Published:Updated:

இரண்டே நாட்களில் முடிந்த பிங்க்பால் டெஸ்ட்... இந்தியாவின் வெற்றி எப்படிப்பட்டது? #INDvsENG

மைதானம் குறித்த வாதங்களும் விமர்சனங்களும், இனி வலுவடைந்து தடித்ததாக மாறும். எனினும் சகல களத்திலும் சாதிப்பவர்கள்தானே சாம்பியனாகத் தகுதி உள்ளவர்கள்?!

ஐந்து நாட்களில் முடிவுரை எழுத வேண்டிய போட்டி, முன்னுரையோடே முடிந்து போக, அக்ஸர் மற்றும் அஷ்வின் என்னும் சுழலில் காணாமல் மூழ்கிப் போனது, இங்கிலாந்து. இரண்டே நாட்களில், இந்தியாவிற்குச் சாதகமான முடிவைத் தந்துள்ளது, அஹமதாபாத் டெஸ்ட் போட்டி.

"இரண்டு நாள் டெஸ்ட்டா?" என்கிற மைக்கேல் வாஹனின் கிண்டல் உண்மையாகி இருக்கிறது. ஒரு நாளுக்கு ஒரு இன்னிங்ஸ் என்பதெல்லாம் பழங்கதையாக, செஷனுக்கொரு இன்னிங்ஸ் என்னும் கணக்கில் புல்லட் ட்ரெய்ன் வேகத்தில் நகர்ந்தது போட்டி.

நூறடிக்க ஒரு ரன் தேவை எனும் கணக்கில் இன்றைய நாளைத் தொடங்கியது இந்தியா. ரஹானேவும் ரோஹித்தும் இந்தியாவை முன்னிலையில் கொண்டு போய் வைப்பார்கள் என்ற எண்ணத்திற்கு ஆயுசு மிகவும் சொற்பம். ரஹானேவை ஆட்டமிழக்கச் செய்து அமர்க்களமாய் நாளைத் தொடங்கினார், லீச். அடுத்த சில நிமிடங்களிலேயே, 66 ரன்களோடு களத்திலிருந்த ரோஹித்தையும் எல்பிடபிள்யூவில் வெளியே அனுப்பினார் லீச்.

#INDvsENG
#INDvsENG


அடுத்ததாக அஷ்வினையும் ரூட்டே வழியனுப்ப, வெறும் 134 ரன்களுக்கு, ஒன்பது விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. ஆறுதல் பரிசாய், இஷாந்த், டெஸ்ட் போட்டி வரலாற்றில், தனது வாழ்நாளின் முதல் சிக்ஸரைத் தூக்கி அடித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். எனினும், இந்தக் கூட்டணியும் வெகு நேரம் நிலைக்கவில்லை. இறுதியாக, பும்ராவின் விக்கெட்டையும், ரூட்டே வீழ்த்தி, வெறும் 145 ரன்களுக்கு, இந்தியாவை ஆட்டமிழக்கச் செய்தார்.

முன்வரிசை பேட்ஸ்மேன்களுக்கு லீச் முடிவு கட்ட, பின்வரிசை வீரர்கள் ருத்ரதாண்டவம் ஆடி ரூட் களமாட, 33 ரன்கள் முன்னிலையோடு முடிவுக்கு வந்தது இந்தியாவின் முதல் இன்னிங்ஸ். இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ், 49 ஓவர்கள் சென்றிருக்க, இந்தியா தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 54 ஓவர்கள் விளையாடித் தாக்குப் பிடித்ததே, பெரிய விஷயம் என்றே பார்க்கப்பட்டது. லீச்சும் ரூட்டும் போட்டி போட்டு, விக்கெட் வேட்கையோடு, வேட்டையாட, நொறுங்கிப் போனது இந்திய பேட்டிங் படை.

எப்படிச் செல்லப் போகிறது இந்தத் தருணத்திலிருந்து போட்டி என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், நான்காவது நாளுக்கெல்லாம், போட்டி நீளாது என்பதை களம் அவ்வப்போது கண்முன் காட்டியபடியே இருந்தது!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸுக்கு, அக்ஸரோடு மிரட்டல் வரவேற்புக் கொடுத்தார் கோலி. அக்ஸரோ, முதல் பந்தில் விக்கெட் எடுப்பதுதானே என் பாணி என்பதைப் போல, சென்ற இன்னிங்ஸில், இங்கிலாந்துக்கு நம்பிக்கைக் கீற்றைக் கண்ணில் காட்டிய க்ராலியின் விக்கெட்டை முதல் பந்திலேயே சொல்லி வைத்ததைப் போல வீழ்த்தி, கொஞ்சமும் இங்கிலாந்தை இளைப்பாற விடாமல், அதே ஓவரிலேயே பேர்ஸ்டோவையும் வீழ்த்தினார். ரன் எதுவும் எடுக்காமல், க்ளீன் போல்டாகி, பேர்ஸ்டோ வெளியேறினார். 0/1 பின் 0/2 என தடுமாறியது இங்கிலாந்து, திணறடித்தது இந்தியா. ரூட் உள்ளே வந்தார்.

பௌலிங்கில் மிரட்டிய ரூட், பேட்டிங்கில் என்ன செய்வார் என்ற ஆவல் மேலிட்டது. இவர் செட்டில் ஆகி, ஆடி விட்டாரெனில், இரண்டாவது இன்னிங்ஸை இந்தியா எதிர்கொள்வது கடினமானதாக மாறிவிடும் என்னும் பயம் எழுந்தது. அந்த அச்சத்தை அதிகரிப்பது போல, சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடியது, சிப்லி - ரூட் கூட்டணி. ஆனாலும் அக்ஸர் என்னும் ராட்சச அலையின் முன் சிப்லி கூட சின்னக் கப்பல்தான் என அவரையும் வீழ்த்தி அனுப்பினார், அக்ஸர்.

#INDvsENG
#INDvsENG

அடுத்ததாக, அஷ்வினின் இரண்டு பந்துகளை, பவுண்டரி லைனை முத்தமிட வைத்து, ஸ்டோக்ஸ் அசத்தினார். 25 ரன்களோடு, இங்கிலாந்திற்கு சற்று ஆறுதல் அளித்துக் கொண்டிருந்த ஸ்டோக்ஸை, இறுதியாக அஷ்வினே எல்பிடபிள்யூவில் வெளியே அனுப்பி, அரைச் சதத்தை முக்கி முனங்கித் தொட்டிருந்த இங்கிலாந்தின் நான்காவது விக்கெட் விழுந்தது.

இனி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் பேட்டில் இருந்து வரும் ஒவ்வொரு ரன்களும், தங்களுடைய இலக்கின் கணக்கில் சேர்க்கப்படும் எனும் அச்சத்தோடு, விரைவில் இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸுக்கு முற்றுப்புள்ளி வைக்க, கோலி தனது சுழல் படையை முடுக்கி விட, இந்தப் போட்டியில் தன்னுடைய பத்தாவது விக்கெட்டாக, இங்கிலாந்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் தனது தோளில் சுமந்து கொண்டிருந்த ரூட்டை வெளியேற்றினார் அக்ஸர். தனது அறிமுகப் போட்டியிலேயே, ரூட்டைத் தூக்கியவருக்கு, இதுவா கடினமானதாக இருந்து விடப் போகிறது?!

புதிதாகக் கைகோத்த போப்பும் ஃபோக்ஸும், எந்த மாயாஜாலத்தையும் தங்கள் அணிக்காகச் செய்து விடவில்லை. போப்பை போல்டாக்கிய அஸ்வின் தனது நானூறாவது விக்கெட்டை இந்தப் போட்டியிலேயே எடுத்து விடும் உறுதியுடன் பந்தைச் சுழல விட, வேக வித்தகன் ஆர்ச்சரால், அந்தச் சுழலின் சூரரை சமாளிக்க முடியாமல் போய் எல்பிடபிள்யூவில் ஆட்டமிழந்தார். நம்பாத ஆர்ச்சர், ரிவ்யூக்குப் போக, இந்தியாவுக்கும் அஷ்வினுக்கும் சாதகமாகவே, முடிவு வந்தது. தனது 400-வது விக்கெட்டை வீழ்த்தி ஆர்ப்பரித்தார் அஷ்வின்.

முடிந்த அளவு போராடுவோம் என விட்டுக் கொடுக்காமல் போராடிய இங்கிலாந்தின் லீச், சிக்ஸருக்கு ஒரு பந்தை வழியனுப்ப, அசராத அக்ஸரோ, இந்தப் போட்டியில் தன்னுடைய பதினோராவது விக்கெட்டாக ஃபோக்ஸை வீழ்த்தியது மட்டுமின்றி, இன்னொரு ஐந்து விக்கெட் ஹாலையும் தன் பெயரில் எழுதிக் கொண்டார்.

#INDvsENG
#INDvsENG

முடிவாய் லீச்சின் விக்கெட்டுக்கு அஷ்வின் மூடுவிழா நடத்த, எனக்கும் ஒரு வாய்ப்பு வேண்டும், நானும் சுழல் பந்து வீச்சாளர்தான் என்பதைப் போல, வீசிய நான்கே பந்துகளில், இறுதியாக ஆன்டர்சனின் விக்கெட்டைத் தனது கணக்கில் ஏற்றிக் கொண்டார் வாஷிங்டன் சுந்தர். வெறும் 81 ரன்களுடன் முடிந்து போனது இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸ்‌. இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் குறைந்த ஸ்கோரே இதுதான் எனும் வலியோடு அவமானத்தையும் சுமந்தபடி, 49 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியாவுக்கு நிர்ணயித்தது, இங்கிலாந்து.
வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகி விட்ட நிலையில், களமிறங்கியது ரோஹித் - கில் கூட்டணி. 17 விக்கெட்டுகள் விழுந்த களத்தில், இன்னும் பத்து விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி நமதே என்ற சிறு துளி நம்பிக்கையோடு லீச் மற்றும் ரூட் தாக்குதலைத் தொடங்கினர். எனினும் கொஞ்சமும் அசரவில்லை இந்தக் கூட்டணி! 49 ரன்கள்தான் இலக்கு என்பதால் துணிந்து இறங்கி பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசத் தொடங்கியது இந்த இருவரணி. வெகு நேரம் களத்தில் நிற்கப் பொறுமையில்லை என்பதைப் போல, 7.4 ஓவரிலேயே இலக்கை எட்டி, இந்தியாவிற்கு வெற்றி மகுடத்தைத் தூக்கி வைத்தனர், இந்திய ஓப்பனர்கள். பத்து விக்கெட் வித்தியாசத்தில் அற்புதமான வெற்றியைப் பதிவு செய்தது இந்தியா. 2/1 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது.
இந்தப் போட்டியில் வென்றதன் மூலம், கடைசிப் போட்டியில் டிரா செய்தால் கூட, இந்தியா லார்ட்ஸில் நடக்க இருக்கும், டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான மகா யுத்தத்தில், நியூஸிலாந்துடன் மோத, இரண்டாவது அணியாகத் தகுதி பெறும் என்பது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
இந்தியாவில் நடந்த கடைசி 38 போட்டிகளில், இந்தியா 30-ல் வென்று, 6-ல் டிரா செய்து, இரண்டில் மட்டுமே தோற்று, இது எனது கோட்டை என கம்பீரமாய் ஜொலிக்கிறது. அந்த இரண்டு தோல்வியில் ஒன்று, இந்தத் தொடரின் தொடக்கத்தில், இங்கிலாந்திடம் பெற்ற தோல்வி.

மைதானம் குறித்த வாதங்களும் விமர்சனங்களும், இனி வலுவடைந்து தடித்ததாக மாறும். எனினும் சகல களத்திலும் சாதிப்பவர்கள்தானே சாம்பியனாகத் தகுதி உள்ளவர்கள்?! வரலாற்று வெற்றியைப் பதிவிட்டுள்ள இந்தியா, தனது சாம்பியன் கனவை நோக்கி வெற்றி நடை போடுகிறது‌. இந்தியாவுக்காக அதிக டெஸ்ட் போட்டிகளை வென்று கொடுத்த பெருமையையும், தோனியைத் தாண்டி கோலி தொட்டு, தன் மகுடத்தில் மாணிக்கமாய் ஏற்றிக் கொண்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு