ஒரு செட் பேட்டர் இறுதிவரை நின்று ஆட வேண்டும் என்பதன் தேவையை நேற்று இரு அணிகளின் ஆட்டமும் காட்டின. ஒரு இன்னிங்ஸைக் கட்டமைத்து இறுதிக் கோட்டைத் தாண்டாமல் பாதியிலேயே வீழ்வது ஒருநாள் போட்டிகளில், அதிலும் குறிப்பாக சேஸிங்கில் சிக்கலான விஷயமே!

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற போட்டியில் முதலில் இந்தியா பேட்டிங் செய்தது. தவான் - கில் இணை ஆஸ்திரேலியா தொடருக்குப் பின்னர் சேர்ந்து ஓப்பனிங் இறங்கியது. முதல் ஓவரிலேயே தவான் இரண்டு பவுண்டரிகள் அடித்து அதிரடியாக ஆரம்பித்து வைத்தார். மற்றொரு பக்கம் கில், ஜோசப், சீல்ஸ் ஓவர்களில் பவுண்டரிகள் அடிக்க 12வது ஓவரில் 36 பந்துகளில் தனது முதல் ஒருநாள் அரை சதத்தைப் பதிவு செய்தார். 14 ஓவர்களில் இந்தியா 100 ரன்களை எட்டியது. சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கில், பூரனின் டைரக்ட் ஹிட்டில் ரன் அவுட் ஆனார். அதன்பின் வந்த ஷ்ரேயாஸ் ஐயர் வழக்கம்போல ஸ்பின்னர்களைப் பதம் பார்த்தார்.
பாகிஸ்தானில் 4 விக்கெட் எடுத்த பூரனின் நேற்றைய 2 ஓவர்களில் 23 ரன்கள் விளாசினர் இந்திய பேட்டர்கள். ஐயரும் அரைசதம் கடந்தார். 97 ரன்களில் பூரனின் அபாரமான கேட்சால் ஆட்டமிழந்தார் தவான். சர்வதேச போட்டிகளில் 10வது முறையாக 90+ ரன்களில் ஆட்டமிழக்கிறார். நன்கு செட்டான இரு பேட்ஸ்மேன்களையும் மோட்டியும் பூரனும் ஆட்டமிழக்கச் செய்தனர். ஆம், பூரனின் அசாத்திய கேட்சுகளுக்கு அதில் நிச்சயம் பங்குண்டு. பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்துகொண்டே இருந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு கட்டத்தில் தொடர்ந்து பவுண்டரிகள் அடித்துகொண்டே இருந்த இந்திய அணி, 39 முதல் 47 ஓவர்கள் வரை ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. ஆட்டம் டெஸ்ட் மேட்ச் கணக்காக சற்று வேகம் குறைந்தது. இதனால் 350 ரன்களைக் கடக்கும் என்ற நிலையிலிருந்து 308 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்தியா. வெஸ்ட் இண்டீஸ் பௌலர்கள் கம்பேக் கொடுத்து நன்றாகப் பந்துவீசி ரன்களைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
309 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்தியா போல நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. பிரசித் கிருஷ்ணா தனது முதல் ஓவரை மெய்டனாக வீசினார். 5வது ஓவரில் ஷாய் ஹோப் சிராஜின் ஷார்ட் பிட்ச் பந்தில் வீழ்ந்தார். பின்னர், கைல் மேயர்சுடன் ஷர்மா புரூக்ஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அக்சர் பட்டேலின் முதல் ஓவரிலேயே மேயர்ஸ் ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்தார். இதன்பின் மேயர்ஸ் அவுட் ஆகும்வரை அக்சரை பந்து வீச வைக்கவில்லை தவான். அக்சரின் 10 ஓவர்களில் 5 ஓவர்களை ஹூடாவை வீச வைத்தார்.

மற்றொரு பக்கம் புரூக்ஸ் விக்கெட்டை வீழ்த்தி கணக்கைத் தொடங்கிய "Lord" தாக்கூர், தனது அடுத்த ஓவரிலேயே மேயர்ஸ் விக்கெட்டையும் வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்குக் கடந்த சில தொடர்களில் மிகப்பெரிய பாசிட்டிவாக இருப்பவர்கள் மேயர்ஸ் மற்றும் புரூக்ஸ்! அதனை மீண்டும் ஒரு முறை நிரூபித்தனர். அவர்கள் அடித்த ரன்கள் மேயர்ஸ் 75, புரூக்ஸ் 46.
பின்னர் வந்த பிரண்டன் கிங் மற்றும் பூரன் இன்னொரு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பைக் கட்டமைத்தனர். ஆனால், பூரன் சிராஜ் பந்தில் அவசரப்பட்டு ஆட்டமிழந்தார். பின்னர் ராவ்மன் போவெல் சஹால் பந்தில் தேவையில்லாத ஷாட் ஆடி ஹூடாவிடம் சிம்பிள் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசி பத்து ஓவர்களில் 90 ரன்கள் வேண்டும் என்ற நிலையிலிருந்தது வெஸ்ட் இன்டீஸ். 2018ல் சிறந்த CPL மேட்ஸ்மேனான பிரண்டன் கிங் இதுவரை சர்வதேச அளவில் தடுமாறி வந்தார். அவர் நேற்று நன்றாக ஆடி தனது மூன்றாவது அரைசதத்தைக் கடந்தார். வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டவர், 45வது ஓவரில் அவரும் சஹாலிடம் வீழ்ந்தார்.
கடைசி 5 ஓவர்களில் 54 ரன்கள் தேவை என்ற நிலையில் 50 ரன்களை எடுத்து அதிரடி காட்டியது ஷெப்பர்ட் - ஹோசைன் இணை. இறுதி பந்தில் பவுண்டரி அடித்தால் சூப்பர் ஓவர் என்ற நிலையில் ஒரு ரன் மட்டுமே எடுத்ததால் 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
நேற்றைய ஆட்டத்தில் இரு அணிகளிலும் செட் பேட்ஸ்மேன்கள் இறுதிவரை நிற்கத் தவறிவிட்டனர். அதிலும் கில் ரன் அவுட் ஆன விதம்... நிச்சயம் தவிர்க்கவேண்டியது! தாக்கூர் ஆரம்பத்தில் இரு விக்கெட்டுகள் எடுத்தாலும் 38வது ஓவரில் இரண்டு நோ பால் வீசினார். அதில் பவுண்டரிகள் அடித்திருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறிருக்கலாம். வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இன்னும் அந்த அதிரடி பேட்டிங் குறையவில்லை, ஆனால் நின்று ஆடுவதற்கான பேட்ஸ்மேன்கள் நிச்சயம் குறைவுதான்.

அடுத்தடுத்து மேயர்ஸ், புரூக்ஸ், கிங் ஆகியோரின் நிலையான ஆட்டங்கள் அவற்றைச் சரி செய்யும் என நம்பலாம். அதேபோல ரோவ்மேன் போவெல் சஹாலை பொறுமையாக டீல் செய்திருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி அடைந்திருக்கலாம்.
ஒருநாள் போட்டிகளில் டி20 அதிரடி பார்முலா என்பது பிரஷரை பௌலர்கள் பக்கம் திருப்ப வேண்டுமானால் நிச்சயம் உதவலாம். ஆனால், 50 ஓவர்கள் நின்று இலக்கை விரட்ட, பொறுமையாக இன்னிங்ஸ்களைக் கட்டமைத்து பின்னர் கியரை மாற்றும் பழைய பார்முலாவும் அவசியமானதே!