Published:Updated:

நியூசிலாந்துக்கு 139 ரன்களே இலக்கு : சொதப்பிய கோலியின் பேட்டிங் யூனிட்... பெளலர்கள் சாதிப்பார்களா?!

ரிஷப் பன்ட் - ஜடேஜா... கோலியின் பேட்டிங் யூனிட்
ரிஷப் பன்ட் - ஜடேஜா... கோலியின் பேட்டிங் யூனிட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் இறுதிநாளான இன்று இரண்டாவது செஷனில் 170 ரன்களில் ஆல் அவுட் ஆனது இந்தியா. 53 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்தால் நியூசிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்லும்... பரபரப்பான கட்டத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்!

கோலி, புஜாரா களமிறங்க டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி நாள் ஆட்டத்தைத் தொடங்கியது இந்தியா. நேற்றைய தினம் 64 ரன்களுக்கு 2 விக்கெட்டைகளை இழந்திருந்த நிலையில் கடைசி நாளான இன்றைய நாளின் ஆட்டம் தொடங்கியதுமே கேப்டன் கோலி தனது விக்கெட்டை இழந்தார். இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே கோலியின் விக்கெட்டை கைல் ஜாமிசனே எடுத்திருக்கிறார்.

பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட புஜாரா, ரஹானே இருவருமே சொதப்ப உணவு இடைவேளையின்போது 5 விக்கெட்களை இழந்து 130 ரன்களுடன் இருந்தது இந்தியா.

க்ரிஸுக்கு வந்த சில ஓவர்களிலேயே ரிஷப் பன்ட்டின் கேட்சை டிம் சவுதி தவறவிட, ரிஷப் பன்ட்தான் இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் அதிகபட்ச ரன்களை எடுத்தார். பன்ட் 41 ரன்களில் அவுட் ஆக, பன்ட்டுக்கு முன்னதாக ஜடேஜா 16 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதன்பிறகு விக்கெட்கள் தொடர்ந்து சரிய ஆரம்பித்தன. இறுதியாக 170 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா. டிம் சவுதி இந்தியாவின் நான்கு விக்கெட்களைக் கைப்பற்றினார்.

டிம் சவுதி
டிம் சவுதி

இன்றைய நாளில் இன்னும் 53 ஓவர்கள் வீசப்பட இருக்கும் நிலையில் நியூசிலாந்து 139 ரன்களை எடுத்தால் வெற்றி என்கிற டார்கெட்டை நோக்கி சேஸிங்கைத் தொடங்கியிருக்கிறது. ஷமி, பும்ரா, இஷாந்த் என மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், அஷ்வின், ஜடேஜா என இரண்டு ஸ்பின்னர்கள் சிறப்பான பெளலிங் அட்டாக்கைக் கொண்டிருக்கும் இந்தியா நியூசிலாந்தை ஆல் அவுட் செய்து கோப்பையை வெல்லுமா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்!

அடுத்த கட்டுரைக்கு