தேக்கி நிற்கும் கண்களை மங்கச் செய்யாமல் ஒளிரச் செய்வதற்கான எஞ்சியிருக்கும் வேலைகளை இந்திய அணி நாளைக்காவது செய்யும் என நம்பலாம். எனினும், மைதானம் தனக்குள் ஒளித்து வைத்திருந்த விந்தைகளை கடைசி இரு நாட்கள்தான் கட்டவிழ்த்துக் காட்டும் என்பதால், மிகச் சிறந்த ஒரு டெஸ்ட் மேட்சைக் காணத் தயாராவோம்‌.

அடுத்த கட்டுரைக்கு