Published:Updated:

IND v AUS: `அடிப்பேங்கய்யா!' சண்டை செய்யும் இந்தியா; அனல் பறக்கும் ஆட்டமாக மாறிய அஹமதாபாத் டெஸ்ட்!

Gill, Kohli ( BCCI )

இந்த ஆட்டத்தை டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான அரையிறுதி ஆட்டமாக நினைத்து இந்தியா ஆடி வருகிறது. குறிப்பாக, டாப் ஆர்டர் பேட்டிங் வரிசையே முதன்முறையாக நம்பிக்கையை விதைத்திருப்பது ஆரோக்கியமான விஷயம்!

Published:Updated:

IND v AUS: `அடிப்பேங்கய்யா!' சண்டை செய்யும் இந்தியா; அனல் பறக்கும் ஆட்டமாக மாறிய அஹமதாபாத் டெஸ்ட்!

இந்த ஆட்டத்தை டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான அரையிறுதி ஆட்டமாக நினைத்து இந்தியா ஆடி வருகிறது. குறிப்பாக, டாப் ஆர்டர் பேட்டிங் வரிசையே முதன்முறையாக நம்பிக்கையை விதைத்திருப்பது ஆரோக்கியமான விஷயம்!

Gill, Kohli ( BCCI )
பார்டர் - கவாஸ்கர் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. பொதுவாகவே 5 நாள்கள் முழுமையாக டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவதில்லை என்று சொல்லப்பட்டு வந்த குறை இந்தத் தொடரின் மூலம் மேலும் வலுவாகிக் கொண்டிருந்தது. தற்போது அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் இந்திய அணி அபாரமாக ஆடிக் கொண்டிருக்கின்றது.

அதிலும், இந்த ஆட்டத்தை டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான அரையிறுதி ஆட்டமாக நினைத்து இந்தியா ஆடி வருகிறது. இந்திய அணி இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நுழைய முடியும்.

புஜாரா - கில்
புஜாரா - கில்
BCCI

கடந்த போட்டியில் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியின் கம் பேக் வெற்றிக்குப் பிறகு ஆஸ்திரேலியா இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸிலும் அதிரடியாகத் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்ஸில் கவாஜா - க்ரீன் ஆகியோரின் சதங்கள் வழியாக வலுவாக 480 ரன்களை எடுத்திருந்தனர். கவாஜா 180 ரன்களும் க்ரீன் 114 ரன்களும் எடுத்திருந்தனர். இந்திய அணியின் பௌலர்களைப் பொறுத்தவரை முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய அஷ்வின் மொத்தமாக ஆறு விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அவரின் சிறப்பான பந்துவீச்சால் மட்டுமே இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் பேட்டிங் ஆட முடிந்தது.

அடுத்துக் களமிறங்கிய இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்து ரோஹித் ஷர்மா - கில் இணை நம்பிக்கையை அளித்தனர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா 444 ரன்கள் பின்னிலை வகித்தது.

Gill
Gill
BCCI

ரோஹித் 17 ரன்களுடனும் கில் 18 ரன்களுடனும் மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ஆஸ்திரேலியாவிற்கு முதல் இன்னிங்ஸில் கிடைத்ததை போல் இந்திய அணிக்கும் நல்ல தொடக்கம் கிடைத்தால் மட்டுமே முன்னிலை பெற முடியும். இதை மனதில் வைத்தே இந்தியத் தொடக்க இணை ஆடியது. குனமான் வீசிய பந்தை ரோஹித் ஸ்ட்ரைட்டாக அடிக்க லபுஷேன் லட்டாக கேட்ச்சைப் பிடித்தார். 35 ரன்களுடன் நன்றாக செட்டிலாகியிருந்த ரோஹித் வருத்தத்துடன் வெளியேறினார். இருப்பினும் பெரிய ஸ்கோருக்கான நல்ல தொடக்கமாக முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் வகித்தனர்.

அடுத்து புஜாரா களத்தில் இறங்கினார். பேட்டிங் பிட்ச் என்பதால் புஜாரா தனது டிபன்ஸுவ் ஆட்டத்தைத் தொடர்ந்தார். அவருடன் கைகோத்து ரன்ரேட் குறையாமல் அரை சதத்தை அடித்தார் கில்.

உணவு இடைவெளிக்குப் பின் அதே ஆட்டத்தைத் தொடர்ந்தது புஜாரா - கில் இணை. பொறுமையாகவும் ஆடி, அதே சமயம் பவுண்டரிகளையும் விளாசினர். இப்படிப் பொறுப்புடன் விளையாடி 194 பந்துகளில் சதம் அடித்து அதிரடி காட்டினார் கில்.

Gill
Gill
BCCI

அடுத்த ஓவரில் புஜாராவின் விக்கெட் வீழ்ந்தது. இந்த விக்கெட் வீழ்வதற்குக் காரணமாக ஸ்மித்தின் தலைமைப் பண்பை இங்குக் கவனிக்க வேண்டும். இந்திய பேட்ஸ்மேன்கள் நல்ல பேட்டிங் பிட்சில் அதிரடியாக ஆடி வந்தனர். பௌலர்களாலும் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை. ஆனால் ஸ்மித் ஒட்டுமொத்த அணியையும் போராட வைத்தார். அணியின் பீல்டிங்கில் நம்பிக்கை வைத்து ஒவ்வொரு ஓவர்களிலும் விக்கெட் எடுப்பதற்கு ஏற்றாற்போல் பீல்டிங்கில் மாற்றத்தைக் கொண்டு வந்துகொண்டே இருந்தார். இது புஜாரா - கில்லுக்கு ஒரு வகையில் அழுத்தத்தைக் கொடுத்தது. மர்ஃபி பந்தில் இந்த அணுகுமுறை புஜாராவின் விக்கெட்டை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தது. 42 ரன்களில் புஜாரா வெளியேறினார். புஜாரா - கில் இணை இரண்டாவது விக்கெட்டுக்கு 113 ரன்களைச் சேர்த்தது. இந்த விக்கெட் இருளில் கிடந்த ஆஸ்திரேலியாவுக்குச் சிறிது வெளிச்சத்தைக் கொடுத்தது. இரண்டாவது செஷனில் அவர்களும் ஆட்டத்திற்குள் வந்தனர்.

தேநீர் இடைவேளைக்குப் பின் கோலியும் கில்லும் கைகோர்த்தனர். மீண்டும் ஒரு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் வைத்து 200 ரன்களைக் கடந்தது இந்திய அணி. சிறப்பாக விளையாடி வந்த கில் லயன் பந்தில் LBW அவுட் ஆனார். 198 பந்துகளை எதிர்கொண்டு 128 ரன்கள் சேர்த்தார். ஒரே ஆண்டில் மூன்று ஃபார்மேட்டிலும் சதங்களை அடித்து சாதனை படைத்துள்ளார் கில்.
Kohli
Kohli
BCCI

அடுத்து ஜடேஜா களமிறங்கினார். மறுபுறம் நிதானமாக விளையாடிய கோலி, ஓராண்டு கழித்து (16 இன்னிங்ஸ்க்குப் பிறகு) தனது முதல் அரை சதத்தை அடித்தார். மேலும் இந்திய மண்ணில் 50 டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன்களை அடித்த 5வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார் கோலி. குனமான் பந்தில் ஜடேஜா அபாரமான சிக்ஸர் ஒன்றை விளாசினார்.

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய பேட்ஸ்மேன்கள் இவ்வாறாக அபாரமாக ஆடி முடித்திருக்கின்றனர். சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிதான் இலக்கு என்பதாக இவர்களின் ஆட்டம் உத்வேகம் பெற்றுள்ளது. நான்காம் நாளில் இந்தியா முன்னிலை பெறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.