Published:Updated:

IND v AFG: கம் பேக் இந்தியாவா, கம் பேக் டு இந்தியாவா? அரையிறுதிக்குச் செல்ல கோலி என்ன செய்யவேண்டும்?

கோப்பைக் கனவை ஏறக்குறைய ஏறக்கட்டிவிட்ட இந்திய அணி, சரிந்த மாண்பை, சரிக்கட்டிக் கொள்வதற்கான கடைசிக்கட்ட முயற்சியில் ஈடுபடப் போகிறது. அரையிறுதிக்குச் செல்ல வாய்ப்புகள் இருக்கின்றனவா?

பாகிஸ்தானுடனான இந்தியாவின் தோல்வி, இதயங்களை உடைய வைத்ததெனில், நியூசிலாந்துடனான வீழ்ச்சி, இந்தியாவின் அரையிறுதி வாய்ப்புக்கான அஸ்திவாரத்தையே ஆட்டங்காண வைத்துவிட்டது. தனக்கு முன்னிருக்கும் சவால்களை உற்று நோக்குவதைத் தாண்டியும், அடுத்த அணிகளின் வெற்றி தோல்விக்கான கணக்கீடுகள் மேல் கண்வைத்து, வேண்டுதல்களை முன்வைக்கும் நிலையில்தான், இந்தியஅணி தற்போது உள்ளது.

அரையிறுதி வாய்ப்பு, முற்றிலுமாக அற்றுப் போய்விடவில்லை என்றாலும், அது எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறது என்பதே உண்மை. கோலி அண்ட் கோ, வெகுண்டெழுந்து, இமாலய வெற்றிகளை இந்தியாவை பெற்றாலும்கூட, அதற்கடுத்தும் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியைக் கொண்டே, அரையிறுதிக்கான கடவுச்சீட்டு, இந்தியாவின் கைவசம் சேரும். அந்த வகையில், குரூப் 2-ல், இனிவரும் ஒவ்வொரு போட்டியும், இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.

கோலி
கோலி
Martin Rickett

இந்தியா அரையிறுதி இருக்கையில் அமர்வதற்கான வாய்ப்புகள் குறித்த பார்வை இங்கே:

1) அடுத்து வரும் மூன்று போட்டிகளிலும், இந்தியா, வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதுவும், சாதாரணமான வெற்றியாக இல்லாமல், டன் கணக்கான ரன்கள் வித்தியாசத்திலோ, அல்லது 9 அல்லது 10 விக்கெட்டுகள் வித்தியாசத்திலோ பெரிய வெற்றிகள் தேவைப்படுகின்றன.

2) பாகிஸ்தான் ஏற்கெனவே, அரையிறுதி பெர்த்தை இறுதி செய்துவிட்ட நிலையில், மீதமுள்ள ஓரிடத்திற்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆம்! இந்தியாவுடன் மல்லுக்கு நிற்பது, நியூசிலாந்து மட்டுமல்ல, ஆப்கானிஸ்தானும் கூடத்தான். அதுவும், ஸ்காட்லாந்துடனான அந்த மாபெரும் வெற்றி, அவர்களது ரன்ரேட்டை, ராக்கெட் வேகத்தில் எகிற வைத்து, இந்த மோதல்களை மேலும் சுவாரஸ்யமாக்கி உள்ளது.

பாகிஸ்தான் | T20 World Cup
பாகிஸ்தான் | T20 World Cup
Aijaz Rahi

3) நியூசிலாந்தை சமன்பாட்டில் இருந்து நீக்குவதற்கு, அது மீதமுள்ள மூன்று போட்டிகளில், குறைந்தபட்சம் ஒன்றிலாவது தோல்வியைத் தழுவ வேண்டும். எனினும் அது, இணை உலகின் இன்னொரு பக்கத்தில் நடக்கக்கூட சாத்தியக்கூறுகள் இல்லாத விஷயம்தான்.

4) ஆப்கானிஸ்தானின் கணக்கை முடிப்பதும் கடினமே. நான்கு புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான், இனிவரும் இரண்டு போட்டிகளிலுமே தோற்க வேண்டும். ஆனால், இதில் உள்ள சிக்கல், நியூசிலாந்துடன் ஆஃப்கானிஸ்தான் தோற்பது, நியூசிலாந்துக்குச் சாதகமான அம்சமாக முடியும், ஏனெனில், மீதமுள்ள இரண்டு அணிகளுடனான மோதல், நியூசிலாந்துக்குச் சவாலானதல்ல என்பதே நிதர்சனம்.

5) மொத்தத்தில், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்தை வீழ்த்தி, இந்தியாவுடன் தோற்க வேண்டும். அது அவர்களை, 6 புள்ளிகளோடு முடிக்க வைக்கும். மாறுதலாக, இம்மோதலில், நியூசிலாந்து வென்றால், நியூசிலாந்தும், மீதமுள்ள இரண்டு போட்டிகளில், ஏதேனும் ஒன்றிலாவது உதைபட வேண்டும். அப்போது மட்டுமே, நியூசிலாந்து 6 புள்ளிகளோடு வந்து முட்டிக் கொள்ளும்! கவனிக்க! இந்தக் கட்டத்தில், இந்தியாவும், எல்லாப் போட்டிகளிலும் வென்று, அதுவும் ஆறு புள்ளிகளோடு முடிக்கும் பட்சத்தில்தான், ரன் ரேட் மூலம் யார் அரையிறுதிக்கு முன்னேறுகிறார்கள் என்பதனை முடிவு செய்யும்.

6) இது எல்லாமே இந்தியா மீதமுள்ள போட்டிகளில் வெல்லும் பட்சத்தில் மட்டுமே, ஓட்டிப் பார்க்க வேண்டிய காட்சிகள். மேலும் ஒரு தோல்விக்கூட, 2007, 50 ஓவர் உலகக் கோப்பை வலியை, மீண்டும் அனுபவிக்க வைப்பதாக மாற்றிவிடும்.

நமீபியா | T20 World Cup
நமீபியா | T20 World Cup

7) நிச்சயமற்ற டி20 ஃபார்மட்டில் இறுதி நொடிகளில் எதுவும் நடக்கலாம், ஸ்காட்லாந்து, நமீபியா போன்ற அணிகளுக்குக் கூட, இறுதி நிமிடங்களில் கொடுக்கு முளைத்து, குத்திக் கிழித்து, அட்டவணையிலேயே நம்ப முடியா மாற்றங்களை நிகழ்த்திக் காட்டலாம். ஆனால், அந்த எழுச்சி நியூசிலாந்துக்கு எதிராக இருக்க வேண்டுமென்பதே, இந்திய அணியின் வேண்டுதலாக இருக்கும்.

ஆர்சிபி மற்றும் கோலி ரசிகர்களின் கையில் இருப்பதாகக் கேலிச் சித்திரங்கள் வடிக்கப்படும் ப்ளே ஆஃப் கால்குலேட்டரை, இந்திய ரசிகர்கள் அனைவரையும் ஏந்த வைத்து விட்டது, இந்திய அணி. அதுவும், மூளையைக் குழப்பும் அளவிலான, இடியாப்பச் சிக்கல்கள் நிறைந்த இக்கணக்கீடுகள் உண்மையில் நடந்தேற, வாய்ப்புகள் மிகமிகக் குறைவு என்பதே யதார்த்தம்.

IND v NZ | T20 World Cup
IND v NZ | T20 World Cup

இருப்பினும், கண்ணில் தெரியும் ஒரு சின்ன வெளிச்சத்தை நோக்கித்தான், இந்திய அணியின் பயணம் இருக்கிறது. சரி, தொடரின் இறுதிவரை, பூதக்கண்ணாடி அணிந்து பார்க்காமல், தற்போது வாசலில் நிற்கும் சவாலை மட்டும் கருத்தில் கொள்வோம். உண்மையில், இந்த மோதலில், இந்தியா, ஆப்கானிஸ்தானை, மிகச் சுலபமாக வென்றுவிடும் என்று சொல்லி, முற்றுப் புள்ளி வைத்துவிட முடியாது. அதற்கு முக்கியக் காரணம், சுழல்பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான், தன் ஆளுமையைச் செய்வதுதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள், சுழல்பந்துகளை எதிர்கொள்ளத் திணறுவது தெரிந்த கதைதான். அப்படியிருக்க, வழக்கம்போல், டாஸைத் தோற்று, இந்தியா முதலில் பேட்டிங் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், ரஷித் கான், நபி உள்ளிட்டோரின் வலை பின்னல், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு, நெருக்கடி தரும். அதற்கு எந்தளவுக்கு அவர்கள் ஆயத்தமாக இருப்பார்கள் என்பதுதான், கட்டவிழ்க்க வேண்டிய, மர்ம முடிச்சு.

இந்திய அணியைப் பொறுத்தவரை, பிளேயிங் லெவனை மட்டுமல்ல, பேட்டிங் பொஷிஷன்களிலேயே கண்ணாம்பூச்சி முதல் பல்லாங்குழி வரை அத்தனையும் ஆடிப் பார்த்து, அதனால் சூடும் கண்டுவிட்டது. ரோஹித்தை ஓப்பனிங் இறக்காதது, எத்தகைய தவறு என கோலிக்கு, கிரிக்கெட் வல்லுநர்கள் முதல் விமர்சகர்கள் வரை, அனைவரும் பாடம் எடுத்துவிட்டார்கள் என்பதால், அத்தவறை அவர் இம்முறையும் செய்யாமல், இஷான் கிஷனை பின்வரிசையில் இறக்குவார் என நம்பலாம்.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா
T20 Worldcup

மற்றபடி, இந்தியாவின் பிளேயிங் லெவனில் வேறு மாற்றங்கள் இருக்க, வாய்ப்புகள் குறைவே. ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை, கடந்த போட்டியோடு ஓய்வு பெற்ற, அஸ்கார் ஆப்கானுக்கு பதிலாக, வேறொருவர் களமிறக்கப்படலாம். மற்றபடி, பிளேயிங் லெவனில், பெரிதாக மாற்றங்கள் இருக்காது.

மேலும் ஒரு வெற்றி, ஆப்கானிஸ்தானின் அரையிறுதி ஆசைக்கு சற்றே வெள்ளைப்பூச்சு அடிக்கும் என்பதால், தங்களது முழு பலத்தையும் காட்டி, போட்டியை தங்கள் பக்கம் கொண்டுவர அவர்களது மொத்த அணியும் போராடும்.

இந்திய அணிக்கும் இது 'வாழ்வா சாவா' சவால்தான். முதல் போட்டியின் தோல்விக்குப்பின், இந்தியா கம்பேக் கொடுக்கும் என நம்பிக் கொண்டிருந்த ரசிகர்களை, இரண்டாவது போட்டியின் தோல்வி, "கம் பேக் டு இந்தியா", என்று வெறுப்பின் உச்சத்தில் சொல்ல வைத்துவிட்டது. அதற்கு முக்கியக் காரணம் தோல்வி மட்டுமே அல்ல, இந்திய அணி, போராடாமல் பணிந்ததும்தான்.

எனவே, அரையிறுதி வாய்ப்பு கிட்டுகிறதோ இல்லையோ, குறைந்தபட்சம் அதற்காகப் போரிடவாவது செய்தோம் என்று காட்டவும், ஆறுதல் தேடிக் கொள்ளவும், இந்திய அணிக்கு தற்சமயத் தேவை ஒரு ஹாட்ரிக் வெற்றி. அதுவும், ஏற்கெனவே டி20 கேப்டன் பதவியைத் துறக்கும் அறிவிப்பை வெளியிட்டுவிட்ட கோலியின், 50 ஓவர் கேப்டன்ஷிப் பதவியையும் ஆட்டங்காண வைத்திருக்கின்றன இந்தப் படுதோல்விகள். தவிர, உணர்ச்சிப்பூர்வமாகவும், தனது டி20 கேப்டன் பயணத்தை கோலி வெற்றிகரமாகவே முடிக்க விரும்புவார். எனவே, எல்லா வகையிலும், அடுத்த மூன்று போட்டிகளுமே தனிப்பட்ட வகையிலும் அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையே!

விராட் கோலி
விராட் கோலி

குற்றம் கடிதலைவிட, குற்றம் களைவதே, தற்போது அவசரத் தேவையாக இருக்கிறது. இதையுணர்ந்து, தவறுக்காக ஆளுக்கொருவரை அடையாளம் காட்டிக் கொண்டிருக்காமல், தவறுகளைக் கண்டறிந்து, அதைக் களைந்தெறிந்து, இந்தியா அட்டவணையில், 'ஆஃப் தி மார்க்' என தனது புள்ளிக் கணக்கைத் தொடங்க வேண்டும்.

ஏனெனில், கிரிக்கெட்டை சுவாசமாகக் கருதும் இந்திய ரசிகர்களுக்கு, புள்ளிப்பட்டியலில் நமீபியாவுக்கும், ஸ்காட்லாந்துக்கும் நடுவே நசுங்கிப் போயிருக்கும் இந்தியா, மீண்டு மேலெழுவதைப் பார்ப்பதுவே அவசரத் தேவையாக இருக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு