Election bannerElection banner
Published:Updated:

`இப்படிதான் ஆடவேண்டும்!' இங்கிலாந்துக்குப் பாடம் எடுத்த அஷ்வின்... பேக் டு ஃபார்ம் கோலி! #INDvENG

அஷ்வின்
அஷ்வின் ( BCCI )

"மைதானமே பிரதானம்", "எல்லாம் டாஸ் செயல்" என என்னதான் எதிர்க்குரல்கள் எழுந்தாலும், பேட்டுக்கும் பந்துக்குமான இந்தப் பெரும்யுத்தத்தில், 'சகலகள வல்லவர்'களால் மட்டுமே சாதிக்க முடியும். பொறுத்தது போதும் என அடித்து ஆடத் தொடங்கியது கோலி - அஷ்வின் கூட்டணி.

வீழ்ச்சியின் விளிம்பில், தோல்விகளால் துவண்டு, முகவரியையும் முகத்தையும் சேர்த்தே தொலைத்துக் கொண்டிருக்கிறார் என்று வசைபாடப்பட்ட கோலி ஒருபுறம் மீண்டெழுந்து சாதித்திருக்கிறார். மறுபுறம், சுழலின் சூரர் அஷ்வின், சுழல் பந்துகளை எப்படி வீசுவது என சிறப்பு வகுப்பு எடுத்து முடித்தது பத்தாதென, எப்படி அதை எதிர்கொள்வதென்பதற்கும் இன்று செயல்முறை விளக்கம் கொடுத்து, தான் 'டாக்டர் ஆஃப் ஸ்பின்', எனவும் நிரூபணம் செய்திருக்கிறார்.

227 ரன்கள் வித்தியாசத்தில், சென்ற போட்டியில் தோற்ற இந்தியா அதைவிட அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியில் வெல்ல வேண்டும் என உறுதி பூண்டு, இன்றைய நாளின் ஆட்டத்தைத் தொடங்கியது.

54 ரன்களுக்கு ஒரு விக்கெட் என இருந்த நிலையில், இன்றைய நாள் ஆட்டத்தை, ரோஹித் சர்மா, புஜாரா இருவரும் தொடங்கினர்.

IND v ENG 2nd Test
IND v ENG 2nd Test
BCCI

ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரிலேயே, அதிர்ச்சி காத்திருந்தது, மொயின் அலி பந்தில் புஜாரா இறங்கி வந்து டிஃபெண்ட் ஆட முயற்சி செய்ய, பந்து சில்லி பாயிண்டில் நின்று கொண்டிருந்த போப்பிடம் சென்றது. அதைப் பிடித்த போப், உடனடியாக கீப்பர் ஃபோக்ஸிடம் எறிய, புஜாரா ரன் அவுட் ஆனார். முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆகிய கோலி, இந்த முறையாவது அணியைக் காப்பாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்க, அடுத்த அதிர்ச்சி ரோஹித் ரூபத்தில் காத்திருந்தது. ஜேக் லீச் வீசிய பந்தில் அபாரமான முறையில் ஃபோக்ஸ் ஸ்டெம்பிங் செய்ய, இந்தியா, அடுத்தடுத்து தனது விக்கெட்டுகளைப் பறி கொடுத்தது.

போட்டியின் மொத்த லகானையும் இறுகப் பற்றியுள்ள இந்தியாவிடமிருந்து இம்மியளவேனும் திரும்பப் பெற்றுவிட இங்கிலாந்து போராட ஆரம்பித்தது.

ரஹானேவுக்கு பதில் ரிஷப் பன்ட்டை அதிரடியாக ஆட இறக்கியது இந்தியா.

பயமறியாப் பகைவனுக்கும் அச்சத்தின்‌ அடிநாதத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் கோலி - பன்ட் கூட்டணி இணைந்தாலும் ஆடுபுலியாட்டத்தில் வெட்டு வாங்கி வெளியேறும் காய்களாய் விக்கெட்டுகள் மீண்டும் விழத் தொடங்கின.

முட்டி மோதி அணிக்கு முட்டுக் கொடுத்துத் தூக்கி நிறுத்த முனைந்த பன்டை, லீச் தன் பந்து வீச்சால் ஸ்டெம்பிங் ஆக வைத்துச் சுருட்ட, ரஹானே உள்ளே வந்தார்.

IND v ENG 2nd Test
IND v ENG 2nd Test
BCCI

முதல் இன்னிங்ஸில் நடந்ததைப் போல் ரஹானேவால் கூட, இங்கிலாந்தின் தாக்குதலை வெகுநேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மொயின் அலியின் பந்தில் அவரும் சிக்க, அக்ஸர் படேல் உள்ளே வந்தார்.

முதல் ஒரு மணி நேரத்தில் விழுந்த நான்கு விக்கெட்டுகள் சொன்னது, களம் எவ்வளவு உக்கிரமாக உள்ளதென்பதை!

ஓவருக்கு ஓவர் சூடு பறந்தது. இடையில் விடப்பட்ட குளிர்பான இடைவேளையால்கூட‌ அதைத் தணிக்க முடியவில்லை. 300 ரன்கள் முன்னிலை பெற்றது இந்தியா. எனினும் சுழல் என்னும் சூத்திரத்தால், சுற்றி வளைத்து, இங்கிலாந்து விட்ட சவாலை எதிர்கொள்ள முடியவில்லை இந்தியாவால்! அக்ஸரையும் அனுப்பி வைத்தார், மொயின் அலி.

"மைதானமே பிரதானம்", "எல்லாம் டாஸ் செயல்" என என்னதான் எதிர்க்குரல்கள் எழுந்தாலும், பேட்டுக்கும் பந்துக்குமான இந்த பெரும்யுத்தத்தில், 'சகலகள வல்லவர்'களால் மட்டுமே சாதிக்க முடியும். பொறுத்தது போதும் என அடித்து ஆடத் தொடங்கியது கோலி - அஷ்வின் கூட்டணி. ரன்களைத் துரிதமாகச் சேர்க்கத் தொடங்கினர். கோலி தடுப்பாட்டம் ஆட, அஷ்வின் அதிரடியாய் அந்நியன் மோடுக்கு மாறினார். அஷ்வினின் கேட்ச் ஒன்றை ஸ்டோக்ஸ் தவறவிட, அரைச் சதத்தை நோக்கி எட்டி நடை போடத் தொடங்கினர் இருவரும்.

முதல் செஷனின் முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகளை ஆறுதல் பரிசாய்ப் பெற்றாலும், முடிந்த அளவுக்கு இங்கிலாந்துக்குச் சேதாரத்தை ஏற்படுத்தும் பணியை, சிறப்பாகச் செய்துவிட்டது இந்தியா.

IND v ENG 2nd Test
IND v ENG 2nd Test
BCCI

முதல் செஷனில் 102 ரன்களை இந்திய அணி எடுத்திருந்தது, 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் சேர்த்த கோலி அஷ்வின், எந்தப் பிட்சும் சமாளிக்கக் கூடியதே என்பதனை, மீண்டுமொரு முறை நிரூபித்துக் காட்டினர். அரைச்சதத்தை இருவரும் நெருங்கிக் கொண்டிருந்தனர்.

உணவு இடைவேளைக்குப்பின் பந்து தேயத் தேய, கோலி அஷ்வினின் ஆட்டத்தில் மெருகேறிக் கொண்டே போனது. அரைச்சத்தை யார் முதலில் எட்டுவார்கள் என்ற ஆவல் இருந்தாலும் எதிர்பார்ப்பை ஏமாற்றமாக்கி ஆட்டமிழந்து விடுவார்களோ என்ற எண்ணமும் எழாமல் இல்லை. அதைப் பொய்யாக்கும் வண்ணம் கோலியும் அவரைத் தொடர்ந்து அஷ்வினும் ஐம்பதை அடைந்தனர். இங்கிலாந்து பௌலர்கள், எத்தனை பிரம்மப்பிரயத்தனப் பட்டும், வேலைக்கே ஆகவில்லை. ஸ்வீப் ஷாட்களை ரூட்டுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் ஆடத் தெரியும் எனக் காட்டிக் கொண்டிருந்தது இந்தக் கூட்டணி. தனது திறனைப் பற்றிய கிண்டல் கேலிகளுக்கெல்லாம், தன் பாணியில் கோலி பதில் சொல்லிக் கொண்டிருக்க, மறுபுறம் அஷ்வினோ, பந்தால் செய்த மாயம் பத்தாதென பேட்டாலும் செய்து காட்டிக் கொண்டிருந்தார். "இந்தப் பிட்சையா குறை கூறினீர்கள்?!" என்பது போல இருந்தது அவர்களது ஒவ்வொரு ஷாட்டும்.

இந்தியாவின் முன்னிலையை 400ஐ நெருங்க வைத்து இங்கிலாந்தை நெருக்கடியில் தள்ளிய இந்தக் கூட்டணியை, இறுதியாக மொயின் அலி கோலியின் விக்கெட்டை விழச் செய்ததன் மூலமாகப் பிரித்துக் காட்டினார். கிட்டத்தட்ட 30 ஓவர்களாய் தொடர்ந்து வந்த பௌலர்களின் மாரத்தான் ஓட்டத்திற்கு அவர் முடிவுரை வரைந்தார். 62 ரன்களுடன் கோலி வெளியேறினார். எத்தனை சதங்களை கோலி இதற்கு முன்பு விளாசி இருந்தாலும், தன்னை நிரூபித்துக் காட்ட, அக்னிக்குளியல் நடத்தி, ஃபீனிக்ஸ் பறவையாய் அவர் கம்பேக் கொடுத்து, ஃபார்முக்குத் திரும்பி இருக்கும் இந்த அரைச்சதம், அதுவும் இப்படியொரு சவாலான சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

IND v ENG 2nd Test
IND v ENG 2nd Test
BCCI

இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸை முடித்து வைப்பதற்கான அடித்தளத்தை கோலியின் விக்கெட்டோடே அமைக்கத் தொடங்கினர், இங்கிலாந்து பௌலர்கள்‌. அஷ்வின், அசையாது ஆலமரமாய் நிற்க, குல்தீப்பிற்கு பிரியாவிடை அளித்து வெளியேற்றினார் மொயின் அலி. தேநீர் இடைவேளையின் போது இந்தியா, 221/8 என்ற நிலையில் இருந்தது.

போகும் வரை போகட்டும், முடிந்தவரை இங்கிலாந்து பௌலர்களை சோர்வடையச் செய்யலாம் என்ற எண்ணமோ என்னவோ, டிக்ளேர் செய்யவே இல்லை இந்தியா. குல்தீப்பைத் தொடர்ந்து வந்த இஷாந்தும் தாக்குப்பிடிக்காது லீச்சின் பந்தில் வெளியேற, இறுதியாய், சிராஜ் உள்ளை வந்தார்‌.

அப்போது 77 ரன்களுடன் களத்தில் இருந்தார் அஷ்வின். முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய ரோஹித் பாதி, பன்ட் பாதி என்னும் ரீதியில் ஆடிக் கொண்டிருந்த அஷ்வினுக்குச் சதமடிக்கும் யோகம் இல்லை போலும், பன்டுக்கு நடைபெற்றதைப் போல, அவர் சதத்தைத் தொடாமல்தான் ஆட்டம் முடிவுக்கு வரப் போகிறது போலும் என்றே தோன்றியது‌. ஆனாலும் சென்னையின் செல்லப்பிள்ளை, கொஞ்சமும் அசரவில்லை. களத்தைக் குறைகூறி குற்றஞ்சாட்டி வசைபாடிய வாய்களை எல்லாம் அடைத்து விட்டார் அவர்.

"விளையாடக்கூடிய மைதானமே இல்லை இது, இரண்டாவது நாளே அதிகமாக டர்ன் ஆகிறது, இதில் எப்படி ஆடுவது?!", என கேட்கப்பட்ட கேள்விகளுக்கு "இப்படித்தான் ஆட வேண்டும்!" என, தனது ஆட்டத்தின் வாயிலாக பதில் சொன்னார், அஷ்வின்.
IND v ENG 2nd Test
IND v ENG 2nd Test
BCCI

'ரேங்க் டர்னர்' என்று விமர்சிக்கப்பட்டு, இப்படிப்பட்ட பிட்சை தயார் செய்ததற்காக, இந்தியாவுக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் புள்ளிகள் குறைக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்ட அதே பிட்சில், பௌலிங் ஆல்ரவுண்டரான அஷ்வின் மாயாஜாலம் நிகழ்த்திக் கொண்டிருந்தார். ஆஸ்திரேலியத் தொடரில், எட்டிப் பார்த்துச் சென்றிருந்த தனக்குள் இருந்த பேட்ஸ்மேனை மொத்தமாக இன்று வெளிக்கொணர்ந்த அஷ்வின், 99 ரன்களைத் தொட, 'அஷ்வின் அஷ்வின்!' என கூட்டம் கூக்குரலிட்டு உற்சாக ஒலி எழுப்ப, பவுண்டரியுடன் சதத்தைப் பூர்த்தி செய்தார் அஷ்வின். சேப்பாக்கத்தின் நாடித்துடிப்பை அவரை விடவா யாராலும் அறிந்திருக்க முடியும்?! அதனால்தான், உணர்வுப்பூர்வமான இந்த மைதானத்தில், ஐந்து விக்கெட் ஹாலோடு, சதத்தையும் பூர்த்தி செய்து அசத்தி இருக்கிறார் அஷ்வின்.

டெஸ்ட் கிரிக்கெட் ஆட திறமைதான் முக்கியம். அது, எப்படிப்பட்ட களமாக, ஏன் களர்நிலமாகவே இருந்தாலும் திறமையுள்ளவர்களால் சாதிக்க முடியும் என நிரூபித்தார். இறுதியில், ஸ்டோனின் பந்தில் அஷ்வின் ஆட்டமிழக்க, 286 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது இந்தியா. 482 ரன்களை எடுத்தால் வெற்றி என்னும் எட்டக் கடினமான இலக்கையும் இங்கிலாந்துக்கு இட்டது!

482 என்ற இமாலய இலக்கை சேஸ் செய்ய வேண்டும் எனக் களம் இறங்கியது இங்கிலாந்து. இஷாந்தை இரண்டு ஓவர்கள் வீச வைத்துவிட்டு, இரண்டு பக்கமும் ஸ்பின்னர்களைக் கொண்டு வந்தது இந்தியா. மிகவும் பொறுமையாக ஆடக்கூடிய சிபிலியை, 3 ரன்களில் அக்ஸர் படேல் எல்பிடபிள்யூ ஆக்கினார். அதற்கடுத்து வந்த லாரன்ஸ், ரோரி பர்ன்ஸுடன் இணைந்து, ஸ்கோரை உயர்த்த முயல, அஷ்வின் விரித்த பொறியில் பர்ன்ஸ் சிக்கினார். இதைத் தொடர்ந்து, நைட் வாட்ச்மேனாக ஜேக் லீச் அனுப்பப்பட, அவரையும் டக் அவுட் ஆக்கி அனுப்பி வைத்தார் அக்ஸர் பட்டேல்.

IND v ENG 2nd Test
IND v ENG 2nd Test
BCCI

இதைத் தொடர்ந்து உள்ளே வந்த கேப்டன் ஜோ ரூட்டை, வந்த வேகத்தில் அனுப்பிடத் தாயாரானார், முதல் இன்னிங்க்ஸில் ஆட்டமிழக்கச் செய்த அக்ஸர்‌. ஆர்ம் பால் ஒன்றை வீச, பந்து பேட்டைத் தாக்கியது. அவுட் என தெரிந்ததும் அனைவரும் அம்பயரிடம் முறையிட, அவர் அவுட் தர மறுக்க, ரிவ்யூ எடுக்கப்பட்டது. ரிவ்யூவில் பந்து ஸ்டெம்புகளைத் தாக்கினாலும், அம்பயர்ஸ் கால் என்பதன் அடிப்படையில், 'அவுட் இல்லை!' என்று அறிவித்தார்கள். இந்த அறிவிப்பைப் பார்த்த கேப்டன் கோலி, அம்பயர் நிதின் மேனனிடம் சென்று, தனது அதிருப்தியை வெளிப்படுத்த, ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து 53 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என இருந்தது.

ஜோ ரூட் 2 ரன்களுடனும், லாரன்ஸ் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெற்றிக்கு இன்னும் 429 ரன்கள் தேவை.

முதல் டெஸ்டில் அடைந்த படுதோல்விக்குப் பதிலாக அதே போன்றதொரு தோல்வியைப் பரிசளிக்க இந்தியா தாயாராகிக் கொண்டிருக்கிறது.

இந்திய ஸ்பின்னர்கள் தங்கள் சுழல் சாட்டையைச் சுழற்றும் பட்சத்தில், ஆட்டம் நாளையே முடிந்துவிடும், இந்தியா தனது சாட்டையைச் சுழற்றுமா, இங்கிலாந்து போராடுமா என்பது நாளை தெரிந்துவிடும்.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு