இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் நேற்று டெல்லியில் அருண் ஜெட்லி மைதானத்தில் ஆரம்பமானது. பேட்டிங்கைத் தேர்வு செய்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 78.4 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 72 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். இந்திய அணி சார்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், அஷ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். நேற்றைய நாளின் இறுதியில் பேட்டிங் செய்த இந்தியா 21-0 என்ற ஸ்கோர் கணக்கில் விக்கெட் எதுவும் இழக்காமல் களத்திலிருந்தது.

நிறைய எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இன்றைய நாளின் ஆட்டத்தில் இந்திய அணி தன் பேட்டிங்கைத் தொடர்ந்தது. இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. முதல் நாள் போட்டியில் இந்திய வீரர் முகமது சிராஜ் வீசிய பவுன்சர் பந்துகளை வார்னர் சரியாக எதிர்கொள்ளாததால் பந்து அவரது கையையும் ஹெல்மெட்டையும் தாக்கியது. அவருக்கு மாற்றாக கன்கஷன் சப்ஸ்டிடியூட்டாக மேத்யூ ரென்ஷா களமிறங்கினார்.
இன்றைய இந்திய அணியின் பேட்டிங்கில் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மாவும் கே.எல் ராகுலும் தங்களின் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். நாதன் லயன் வீசிய பந்தில் கே.எல் ராகுல் 17 ரன்களில் 46-1 என்ற ஸ்கோர் கணக்கில் ஆட்டம் இழந்தார். அடுத்ததாகக் களமிறங்கினார் புஜாரா. தனது 100வது டெஸ்ட் மேட்ச்சை ஆடும் புஜாராவின் ஆட்டம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியபோது நாதன் லயன் வீசிய பந்தில் எதிர்பாராத விதமாக 32 ரன்களை எடுத்திருந்த ரோஹித் ஆட்டமிழந்தார். ரோஹித்தைத் தொடர்ந்து புஜாராவும் 7 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். புஜாராவுடன் சேர்த்து நாதன் லயன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

அடுத்ததாக விராட் கோலியும் ஸ்ரேயாஸ் ஐயரும் பேட்டிங் செய்தனர். ஸ்ரேயாஸ் 4 ரன்கள் மட்டுமே எடுத்து 66-4 என்று ஸ்கோர் இருந்தபோது ஆட்டமிழந்து வெளியேறினார். ஸ்ரேயாஸைத் தொடர்ந்து களத்திற்கு வந்த ஜடேஜா, எதிர்வரும் பந்துகளை அடித்து விளாசினார். 26 ரன்களை எடுத்திருந்த ஜடேஜா, மர்ஃபி வீசிய பந்தில் விக்கெட்டை இழந்தார். 125-5 என்ற ஸ்கோர் கணக்கில் இந்திய அணி சற்றே திணறியது. அதைத் தொடர்ந்து நன்றாக ஆடிவந்த கோலி, அரைசதம், சதம் எனச் சாதனைகள் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக 44 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி வெளியேறினார். எல்.பி.டபுள்யூ முறையில் விக்கெட்டைப் பறிகொடுத்த அவர், ரிவ்யூ கேட்க அது அம்பயர் கால் என வந்து கோலியை வெளியேற்றியது.
அவரை தொடர்ந்து ஸ்ரீகர் பரத்தும் ஆறு ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரை ஆட்டமிழக்கச் செய்ததின் மூலம் இன்று மட்டும் நாதன் லயன் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஏமாற்றத்துடனே தொடர்ந்த இன்றைய போட்டியில் அஷ்வினும் அக்சர் பட்டேலும் ஜோடி சேர்ந்தனர். டிபென்ஸ் செய்வது, கிடைத்த வாய்ப்பில் மட்டும் ரன்கள் எடுப்பது என்று ஒரு வலிமையான பார்ட்னர்ஷிப்பை இவர்கள் கட்டமைத்தனர். 139/7 என்று தத்தளித்த இந்திய அணியை மீட்க, 114 ரன்களைக் கூட்டாகக் குவித்திருந்த அஷ்வின் - அக்சர் பட்டேல் கூட்டணி ஆட்டத்தைக் கைவிட்டுப் போகாமல் பார்த்துக்கொண்டது.

இந்த ஜோடியை பேட் கம்மின்ஸ் பிரித்தார். 37 ரன்களை எடுத்திருந்த அஷ்வின், கம்மின்ஸ் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இந்திய அணியில் இதுவரை அதிகபட்சமாக 74 ரன்களை எடுத்திருந்த அக்சர் பட்டேலும் முர்ஃபி வீசிய பந்தில் அவுட்டானார். இறுதியாகக் களமிறங்கிய முகமது ஷமியும் சிராஜும் மொத்தமாகவே 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணியின் ஸ்கோர் 262/10. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 1 ரன் மட்டுமே முன்னிலை பெற்றது.
இந்தியா 400 ரன்களைக் கடக்கும் என்று ஆட்டம் தொடங்கியபோது எதிர்பார்த்த ரசிகர்கள், ஒரு கட்டத்தில் 200 ரன்கள் வந்தால்கூட போதுமானது என்று இருந்தனர். ஆனால், இந்தியாவின் லோயர் ஆர்டர் பேட்டர்கள் மீண்டும் ஒருமுறை அணியை மீட்டு 262 ரன்களுக்கு எடுத்துச் சென்றனர்.
இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸ் விளையாடக் களமிறங்கியது. கவாஜா 6 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்தில் வெளியேறியுள்ளார். அதே ஜடேஜா வீசிய ஒரே ஓவரில் 3 ஃபோர்கள் அடித்து விளாசினார் லபுஷேன். மொத்தமாக 12 ஓவர்களில் 61-1 என்ற ஸ்கோர் கணக்கில் இன்றைய ஆட்டம் முடிவுற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 62 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இந்திய மைதானத்தில் கடைசி இன்னிங்ஸ் விளையாடுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இதனால்தான் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் யார் அதிக ரன்கள் பெறுகிறார்களோ, அவர்களுக்கு வெற்றி சாத்தியம் என்ற நிலையில் இருக்கும். ஆனால், இங்கே இரண்டு அணிகளும் சமமான ஸ்கோரை அடித்திருக்கின்றனர். ஆஸ்திரேலியா தன் 2வது இன்னிங்ஸில் அதிக ஸ்கோரை அடித்து டார்கெட் செட் செய்தால், அது இந்திய அணிக்குக் கடும் சவாலான ஒன்றாக இருக்கும். நாளைய ஆட்டத்தில் என்ன நடக்கும் என்பதைக் காத்திருந்து பார்ப்போம்.