Published:Updated:

SA vs IND: ஜனவரியில் காபா, டிசம்பரில் சென்ச்சூரியன்... நொறுங்கும் கோட்டைகள், தொடரும் சாதனைகள்!

India
News
India ( ICC )

தென்னாப்பிரிக்காவின் கோட்டையான சென்ச்சூரியனில் போட்டியை வெல்லும் முதல் ஆசிய அணி இந்தியாவே!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டியை இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்த வெற்றி மூலம் தென்னாப்பிரிக்காவின் கோட்டையான சென்ச்சூரியனில் டெஸ்ட் போட்டியை வென்ற முதல் ஆசிய அணி எனும் பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது.

நான்காம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 94-4 என்ற நிலையில் இருந்தது. கேப்டன் டீன் எல்கர் அரைசதத்தைக் கடந்து க்ரீஸில் நின்றார். கடைசி நாளில் தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 211 ரன்கள் தேவைப்பட்டன. இந்தியாவின் வெற்றிக்கு 6 விக்கெட்டுகள் தேவைப்பட்டன. முழுமையாக 98 ஓவர்களும் எந்தத் தடையுமின்றி ஆடப்படும்பட்சத்தில் இந்திய அணி எளிதில் வென்றுவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதில்தான் ஒரு ட்விஸ்ட். கடைசி நாளில் மழை குறுக்கிட வாய்ப்பிருப்பதாக வானிலை அறிக்கைகள் வெளியாகியிருந்தது.

ஏற்கெனவே இரண்டாம் நாள் மொத்தமாக மழையால் பாதிக்கப்பட்டு தடைப்பட்டிருந்தது. அதேமாதிரியான சூழல் மீண்டும் ஏற்படும்பட்சத்தில் வெல்ல வேண்டிய போட்டியை இந்தியா டிராவில் முடிக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆனால், வானிலை கணிப்புகளில் போட்டி தொடங்கிய 3 மணி நேரத்திற்கு மழை வருவதற்கு வாய்ப்பில்லை. அதன்பிறகே மழைக்கான சூழல் உருவாகும் எனக்கூறப்பட்டிருந்தது. இந்தப் போட்டியை வெல்ல இந்தியாவிற்கு வழங்கப்பட்ட டெட்லைனாகவே இந்த 3 மணி நேரம் பார்க்கப்பட்டது.

டீன் எல்கர்
டீன் எல்கர்
ICC

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இந்த ஆண்டில் பல சவாலான சூழல்களை எதிர்கொண்டு வென்ற இந்திய அணி இந்த 3 மணி நேர சவாலையும் எதிர்கொண்டு போட்டியை வென்று அசத்தியுள்ளது.

கேப்டன் டீன் எல்கரும் பவுமாவும் இன்றைய நாளில் பேட்டிங்கை தொடங்கியிருந்தனர். மழை வரும் வரை தாக்குப்பிடித்துவிட்டால் போதும் என்கிற தற்காப்பு மனநிலையுடனே தென்னாப்பிரிக்கா ஆடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தென்னாப்பிரிக்காவும் ட்விஸ்ட் கொடுத்தது. டீன் எல்கரும் பவுமாவும் ஓவருக்கு 4 ரன்கள் என்ற விகிதத்தில் வேகமாக ஸ்கோரை உயர்த்த ஆரம்பித்திருந்தனர். இந்தியாவும் விடுவதாக இல்லை. தென்னாப்பிரிக்கா வேகமாக ரன்கள் எடுத்தாலும் டிஃபன்ஸிவ்வாக யோசிக்காமல் விக்கெட்டிலேயே குறியாக இருந்தனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களை எல்லா பந்துகளையும் ஆட வைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தனர். ரவுண்ட் தி விக்கெட், ஓவர் தி விக்கெட் என மாறி மாறி வந்து பவுமாவுக்கும் எல்கருக்கும் இன்கம்மிங் டெலிவரிக்களாக வீசிக்கொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் ஷமியின் ஓவரில் அவரிடம் எல்கர் ஒரு கேட்ச்சை கொடுத்தார். கொஞ்சம் எளிதான இந்த கேட்ச்சை ஷமி கோட்டை விடவே இந்தியா மீது கொஞ்சம் அழுத்தம் கூடுவது போல் தோன்றியது. ஆனால், இந்த கேட்ச் ட்ராப்பிற்கு பிறகு பும்ரா வெகு சீக்கிரமாகவே எல்கரின் விக்கெட்டை வீழ்த்திவிட்டார். ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து ஆங்கிள் இன்னாக கூடுதலாக மூவ் ஆகி உள்ளே வந்த ஒரு பந்துக்கு lbw ஆகி 77 ரன்களில் எல்கர் வெளியேறினார். அடுத்ததாக டீகாக் உள்ளே வந்தார். டீகாக்குமே அந்த ஓவருக்கு 4 ரன்கள் என்ற விகிதத்தை பின்பற்றி வேகமாக ரன்கள் சேர்த்தார். ஆனால், இவரும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சிராஜின் பந்தில் இன்சைட் எட்ஜ் ஆகி 21 ரன்களில் வெளியேறினார்.

Bumrah
Bumrah
ICC

இந்தியா வேகமாக வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்தது. 3 விக்கெட்டுகள் மட்டுமே தேவையாக இருந்தன. பவுமா மட்டுமே ஒரே அபாயமாக இருந்தார். இந்த நிலையில் உணவு இடைவேளை விடப்பட்டது. இந்த 40 நிமிடத்தில் மழை புகுந்து ஆடிவிடக்கூடாது என்பது மட்டுமே ரசிகர்களின் வேண்டுதலாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக தொடர்ந்து சூரியன் சுட்டெரித்துக் கொண்டே இருந்தது. போட்டி தொடங்கியது. அடுத்த பத்தே நிமிடத்தில் இந்தியா வென்றுவிட்டது. மார்கோ யான்செனின் விக்கெட்டை ஷமி வீழ்த்த, ரபாடா மற்றும் இங்கிடியின் விக்கெட்டை அஷ்வின் வீழ்த்தினார்.

இரண்டே ஓவர்களில் 3 விக்கெட்டுகள் வீழ்ந்தன. இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தென்னாப்பிரிக்காவின் கோட்டையான சென்ச்சூரியனில் போட்டியை வெல்லும் முதல் ஆசிய அணி இந்தியாதான்.
தென்னாப்பிரிக்காவில் இரண்டு டெஸ்ட் போட்டிகளை வென்ற ஒரே இந்திய கேப்டன் போன்ற சாதனைகளும் இந்த வெற்றியின் மூலம் இந்தியாவை அலங்கரித்தன.

தென்னாப்பிரிக்க அணி பழைய நிலையில் வலுவான அணியாக இல்லாவிட்டாலும் துடிப்பான இளம் திறமைகளைக் கொண்ட நல்ல அணியாகவே இருக்கிறது. குறிப்பாக, அவர்களது வேகப்பந்து வீச்சு நிச்சயமாக இந்திய வீரர்களை திணறடிக்கிறது. பேட்டிங்கில் முதல் இன்னிங்ஸின் பிற்பகுதி மற்றும் இரண்டாம் இன்னிங்ஸ் சொதப்பலுமே இதற்கு சாட்சி. ஆக, இந்த வெற்றி போகிற போக்கில் மிக எளிதாக ஒரு சிறிய அணியை அடித்து கிடைத்த வெற்றி கிடையாது. வெல்வதற்கு அத்தனை தகுதியும் உடைய வலுவான ஒரு அணியே... அதுவும் அவர்களின் கோட்டையான சென்ச்சூரியனில் வைத்து எனும்போது இந்தியாவின் வெற்றியை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.

அஷ்வின்
அஷ்வின்

இந்திய அணியை பொறுத்தவரைக்கும் பேட்டிங்கில் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் எனும் இரண்டு ஓப்பனர்களும் மிகச்சிறப்பான முறையில் முதல் இன்னிங்ஸில் ஆடியிருந்தனர். விராட் கோலி, ரஹானே இருவருமே கணிசமான பங்களிப்பை அளித்திருந்தனர். பேட்டிங்கை விட பௌலிங்கில் இந்திய அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தியிருந்தது. பும்ரா, ஷமி, சிராஜ் என மூவருமே சென்ச்சூரியன் பிட்ச்சின் ஏடாகூட பவுன்ஸையும் ஒழுங்கற்ற தன்மையையும் உற்சாகத்தோடு அனுபவித்து பயன்படுத்திக் கொண்டார்கள். இதை பௌலர்கள் பெற்றுக் கொடுத்த வெற்றி எனச் சொன்னாலும் மிகையாகாது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிட்னியிலும், காபாவிலும் மிரட்டலான பெர்ஃபார்மென்ஸ்கள் மூலம் தடம்பதித்து ஆஸ்திரேலியாவில் தொடரை வென்ற இந்திய அணி, இடையில் இங்கிலாந்தில் வரலாற்று சிறப்புமிக்க லார்ட்ஸில் நடைபெற்ற போட்டியை வென்று அந்தத் தொடரிலும் முன்னிலையில் இருக்கிறது. இப்போது தென்னாப்பிரிக்காவில் அவர்களின் கோட்டையான சென்ச்சூரியனில் முதல் போட்டியையே வென்று இந்த ஆண்டை முடித்திருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை மட்டும் கழித்துவிட்டு பார்த்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த 2021 இந்தியாவுடைய ஆண்டாகவே அமைந்திருக்கிறது.

விராட் கோலி
விராட் கோலி
ஓவியம் : ஹாசிப்கான்
இதே உற்சாகத்தோடு அடுத்தடுத்த போட்டிகளையும் வென்று தென்னாப்பிரிக்காவில் தொடர் வெற்றி எனும் சிறப்பான செய்தியோடு இந்தியா 2022-ஐ தொடங்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்!