Published:Updated:

5 கேட்ச் டிராப், மோசமான ஃபீல்டிங்… இலங்கையின் 9 ஆண்டுகால வேதனையை முடிவுக்கு கொண்டுவந்த இந்தியா!

தவான் ( Eranga Jayawardena )

கடைசியாக 2012-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி சொந்தமண்ணில் வைத்து இந்தியாவை தோற்கடித்திருந்தது இலங்கை.

5 கேட்ச் டிராப், மோசமான ஃபீல்டிங்… இலங்கையின் 9 ஆண்டுகால வேதனையை முடிவுக்கு கொண்டுவந்த இந்தியா!

கடைசியாக 2012-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி சொந்தமண்ணில் வைத்து இந்தியாவை தோற்கடித்திருந்தது இலங்கை.

Published:Updated:
தவான் ( Eranga Jayawardena )

இந்தியாவை, ஒருநாள் போட்டியில், ஒருநாளாவது வெல்வோமா என்ற இலங்கையின் நீண்ட காலக் காத்திருப்பை, இளம்படை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. கடைசியாக 2012-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி சொந்தமண்ணில் வைத்து இந்தியாவை தோற்கடித்திருந்தது இலங்கை. கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது முதல்முறையாக இந்தியாவை தங்கள் சொந்த மண்ணி வைத்து ஒருநாள் போட்டியில் தோற்கடித்திருக்கிறது இலங்கை அணி.

தொடரை வென்ற உற்சாகத்தில், பென்ச்சில் உள்ள மற்ற வீரர்களுக்கும் பயிற்சி கொடுத்து விடும் எண்ணத்தோடு, ஒரே போட்டியில், ஐந்து அறிமுக வீரர்களோடு இந்தியாவும், இந்த வருடத்தில், ஒருநாள் போட்டியில், இரண்டாவது வெற்றியைச் சுவைத்து விடும் உறுதியில், இலங்கையும் இறங்கின.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தத் தொடரில், முதல் முறையாக டாஸை வென்றுவிட்ட உற்சாகத்தில், தனது கப்பார் கொண்டாட்ட ஸ்டைலோடு, 'பேட்டிங்' என்றார் தவான். ஓப்பனிங்கில் இறங்கியது தவான் - பிரித்வி கூட்டணி. தவான், தனஞ்சயாவின் ஓவரில், ஹாட்ரிக் பவுண்டரியோடு, மிரட்டல் தொடக்கம் தந்ததோடு என் கடமை முடிந்தது என சமீராவின் பந்தில் கிளம்பினார் கேப்டன்.

இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணி
Eranga Jayawardena

ஒன் டவுனில், அறிமுக டி20-ல் ஆடியதன் பிறகு, 2000 நாட்களுக்கும் மேலாக, ஒருநாள் போட்டி அறிமுகத்துக்காக காத்திருந்த சஞ்சு சாம்சன் களமிறங்கினார். மிகச் சிறப்பாகவே அமைந்தது, இந்தப் பார்ட்னர்ஷிப். அவசரகதியில், ரன்களை விளாசாமல், பக்குவத்தோடே பந்துகளைச் சந்தித்தனர்.

ப்ரித்வியைக் குறிவைத்து ஸ்பின்னர் இறக்கப்பட, கூக்ளிக்கே, சிக்ஸர் குண்டு வெடிக்க மரியாதை தந்தார் சாம்சன். பவர் பிளே முடிவில் 66 ரன்கள் வந்திருக்க, ரன்ரேட் அதன்பின் சற்றே குறைய ஸ்பின்னர் என்றும் பாராமல், ஜெயவிக்ரமா ஓவரிலேயே, மூன்று பவுண்டரிகளை, எல்லைக்குத் துரத்தினார், ப்ரித்வி. ஆனாலும், 40களில் ஆட்டமிழக்கும் அவரது பழக்கம், இதிலும் தொடர்ந்தது. ஷனகா வீசிய பந்து அவரது பேட்டை உதாசீனப்படுத்தி, பேடைப் போய் முதலில் சந்திக்க, 49 ரன்களோடு விடைபெற்றார் ப்ரித்வி.

களத்தில் நின்ற சாம்சனுக்கும் அதற்கு மேல், பொறுமையில்லை. "ஆஹா" எனச் சொல்ல வைக்குமாறு தொடங்கி, ‘அய்யோ’ எனக் கூறவைத்து முடிப்பது அவரது வழக்கம்தானே?! அதையேதான் செய்தார், இந்தப் போட்டியிலும். 46 ரன்களோடு, அரை சதத்தை, தவறவிட்டு சாம்சன் வெளியேற, செட்டில் ஆன இரு பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து அனுப்பி வைத்தது இலங்கை

மணீஷோடு சூர்யக்குமார் யாதவ் இணைந்தார். வழக்கம் போல், சூர்யக்குமாரின் ஷாட் செலக்ஷன் அருமையாக இருக்க, மணீஷ் மிக மந்தமான தொடக்கத்தையே கொடுத்தார். ஒரு கட்டத்தில், ஜெயவிக்ரமா வீசிய பந்து, சூர்யக்குமாரின் பேடைத் தாக்க, அப்பீல் செய்தது இலங்கை. அது அவுட் என கள அம்பயர் கூறியதும், ரீவ்யூவுக்குப் போனார் சூர்யக்குமார். விக்கெட் ஸ்டம்பைத் தாக்குவதைக் கண்டதும், உச்சகட்ட கொண்டாட்டத்திற்குச் சென்றது இலங்கைப் படை. ஆனால், அதன்பின் சற்றே தாமதித்து, இம்பேக்ட் அவுட் சைட் என வர, அது இலங்கைக்கு ஏமாற்றத்தைத் தந்தது.

இந்தியா - இலங்கை கிரிக்கெட்
இந்தியா - இலங்கை கிரிக்கெட்
Eranga Jayawardena

இந்தக் கட்டத்தில் மழைவர, அதுதான் போட்டியின் முக்கிய திருப்பு முனையானது. மழை நின்று, மைதானம் உலர்ந்து, வீரர்கள் திரும்பி வந்தபோது, களம் பழையபடி இல்லை. மிக ஸ்லோவாக பிட்ச் மாற, வந்த வேகத்தில், மணீஷின் விக்கெட்டை வீழ்த்தியது இலங்கை. உள்ளூர்ப் போட்டிகளில், சிறப்பாக ஆடும் மணீஷ், சர்வதேசப் போட்டிகளில், தொடர்ந்து தனக்குத் தரப்படும் வாய்ப்புகளை வீணடித்து வருகிறார்.

25 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், இந்தியாவின் ஸ்கோர், 157/4 என இருந்தது. இதன்பிறகு, நிலைகுலையத் தொடங்கினர், இந்திய பேட்ஸ்மேன்கள். அடுத்த எட்டே ஓவர்களில், நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டது, இலங்கை. சூர்யக்குமார் மட்டுமே சிறப்பாக ஆடி, 40 ரன்களில் வெளியேறினார். மற்றபடி, ஹர்திக் பாண்டியா மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் விக்கெட்டுகள் விழுந்த விதம் எல்லாம் மிக மோசமாக இருந்தது. போதாக்குறைக்கு, போகிற போக்கில், அவுட் எனத் தெரிந்தும், "ஏதோ என்னால் முடிந்தது!" என ஒரு ரிவ்யூவை வீணடித்தார் கௌதம்.

மழையால், பிட்ச் ஸ்லோவாக, அதைக் கணிக்கவோ, கவனிக்கவோ நேரமில்லை என ஐபிஎல் மோடிலேயே ஆடி பேட்ஸ்மேன்கள் வெளியேற, 47 ஓவர்களாய்க் குறைக்கப்பட்ட போட்டியில், எஞ்சியுள்ள 14 ஓவர்களை இந்தியா தாக்குப் பிடிக்குமா என்பதே சந்தேகமானது.

200-க்குள் முடிந்து போகும் என நினைத்த ஸ்கோரை, கிட்டத்தட்ட 10 ஓவர்கள் பொறுமையாய்த் தாக்குப் பிடித்து, ராகுல் சஹார், சைனி, 200ஐ தாண்டி எடுத்துச் சென்றனர். 224 ரன்கள் வந்து சேர்ந்த நிலையில், அவர்கள் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா, 226 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

மோசமான பேட்டிங்கால், போன போட்டியிலேயே, முதலில் பலத்த சேதாரத்தைச் சந்தித்த இந்தியா, தீபக் சாஹரால், திக் திக் நிமிடங்களைக் கடந்து, தப்பிப் பிழைத்தது. அதை உணர்ந்து, தவறைத் திருத்தாமல் இன்றும் அப்படியே அவர்கள் தொடர, எஞ்சியிருந்த 23 பந்துகளைக் கூடச் சந்திக்க ஆள் இன்றி சுருண்டது இந்தியா.

226 என்பது சவாலான இலக்கில்லை எனிலும், இலங்கையின் சமீபத்திய ஆட்டத்திறன், இந்தியாவின் நம்பிக்கையை சில சொட்டுக்கள் மிச்சம் வைத்திருந்தது. ஃபெர்ணான்டோ மற்றும் மினோட்டுக்குப் பந்துவீச, சைனி மற்றும் சேத்தன் சகாரியாவைக் கொண்டு வந்திருந்தார் கேப்டன் தவான். இலங்கை ஓப்பனர்கள் நல்ல தொடக்கத்தைக் கொடுக்க, அதை உடைக்க, ஐந்தாவது மற்றும் ஆறாவது ஓவரிலேயே, ராகுல் சஹார் மற்றும் கௌதமைக் கொண்டு இருபக்கமும் தவான் தாக்கினார்.

இந்தியா - இலங்கை கிரிக்கெட்
இந்தியா - இலங்கை கிரிக்கெட்
Eranga Jayawardena

வீசிய நான்காவது பந்திலேயே, தன்னுடைய சர்வதேசக் கிரிக்கெட் கரியரின் முதல் விக்கெட்டாக மினோட்டை கௌதம் வீழ்த்தினார். அங்கிருந்து கை கோத்த ஃபெர்ணான்டோவும் பனுகாவும், பல ஓவர்கள் கைகளை விடவே இல்லை.

இந்தியா பல பௌலர்களையும், ஃபீல்டர்களையும் மாற்றி மாற்றிப் போட்டு பல்லாங்குழி ஆடியும் பலனில்லை. அதுவும் செட்டில் ஆன பிறகு, இந்த இருவரணி, முன்னிலும் அதிக நம்பிக்கையோடு, ரன்களைச் சேர்த்துக் கொண்டிருந்தது. முதல் பத்து ஓவர்களில், வெறும் 55 ரன்களைச் சேர்ந்திருந்தாலும், 11 - 20 ஓவர்களில், 72 ரன்களைக் குவித்து விட்டது இலங்கை. அந்த இடைவெளியில், ராணா வீசி, பனுகா அடித்த பந்தை, ஷார்ட் மிட் விக்கெட்டில் நின்றிருந்த தவான் கோட்டை விட்டார். அதோடு, ஃபெர்ணான்டோ மற்றும் பனுகாவின் அரை சதங்களும், முறையே, 53 மற்றும் 42 பந்துகளில், வந்து சேர்ந்தது. பனுகாவுக்கு இது முதல் அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது. விக்கெட்தான் விழவில்லை என்றால், ரன்குவிப்பையும் கட்டுப்படுத்த முடியவில்லை. பிரதான பௌலர்கள் அனைவரும் புதியவர்கள் என்பதும் இந்தியாவுக்கு பின்னடைவாக மாறியது.

இறுதியாக ஒரு வழியாக, 23-வது ஓவரில், சகாரியா வீசிய பந்தில், அருமையான ஒரு கேட்சைப் பிடித்த கௌதம், 56 பந்துகளில், 65 ரன்களைக் குவித்த பனுகாவை வெளியேற்றினார். அடுத்த பதினான்காவது பந்தில் மீண்டும் சகாரியாவே, டிசில்வாவைக் காலி செய்திருந்தார். எனினும், 150 பந்துகளில், 151 ரன்களை எட்டி விட்டது இலங்கை.

இந்தியா - இலங்கை கிரிக்கெட்
இந்தியா - இலங்கை கிரிக்கெட்
Eranga Jayawardena

கடைசியாக, 22 ஓவர்களில், 76 ரன்கள் மட்டுமே சேர்க்க வேண்டும் என மிக வலுவான நிலையில் இலங்கை வந்து நின்றது. விக்கெட்டை விடாமல் பிடித்துக் கொண்டிருந்த ஃபெர்ணான்டோவும், மறுமுனையில் அசத்தலாக ஆடிக் கொண்டிருந்த அசலங்காவும், மிகச் சிறப்பானதொரு பார்ட்னர்ஷிப்பைக் கட்டமைத்தனர். அடிக்க வேண்டிய ரன்களும் குறைவு, நிறைய பந்துகள் இருக்கின்றன என்ற உற்சாகமே, அவர்களுக்குத் தேவையான நம்பிக்கையைக் கொடுக்க, பதற்றமின்றி ஆடிக் கொண்டிருந்தது இலங்கை. இந்தியாவோ, போட்டியை, திரும்பத் தங்கள் கைப்பிடிக்குள் கொண்டு வருவதற்கான மிகச்சிறிய நுனியை, தேடி அலைந்து கொண்டிருந்தது.

தனது இரண்டாவது ஸ்பெல்லை வீச வந்தார் ஹர்திக் பாண்டியா. அவர் வீசிய ஆஃப் கட்டரில், அசலங்கா வெளியேற, ஷனகா அவரைத் தொடர்ந்து, உள்ளே வந்தார். இலங்கை, 90 பந்துகளில் எடுக்க வேண்டியது, 33 ரன்களை மட்டுமே என்பதால், போட்டியின் முடிவு அப்போதே உறுதியாகி விட்டது.

ஆனாலும், ரசிகர்களுக்கு, கடைசி நேர ஆறுதலாக, மூன்று விக்கெட்டுகளை, தனது அற்புத சுழலால் வீழ்த்தி விருந்தளித்தார், ராகுல் சஹார். ஷனகாவின் விக்கெட்டை, ராகுல் சஹார் வீழ்த்திய கையோடு, ஒட்டுமொத்த இலங்கை இன்னிங்ஸின், நங்கூரமாக விளங்கிய ஃபெர்ணான்டோவையும் அவரே அனுப்பினார். எனினும் மென்டீஸ் மற்றும் கருணரத்னே கடைசிநொடிக் காரியங்களைச் செய்யக் களமிறங்க, கருணரத்னேயையும் அடுத்ததாக ஆட்டமிழக்க வைத்த ராகுல் சஹார், மூன்று விக்கெட்டுகளை குறுகிய இடைவெளிக்குள் வீழத்தி, அதிரடி காட்டினார்.

கடைசியாக, மெண்டீஸ் மற்றும் தனஞ்சயாவின் ஆட்டத்தால், 39 ஓவரில், அடைய வேண்டிய இலக்கை, அடைந்த இலங்கை, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் சோபிக்காமல் போனது மட்டுமின்றி, ஐந்து கேட்சுகள் மற்றும் ஒரு ஸடம்பிங்கை இந்தியா தவறவிட்டு, தோல்விக்கான தொடக்க உரையை, தானே எழுதிக் கொண்டது. ஒரு கேட்ச் டிராப்பே போட்டியை மைல்களுக்கு அப்பால் எடுத்துச் சென்று விடும் என்னும் பட்சத்தில், 5 கேட்ச் டிராப்கள் என்பதெல்லாம், போட்டியை வெல்வதற்குரிய தகுதியே இல்லாதவர்களாகவே மாற்றி விடும்.

இந்தியா - இலங்கை கிரிக்கெட்
இந்தியா - இலங்கை கிரிக்கெட்
Eranga Jayawardena

நல்ல ஃபீல்டரான தவான் தொடங்கி, ராணா, ப்ரித்வி ஷா என எல்லோருமே பிடித்திருக்க வேண்டிய கேட்ச்களைக் கைவிட்டனர். ஒரு ஸ்டம்பிங்கை தவறவிட்ட சாம்சனும் வெற்றி வாய்ப்பைத் தட்டி விட்டார். பவுண்டரிக்கு செல்லாமல் தடுத்திருக்க வேண்டிய பந்தை, மிக அசிரத்தையான ஃபீல்டிங்கால், சைனி தடுக்கத் தவறினார். ஒரு இளம்படை, சீனியர் பிளேயர்களுக்கு மேலாக, எந்த அளவுக்கு ஆக்ரோஷமாக ஃபீல்டிங்கில் ஈடுபட்டிருக்க வேண்டும்?! ஆனால், அதைச் செய்யத் தவறிய புள்ளியிலேயே, இந்தியா எல்லாவற்றையும் இழந்து விட்டது.

3/0 என இந்தத் தொடரை க்ளீன் ஸ்வீப் செய்ய வேண்டுமென இந்தியா விரும்ப, முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவியதற்கான பதிலடியாக 2-1 என்ற கணக்கில் தொடரை முடித்துள்ளது, இலங்கை. ஆட்ட நாயகனாக ஃபெர்ணான்டோவும், தொடர் நாயகனாக சூர்யக்குமார் யாதவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்தியா தொடரை வென்றிருந்தாலும், பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங் என எல்லாத் துறைகளிலும், இந்தத் தொடரில் களம் கண்ட, அடுத்த தலைமுறை வீரர்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டுமென்பதே உண்மை!