Published:Updated:

அசரடித்த பீட்டர்சன்; வரலாறு படைக்கும் வாய்ப்பை இழந்த இந்தியா... தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா!

South Africa ( Cricket South Africa )

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை பந்தாடிவிட்டு வீழ்ச்சியில் இருக்கும் தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி தொடரை இழந்திருப்பது ஏமாற்றமான விஷயமே.

அசரடித்த பீட்டர்சன்; வரலாறு படைக்கும் வாய்ப்பை இழந்த இந்தியா... தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா!

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை பந்தாடிவிட்டு வீழ்ச்சியில் இருக்கும் தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி தொடரை இழந்திருப்பது ஏமாற்றமான விஷயமே.

Published:Updated:
South Africa ( Cricket South Africa )
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. கேப்டவுனில் நடந்த இந்தப் போட்டியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2-1 என தென்னாப்பிரிக்க அணி இந்தத் தொடரையும் வென்றிருக்கிறது. சென்சூரியனில் நடந்த முதல் போட்டியை வென்றிருந்த நிலையில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

மூன்றாம் நாளான நேற்றைய நாளின் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 101-2 என்ற நிலையில் இருந்தது. அந்த அணியின் வெற்றிக்கு மேலும் 111 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. இந்நிலையில், இன்று நான்காவது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி எளிதாகவே இலக்கை எட்டி அசத்தியிருந்தது.

பீட்டர்சன்
பீட்டர்சன்
Cricket South Africa

கீகன் பீட்டர்சனும் வாண்-டர்-டஸனும் இன்றைய நாளை தொடங்கியிருந்தனர். 48 ரன்னில் இருந்த பீட்டர்சன் அரைசதத்தைக் கடந்திருந்தார். முதல் இன்னிங்ஸிலும் தென்னாப்பிரிக்க அணியை அரைசதம் அடித்து காப்பாற்றியது கீகன் பீட்டர்சன். பீட்டர்சன் மற்றும் வாண்-டர்-டஸன் இருவருமே வேகவேகமாக ரன்கள் சேர்க்க தொடங்கினர். எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வென்றுவிட வேண்டும். நீண்ட நேரம் க்ரீஸில் நின்று இந்திய அணிக்கு ஒரு வாய்ப்பை வழங்கிவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர். இதனால், லிமிடெட் ஓவர் போட்டிகள் போல சிங்கிள் திருட்டிலுமே ஈடுபட்டிருந்தனர். இந்திய அணியின் சார்பில் பும்ரா, ஷமி இருவருமே விக்கெட் எடுக்க வேண்டும் என்ற முனைப்போடு ரிஸ்க் எடுத்தே ரன்கள் கசிந்தபோதும் ஃபுல் லெந்த்தில் வீசிக்கொண்டிருந்தனர். இரண்டு முறை விக்கெட்டுக்கான வாய்ப்பும் உருவாகியிருந்தது. ஷமியின் பந்தில் வாண்-டர்-டஸன் எட்ஜ் ஆனதை போன்று தோன்ற கோலி ரிவியூவ் எடுத்திருப்பார். ஆனால், அது ரொம்பவே க்ளோஸாக சென்று நாட் அவுட் என அறிவிக்கப்பட்டது.

பும்ரா ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தை டிஃபன்ஸ் ஆட முயன்று பீட்டர்சன் எட்ஜ் ஆகியிருந்தார். ஸ்லிப்பில் நின்ற புஜாரா இந்த கேட்ச்சை ட்ராப் செய்திருப்பார்.

அந்தச் சமயத்தில் பீட்டர்சன் 59 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். தென்னாப்பிரிக்க அணி 126 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. புஜாரா அந்த கேட்ச்சை பிடித்திருந்தால் போட்டி இன்னும் நெருக்கமாகச் சென்றிருக்கும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதன்பிறகு, தென்னாப்பிரிக்க அணி பெரிதாக சிரமப்படவே இல்லை. எளிதாக ஸ்கோர் செய்து முன் நகர்ந்து சென்றனர். பீட்டர்சன் 82 ரன்களில் இருந்தபோது ஷர்துல் தாக்கூர் வீசிய ஒரு பந்து கொஞ்சம் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆக அதில் எட்ஜ் ஆகி ஸ்டம்பை பறிகொடுத்திருப்பார். பீட்டர்சன் சதமடிக்காமல் அவுட் ஆகியிருந்தாலும் ஆட்டத்தை மொத்தமாக தென்னாப்பிரிக்கா பக்கமாகத் திருப்பிவிட்டே சென்றிருந்தார்.

பீட்டர்சன்
பீட்டர்சன்
ICC
மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள், வீரர்கள் என அத்தனை பேருமே பீட்டர்சனுக்காக எழுந்து நின்று கைகளை தட்டினர். இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டதில் பெரும்பங்கு கீகன் பீட்டர்சனையே சேரும்.

இதன்பிறகு, பவுமாவும் வாண்-டர்-டஸனும் அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். அஷ்வினின் பந்தில் பவுமா வின்னிங் ஷாட்டை அடித்து தென்னாப்பிரிக்காவின் வெற்றியை உறுதி செய்தார். போட்டியை மட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்க 2-1 என இந்தத் தொடரையும் வென்றது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை பந்தாடிவிட்டு வீழ்ச்சியில் இருக்கும் தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி தொடரை இழந்திருப்பது ஏமாற்றமான விஷயமே. பௌலர்கள் தங்களால் இயன்றவரை முயன்றிருக்கின்றனர். ஆனால், பேட்ஸ்மேன்கள் தங்களின் தரத்தை வெளிப்படுத்தியிருக்கவில்லை. குறிப்பாக, புஜாரா மற்றும் ரஹானே இருவருமே மிடில் ஆர்டரில் கடுமையாக சொதப்பி வருகின்றனர். இந்தத் தொடர் என்றில்லை. சமீபமாகவே இருவரும் மிகவும் மோசமாகத்தான் ஆடி வருகின்றனர். ஆனாலும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டுவிட்டன. அந்த வாய்ப்புகளையும் இருவரும் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

Pujara - Rahane
Pujara - Rahane
இந்தத் தொடருக்கு முன்பாக இந்திய A அணியோடு சென்று தென்னாப்பிரிக்காவில் மூன்று அரைசதங்களை அடித்திருந்த ஹனுமா விஹாரி, அறிமுக இன்னிங்ஸிலேயே சதமடித்திருந்த ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை ரஹானேவிற்காக பென்ச்சில் வைத்த சம்பவங்களெல்லாம் அரங்கேறியது.

இந்திய கிரிக்கெட்டில் அதுவும் தொட்டால் சிணுங்கியாக ஃபார்ம் அவுட் என்றால் உடனே ஓரங்கட்டிவிடும் கோலியிடமே ரஹானேவும் புஜாராவும் இத்தனை வாய்ப்புகளைப் பெற்றது உலக அதிசயம்தான். இவர்கள் மட்டுமில்லை, இன்னும் முழுமையான ஃபார்முக்குத் திரும்பாத கோலி, செட் ஆகாமல் இருக்கும் ஓப்பனிங் கூட்டணி என பேட்டிங் லைன் அப் மொத்தமும் ஓட்டைகள்தான். இதை இந்தப் போட்டியின் தோல்விக்குப் பிறகு கோலியுமே ஒப்புக்கொண்டிருக்கிறார். பேட்டிங் சொதப்பல்களுக்குக் காரணம் கூறி சமாளிக்க விரும்பவில்லை என கோலி கூறியிருக்கிறார். காரணங்கள் தேவையில்லை. ஆனால், இந்தத் தொடர் கொடுத்திருக்கும் படிப்பினைகளை வைத்துக் கொண்டு ஒரு புதிய தீர்வை நோக்கி இந்திய அணி பயணித்தே ஆக வேண்டும்.