Published:Updated:

தவறு செய்வது ராகுல் மட்டுமில்லை டிராவிட்டும்தான்; இந்தியாவின் தோல்விக்குக் காரணமான மிடில் ஓவர்கள்!

Bavuma - Vander Dussen ( ICC )

இந்திய அணியின் இந்த தோல்விக்கு இந்திய வீரர்களின் மிடில் ஓவர் சொதப்பலே மிக முக்கிய காரணமாக அமைந்தது. அது பேட்டிங் ஆகட்டும் பௌலிங் ஆகட்டும் இரண்டிலுமே இந்திய அணி மிடில் ஓவர்களில்தான் ஆட்டத்தை கோட்டைவிட்டிருந்தது.

தவறு செய்வது ராகுல் மட்டுமில்லை டிராவிட்டும்தான்; இந்தியாவின் தோல்விக்குக் காரணமான மிடில் ஓவர்கள்!

இந்திய அணியின் இந்த தோல்விக்கு இந்திய வீரர்களின் மிடில் ஓவர் சொதப்பலே மிக முக்கிய காரணமாக அமைந்தது. அது பேட்டிங் ஆகட்டும் பௌலிங் ஆகட்டும் இரண்டிலுமே இந்திய அணி மிடில் ஓவர்களில்தான் ஆட்டத்தை கோட்டைவிட்டிருந்தது.

Published:Updated:
Bavuma - Vander Dussen ( ICC )

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது.

டெஸ்ட் தொடர் தோல்விக்கு ஓடிஐ தொடரில் பழி தீர்க்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி முதல் போட்டியிலேயே 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறது. தென்னாப்பிரிக்கா சார்பில் கேப்டன் பவுமாவும் வாண்டர் டஸனும் சதமடித்து அந்த அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கின்றனர்.

இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிகளுக்கு கே.எல்.ராகுல் முதல் முறையாக கேப்டனாக செயல்பட்டிருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு விராட் கோலி முதன்முறையாக கேப்டனாக இல்லாமல் அணியின் வீரராக ஆடியிருந்தார். இதனாலயே இந்தப் போட்டி கொஞ்சம் கூடுதல் முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தது. மேலும், இந்திய அணியில் வெங்கடேஷ் ஐயர் அறிமுகம் ஆகியிருந்தார்.

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனான பவுமாவே டாஸை வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்திருந்தார். டீகாக்கும் யானமன் மலானும் ஓப்பனர்களாக களமிறங்கியிருந்தனர். தென்னாப்பிரிக்க அணியின் டாப் ஆர்டர் பெரிதாக சோபிக்கவில்லை. இந்தியா சார்பில் ஓப்பனிங்க் ஸ்பெல்லை வீசிய பும்ராவும் புவனேஷ்வர் குமாரும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பந்தை திருப்ப கொஞ்சம் எக்ஸ்ட்ரா பவுன்ஸும் அவர்களுக்கு கைகொடுக்க தென்னாப்பிரிக்காவின் ஓப்பனிங் கூட்டணியை சீக்கிரமே பிரித்தனர். வெறும் 6 ரன்களில் பும்ராவின் பந்தில் யானமன் மலான் எட்ஜ் ஆகி கீப்பரான பண்ட்டிடம் கேட்ச் ஆனார். டீகாக்கும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அஷ்வின் நன்றாக தூக்கி வீசிய ஒரு பந்தில் போல்டை பறிகொடுத்து 27 ரன்களில் வெளியேறினார். நம்பர் 3 இல் வந்திருந்த எய்டன் மார்க்ரமும் சீக்கிரமே ரன் அவுட் ஆகி வெளியேறினார். டாப் 3 பேட்ஸ்மேன்களும் 68 ரன்களுக்குள்ளாகவே அவுட் ஆகி தென்னாப்பிரிக்காவிற்கு அழுத்தத்தை கூட்டினர். இந்த சமயத்தில்தான் கேப்டன் பவுமாவும் வாண்டர் டஸனும் கூட்டணி போட்டனர். இந்த கூட்டணிதான் போட்டியின் போக்கையே மாற்றியது. இந்திய அணியின் கையிலிருந்த போட்டியை தென்னாப்பிரிக்கா பக்கமாக மாற்றிவிட்டது. பவுமா கொஞ்சம் நின்று நிதானமாக ஆட, வாண்டர் டஸன் அவரைவிட கொஞ்சம் கூடுதல் வேகமாக ஸ்கோர் செய்திருந்தார். பவுமா ஸ்பின்னர்களை முட்டி போட்டு லெக் சைடில் ஷாட் ஆடி சமாளிக்க, வாண்டர் டஸன் வேகப்பந்து வீச்சாளர்களை சமாளித்துக் கொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாண்டர் டஸன்
வாண்டர் டஸன்
ICC

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

17.4 வது ஓவரில் இணைந்திருந்த இந்த கூட்டணி 48.1 வது ஓவரிலேயே பிரிந்தது. இருவரும் சேர்ந்து 204 ரன்களை எடுத்திருந்தனர். இருவருமே சதத்தையும் கடந்திருந்தனர்.

Bavuma
Bavuma
ICC
பவுமா 143 பந்துகளில் 110 ரன்களையும் வாண்டர் டஸன் 96 பந்துகளில் 129 ரன்களையும் எடுத்திருந்தனர்.

கடைசியில் பவுமா மட்டும் பும்ராவின் பந்தில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகியிருந்தார். 50 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 296-4 என்ற நிலையில் இருந்தது. இந்திய அணிக்கு டார்கெட் 297.

பெரிய டார்கெட்தான் என்றாலும் இந்தியாவின் டாப் ஆர்டர் குறிப்பாக தவானும் கோலியும் ஆடிய போது இந்திய அணி இந்த டார்கெட்டை எளிதிலேயே எட்டிவிடும் என்றே தோன்றியது. ஆனால், நடந்தது வேறு. ஓப்பனர்களாக கேப்டன் ராகுலும் தவானும் இறங்கியிருந்தார்கள். ராகுல் 12 ரன்களில் மார்க்ரமின் பந்துவீச்சில் எட்ஜ் ஆகி கீப்பரான டீகாக்கிடம் கேட்ச் ஆகியிருந்தார். இதன்பிறகு, கேப்டன் பொறுப்பின்றி ஆடிய கோலியும் தவானும் கூட்டணி சேர்ந்தனர். கிடைக்கிற வாய்ப்பிலெல்லாம் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தவான் இந்த போட்டியில் சிறப்பாகவே ஆடியிருந்தார். தவான்-கோலி இருவருமே எந்த தவறும் செய்யாமல் மிகவும் நேர்த்தியாக ஸ்கோரை முன்னெடுத்து சென்றனர். அதிகமாக டாட்களை ஆடியிருக்கவே இல்லை.

Kohli - Dhawan
Kohli - Dhawan
BCCI

தவான் கொஞ்சம் பவுண்டரிகள் அடித்து ஸ்கோர் செய்ய விராட் நன்றாக ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து கொடுத்தார். இருவருமே அரைசதத்தை கடந்து நன்றாக ஆடினார். இந்தக் கூட்டணி இன்னும் கொஞ்ச நேரம் ஆடினால் ஆட்டம் மொத்தமாக இந்தியாவிற்கு சாதகமாக மாறிவிடும் என்ற நிலையில் தவான், கோலி இருவருமே அவுட் ஆகி அதிர்ச்சியளித்தனர். தவான் 79 ரன்களில் இடது கை ஸ்பின்னரான மகராஜ் உள்பக்கமாக திருப்பிய பந்தை கணிக்காமல் போல்டை பறிகொடுத்து அவுட் ஆகியிருந்தார். விராட் கோலி 51 ரன்களில் ஷம்சியின் பந்தில் முட்டி போட்டு ஒரு பெரிய ஷாட்டை ஆட முற்பட அது சரியாக கனெக்ட் ஆகாமல் வட்டத்திற்குள்ளேயே கேட்ச் ஆனார். இருவரும் சேர்ந்து 92 ரன்களுக்கு கூட்டணி அமைத்தனர். இந்த விக்கெட்டுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவின் கை ஓங்க தொடங்கியது ரிஷப் பண்ட், ஸ்ரேயஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் என முக்கியமான பேட்ஸ்மேன்கள் அத்தனை பேரும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து ஏமாற்றினர். இந்தியாவின் தோல்வியும் உறுதியானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடைசியில் லார்ட் ஷர்துல் தாகூர் ஒரு அரைசதத்தை அடித்தாலும் அது ஆறுதல் இன்னிங்ஸ் என்ற அந்தஸ்தை மட்டுமே பெற்றது.

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணியால் 8 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 31 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றியடைந்தது.

இந்திய அணியின் இந்தத் தோல்விக்கு இந்திய வீரர்களின் மிடில் ஓவர் சொதப்பலே மிக முக்கிய காரணமாக அமைந்தது. அது பேட்டிங் ஆகட்டும் பௌலிங் ஆகட்டும் இரண்டிலுமே இந்திய அணி மிடில் ஓவர்களில்தான் ஆட்டத்தை கோட்டைவிட்டிருந்தது. பௌலிங்கை பொறுத்தவரைக்கும் தென்னாப்பிரிக்க அணியின் டாப் 3 விக்கெட்டுகளையும் 18 ஓவர்களுக்குள்ளாகவே இந்திய பௌலர்கள் வீழ்த்திவிட்டனர். சராசரியாக 6 ஓவர்களுக்கு ஒரு விக்கெட் என எடுத்துக்கொள்வோம். இதே நிலையில் சீராக இந்திய பௌலர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலோ அல்லது இதில் பாதியளவு சீராக இந்திய பௌலர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தால் கூட தென்னாப்பிரிக்க அணி 296 ரன்கள் என்கிற பெரிய ஸ்கோரை எட்டியிருக்க முடியாது. ஆனால், இந்திய பௌலர்களால் அப்படி விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்க முடியவில்லை. பவுமா மற்றும் வாண்டர் டஸன் இருவரும் மட்டுமே ஏறக்குறைய 30 ஓவர்களுக்கு க்ரீஸில் நின்று 204 ரன்களை சேர்த்திருந்தனர். இவர்கள் ஆடிய இந்த 18-48 ஓவர்கள்தான் வெற்றியை இந்தியாவிடம் இருந்து பறித்தது. பெரிதாக அதிரடி இல்லாமல் அதேநேரத்தில் ஓவருக்கு 6 ரன்கள் என்கிற சீரான தன்மையோடு மிடில் ஓவர்களில் ஸ்கோர் செய்திருந்தனர். தடையேயின்றி சீராக இவர்கள் ஸ்கோர் செய்ததை தடுப்பதற்கோ விக்கெட்டை எடுப்பதற்கோ இந்திய பௌலர்கள் பெரிதாக முயன்றதாக தெரியவில்லை. குறிப்பாக, இந்திய கேப்டன் ராகுலின் முடிவுகள் அபத்தமானதாக இருந்தது.

Venkatesh Iyer
Venkatesh Iyer
KKR
ஹர்திக்கை ரீப்ளேஸ் செய்யப்போகிறோம் 6 வது பௌலிங் ஆப்சனாக பயன்படுத்தப்போகிறோம் எனக் கூறி அணியில் எடுக்கப்பட்டிருக்கும் வெங்கடேஷ் ஐயருக்கு ஒரு ஓவர் கூட கொடுக்கப்படவில்லை.

மெயின் பௌலர்களாக இருக்கும் அத்தனை பேரும் சிறப்பாக வீசி கட்டுக்கோப்பாக ரன்களை வழங்கி சீராக விக்கெட்டுகளை எடுத்தால் 6 வது பௌலருக்கான தேவையே இல்லை எனக் கூறலாம். ஆனால், இது எதுவுமே நடக்கவில்லையே. மிடில் ஓவர்களில் இந்தியாவின் மெயின் பௌலர்கள் விக்கெட்டே எடுக்கவில்லை. ஓவருக்கு 6 ரன்கள் என்ற விகிதத்தில் சிரமமே இன்றி ரன்கள் வந்துக்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் ஒரு சர்ப்ரைஸுக்காக கூட வெங்கடேஷ் ஐயரிடம் பந்தைக் கொடுக்கவில்லை.

பவுமா ஸ்பின்னர்களை நன்றாக எதிர்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் சஹாலை கட் செய்துவிட்டு வெங்கடேஷ் ஐயருக்கு கொடுத்திருக்கலாம். தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு அவர்கள் ஃபெலுக்வயோ மற்றும் மார்க்ரமை பயன்படுத்திய விதமும் மிக முக்கிய காரணமாக இருந்தது. பௌலிங்கில் 5 மற்றும் 6 வது பௌலிங் ஆப்சனை வைத்து பவுமா என்ன செய்தாரோ அதை ராகுல் செய்ய தவறியிருந்தார். இத்தனைக்கும் சமீபத்தில் உள்ளூரில் நடந்த சையத் முஷ்தாக் அலி, விஜய் ஹசாரே போன்ற தொடர்களில் அவர் ஒரு ஆல் ரவுண்டராக சிறப்பாகவே பெர்ஃபார்மும் செய்திருக்கிறார். வெங்கடேஷ் ஐயரை பௌலிங் ஆப்சனாக கருதவில்லையெனில் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேனை ஃபினிஷர் ரோலில் ப்யூர் பேட்ஸ்மேனாக மட்டுமே ஆட வைக்கும் அநீதியை ஏன் செய்ய வேண்டும்? அதற்கு பதில் முழுமையான பேட்ஸ்மேன் ஒருவரையே ப்ளேயிங் லெவனில் எடுத்துக் கொள்ளலாமே? ஆனால்,

இந்த கேள்விகளையெல்லாம் கேப்டனான ராகுலிடம் மட்டும் இல்லை. பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டிடமும்தான் கேட்க வேண்டும்.
Dravid
Dravid

கடந்த மாதம் நடந்த நியுசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் ரோஹித் சர்மாவே கேப்டன். அதிலும் வெங்கடேஷ் ஐயர் ஆடியிருந்தார். அங்கேயும் இப்படித்தான் 6 வது பௌலிங் ஆப்சன் என வெங்கடேஷ் ஐயரை அறிவித்துவிட்டு முதல் இரண்டு போட்டிகளில் அவருக்கு ஒரு ஓவர் கூட கொடுக்கவில்லை. தொடரை வென்ற பிறகு மூன்றாவது போட்டியிலேயே ஒன்றிரண்டு ஓவர்களை வீசியிருந்தார். ஆக, வெங்கடேஷ் ஐயர் விஷயத்தில் கேப்டன்களைத் தாண்டி டிராவிட் தலைமையிலான பயிற்சியாளர் குழுவே என்ன திட்டத்தில் இருக்கிறதென்பது தெளிவாக தெரியவில்லை. வருடத்திற்கு ஒரு உலகக்கோப்பை என்ற சூழலில் ஆடுகின்ற ஒவ்வொரு போட்டியுமே அந்த உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டம் போன்றுதான் இருக்கிறது. தேவையான மாற்றங்களை காலம் தாழ்த்தாமல் ஒவ்வொரு போட்டியிலும் செய்தே ஆக வேண்டும். வெங்கடேஷ் ஐயர்தான் 6 வது பௌலிங் ஆப்சன் எனில் அவர் பந்துவீசித்தான் ஆக வேண்டும்.

அதேமாதிரி, பேட்டிங்கிலும் இந்திய அணிக்கு மிடில் ஓவர் மற்றும் மிடில் ஆர்டரில்தான் பிரச்சனை வந்தது. கோலி 29 வது ஓவரில் அவுட் ஆகும் போது அணியின் ஸ்கோர் 158-3. இன்னும் 21 ஓவர்களில் வெற்றிக்கு 139 ரன்களே தேவை என்ற நிலை இருந்தது. ஆனால்,

அடுத்த 7 ஓவர்களுக்குள்ளாகவே வெறும் 36 ரன்களுக்குள் ஸ்ரேயஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பண்ட் மூவரும் அவுட் ஆகிவிட்டனர்.
Shreyas Iyer
Shreyas Iyer
ICC

வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் இருவருமே லுங்கி இங்கிடியின் பந்தில் அவுட் ஆகியிருந்தனர். இரண்டுமே வெறித்தனமான ஷார்ட் பால்கள். இந்தியாவில் ஷார்ட் பால்களை எதிர்கொள்வதை போலவே தென்னாப்பிரிக்காவிலும் ஷார்ட் பால்களை எதிர்கொண்டுவிட முடியாது. முதலில் அங்கே ஷார்ட் பால்கள் எந்த உயரத்தில் வரப்போகின்றதென்பதை கணிப்பதே பெரும்பாடுதான். அதில், இருவருமே தவறிப்போய் விக்கெட்டை விட்டிருந்தனர். ரிஷப் பண்ட் ஃபெலுக்வாயோவின் பந்தில் ஸ்டம்பிங் ஆகி விக்கெட்டை விட்டிருந்தார். இந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மூவரும் மிடில் ஓவரில் அடுத்தடுத்து அவுட் ஆனதும் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. கடைசியில் ஷர்துல் தாகூர் அடித்த அடிக்கு இந்த மூவரில் ஒருவர் க்ரீஸில் நின்றிருந்தால்கூட போட்டியை நெருக்கமாகக் கொண்டு சென்றிருக்க முடியும்.

தோல்வியிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொண்டு இந்தியா அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்படும் என நம்புவோம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism