Published:Updated:

இறுதிச்சுற்று - 4: மாஸ் பேட்டிங்... 2011 வைட்வாஷுக்கு இந்தியா கொடுத்த பதிலடி! | INDvENG 2016 - 17

INDvENG 2016-17

4வது, 5வது டெஸ்ட்களில் இங்கிலாந்தை இன்னிங்ஸ் தோல்வி அடையச்செய்தது இந்திய அணி. நான்காவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 400 ரன்களைக் குவித்தாலும் இந்திய பேட்ஸ்மேன்களின் ஆட்டத்திற்கு முன்னால் இங்கிலாந்து பௌலர்களிடம் எந்த ஒரு விடையும் இல்லை.

இறுதிச்சுற்று - 4: மாஸ் பேட்டிங்... 2011 வைட்வாஷுக்கு இந்தியா கொடுத்த பதிலடி! | INDvENG 2016 - 17

4வது, 5வது டெஸ்ட்களில் இங்கிலாந்தை இன்னிங்ஸ் தோல்வி அடையச்செய்தது இந்திய அணி. நான்காவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 400 ரன்களைக் குவித்தாலும் இந்திய பேட்ஸ்மேன்களின் ஆட்டத்திற்கு முன்னால் இங்கிலாந்து பௌலர்களிடம் எந்த ஒரு விடையும் இல்லை.

Published:Updated:
INDvENG 2016-17
தென்னாப்பிரிக்க அணியுடனான தொடருக்குப் பிறகு இந்திய ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தொடர் இந்தியாவிற்குப் பயணப்பட்ட இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரே. ஐந்து வருடங்களுக்கு முன்பு அந்நாட்டிற்குச் சுற்றுப்பயணம் செய்து, விளையாடிய அனைத்து ஃபார்மேட்களிலும் ஒரு போட்டி கூட வெல்லாமல் நாடு திரும்பிய இந்திய அணி, தற்போது முற்றிலும் புதியதொரு வடிவத்தில் உருப்பெற்றிருந்தது.

இங்கிலாந்து உடனான இத்தொடருக்கு முன்பு இந்தியா மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்று ஒரு தொடர், சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியுடனான ஒரு தொடர் என இரண்டிலும் ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே தொடர் வெற்றிகளால் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருந்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு எந்த வகையிலும் நாங்கள் குறைச்சல் இல்லை என வந்திறங்கினர் இங்கிலாந்து அணியினர். கேப்டன் குக் மற்றும் ஜோ ரூட் ஆகியோருடன் பென் ஸ்டோக்ஸ், மொய்ன் அலி என ஆல் ரவுண்டர்களுடன் கூடிய பேட்ஸ்மேன்கள் ஒருபுறம், காயத்திலிருந்து அணிக்குத் திரும்பிய ஜேம்ஸ் ஆண்டர்சன் மறுபுறம் என இந்திய அணிக்குச் சவாலாகவே காட்சியளித்தது இங்கிலாந்து.

INDvENG 2016-17 | கோலி
INDvENG 2016-17 | கோலி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்கு முன் நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்கத் தொடர் முழுவதும் இந்தியச் சுழற்பந்துவீச்சாளர்களின் ஆதிக்கமே நிறைந்திருந்தாலும் இரு அணிகளுமே அவ்வளவாக பேட்டிங்கில் சோபிக்கவில்லை. ஆனால், சுழலுக்குச் சாதகமான அதே இந்திய ஆடுகளங்களில் நடைபெற்ற இத்தொடரின் அனைத்து போட்டிகளிலும் இரு அணிகளுமே ரன் மழையைக் கொட்டி தீர்த்தன. இந்திய அணியைப் பொறுத்தவரை விளையாடிய ஐந்து போட்டிகளும் ஏதேனும் ஒரு இன்னிங்ஸில் 400 ரன்களைக் கடந்திருந்தது. இதில் ஒரு போட்டியில் 600 ரன்களையும் மற்றொன்றில் 750 ரன்களைத் தொட்டிருந்தது. தொடக்க ஆட்டக்காரர் முதல் ஒன்பதாவது பேட்ஸ்மேன் வரை திடீர் எழுச்சி பெற இத்தொடர் முழுவதும் இங்கிலாந்தின் பௌலிங் இந்தியாவிடம் சுத்தமாக எடுபடவில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மறுபுறம் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களும் நானூறு ஐந்நூறு ரன்கள் அடிக்காமல் இல்லை. இத்தொடரின் ஐந்தில் இரு போட்டிகளில் 1400 ரன்களுக்கு மேலாகவும் மற்றொன்றில் 1100 ரன்களுக்கு மேலாகவும் இரு அணிகளால் சேர்த்து குவிக்கப்பட்டன. இருந்தும் 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை நசுக்கி தொடரை வென்றிருந்தது இந்திய அணி. இந்தியாவிடம் எங்கே வீழ்ந்தது இங்கிலாந்து?

ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்தது இங்கிலாந்து அணி. ரூட், அலி, ஸ்டோக்ஸ் என முறையே மூவரும் சதம் அடித்து ஆதிக்கம் செலுத்த, அந்த அணி 500 ரன்களைத் தாண்டி ஆட்டமிழந்தது. இதற்குப் பதிலடியாக முரளி விஜய்யும், புஜாராவும் சதம் விளாச இந்திய அணி 488 ரன்கள் குவித்தது. இரு அணிகள் ஆடிய முதல் இன்னிங்க்ஸ் மட்டுமே 320 ஓவர்கள் வரை செல்ல நான்காம் நாள் இரண்டாவது செஸ்ஷனில் தொடங்கிய இரண்டாவது இன்னிங்க்ஸ் இறுதியில் டிராவில் நிறைவானது. இரண்டாவது போட்டியில் லெக் ப்ரேக் பௌலரான மிஷ்ராவுக்கு பதில் கூடுதல் ஆப் ஸ்பின்னராக அறிமுகமானார் ஜெயந்த் யாதவ்.

INDvENG 2016-17 | குக்
INDvENG 2016-17 | குக்
AP

சென்ற போட்டி போல இதிலும் இரண்டு இந்தியர்கள் - கோலி மற்றும் புஜாரா சதம் விளாசி 400 ரன்களைக் கடக்கச் செய்ய 5 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியை 255 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார் அஷ்வின். பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் 200 ரன்கள் என்ற முன்னிலையில் ஆடிய இந்திய அணி இங்கிலாந்தை 405 என்ற இலக்கை சேஸ் செய்ய அழைத்தது. ஆனால், இந்திய ஸ்பின் டிப்பார்ட்மென்டின் மூவர் கூட்டணி எந்தவொரு எதிரணி பேட்ஸ்மேனையும் செட்டில் ஆகவிடாமல் ஆட்டமிழக்கச் செய்ய 158 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து அணி. மொஹாலியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட்டிலும் இதுபோலவே பார்ட்னர்ஷிப் கட்டமைப்பில் இந்திய பௌலர்களிடம் இங்கிலாந்து சொதப்ப நான்காவது நாளிலேயே ஆட்டத்தை முடித்தது இந்தியா.

இதற்கு ஒரு படி மேலே போய் நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட்களில் இங்கிலாந்தை இன்னிங்ஸ் தோல்வி அடையச்செய்தது இந்திய அணி. நான்காவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 400 ரன்களைக் குவித்தாலும் இந்திய பேட்ஸ்மேன்களின் ஆட்டத்திற்கு முன்னால் இங்கிலாந்து பௌலர்களிடம் எந்த ஒரு விடையும் இல்லை. முதலில் விஜய் சதமடிக்க, பின்னர் கேப்டன் கோலி இரட்டை சதம் அடிக்க கடைசியில் ஒன்பதாவது பேட்ஸ்மேன் ஜெயந்த் யாதவ் தன் பங்கிற்கு மற்றுமொரு சதமடிக்க 631 ரன்களைக் குவித்தது இந்தியா. வழக்கம் போல எதிரணி பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப் கட்டமைக்காமல் மீண்டும் கோட்டைவிட, டிரா செய்யலாம் என்ற இங்கிலாந்து அணியின் எண்ணத்தை உடைத்து தொடரை வென்றது இந்தியா.

INDvENG 2016-17 | கருண் நாயர்
INDvENG 2016-17 | கருண் நாயர்

நான்காவது டெஸ்டில் இந்தியாவின் மொத்த அணியிடம் வீழ்ந்த இங்கிலாந்து சென்னையில் நடைபெற்ற ஐந்தாவது டெஸ்டில் கருண் நாயர் என்ற ஒற்றை பேட்ஸ்மேனின் முச்சதத்தால் மொத்தமாகச் சரணடைந்தது. இதற்கும் நாயரின் அறிமுக போட்டிதான் அது. கூடவே ராகுலும் 199 ரன்கள் குவிக்க மொத்தம் 759 குவித்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது அதிகபட்ச ரன்களைக் குவித்து சாதனை படைத்தது இந்திய அணி. 282 ரன்கள் பின்னிலையில் கடைசி நாள் மட்டுமே மீதமிருக்க, சரி ஆறுதலுக்காகவாவது டிரா செய்துவிட்டுப் போகட்டும் இங்கிலாந்து என்றே நினைத்திருந்தனர் இந்திய ரசிகர்கள். ஆனால், ஜடேஜாவிடமோ வேறு பிளான் ஒன்றிருந்தது. சரசரவென்று எதிரணியின் 7 விக்கெட்டுகளை அவர் தூக்க இந்திய அணி 4-0 என்ற வித்தியாசத்தில் தொடரை அபாரமாக வென்று இங்கிலாந்திடம் பழைய கணக்கைத் தீர்த்துக்கொண்டது.

ஆனால், இதைப் போலவே மற்றுமொரு கணக்கொன்றை சில பல ஆண்டுகளாகத் தீர்க்காமலேயே வைத்திருந்தது இந்திய அணி. அந்த பழைய கணக்கு தீர்ந்ததா?

- களம் காண்போம்