Published:Updated:

`இந்திய அணி பாகிஸ்தான் வர வேண்டும்; இல்லையென்றால்...!' மிரட்டும் பாக். கிரிக்கெட் வாரியம்

இந்திய அணி
இந்திய அணி

ஆசியகோப்பை டி-20 போட்டி வங்கதேசத்தில் நடைபெறவுள்ளதாக வெளியான தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே அரசியல் உறவு மோசமானதையடுத்து 2008-ம் ஆண்டில் இருந்தே இருநாடுகளுக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டித்தொடர் நடைபெறுவதில்லை. பாகிஸ்தானில் பிரதமர்கள் மாறினாலும் அரசியல் சூழலில் எந்த முன்னேற்றமும் இல்லை. 2009-ம் ஆண்டு இலங்கை அணி, பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியபோது இலங்கை வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் இலங்கை வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட மற்ற நாடுகள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.பல வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் தான் இலங்கை அணி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதனையடுத்து வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

இலங்கை அணி பாகிஸ்தானில்
இலங்கை அணி பாகிஸ்தானில்

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இந்தாண்டு செப்டம்பரில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. ஆசிய அணிகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் அணிகள் இந்தத் தொடரில் மோதும். இலங்கை அணி ஏற்கெனவே பாகிஸ்தான் சென்று விளையாடிவிட்டது. வங்கதேசமும் ஒருநாள் மற்றும் டி-20 தொடருக்காக பாகிஸ்தான் சென்றிருக்கிறது. எனவே, இந்த அணிகள் மீண்டும் பாகிஸ்தானில் சென்று விளையாட மறுப்பு தெரிவிக்காது. ஆனால், இந்திய அணியின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிகிறது. ஆசிய கோப்பை தொடரை இந்தியா புறக்கணிக்கவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள். இந்தியா பங்கேற்கவில்லை என்றால் இந்தத்தொடரில் பெரிய அளவில் சுவாரஸ்யம் இருக்காது, வணிக ரீதியிலாகவும் சில பின்னடைவுகள் ஏற்படும் என்று கணக்குப் போடுகிறது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

`இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல?!’ - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தைச் சாடும் வார்னே

இந்நிலையில் ஆசியகோப்பை போட்டிக்கு பிசிசிஐ இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பவில்லை என்றால் நாங்களும் அடுத்தாண்டு இந்தியாவில் நடக்கும் டி-20 உலகக்கோப்பை போட்டிக்கு வீரர்களை அனுப்பமாட்டாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை நிர்வாகி வாசிம்கான் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``பாகிஸ்தானில் ஆசியக் கோப்பை போட்டியை நடத்துவது என்பது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் முடிவு. இதனை நாங்கள் மாற்ற முடியாது. எங்களுக்கு அந்த அதிகாரம் இல்லை.

வாசிம் கான்
வாசிம் கான்

ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் வர மறுத்தால் நாங்களும் இந்தியாவில் நடைபெறவுள்ள டி-20 உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க மாட்டோம். எங்கள் வீரர்களை இந்தியாவுக்கு அனுப்ப மாட்டோம்” என மிரட்டல் தொனியில் கூறியுள்ளார். ஆசியகோப்பை டி-20 போட்டி வங்கதேசத்தில் நடைபெறவுள்ளதாக வெளியான தகவலையும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அதேபோல் இந்தியாவுக்கு செக் வைக்கும் விதமாக, 2023-2031 ஆண்டுகளுக்கு இடையில் ஐசிசி நடத்தும் தொடர்களை பாகிஸ்தானில் நடந்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முயன்று வருகிறது. இதற்கான அனுமதியை ஐசிசியிடம் கேட்டு வருகிறது. குறைந்தது மூன்று ஐசிசி தொடர்களையாவது நடத்த வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

பின் செல்ல