Published:Updated:

`16 விக்கெட்டுகள்; அரைமணி நேரத் திருப்பம்!' - இரண்டாவது டெஸ்டிலும் நியூசிலாந்து ஆதிக்கம் #NZvIND

நியூசிலாந்து அணி
நியூசிலாந்து அணி ( ICC )

நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்திருக்கிறது.

கிறைஸ்ட் சர்ச்சில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 242 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, முதல்நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்திருந்தது. டாம் லாதம் 23 ரன்களுடனும் ப்ளெண்டெல் 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்திய அணி
இந்திய அணி
ICC

முந்தைய நாள் ஸ்கோருடன் இரண்டாவது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த நியூசிலாந்து அணிக்கு மூன்றாவது ஓவரிலேயே உமேஷ் யாதவ் அதிர்ச்சி கொடுத்தார். அவரது பந்துவீச்சில் டாம் ப்ளெண்டல், 30 ரன்களுடன் வெளியேறினார். அடுத்துவந்த கேப்டன் கேன் வில்லியம்ஸன், பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் செஷனில் மட்டும் நியூசிலாந்து அணி, 5 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து, ஒருகட்டத்தில் 177/8 என்ற நிலையில் இருந்தது. இதனால், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 50 ரன்களுக்கு மேல் முன்னிலை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 9-வது விக்கெட்டுக்குக் கைகோத்த ஜேமிசன் - வேக்னர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்தது. முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்கள் சேர்த்தது. இதனால், இந்திய அணியால் 7 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற முடிந்தது. இந்த இன்னிங்ஸில் கடைசி 3 விக்கெட்டுக்கு நியூசிலாந்து அணி 83 ரன்கள் சேர்த்தது. முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இதே 3 விக்கெட்டுகளுக்கு நியூசிலாந்து அணி எடுத்த 123 ரன்கள் அந்த அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தது. இந்திய அணி தரப்பில் ஷமி 4 விக்கெட்டுகளும், பும்ரா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். சிறப்பாகப் பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா, 2 கேட்சுகளாலும் கவனம் ஈர்த்தார்.

விராட் கோலி
விராட் கோலி
ICC

7 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி இரண்டாவது ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது. 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மயங்க் அகர்வால் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்திலேயே பிரித்வி ஷாவும் வெளியேறினார். அடுத்துவந்த கேப்டன் கோலியும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. 30 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தநிலையில் டிகிராண்ட்ஹோம் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார். இந்த டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேனாக இருந்த கோலி, முதல் டெஸ்ட் சொதப்பலால் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். இந்த நிலையில், இரண்டாவது டெஸ்டிலும் அவர் ஜொலிக்கவில்லை. இரண்டு டெஸ்டின் 4 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து அவர் 38 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார்.

`அந்த 3 விக்கெட்டுகளும் 120 ரன்களும்!' - டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் தோல்வி குறித்து கோலி
பும்ரா
பும்ரா
ICC

இரண்டாவது நாளின் கடைசி செஷனில் நியூசிலாந்து வேகங்கள் மிரட்ட, 18 ரன்களுக்கு இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. ஒருகட்டத்தில் 72/3 என இருந்த இந்திய அணியின் ஸ்கோர் இன்றைய ஆட்டநேர முடிவில் 90/6 என்றாக இருந்தது. கடைசி அரை மணிநேரத்தில் இந்திய அணி ரஹானே, புஜாரா மற்றும் `நைட் வாட்ச்மேன்' உமேஷ் யாதவ் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தது. ரஹானே, 9 ரன்களுடனும் புஜாரா, 24 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். விஹாரி 5 ரன்களுடனும் ரிஷப் பன்ட் ஒரு ரன்னுடனும் களத்தில் இருக்கின்றனர். இந்திய அணி மொத்தமாக 97 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது. இந்த டெஸ்டின் இரண்டாவது நாளான இன்று ஒரே நாளில் 16 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன.

அடுத்த கட்டுரைக்கு