Election bannerElection banner
Published:Updated:

ஃபார்முக்கு வந்த கோலி... சிக்ஸர்களால் சிறப்பித்த இஷான் கிஷன்... ஈ சாலா கப்! #INDvENG

#INDvENG
#INDvENG

டாம் கரண் வீசிய ஓவரில், 'மேன் ஆன் தி மிஷனாக' இஷான் கிஷன், அவுட் சைட் த ஆஃப் ஸ்டெம்ப்பில் வீசப்பட்ட பந்தை சிக்ஸருக்குத் தூக்கி அதோடு நிறுத்தாமல், இன்னொரு பந்தை, டீப் எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரிக்கு அனுப்பினார்.

அட்டாக்கிங் பேட்டிங் லைன்அப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட கிங் கோலி, கடந்த போட்டியில், துப்பாக்கியைத் தன் பக்கமே திருப்பி சுட்டுக்கொண்டார். விழுந்த வேகத்தில் எழுவதுதானே இப்போதைய இந்திய அணியின் ஸ்டைல்?!

இரண்டாவது ரவுண்டில், இந்தியா வாங்கியதை வட்டியும் முதலுமாய்த் திருப்பித் தர, நாக் அவுட்டாகியிருக்கிறது இங்கிலாந்து. அறிமுக போட்டியா எனப் புருவங்களை உயர்த்த வைத்து, இஷான் கிஷன் அரை சதமடிக்க, தேடிக் கொண்டிருந்த கோலியும் காணக் கிடைக்க, இந்தியா தொடரை 1-1 என சமன்படுத்தி இருக்கிறது.

டாஸை வென்ற இந்தியா, பௌலிங்கைத் தேர்ந்தெடுத்தது. இந்தியா இன்று அக்ஸருக்கு விடை கொடுத்து பேட்டிங்கை வலுப்படுத்தும் நோக்கோடு, சூர்யகுமாருக்கு தன் அறிமுகப் போட்டியில் ஆடும் வாய்ப்பைக் கொடுத்தது. வீசிய ரோஹித் அலைக்கு மதிப்பளித்து, அவரை உள்ளே கொண்டு வருவார் கோலி என எதிர்பார்ப்பு எழ, மேலும் ஒரு ட்விஸ்டாக, அது நிகழாமல், இஷானுக்கு முதல் போட்டி வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.

#INDvENG
#INDvENG

"இந்திய அணியை விட மும்பை இந்தியன்ஸ் அணி வலிமை வாய்ந்தது" என்ற மைக்கேல் வாகன் கருத்து காதில் கேட்டதோ என்னவோ, இரண்டு மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்களை, இன்று புதிதாய் உள்ளே கொண்டு வந்தது, இந்தியா. இங்கிலாந்திலோ, மார்க் உட்டுக்குப் பதிலாக, டாம் கரண் சேர்க்கப்பட்டிருந்தார்.

பவர்ப்ளே ஓவர்களில் 5.75 என்னும் நம்ப முடியாத எக்கானமியோடு, 22 விக்கெட்டுகளையும் எடுத்துள்ள, புவனேஷ்வர், 23-வது விக்கெட்டாக, எல்பிடபிள்யூவில், பட்லரின் விக்கெட்டை வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து உள்ளே வந்த மலான் பவுண்டரியோடு, புவனேஷ்வரின் ஓவரை முடித்து வைத்தார்.

அதற்கடுத்தாக, போன போட்டியில் செய்த தவற்றை மீண்டும் செய்யாமல், இரண்டாவது ஓவரிலேயே, சுந்தரை கோலி உள்ளே கொண்டு வர, சிக்ஸருடன் அவருக்கு வரவேற்புக் கொடுத்தார் ஜேசன் ராய். அதன்பின் ஓப்பனரை இழந்ததால் கொஞ்சமும் ஓய்ந்து விடாமல், ஸ்வீப் ஷாட்களால், போட்டியை ஜெட் வேகத்தில் முன்னே செலுத்தியது, இந்தக் கூட்டணி. தாக்கூர் வீசிய போட்டியின் ஐந்தாவது ஓவரில், மலான் சந்தித்த பந்துகளில் ஒன்று, ஃபைன் லெக்கில் நின்றிருந்த சஹாலுக்கு முன்பே விழ, இன்னொரு பந்தோ, எட்ஜாகி, கீப்பருக்கும் ஸ்லிப்புக்கும் நடுவே தப்பிப் பிழைத்து, நாலு ரன்களைப் பெற்றுக் கொண்டது. பவர்ப்ளேயின் முடிவில், 44/1 என இருந்தது இங்கிலாந்து‌.

#INDvENG
#INDvENG

இறுதியாக, ஒன்பதாவது ஓவரில், மலானின் பந்தைத் தவற விட்டதற்கான பாவ விமோட்சனமாக, 47 பந்துகளில், 63 ரன்களை எடுத்து மிரட்டிக் கொண்டிருந்த இந்த பார்ட்னர்ஷிப்பை முறித்துக் காட்டினார், சஹால். இதற்கு முந்தைய பந்திலேயே, ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயற்சித்து, பிளம்ப் முறையில், தனது விக்கெட்டை விட்டுக் கொடுத்திருந்தார் மலான். கோலி அதற்கு ரிவ்யூ போகாமல் தவறவிட, அடுத்த பந்திலேயே, தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார் மலான். ஸ்பின் பந்துகளைச் சந்திப்பதில் தனது குறைபாட்டை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தினார்‌.

8-க்கும் அதிகமான எக்கானமிக்காக, சஹாலின் தேர்வு குறித்த விமர்சனங்கள் எழுந்தாலும், டி20ஐ பொறுத்தமட்டிலும், இந்தியாவின் சார்பாக அதிக விக்கெட்டுகளை எடுத்தவராக, சஹாலே இருக்கிறார் என்பதால், அவருக்கான வாய்ப்பு மீண்டும் மீண்டும் அளிக்கப்படுகிறது.

மலானின் விக்கெட் விழுந்தாலும், மறுபக்கம் அடங்காத காட்டாறாக ஓடிக் கொண்டிருந்தார் ராய். பற்றாக்குறைக்கு கேட்ச் டிராப்கள், மிஸ்ஃபீல்டுகளை தாராள மனதோடு இந்தியா வாரி இறைக்க, ரன் ரேட் எட்டைத் தாண்டி எகிறத் தொடங்க, அரைச்சதத்தைத் தொட நான்கே ரன்கள் பாக்கியிருந்த ராயின் விக்கெட்டை சுந்தர் வீழ்த்தினார். உள்ளே வந்த மார்கன், தாக்கூரின் ஒரு ஓவரில் மூன்று பவுண்டரிகளை விளாசி, இந்தியாவை அதிர்ச்சியில் உறைய வைத்தார். என்ன செய்து இவர்களை எப்படிக் கட்டுப்படுத்துவது என அரண்டு போன இந்திய அணிக்கு ஆறுதல் அளிக்கும்வகையில், பேர்ஸ்டோவின் விக்கெட்டை வீழ்த்தினார் சுந்தர். இதன்பிறகு ரன்கள் ஏறும் விகிதம் கொஞ்சம் மட்டுப்பட, மார்கனின் விக்கெட்டை வீழ்த்தினார், தாக்கூர்.

இறுதியாக, பாண்டியா பிடித்த ஒரு எளிமையான கேட்சால், தாக்கூர் பந்தில், ஸ்டோக்ஸ் வீழந்தார். 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து, 165 ரன்களை இந்தியாவுக்கு இலக்காக நிர்ணயித்தது.

#INDvENG
#INDvENG

கடைசி ஐந்து ஓவர்களில் வெறும் 35 ரன்களை மட்டுமே கொடுத்த இந்திய பௌலர்கள், இன்னும் 20+ ரன்கள் அதிகமாக போய் இருக்க வேண்டிய ஸ்கோரைக் குறைத்தனர். மிரட்டும் டெத் ஓவர் பௌலர்களாக, இதில் ஆளுக்கு இரண்டு ஓவர்களை வீசிய தாக்கூரும் புவனேஷ்வரும் தலா 13 மற்றும் 16 ரன்களை மட்டுமே கொடுத்து, பும்ரா இல்லாமல் விளையாடுகிறோம் என்ற எண்ணமே எழாமல் செய்து விட்டனர்.

சுந்தரும் தாக்கூரும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்க, புவனேஷ்வரும் சஹாலும், தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர். இன்றைய போட்டியிலும், சஹாலின் எக்கானமி 8.5 என்பது, எந்த வகையில் 5.72 எக்கானமி வைத்துள்ள அஷ்வின் சஹாலைவிட குறைந்து போய்விட்டார். அப்படியே லெக் ஸ்பின்னர்தான் தேவை என கோலி நினைத்தாலும், அதற்கு வேறு வீரரா இல்லை என்ற எதிர்ப்புக்குரல் கொஞ்சம் காட்டமாகவே எழுந்திருக்கிறது.

இலக்கை நோக்கி ஓட்டத்தைத் தொடங்கினர், ராகுலும், கிஷானும். தவானை விடவும் ஒருபடி கூடுதலாக மதிப்பிடப்பட்ட ராகுல், முதல் போட்டியைப் போலவே, இந்தப் போட்டியிலும் அதிர்ச்சி அளித்து டக் அவுட்டாகி வெளியேறினார். அற்புதமான ஒரு விக்கெட் மெய்டனுடன் இங்கிலாந்துக்கு ஒரு மிரட்டல் தொடக்கம் கொடுத்தார் சாம் கரண்.

எனினும் 0/1 என்ற எண்கள் கொஞ்சமும் பயமுறுத்தவில்லை இந்தியக் கேப்டனையும், தனது அறிமுகப் போட்டியில் ஆடிய இஷான் கிஷனையும். கொஞ்சமும் பயமின்றி, தன்னை நோக்கி நெருப்புப் பிழம்பாய் வீசப்பட்ட ஆர்ச்சரின் முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பி, சர்வதேச டி20-ல் தனது கணக்கைத் தொடங்கினார் இஷான். இழந்த தனது ஃபார்மை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்திலிருந்த கோலியும், அதிரடி ஆட்டத்தை முதல் பந்திலிருந்தே எடுக்கத் தொடங்க, ஓவருக்கொரு பவுண்டரி எனும் கணக்கில் விளாசத் தொடங்கியது, இந்தக் கூட்டணி. ஐந்தாவது ஓவரில், ஜோர்டன் வீசிய பந்தை கோலி அடிக்க, அதைப் பிடிக்கும் வாயப்பை நழுவ விட்டார் பட்லர். இதுதான் போட்டியை இந்தியாவின் கையில் இங்கிலாந்தே தந்த தருணம்.

#INDvENG
#INDvENG

டாம் கரண் வீசிய ஓவரில், 'மேன் ஆன் தி மிஷனாக' இஷான் கிஷன், அவுட் சைட் த ஆஃப் ஸ்டெம்ப்பில் வீசப்பட்ட பந்தை சிக்ஸருக்குத் தூக்கி அதோடு நிறுத்தாமல், இன்னொரு பந்தை, டீப் எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரிக்கு அனுப்பினார். மறுமுனையில் இருந்த கோலி, அதை தான் அடித்த ஷாட் போல கொண்டாடித் தீர்த்ததோடு, அவரைப் பாராட்டவும் செய்தார்.

பவர்ப்ளேவில், அரை சதமடித்தது இந்திய ஸ்கோரும், இந்தக் கூட்டணியின் பார்ட்னர்ஷிப்பும்.

மறுபடியும் ரஷித்தின் பந்தை, இஷான் அடிக்க, ஸ்டோக்ஸ் கேட்ச்சையும் கூடவே மேட்சையும் ஒட்டுமொத்தமாய்க் கைவிட்டார்.

இதன்பிறகு அதே ஸ்டோக்ஸின் பந்தில், ஆளுக்கொரு சிக்ஸராக அடித்துக் கொண்ட இந்தக் கூட்டணி, தங்களது அரைச்சதத்தை நோக்கி, தற்போது ஓடத் தொடங்கியது. ரஷித்தின் ஓவரில், அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை, மிட் விக்கெட்டிலும் லாங் ஆனிலும் அனுப்பி, தனது அரைச் சதத்தை, 28 பந்துகளில் குவித்து அசத்திய இஷானை, அதே ஓவரின் கடைசிப் பந்தில் ரஷித்தே வெளியேற்றினார். கடந்த ஐபிஎல்-ல், மும்பை இந்தியன்ஸுக்காக ஆடியபோது காட்டிய, அதே முரட்டுத்தனமான இன்னிங்ஸை, இந்தியாவுக்காக ஆடும்போதும் இஷாம் கிஷன் இன்றும் காண்பித்தார்.

அடுத்ததாக இது என் முறை என்ற அறிவிப்போடு உள்ளே வந்தது புயல் பண்ட்! வழக்கம் போல, கமெண்டேட்டர்களே வார்த்தைகளில் வடிக்க முடியாத தனது தனித்தன்மை வாய்ந்த ஷாட்களோடு வாண வேடிக்கை காட்ட ஆரம்பித்தார் பண்ட். இன்னொரு பக்கம், கோலி, எப்படி இஷானைப் பாராட்டிக் கொண்டே இருந்தாரோ அதே போல், பன்ட்டையும் உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்க, பயமறியாக் கன்றாக, துள்ளி விளையாடினார் பன்ட்‌. 13 பந்துகளில் 26 ரன்களை, 200 ஸ்ட்ரைக் ரேட்டோடு குவித்த பன்ட், ஜோர்டன் பந்தில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, ஷ்ரேயாஸ் உள்ளே வந்தார்.

#INDvENG
#INDvENG

37 பந்துகள் இருக்கின்றன, அடிக்க வேண்டிய ரன்கள் வெறும் 34 தான் என்பதால், எத்தனை ஓவர்களுக்குள் போட்டியை இந்தியா முடிக்கும் என்ற எதிர்பார்ப்பே எழுந்தது. அந்தத் தருணத்தில், டீப் மிட் ஆஃபில் அடித்த சிக்ஸரோடு, 35 பந்துகளில் தனது 26-வது அரைச்சத்தைக் கடந்த கோலி, நாம் இவ்வளவு நாளாகத் தேடிக் கொண்டிருந்த வின்டேஜ் கோலியை வெளிக்கொணர்ந்தார். இறுதியில், 18வது ஓவரில், ஜோர்டனின் ஓவரின் நான்காவது பந்தை கோலி, பவுண்டரிக்கு அனுப்பி, அதற்கடுத்த பந்தை வின்னிங் ஷாட்டாக, பேக்வர்ட் ஸ்கொயர் லெக்கில் அனுப்பி, சென்ற போட்டியில் இங்கிலாந்து போட்டியை முடித்த அதை பாணியில் இந்தியாவை வெற்றியைச் சுவைக்க வைத்தார்.

தொடரை மட்டும் சமன் செய்யவில்லை இந்தியா. இதுவரை டி20-ல் இந்தியா இங்கிலாந்தும் மோதிக் கொண்ட மகாயுத்தத்தில், சென்ற போட்டியில் வென்றதன் மூலம், 8-7 என லீட் எடுத்திருந்தது இங்கிலாந்து. இந்தப் போட்டியில் வென்றதன் மூலம், 1-1 என தொடரைச் சமன் செய்தது மட்டுமின்றி, அந்த நீயா நானா போட்டியையும் விடாக்கண்டன் கொடாக்கண்டன் பாணியில், ஸ்வீட் ரிவென்ஜோடு முடித்துள்ளது‌ இந்தியா. செவ்வாய் கிழமை நடக்கும் போட்டியில், மூன்றாவது டி20-ல் இன்னும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு