Published:Updated:

இந்தியாவின் பேட்டிங், ஃபீல்டிங், பெளலிங்.... எப்படி சொதப்பவைத்தது ஆஸ்திரேலியா?! #T20Worldcup

India vs Australia Women's T20
India vs Australia Women's T20 ( twitter.com/ICC )

2016-க்குப் பிறகு இந்தியாவின் எந்த கிரிக்கெட் அணியும் ஐசிசியின் கோப்பையை வெல்லவில்லை என்ற சோகத்துடன் இந்தப் பெண்கள் டி20 உலகக்கோப்பையும் முடிவுக்கு வந்துள்ளது.

``ஆஸ்திரேலியாவின் நாக்-அவுட் அனுபவத்துக்கு முன் நாங்கள் ஒரு குழந்தை. ப்ரஷரைக் கையாள்வதில் அவர்கள் வல்லவர்கள்!"
ஆஸியாவுடனான அரையிறுதிக்கு முன்பாக தென்னாப்பிரிக்காவின் கேப்டன் நீகெர்க் சொன்ன வார்த்தைகள் இவை.

இது எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் என்பதை இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் உணர்த்தியிருக்கிறது ஆஸ்திரேலியா.

பலத்த எதிர்பார்ப்புக்கிடையே பெருந்திரளான ரசிகர்களுக்கு மத்தியில் ஆஸியின் மெல்பர்னில் நடைபெற்ற பெண்கள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் 85 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியைத் தோற்கடித்து 5 வது முறையாகக் கோப்பையை வென்றுள்ளது ஆஸ்திரேலியா. டாஸ் வென்று முதலில் பேட் செய்தது ஆஸ்திரேலியா.

India vs Australia T20
India vs Australia T20
twitter.com/ICC

டாஸில் வென்று இந்தியாவை சேஸிங் செய்ய வைத்ததிலேயே ஆஸி பாதி வெற்றியைப் பெற்றுவிட்டது. இந்தியா இந்த உலகக்கோப்பையில் இதுவரை விளையாடியுள்ள நான்கு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே சேஸ் செய்திருக்கிறது. இந்தத் தொடரில் இந்தியாவின் சராசரி ஸ்கோரே 130 தான் என்பதால் டாஸிலேயே ஆஸியின் கை ஓங்கிவிட்டது.

"ஃபைனலுக்குச் செல்வதுதான் இலக்கு" என கேப்டன் ஹர்மன்ப்ரீத் உலகக்கோப்பைக்கு முன்பாகக் கூறியிருந்தாலும் பெரியளவில் நம்பிக்கை இல்லாமலே இந்தத் தொடரைத் தொடங்கியது இந்திய அணி. முதல் போட்டியில் ஆஸிக்கு எதிராக பௌலிங் மேஜிக்கால் ஜெயித்த பிறகுதான் கேப்டன் ஹர்மனின் ரியாக்ஷனே கொஞ்சம் பாசிட்டிவாக மாற ஆரம்பித்தது. பௌலிங்கைத் தாண்டி இந்தத் தொடரின் தொடக்கத்திலிருந்தே இந்தியாவின் பேட்டிங்கும் ஃபீல்டிங்கும் மிகவும் மோசம். ஷெஃபாலியை மட்டுமே பேட்டிங்கில் நம்பியிருந்தது இந்திய அணியின் மிகப்பெரிய மைனஸ். பவர்ப்ளேயில் ஷெஃபாலி அதிரடியாக அடித்துக் கொடுக்கும் 40-50 ரன்களை வைத்துக்கொண்டு மீதமிருக்கிற ஓவரில் ஒன்றும் இரண்டுமாக தீப்தியும்-ஜெமிமாவும் ஓடிஓடி எடுத்து 130 ஐ எட்டிவிடுவதுதான் இந்தத் தொடர் முழுவதும் இந்தியாவின் பேட்டிங் ஃபார்முலாவாக இருந்தது.

இந்திய அணி மொத்தமாக விளையாடிய 5 போட்டிகளிலும் சேர்த்து அடித்துள்ள 620+ ரன்களில் அதிகபட்சமாக ஷெஃபாலி மட்டுமே 163 ரன்களை அடித்துள்ளார். ஏறக்குறைய அணியின் மொத்த ஸ்கோரில் 25%. இதே 25% ரன்கள் மந்தனா மற்றும் ஹர்மன்ப்ரீத்-ன் பேட்டில் இருந்தும் வந்திருக்க வேண்டும். ஆனால் இருவரும் 5 போட்டிகளிலும் சேர்த்துக்கூட 50 ரன்களைத் தாண்டவில்லை. கடைசியாக விளையாடிய இலங்கையுடனான லீக் போட்டியில் இருவருமே ஓரளவுக்கு நல்ல டச்சுக்கு வந்திருந்தனர். அதனால் நாக்-அவுட் போட்டிகளில் ஃபார்முக்கு வந்துவிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தத் தொடர் தொடங்கும் முன் ஆஸியின் முக்கிய பேட்ஸ்மேன் ஹீலி கடைசி 5 இன்னிங்ஸ்களில் சிங்கிள் டிஜிட்டைத் தாண்டியிருக்கவில்லை. ஆனால், இந்தத் தொடர் முடியும் போது இந்திய அணியின் வெற்றியைப் பறித்த 75 ரன்களோடு தொடரின் டாப் ரன் ஸ்கோரர்களில் இரண்டாம் இடத்தோடு முடித்துள்ளார். இப்படியொரு வெறித்தனமான ஃபார்ம் கேப்டன் ஹர்மன்ப்ரீத்திடம் வெளிப்பட்டிருக்க வேண்டும்.

India vs Australia T20
India vs Australia T20
twitter.com/ICC
`கிளாசிக் சச்சின்; சிக்ஸர் இல்லா சேவாக் இன்னிங்ஸ்!’  - விருந்துபடைத்த #RoadSafetyWorldSeries போட்டி

2011-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் கேப்டன் தோனியும் இப்படி லீக் போட்டிகளிலும் நாக்-அவுட்டிலும் சொதப்பிக்கொண்டே இருக்கும் போது யுவராஜ் சிங் "வலைப்பயிற்சியில் பார்க்கும்போது சரியான நேரத்தில் வெடிக்கும் வெடிகுண்டைப் போல இருக்கிறார் தோனி" எனக்கூறியிருப்பார். அதன்பிறகு இறுதிப்போட்டியில் தோனி எப்படி வெடித்தார் என்பது வரலாறு. அதே மாதிரியான ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸைத்தான் இறுதிப்போட்டியில் ஹர்மனிடம் மொத்த தேசமும் எதிர்பார்த்தது. ஆனால், மீண்டும் சொதப்பி விட்டார். பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் இரண்டு ஃபீல்டர்களையுமே லெக் சைடில் வைத்துக்கொண்டு ஜானேசன் வீசிய பந்தை லெக் சைடிலேயே தூக்கி அடித்து அவுட்டானார் ஹர்மன்ப்ரீத். இந்த ரிஸ்க்கை ஹர்மன் எடுக்காமல் இருந்திருந்தால் சொதப்பலான தோல்வி போராட்டகரமான தோல்வியாகக்கூட, ஏன் மிராக்கிளான வெற்றியாகக் கூட மாறியிருக்கலாம்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை முதல் இரண்டு போட்டிகளில் இருந்த அளவுக்கு வீரியம் அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய வீரர்களிடம் இல்லை அல்லது இந்தியப் பந்துவீச்சை மற்ற வீரர்கள் எளிதில் கணித்துவிட்டனர். குறிப்பாக பூனம் யாதவின் ஸ்லோவாகக் காற்றில் தூக்கிப் போடும் ஃப்ளைட்டட் டெலிவரிக்களை எதிர்கொள்வதில் எந்த ஐடியாவும் இல்லாமல் முதல் லீக் போட்டியில் ஆஸியினர் சுருண்டனர். ஆனால், மூன்றாவது லீக் போட்டியில் நியுஸிலாந்து அணி பூனமின் பந்துவீச்சு ஸ்டைலுக்கு ஏற்றவாறு இறங்கி வராமல் பேக்ஃபுட் ஷாட்களையும் பந்தின் வேகத்தைப் பொறுத்து நகர்ந்து வந்து ஆடுவதையும் வழக்கமாக்கிக் கொண்டனர். இதே டெக்னிக்கைதான் இறுதிப்போட்டியில் ஆஸியினரும் பயன்படுத்தினர். நகர்ந்து வந்து விளையாடும் ஷாட்கள் சில நேரங்கள் மிஸ் ஆகி பேடில் பட்டு ஸ்டம்பைத் தாக்கியது. அதைத் தவிர வேறு எந்தவிதமாகவும் பூனமின் பௌலிங் கடைசி 3 போட்டிகளில் கைகொடுக்கவில்லை. இன்றைய போட்டியில் ஹேன்ஸூம் அப்படித்தான் ஆட்டமிழந்தார்.

India vs Australia T20
India vs Australia T20

பூனம் கடைசியாக மூன்று போட்டிகளில் வீழ்த்திய மூன்று விக்கெட்டுகளில் இரண்டு விக்கெட்டுகள் இப்படித்தான் விழுந்தன. பேட்ஸ்மேன்கள் பூனமைக் கணிக்கத் தொடங்கியவுடனே பூனம் தனது வியூகத்தை மாற்றியிருக்க வேண்டும். ஆனால், கடைசி வரை மாற்றவில்லை. அதேபோல் இந்தியத் துணைகண்டத்திற்கு வெளியே விளையாடும் போட்டிகளில் குறைந்தபட்சம் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களோடாவது களமிறங்கியிருக்க வேண்டும். ஆனால், முதல் இரண்டு போட்டிகளைத் தவிர கேப்டன் ஹர்மன்ப்ரீத் எந்தப் போட்டியிலும் இரண்டு பேஸர்களோடு களமிறங்கவில்லை. ஸ்பின்தான் இந்தியாவின் பலம் என்றாலும் நன்றாக செட்டில் ஆவதற்கும் செட்டில் ஆகிவிட்டால் அதிரடி காட்டவும் தொடர் ஸ்பின் பௌலிங்கே காரணமாகிவிட்டது. அருந்ததி ரெட்டி மற்ற பௌலர்களை விட ரன் அதிகம் கொடுத்தாலும் ஒரு வேரியேஷனுக்காக அவரையும் அணியில் சேர்த்துவிட்டு ராஜேஷ்வரி- ராதா என இரண்டு இடக்கை ஸ்பின்னர்களை மாற்றி மாற்றிப் பயன்படுத்தியிருந்தால் எதிரணிக்குக் கொஞ்சம் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கலாம்.

இந்த வேரியேஷன் விஷயத்தில்தான் ஆஸி கேப்டன் லேனிங் கொஞ்சம் எக்ஸ்ட்ரா லைக்குகளைக் குவிக்கிறார். உலகக்கோப்பைக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு நட்சத்திர பௌலர் வேல்மிங் காயம் காரணமாக வெளியேறியபோது ஸ்டார்னோக்கு வாய்ப்பு கொடுத்தார். அவர் சொதப்பும் போது மொலினெக்ஸ், கிம்மின்ஸ் என அடுத்தடுத்து வாய்ப்புகளைக் கொடுத்தார். இத்தனைக்கும் லேடி சூப்பர் ஸ்டார் எலிஸா பெர்ரி நாக்-அவுட் போட்டிகளில் காயம் காரணமாக விளையாடவில்லை என்பதையும் சமாளித்து ஆஸியை மீண்டும் கோப்பையை ஏந்த வைத்திருக்கிறார் லேனிங்.

`கேட்ச்சஸ் வின் மேட்ச்சஸ்' என்ற கிரிக்கெட்டின் ஆதிகாலத்துப் பழமொழிதான் இன்றைக்கு இந்தியாவின் தோல்விக்கும் ஆஸியின் வெற்றிக்கும் இடையேயான வித்தியாசமாக இருந்தது. ஆஸியின் இரண்டு ஓப்பனர்களான மூனியும் ஹீலியும் மட்டுமே 153 ரன்களை எடுத்தனர். ஓப்பனிங் இறங்கிய மூனி-ஹீலி இருவருமே இந்தியாவின் கையிலிருந்து மேட்ச்சைப் பறித்துவிட்டார்கள் என்று கூறுவதை விட கேட்ச் ட்ராப், ஃபீல்டிங் சொதப்பல்கள் மூலம் இந்தியாவே ஆஸியின் கையில் மேட்ச்சைக் கொடுத்துவிட்டது. இந்த இருவருக்கும் பவர்ப்ளேயில் மட்டும் 3 கேட்ச் ட்ராப்கள். இந்த 3 வாய்ப்புகளையும் கேட்ச் ஆக மாற்றியிருந்தால் இந்தியாவைப் போன்றே ஆஸியின் பேட்டிங்கும் நிச்சயம் சொதப்பிருக்கும் ஸ்கோர் 130-ஐ தாண்டியிருக்காது. பவுண்டரிக்களை இவர்கள் எவ்வளவு ஈஸியாக அடித்தார்களோ தவறான ஃபீல்டிங் செட் அப்பினால் அதே அளவுக்கு ஒன்று இரண்டு ரன்களையும் எளிதாக ஓடி எடுத்தனர். தோல்விக்குப் பிறகு பேசிய கேப்டன் ஹர்மன்ப்ரீத்தும் பேட்டிங் ஃபீல்டிங் சொதப்பல்களை ஒப்புக்கொண்டார்.

India vs Australia T20
India vs Australia T20
twitter.com/ICC

இந்திய வீரர்கலின் இந்த சொதப்பலுக்கு ஃபைனல் மேட்ச் ப்ரஷரையும் ஒரு காரணமாகக் கூறலாம். இந்த உலகக்கோப்பையின் முதல் நான்கு போட்டிகளிலுமே தீப்திதான் இந்திய பௌலிங்கைத் தொடங்கியிருப்பார். இந்த நான்கு போட்டிகளின் முதல் ஓவர்களைச் சேர்த்தே 3 பவுண்டரிக்களைத்தான் வழங்கியுள்ளார். ஆனால், இந்த இறுதிப்போட்டியில் மட்டும் முதல் ஓவரில் நான்கு ஃபுல் டாஸ்களோடு 3 பவுண்டரிகளை வழங்கியிருக்கிறார். காரணம், ஃபைனல் மேட்ச் ப்ரெஷர். கூட்டம் நிரம்பிய மைதானமும் தொலைக்காட்சி ஒளிபரப்புப்பும் நர்வஸ் ஆக்கிவிட்டது. ஐபிஎல் போன்ற அதிகமான போட்டிச்சூழல்களைச் சந்திக்கும் போதுதான் இதுபோன்ற ப்ரஷர்கள் இல்லாமல் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். இந்தியாவில் 2008-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்பட்டன. ஐபிஎல் -ஐ முன் மாதிரியாகக் கொண்டு ஆஸியில் தொடங்கப்பட்ட பிக்பாஷ் லீகில் பெண்கள் பிரிவும் ஆரம்பிக்கப்பட்டு 5 சீஸனாக சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. அதேபோல் இங்கிலாந்தில் பெண்களுக்கான கியா சூப்பர் லீக் நடைபெறுகிறது. இதேபோன்ற கவனம் ஈர்க்கக்கூடிய வுமனஸ் போட்டிகள் இந்தியாவிலும் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இவற்றுக்கெல்லாம் முன்னோடியான ஐபிஎல் தொடங்கப்பட்ட இந்தியாவில் சம்பிரதாயமாக வருடத்திற்கு ஒன்றிரண்டு லீக் போட்டிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. ஆஸிக்கும் இங்கிலாந்துக்கும் முன்பாக இந்தியாவில் வுமன்ஸ் ஐபிஎல் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஏதோ காரணங்களால் இன்னும் விவாதத்தில் மட்டுமே உள்ளது வுமன்ஸ் ஐபிஎல். வுமன்ஸ் கிரிக்கெட்டுக்கு உள்ள சுமாரான வரவேற்பும் ஒரு காரணமாக இருக்கலாம்.

2018 நாக்-அவுட் போட்டிகளில் இந்திய அணி விளையாடிய போது கடைசியாக இந்தியப் பெண்கள் அணியைக் கவனித்திருப்போம். அதன்பிறகான இந்த இரண்டு வருடத்தில் இந்தியப் பெண்கள் அணி என்ன செய்துகொண்டிருந்தது என யாருமே கவனித்திருக்க மாட்டோம். இன்றைய இறுதிப் போட்டியில் தோற்றுவிட்டார்கள். இனிமேல் அடுத்து எப்போதாவது உலகக்கோப்பையில் இந்திய அணி ஃபைனலுக்குச் சென்றால் அந்த ஒரு நாளுக்குப் பேசிவிட்டுக் கடந்துவிடுவோம். "ஒரே வேலை ஒரே ஊதியம்" என்ற விஷயம் உலகம் முழுவதும் பரவலாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலிலும் இந்தியாவில் மதமாகப் போற்றப்படும் முதன்மையான கிரிக்கெட்டைக் கூட பாலின பேதத்தோடுதான் அணுகுகிறது பிசிசிஐ.

India vs Australia T20
India vs Australia T20
twitter.com/ICC
`கோப்பை கனவை தகர்த்த மேகன், அலிஷா ஹீலே!' -மகளிர் உலகக்கோப்பையில் இந்தியா படுதோல்வி #TeamIndia #LiveUpdates

ஆண்கள் கிரிக்கெட்டின் கிரேட் A வீரர்களுக்கு 5 கோடி சம்பளம் வழங்கும் பிசிசிஐ பெண்கள் கிரிக்கெட்டின் கிரேடு A வீரர்களுக்கு 50 லட்சம் மட்டுமே வழங்குகிறது. ஆண் கிரிக்கெட்டர்களுக்கான கவனிப்பில் 10 ல் ஒரு பங்குதான் பெண்களுக்குக் கிடைக்கிறது. தேசியப் பெண்கள் அணியின் நிலையே இதுதான் என்ற பட்சத்தில் உள்ளூர்ப் பெண்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கு .00001 % அளவில்தான் கவனிப்பு இருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டிய விஷயமில்லை. இப்படிச் சமநிலையற்ற பின்னணியில் ஒட்டுமொத்தமாகக் கவனிக்கப்படாத சமூகத்திலிருந்து கண்டம் விட்டுக் கண்டம் சென்று இறுதிப்போட்டியை எட்டியது என்பதே இந்தியப் பெண்கள் அணிக்கு மிகப்பெரிய வரலாற்றுச் சாதனைதான்.

வெல்டன் ஆஸி......வாழ்த்துகள்!

கமான் இந்தியா....நெவர் எவர் கிவ் அப்!

எழுந்து வாங்க... அடுத்த உலகக்கோப்பைக்குத் தயாராவோம்!

அடுத்த கட்டுரைக்கு