Published:Updated:

309 ரன்கள் எடுத்தால் இந்தியா வெற்றி... ஆனால், ஆட்டம் ஆஸ்திரேலியாவிடம் போனது எப்படி?! #AUSvIND

#AUSvIND
#AUSvIND ( Rick Rycroft )

இந்தியாவுக்கு 407 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக 1976-ல் இந்தியா 406 ரன்களை மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சேஸ் செய்திருந்ததே இந்தியாவின் அதிகபட்ச ரன்சேஸ்.

அசுரபலம் கொண்ட ஆஸ்திரேலியர்களின் அதிரடி ஆட்டத்தால், 407 என்னும் இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட, நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், வென்றாக வேண்டுமானால் நின்றாக வேண்டுமென்ற நிலையில் ஐந்தாவது நாள் க்ளைமேக்ஸை எதிர்நோக்கி இருக்கிறது இந்தியா.

பதினொரு பேட்ஸ்மேன்கள்கூடக் கையில் இல்லாத நிலையில், களத்தில் நின்று பொறுப்பாக ஆடவேண்டிய ரோஹித் ஷர்மா பொறுப்பற்ற முறையில் அவுட் ஆகி செல்ல எட்ட முடியா உச்சத்தை எட்டித் தொட, முட்டி மோதிக் கொண்டிருக்கிறது ரஹானேவின் படை.

ரன் அவுட்களால் ஏற்பட்ட தாக்கம், கைவிடப்பட்ட கேட்சுகள் என இந்தியாவின் தவறுகள் பூமராங்காக அவர்களையே திரும்பித்தாக்க, அதன் தாக்கத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிய இந்தியாவை அடிக்குரலில் முனங்க வைத்தது வீரர்களின் காயம் தந்த வலி! எனினும், ஆஸ்திரேலியாவின் 197ரன்கள் லீட் பெரிய விஷயமல்ல, ஒரு சரியான செஷன், போட்டிக்குள் தங்களைத் திரும்பக் கொண்டு வந்துவிடும் என்பதால், நேர்மறைச் சிந்தனையோடே தொடங்கியது இந்தியா!

அவர்களது உத்வேகத்துக்கு உயிரூட்டுவது போன்ற வாய்ப்பை, போட்டியின் இரண்டாவது பந்திலேயே, பும்ரா ஏற்படுத்திக் கொடுத்தார்! அவர் வீசிய பந்தை லாபுசேன் அடிக்க, பந்தே ஃபீல்டரைத் தேடிச் சென்றது. ஆனாலும் ஃபீல்டரோ 'நோ தேங்க்ஸ்' என கைக்கு வந்த கேட்சைக் கைவிட்டார். பேட்டிங்கில் தன்னுடைய அலட்சியமான ரன்அவுட்டால் இந்தியாவின் சரிவுக்குக் குழிபறித்த அதே விஹாரிதான் அந்த ஃபீல்டர்! போட்டியில் அவ்வளவு சீக்கிரத்தில் ஒரு விக்கெட் எத்தகைய ஒரு அதிர்வலையை ஏற்படுத்தி இருக்க முடியும்?! ஆனாலும், தவறுகளைத் தவறின்றி, திரும்பத் திரும்பச் செய்தனர் இந்திய ஃபீல்டர்கள்!

#AUSvIND
#AUSvIND
Rick Rycroft

தவறவிட்ட பொன்னான தருணங்களால் விக்கெட்டுகள் எனும் நம்பிக்கை ஒளியைத் தேடி இந்தியா வெகுதூரம் ஓட வேண்டியிருந்தது! அந்த இடைவெளியில், லாபுசேனின் அரைசதமும் வந்து சேர, இருட்டில் தட்டுத்தடுமாறியது இந்தியா!பெளலிங்கில் ஜடேஜா இல்லாத குறையை அஷ்வினால்கூட நிரப்ப முடியாமல் போக, முதல் இன்னிங்ஸைப் போலவே நங்கூரமிட்டு நூறு ரன் பார்ட்னர்ஷிப்பைத் தொட்டது இந்தக் கூட்டணி!

அனுபவம் வாய்ந்த பெளலர்களால்கூட செய்ய முடியாததை அறிமுக வீரரான சைனி செய்து காட்டினார். மிரட்டிக் கொண்டிருந்த லாபுசேனின் விக்கெட்டைச் சத்தமின்றி வீழ்த்திய அவர், தனது அடுத்த ஓவரிலேயே, புதிதாய் வந்த வேடையும் வெளியேற்றி அசத்தினார். எனினும் ஆஸ்திரேலியாவின் லீட் கிட்டத்தட்ட 250ஐ நெருங்கி விட்டதால், இன்னும் சில விக்கெட்டுகளை எடுத்தே ஆக வேண்டிய இக்கட்டான நிலை, இந்தியாவுக்குத் தொடர்ந்தது.

ஆனாலும், துகளளவு தவறைக்கூட நிகழவிடவில்லை ஸ்மித்! அரைச்சதம் கடந்த ஸ்மித், தான் ஏன் நடப்பு டெஸ்ட் அரங்கின் முடிசூடாச் சக்கரவர்த்தி என மறுபடியும் ஒருமுறை நிரூபித்தார். மறுபக்கம் கிரீனும் சிறப்பாக விளையாட, இந்தியாவுக்கான நெருக்கடி அதிகரித்துக் கொண்டே இருந்தது. இரண்டரை மணிநேரப் போராட்டத்தில், இந்தியா இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருந்தது! ஆஸ்திரேலியாவோ, உணவு இடைவெளியில், 276 ரன்கள் லீட் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.

#AUSvIND
#AUSvIND
Rick Rycroft

இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடங்கிய போது, ஒருநாள் போட்டி மோடுக்கு மாறி, சிக்ஸரோடு தொடங்கினார், ஸ்மித்! தொடர்ந்து பவுண்டரிகளையும் விளாசி, அபாயகரமானவராய் மாறத் தொடங்கினார். அப்போது அஷ்வின் வீசிய பந்துக்கு, எல்பிடபிள்யூ அப்பீல் செய்யப்பட, அம்பயர் மறுக்க, ரிவ்யூக்குச் சென்றது இந்தியா! முடிவு இந்தியாவுக்குச் சாதகமாய் வந்து நிம்மதிப்பெருமூச்சு விட வைத்தது. 81 ரன்களுடன் வெளியேறிய ஸ்மித்தின் விக்கெட்டால், முடங்கிப் போயிருந்த இந்திய முகாம் சற்று முடுக்கி விடப்பட்டது.

உள்ளே வந்த பெய்ன், டிக்ளேர் செய்யும் மைண்ட் செட்டுக்கு வந்து அடித்து ஆடத் தொடங்கினார். அவரை வீழ்த்த, பும்ரா வீசிய அற்புதமான பந்தை, பெய்ன் அடிக்க, ஸ்லிப்பில் நின்றிருந்த ரோஹித் அந்தக் கேட்சைக் கோட்டை விட்டார். நடப்பு டெஸ்ட் தொடரில், மூன்று போட்டிகளில் கிட்டத்தட்ட பத்து கேட்ச்களைத் தவற விட்டு இந்தியாவின் தோல்விகளுக்கு காரணமாய் அமைந்திருக்கிறார்கள் இந்திய பெளலர்கள்.

தப்பிப்பிழைத்த பெய்ன், பேட்டினால் விளாசத் தொடங்கி ரன்களை மளமளவென உயர்த்த, இந்தியாவுக்கு ஏதோ ஒரு மூலையில் ஒட்டிக் கொண்டிருந்த கொஞ்சம் வெளிச்சமும் மங்கிப் போனது! எல்லாப் பந்துகளும் ரன்களாக மாற்றப்பட்டன. புதுப்பந்தை வைத்து பும்ரா தாக்கியும் வேலைக்காகாமல் போக, வெறும் 67 பந்துகளில் 50 ரன்கள் பார்னர்ஷிப்பைத் தொட்டது பெய்ன்-கிரீன் கூட்டணி!

பும்ராவின் பந்தில், கிரீனின் கேட்ச் வாய்ப்பை இம்முறை ரஹானே தவறவிட, கிரீன் தன்னுடைய முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார். ஆஸ்திரேலிய பெளலர்கள், இந்திய வீரர்களுக்குக் காயத்தைப் பரிசளிக்க, பதிலுக்கு இந்தியக் குழுமமோ, ஃபார்மை இழந்த அத்தனை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களையும், ஃபார்முக்குக் கொண்டு வரும் நற்பணியை சிறப்பாகச் செய்தது. டிக்ளேர் செய்யப்படும்முன் சதத்தைத் தொட்டு விடலாம் என்ற எண்ணத்துடன், பந்துகளை பவுண்டரிகளாக மாற்றிக் கொண்டிருந்த கிரீன் தற்போது அதை சிக்ஸர்களாக மாற்றத் தொடங்கினார்!

நானூறு ரன்கள் லீடை ஆஸ்திரேலியா நெருங்கும் தருவாயில், பும்ரா பந்து வீசத் தயாராகிக் கொண்டிருந்தார். சிராஜ் ஃபீல்டிங்கிற்காக பவுண்டரி லைனுக்குத் திரும்பிய போது, சில பார்வையாளர்கள் அவரை வார்த்தைகளால் வசைபாட, ரஹானே மற்றும் மற்ற வீரர்கள் அம்பயரிடம் முறையிட்டனர். போட்டி சிறிதுநேரம் தடைபட்டு, அந்தப் பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டதும் போட்டி தொடர்ந்தது!

நேற்றும் இச்சம்பவங்கள் நடைபெற்று, இந்தியா இதுகுறித்து புகாரைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்காகவேனும் இந்திய வீரர்கள், தங்களது ஆட்டத்தின் வழியே திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற ஆதங்கம் இந்திய ரசிகர்களைத் தொற்றிக் கொண்டது.

டாப் கியரில் ரன்களைக் குவிக்கத் தொடங்கிய கிரீன், பும்ராவின் பந்தில், ஒரு பவுண்டரியையும், சிக்ஸரையும் அடுத்தடுத்து அடித்து ஆட்டங்காட்ட, அதற்கடுத்த பந்தில் அவரை வெளியேற்றினார் பும்ரா. நான்கு விக்கெட்டுகளாய் இருக்க வேண்டிய பும்ராவின் கணக்கில், ஃபீல்டர்களின் தவறால், முதல் விக்கெட் பதிவானது‌. இந்தக் கேட்சுடன், இந்த இன்னிங்ஸில், நான்கு கேட்சுகளை, சப்ஸ்டிட்யூட்டாக இறங்கி, சாஹா பிடித்திருந்தார். விக்கெட்கீப்பராக, தான் ஏன் பன்ட்டை விடச் சரியான தேர்வென்பதையும் நெற்றியடியாய் உணர்த்தினார். அதனுடன் தேநீர் இடைவேளையும் எடுக்கப்பட, 406 ரன்கள் முன்னிலையுடன் இந்தியாவின் கதையைக் கிட்டத்தட்ட முடித்தே விட்டது ஆஸ்திரேலியா!

டிக்ளேர் செய்து கொள்வதாக ஆஸ்திரேலியா அறிவிக்க, 407 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக 1976-ல் இந்தியா 406 ரன்களை மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சேஸ் செய்திருந்ததே இந்தியாவின் வெற்றிகரமான அதிகபட்ச ரன்சேஸ்.

நான்கு செஷன்கள் மீதமுள்ள நிலையில், ஜடேஜாவும் இல்லாததால், பலம்பொருந்திய ஆஸ்திரேலியாவுக்கு இந்தப் போட்டியை இந்தியா எழுதிக் கொடுத்தது போலத்தான் அப்போதே தோன்றியது! எனினும் மெல்போர்னில் மீண்டெழுந்த இந்தியா, டிரா செய்ய வேண்டுமென்று ஆடாமல், வெற்றி பெறும் நோக்கத்தோடு ஆடினால் எழுச்சி காணுமென்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாய் இருந்தது.

#AUSvIND
#AUSvIND
Rick Rycroft

சென்ற இன்னிங்ஸில் செய்ததைப்போலவே, இன்றும் நல்ல அடித்தளத்தை அமைக்கத் தொடங்கினர், இந்திய ஓப்பனர்கள். பதினாறு ஓவர்களுக்குள்ளாகவே இந்தியா ஒருமுறையும், ஆஸ்திரேலியா ஒருமுறையும், ஃபீல்ட் அம்பயர், தேர்ட் அம்பயருக்கு ஒருமுறையுமென, மூன்று முறை ரிவ்யூக்குச் சென்று இந்திய ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிற வைத்தனர். ஆனால், மூன்று முறையும் இந்தியாவுக்கு சார்பாகவே முடிவு வந்தது. ஆஸ்திரேலியாவின் எண்ணமோ, இன்றைய நாளின் முடிவுக்குள் சில விக்கெட்டுகளை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தி விட்டால், நாளை இந்தியாவுக்கு கூடுதல் அழுத்தம் தரலாம் என்பதே!

அதனைப் பொய்யாக்குமாறு அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடி, பார்ட்னர்ஷிப்பில் 71 ரன்களை எடுத்தது இந்த இருவரணி. இந்தியாவுக்கு நம்பிக்கைக்கொடுத்துக்கொண்டிருந்த கில், ஹேசில்வுட் வீசிய பந்தில் பெய்னிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, ரிவ்யூக்குப் போனது இந்தியா. இம்முறை கில் அவுட் என முடிவு வர, கில் 31 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து புஜாரா உள்ளே வர, எடுத்த எடுப்பிலேயே, அதே ஓவரில், அவருக்கு எல்பிடபிள்யூ கொடுக்கப்பட, அவரது இயல்புக்கு மாறாக மிகுந்த கோபத்துடன் ரிவ்யூக்குப் போனார் புஜாரா! மூன்றாவது நடுவரை அநியாயத்துக்கு விழிப்புடன் வைத்திருந்தனர், இருஅணிகளும்! ஒருவழியாக, இதுவும் இந்தியாவுக்குச் சாதகமாகவே வர, புஜாரா களத்தில் தொடர்ந்தார்!

தொடக்கத்தில் டெஸ்ட் ஃபார்மேட்டுக்கு ஏற்றாற்போல் தன்னைத் தகவமைத்துக் கொள்ள, ரோஹித் தடுமாறினாலும், பின் அதைச் சரிசெய்து, தன்னுடைய அரைச்சதத்தைப் பதிவு செய்தார். ஆனாலும் அவரது அரை சதங்களுக்கான கொண்டாட்டங்கள் அடங்கும் முன்பே, கம்மின்ஸ் ஷார்ட் பாலால் ஆசைகாட்ட, புல் ஷாட் அடிக்க ஆசைப்பட்டு ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ரோஹித். பொன்னான வாய்ப்புகளை தூக்கி எறிந்து விட்டுச் செல்லும் போக்கை அவர் இன்னமும் தொடர்கிறார். கோலியும் இல்லாத நிலையில், இக்கட்டான நிலையில் அணி தள்ளாடும் போது, தன்மேல் சுமத்தப்பட்டிருக்கும் பாரத்தை, கொஞ்சமும் உணராமல், ரோஹித் ஆட்டமிழந்த விதம், டெஸ்ட் ஃபார்மேட்டுக்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக் கொள்ளாமல், ஒருநாள் போட்டிகள் போன்றே ஆடிச் சென்றுள்ளதையே காட்டுகிறது. இந்தியா இரண்டாவது விக்கெட்டை இழந்தது. ரஹானே உள்ளே வந்தார். மிச்சமிருந்த ஓவர்களை இரண்டாம் நாள் ஆட்டத்தின் இறுதி ஓவர்களின் ரீப்ளே போல, புஜாராவும், ரஹானேவும் டிஃபெண்ட் செய்து, 98 ரன்களுடன் முடித்தனர்.

ஸ்மித் மற்றும் லாபுசேனின் அரைசதங்களாலும், கிரீன் மற்றும் பெய்னின் அதிரடியினாலும், கடினமான இலக்கை இந்தியாவுக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா. மூன்று செஷன்கள், எட்டு(ஏழு - ஜடேஜா இறங்காத பட்சத்தில்) விக்கெட்டுகளை வீழ்த்தினால் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி. 309 ரன்களை எடுத்தால் இந்தியாவுக்கு வெற்றி என்ற பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது சிட்னி டெஸ்ட். ரன் அவுட்கள் பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்த இந்தியாவின் சரிவை, கேட்ச் டிராப்கள் இன்று எண்ட் கார்டு போட்டு முடித்து வைத்துள்ளன.

ஐந்து நாட்கள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளே இப்போது அதிசயமாகப் போய் விட்ட காலத்தில், மொத்தமாய்ப் பணிந்து விடாமல், ஆஸ்திரேலியாவுக்கு கடினமான பதிலடி கொடுத்து, போட்டியை வெல்ல முடியாவிட்டாலும், டிராவாவது செய்தால், பெரிய வீரர்கள் இல்லாமலும் இதை நிகழ்த்திகாட்டிய பெருமையை இந்தியாவும், ரஹானேவும் பெறலாம்!

அடுத்த கட்டுரைக்கு