Published:Updated:

ஒன்றரை டன் வெயிட் ஆஸ்திரேலியா... கங்காரு கோட்டையில் வெற்றிபெறுமா இந்தியா?! #WomensT20 #Worldcup

இந்தியா vs ஆஸ்திரேலியா
இந்தியா vs ஆஸ்திரேலியா ( பெண்கள் டி-20 உலகக் கோப்பை )

பெண்கள் உலகக் கோப்பையின் முதல் போட்டியில் இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் போட்டி தொடங்க இருக்கும் நிலையில் இன்று யார் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது?

ஆல் ஹிட் ஆஸ்திரேலியா

2018 முதல் தற்போது வரை கடந்த இரண்டு வருடத்தில் டி20 ஃபார்மேட்டில் அசைக்க முடியாத அணியாக உருவெடுத்துள்ளது ஆஸி. இந்தக் காலகட்டத்தில் விளையாடிய 31 டி20 போட்டிகளில் 4-ல் மட்டுமே தோல்வியைத் தழுவியுள்ளது. ஒரு நாள் போட்டிகளில் சிறந்த அணியாக அறியப்படும் இந்தியா, டி20 ஃபார்மேட்களில் சீரற்ற பர்ஃபாமன்ஸையே அளித்துள்ளது. கடந்த இரண்டு வருடத்தில் விளையாடிய 45 டி20 போட்டிகளில் 26-ல் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. வெற்றி சதவிகிதம் 50%-க்கும் கீழ்தான் உள்ளது.

ஆஸ்திரேலியா அணி
ஆஸ்திரேலியா அணி
Harry Trump-IDI

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 17 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இவற்றில் 12-ல் ஆஸியும் 5-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக நடந்த 5 டி20 போட்டிகளில் ஆஸி 3 போட்டிகளிலும் இந்தியா 2-லும் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்து முடிந்த முத்தரப்புத் தொடர் இறுதிப்போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை திறமை, அனுபவம், இளமை என எல்லாம் கலந்துகட்டிய காக்டெய்ல் டீமாக இருக்கிறது. தற்போதைய இந்திய அணி வீரர்களின் சராசரி வயதே 22 தான் என்பதால் இந்தியாவைப் பொறுத்தவரை அனுபவ வீரர்களான கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் ஸ்மிருத்தி மந்தனாவும் கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஷெஃபாலி வர்மா, ஸ்மிருத்தி மந்தனா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் இவர்களைத் தாண்டி இந்தியாவின் லோயர் மிடில் ஆர்டர் பெரிய அளவில் பெர்ஃபார்ம் செய்வதில்லை. இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே கடைசியாக நடைபெற்ற போட்டியில்கூட ஓப்பனர் மந்தனா அரைசதம் அடித்தும் லோயர் மிடில் ஆர்டர் சொதப்பியதால் 36 ரன்களுக்குள் கடைசி ஆறு விக்கெட்டுகளை இழந்து... வெற்றிபெற்றிருக்க வேண்டிய போட்டியில் தோல்வியைத் தழுவியது.

பேட்டிங்கும் சுமார்... பெளலிங்கும் சுமார்!

இந்திய அணி
இந்திய அணி

இந்திய அணி சவாலான டார்கெட்டை செட் செய்யவோ வெற்றிகரமான சேஸிங் செய்யவோ டாப் ஆர்டர் சிறப்பாக செயல்பட்டு ஹர்மன்ப்ரீத் கவுர் கடைசி ஓவர் வரை களத்தில் நிற்க வேண்டியது கட்டாயம். பௌலிங்கைப் பொறுத்தவரை தீப்தி ஷர்மா, ராதா யாதவ், ராஜேஷ்வரி கெய்க்வாட், அருந்ததி ரெட்டி, ஷிகா பாண்டே இந்த காம்பினேஷனோடுதான் இந்திய அணி களமிறங்க வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் கடைசி 3 ஓவர்களில் மட்டும் 43 ரன்களை இந்திய அணி வாரி வழங்கியுள்ளது. கடைசி ஓவரில் பந்து வீசிய ராஜேஷ்வரி கெய்க்வாட் மட்டும் 19 ரன்களை வழங்கினார். ஸ்பின்னரோடு தொடங்கி கடைசி ஓவரையும் ஸ்பின்னரோடு முடிக்காமல் டெத் ஓவர்களில் ஷிகா அல்லது அருந்ததியை பயன்படுத்தலாம். இந்தியாவின் பௌலிங் அட்டாக்தான் ஆஸியை தோற்கடிப்பதற்கான துருப்புச்சீட்டாக இருக்கும்.

கேப்டன் மெக் லேனிங்கின் தலைமையில் சொந்த மண்ணில் களமிறங்கும் ஆஸிக்கு உலகக்கோப்பை போட்டிகள் என்றால் அல்வா சாப்பிடுவது போன்றது. பேட்டிங்கில் அலைஸா ஹீலி, மூனி, ஹேனஸ், கார்ட்னர், கேப்டன் லேனிங், எலிஸா பெர்ரி என அனுபவ வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஓப்பனிங்கில் இறங்கும் மூத்த வீரர் அலைஸா ஹீலி மட்டும் கடைசியாக விளையாடிய சில போட்டிகளில் சிங்கிள் டிஜிட்டைத் தாண்டவில்லை. க்ரீஸைவிட்டு நகராமல் நின்ற இடத்தில் இருந்துகொண்டே பந்தை மைதானத்துக்கு வெளியே சிக்ஸராக அனுப்பும் பவர்ஹிட்டரான ஹீலியும் ஃபார்முக்கு திரும்பினால் ஆஸியின் பேட்டிங் கூடுதல் பலம் பெற்றுவிடும். மகளிர் டி20 போட்டிகளில் ஹீலி அடித்த 148* தான் தனிநபர் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன். ஆஸியைப் பொறுத்தவரையில் பௌலிங் மட்டுமே அவர்களுக்கு ஒரு பிரச்னையாக இருக்கக்கூடும். வேகப்பந்துவீச்சாளரான வலாமிக் கடைசிக்கட்டத்தில் காயம் காரணமாக உலகக்கோப்பையிலிருந்து வெளியேறியிருப்பது பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

உலகக் கோப்பை வேட்டைக்குத் தயாராகும் சிங்கப் பெண்கள்... வெற்றிபெறுமா இந்தியா?! #WomensT20

பேட்டிங், பௌலிங் இவற்றையெல்லாம் தாண்டி இரண்டு அணிகளுக்கும் பெரிய வித்தியாசம் ஃபீல்டிங். வாய்ப்பே இல்லாதவற்றைக் கூடத் தங்களின் அசாத்திய திறமையால் ஆஸியினர் கேட்சாக மாற்றிவிடுகின்றனர். இந்திய வீரர்களோ பிடிக்க வேண்டிய கேட்ச்சுகளைக்கூட காற்றில் விட்டுவிடுகின்றனர். இந்திய அணியின் இன்றைய வெற்றி தோல்வியில் ஃபீல்டிங்கும் முக்கியப் பங்காக இருக்கும்.

மொத்தத்தில், 'சொந்த ஊர்க்காரன் வே' என துரைசிங்கம் ஸ்டைலில் ஒன்றரை டன் வெயிட்டோடு களமிறங்கும் ஆஸியை அவர்களின் கோட்டையில் வைத்தே இந்தியா சாய்க்குமா... பொறுத்திருந்து பார்ப்போம்!

அடுத்த கட்டுரைக்கு