Published:Updated:

நையப் புடைக்க நினைத்த ஆஸி... சர்ப்ரைஸ் கொடுத்த இந்தியா... இரண்டாம் நாள் ஆட்டம் எப்படி?! #AUSvIND

#AUSvIND ( Tertius Pickard )

கோலி அணியில் இல்லாத நிலையில் சீனியர் பேட்ஸ்மேன் என்ற பொறுப்பை ஏற்றுகொண்டு பொறுமையாக ஆடி அணியை கரைசேர்க்க வேண்டும் ரோஹித். ஆஸ்திரேலியாவின் டெயில் எண்டர்ஸுக்கு இருக்கும் பொறுப்புகூட, இந்திய ஓப்பனர்களுக்கு இல்லையா?

நையப் புடைக்க நினைத்த ஆஸி... சர்ப்ரைஸ் கொடுத்த இந்தியா... இரண்டாம் நாள் ஆட்டம் எப்படி?! #AUSvIND

கோலி அணியில் இல்லாத நிலையில் சீனியர் பேட்ஸ்மேன் என்ற பொறுப்பை ஏற்றுகொண்டு பொறுமையாக ஆடி அணியை கரைசேர்க்க வேண்டும் ரோஹித். ஆஸ்திரேலியாவின் டெயில் எண்டர்ஸுக்கு இருக்கும் பொறுப்புகூட, இந்திய ஓப்பனர்களுக்கு இல்லையா?

Published:Updated:
#AUSvIND ( Tertius Pickard )
ஒருநாள் பந்து வீசிய அனுபவமே, புதுமுக வீரர்களின் பந்துவீச்சில் மெருகேற்ற, மீதமுள்ள ஐந்து விக்கெட்களை ஒரு செஷனில் சுருட்டியது இந்தியா. எனினும் இந்தத் தொடரின் அதிகபட்ச ஸ்கோரான 369 ரன்களை ஆஸ்திரேலியா பதிவு செய்து, போட்டியில் வலுவான இடத்தில் அமர்ந்துள்ளது. அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்து தரவேண்டிய இந்திய அணியின் ஒப்பனர்கள் இருவருமே நடையைக்கட்ட ஆஸ்திரேலியாவின் நாளாக முடிந்துள்ளது பிரிஸ்பேன் டெஸ்ட்டின் இரண்டாம் நாள்.

நேற்றைப் போலவே பௌலர்களை இன்றும் நையப் புடைக்கலாம் எனும் எண்ணத்துடன் உள்ளே வந்தது கிரீன் - பெய்ன் கூட்டணி! முதல் 12 ஓவர்கள், அவர்கள் எண்ணப்படியே எல்லாம் நகர, அணியின் ஸ்கோர் 300ஐயும், பெய்ன் அரைச்சதத்தையும் எட்ட, இன்னும் ஒருநாள் கூட நிற்கலாம் என்பதைப் போலவே இருவரது ஆட்டமும் இருந்தது. 400 ரன்களுக்குக்கு மேல் எடுத்துவிடுமோ என்று பயந்த ரசிகர்கள் கண்ணில், இன்னிங்ஸ் தோல்வி எல்லாம் நிழலாடத் தொடங்கியது!

எனினும், 100-வது ஓவர், ஆஸ்திரேலியாவின் ஓட்டத்துக்கு முட்டுக்கட்டை போடுவதாக இருந்தது! அந்த ஓவரை வீசிய தாக்கூர், பெய்னின் விக்கெட்டை வீழ்த்தி, 100 ரன்களை நெருங்கிக் கொண்டிருந்த இந்த பார்ட்னர்ஷிப்புக்கு மூடுவிழா நடத்தினார். அதற்தடுத்த ஓவரிலேயே கிரீனை வாஷிங்டன் சுந்தர் போல்டாக்கி வெளியேற்றி வெறித்தனம் காட்ட, இன்னுமொரு ஓவர், இன்னுமொரு விக்கெட் என அடுத்த ஓவரிலேயே தாக்கூர் கம்மின்ஸை ஆட்டமிழக்கச் செய்தார்!

முன்று விக்கெட்டுகளை, மூன்று ஓவர்களில், முட்டித் தூக்கினர் தாக்கூரும் சுந்தரும்! 315 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் போய்விட்டது அடுத்த 2 விக்கெட்டுகளை 10 இல்லை 15 ரன்களுக்கு எடுக்க வேண்டிய வேலைகளை செய்யாமல் கொஞ்சம் தடுமாற ஆரம்பித்தது. நடராஜனை, தாக்குதலுக்குக் திரும்பக் கொண்டு வந்து, யார்க்கர்களால் டெயில் எண்டர்களுக்கு எண்ட் கார்டு போடாமல், மற்ற பௌலர்களை வைத்தே முயற்சித்துக் கொண்டிருந்தார் ரஹானே! விளைவு லயான், ஸ்டார்க் இருவரும் இணைந்து ஒரு கேமியோ பார்ட்னர்ஷிப் போட ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 350 ரன்களைத் தாண்டியது. ஒருவழியாக, சுழல் சக்கரவர்த்தி லயானை, தன் சுழலினால் ஸ்டம்பைச் சிதறச் செய்து, சுந்தர் வெளியேற்ற ஒன்பதாவது விக்கெட் வீழ்ந்தது! இதன்பின்னர் வந்த ஹேசில்வுட்டுக்கும் ஸ்டார்க்குக்கும் இடையே புதிதாய் ஒரு பார்ட்னர்ஷிப் துளிர்விடத் தொடங்கியது. நல்ல வேளையாக இம்முறை, சுதாரித்துக் கொண்ட ரஹானே, நடராஜனை நம்ப, `நம்பினார் கெடுவதில்லை' என அவர், ஹேசில்வுட்டை போல்டாக்கி அனுப்பி வைத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
#AUSvIND
#AUSvIND
Tertius Pickard

முதல் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்த ஒருநாள் முழுவதும் எடுத்துக் கொண்ட இந்திய பௌவுலர்கள் மீதமுள்ள ஐந்து விக்கெட்களை ஒரே செஷனில், 16 ஓவர்களுக்குள் வீழ்த்தினார்கள். அறிமுக வீரர்களான நடராஜன், சுந்தர் மற்றும் தன்னுடைய இரண்டாவது போட்டியில் விளையாடும் தாக்கூர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியது சிறப்புமிக்கது. 2002-வது ஆண்டிற்குப் பிறகு, பிரிஸ்பேனில், வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு சுழற்பந்து வீச்சாளரது சிறந்த பெளலிங் சுந்தருடையதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 369 என்பதுதான் இந்தத் தொடரில் ஒரு அணி எடுத்துள்ள அதிகபட்ச ஸ்கோர் என்பது கிலியைத் தந்தாலும், அனுபவமில்லா பெளலர்கள், அணியை இந்த அளவிற்கு மீட்டெடுத்தது பெரிய விஷயமாகவே பார்க்கப்பட்டது.

உணவு இடைவேளைக்குப்பின், இந்தியா தன்னுடைய முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது! கடந்த போட்டியைப் போல கில் - ரோஹித் கூட்டணி, சிறப்பான தொடக்கத்தைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையின் ஆயுட்காலம் காற்றுக் குமிழியானது! கில், கம்மின்ஸ் பந்தில், அவசரப்பட்டு, தேவை இல்லாத ஷாட் ஆடி, வெறும் 7 ரன்களுடன் வெளியேறினார். மூன்றாவது பேட்ஸ்மேனாக புஜாரா உள்ளே வந்தார். வந்தவர், ஸ்மித் கைவிட்ட கேட்சால், மறுவாய்ப்புக் கிடைத்து மைதானத்தில் தொடர்ந்தார்! இந்தத் தொடர் முழுவதும் புஜாரா, கம்மின்ஸ் பந்தில் திணறிக்கொண்டிருக்கிறார். 5-வது முறையாக அவர் பந்திலே ஆட்டமிழக்க இருந்தவர் தப்பிபிழைத்தார் என்றே கூறலாம்.

லிமிடெட் ஓவரில் தன்னை வீழ்த்த இயலாதவராய் நிரூபித்திருக்கும் ரோஹித்திற்கு, டெஸ்ட் அரங்கில் தன்னை நிருபிக்க இன்னுமொரு வாய்ப்பு கிடைத்தது. சிறப்பாகத் தொடங்கிய அவர், அதனைத் தொடரவில்லை. இதுவரை அவரை டெஸ்டில் ஐந்து முறை வீழ்த்தியிருக்கும், லயானைக் கொண்டு வந்தார் பெய்ன்! அதன் பலனை அவரது மூன்றாவது ஓவரிலேயே லயான் ரோஹித்தின் விக்கெட்டை வீழ்த்திக் காட்டினார்! டெஸ்ட் அரங்கில் தன்னுடைய நூறாவது போட்டி என்னும் மைல்கல்லை இன்று தொட்டிருக்கிறார் லயான். ஸ்பின்னரை டார்கெட் செய்யலாம் என நினைத்த ரோஹித், அவரது மூன்றாவது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார். அதன்பிறகு அடுத்த இரண்டு பந்துகளிலேயே, மறுபடியும் ஒரு பெரிய ஷாட்டை ஆட முயற்சித்த ரோஹித், ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, இரண்டு ஓப்பனர்களையும், 60 ரன்களை எட்டும் போதே இழந்தது.

டெஸ்ட் போட்டிகளில், குறிப்பாக ஓவர்சீஸ் டெஸ்ட் போட்டிகளில், ரோஹித் ஒவ்வொரு முறையும், தனக்கான அக்னிப் பரிட்சையில் தவறாது தவறிழைத்து வருகிறார்! கடந்த போட்டியில் புல் ஷாட் ஆசைகாட்டி அவரைப் பொறி வைத்துப் பிடித்த ஆஸ்திரேலியா, இம்முறை பெரிய ஷாட் ஆடும் ஆசை காட்டி, அவரை வீழ்த்தியது!

கோலி அணியில் இல்லாத நிலையில் சீனியர் பேட்ஸ்மேன் என்ற பொறுப்பை ஏற்றுகொண்டு பொறுமையாக ஆடி சதமடித்து அணியை கரைசேர்க்க வேண்டும் ரோஹித். ஆனால் அவரோ ஒயிட் பால் கிரிக்கெட் போலவே டெஸ்ட் கிரிக்கெட்டையும் அணுகிக் கொண்டிருக்கிறார். ஆஸ்திரேலியாவின் டெயில் எண்டர்ஸுக்கு இருக்கும் பொறுப்புகூட, இந்திய ஓப்பனர்களுக்கு இல்லையா என்ற ரசிகர்களின் கோபத்தில் நியாயம் இல்லாமல் இல்லை! வலிமையான அடித்தளத்தை அவர்கள் அமைத்துக் கொடுக்கும் பட்சத்தில், அடுத்தடுத்த பேட்ஸ்மேன்கள் மேலுள்ள அழுத்தம் குறைந்து, அவர்களது இயல்பான ஆட்டம் வெளிப்பட்டு, அணியை பெரிய ஸ்கோரை நோக்கி நகர்த்த முடியும். ஆனால் அதை இந்தப் போட்டியில் செய்யத் தவறினர் இந்திய ஓப்பனர்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#AUSvIND
#AUSvIND
Tertius Pickard

அதற்கடுத்து இணைந்த புஜாரா, ரஹானே வழக்கம் போல தடுப்பாட்டத்தைக் கையிலெடுக்க, தேநீர் இடைவேளையும் அதன்பின் மழையும் ஒன்றன் பின் ஒன்றாக வந்தது! தொடர்ந்து பெய்த மழையால், நாளை அரை மணி நேரம் முன்னதாக ஆட்டம் தொடங்கும் என்ற அறிவிப்புடன் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்ப்பட்டது. 62 ரன்கள் என்ற நிலையில் இந்தியா இருக்க, ரஹானே மற்றும் புஜாரா களத்தில் இருக்கின்றனர்.

எட்டு விக்கெட்டுகள் கையில் உள்ளதெனினும் இந்தியா எட்ட வேண்டிய தொலைவு வெகுநேரம் இருப்பதால், மாலுமிகளாய், இந்தியக் கப்பலைக் கரைசேர்க்க வேண்டிய முழுப் பொறுப்பு இந்த இருவர்மீதும் தற்போது விழுந்துள்ளது! எஞ்சி உள்ள வீரர்கள் முழு நம்பிக்கையளிப்பார்கள் என்று சொல்ல முடியாத காரணத்தால், இந்தக் கூட்டணிதான் ஒட்டுமொத்த இந்திய பேட்டிங் பலத்தையும் நிரூபிக்கப் போகிறது! இந்திய பேட்டிங் லைன் அப், சீட்டுக்கட்டாய்ச் சரிந்து விழுமா, இல்லை சாதிக்குமா, மழை நாளையும் தன் பங்குக்கு விளையாடுமா என்ற கேள்விகளுக்கான விடை நாளை கிடைத்து விடும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism