சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் கலந்துகொள்ளும் ரோடு சேஃப்டி வேர்ல்டு சீரிஸ் டி20 தொடர் மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா லெஜண்ட்ஸ் அணியும் பிரையன் லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணியும் மோதின. இதில் சச்சின் - சேவாக் ஜோடி அபாரமாக விளையாடி இந்திய அணி வெற்றிபெற உதவியது.
இந்நிலையில் நேற்று இந்தியா லெஜண்ட்ஸ் அணியும் இலங்கை லெஜண்ட்ஸ் அணியும் மோதியது. இந்தப் போட்டியிலும் டாஸ் வென்ற இந்திய லெஜண்ட்ஸ் அணியின் கேப்டன் சச்சின் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து இலங்கை லெஜண்ட்ஸ் அணியில் தில்ஷன் மற்றும் ரோமேஷ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கி நல்ல தொடக்கமளித்தனர். இந்திய அணிக்கு ஜாகீர் கான் மற்றும் இர்ஃபான் பதான் ஆகியோர் தொடக்க வீரர்களாகப் பந்துவீசினர்.
முனாஃப் பட்டேல் தில்ஷனின் விக்கெட்டை வீழ்த்த அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இலங்கை லெஜண்ட்ஸ் அணி தடுமாறியது. 7 ஓவர்கள் முடிவில் 46 -0 என்ற நிலையில் இருந்து 9.4 ஓவர்களில் 56 -3 என்றானது. இதனால் இலங்கை லெஜண்ட்ஸ் அணியின் ரன் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் இலங்கை லெஜண்ட்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் முனாஃப் பட்டேல் 4 விக்கெட்டுகளும், ஜாகீர் கான், இர்ஃபான் பதான், கோனி, சஞ்சய் பங்கர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய லெஜண்ட்ஸ் அணி. மீண்டும் சச்சின், சேவாக் கூட்டணி இந்திய லெஜண்ட்ஸ் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் என எண்ணிய ரசிகர்களுக்கு இலங்கை லெஜண்ட்ஸ் அணியின் சாமிந்தா வாஸ் அதிர்ச்சியளித்தார்.
தனது முதல் ஓவரில் சச்சினை வெளியேற்றினார். மூன்று ரன்கள் எடுத்த நிலையில் சேவாக் ரன் அவட் ஆக அடுத்து வந்த யுவராஜ் 1 ரன்னில் வாஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய லெஜண்ட்ஸ் அணி 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் கைஃப் இந்திய அணிக்கு நம்பிக்கையளித்தார். கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்த பங்கர் 18 ரன்னில் நடையைக் கட்ட களமிறங்கினார் அதிரடி ஆல்-ரவுண்டர் இர்பான். வந்ததும் பவுண்டரியும் சிக்ஸர்களும் பறக்கவிட்ட அவர் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். 6 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என அவர் 31 பந்துகளில் 57 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கைஃப் 46 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியாக இந்திய லெஜண்ட்ஸ் அணி 18.4 ஓவர்கள் முடிவில் 139 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. 3 ஓவர்கள் வீசிய சாமிந்தா வாஸ் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரு விக்கெட் மற்றும் 57 ரன்கள் எடுத்த இர்பான் பதான் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
போட்டிக்குப் பின்னர் பேசிய சச்சின், கைஃப், பதான் பார்ட்னர் ஷிப் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்றார். மேலும் அவர், ``நாம் அனைவரும் சாலை விதிகளை மதிக்க வேண்டும். சாலியில் ஒழுக்கமாகச் செயல்படுவது விபத்தை தடுக்க உதவும்" என்றார். தற்போது வரை இரண்டு ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்தியா லெஜண்ட்ஸ் அணி இரண்டு போட்டியிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இன்று தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ் மற்றும் வெஸ்ட் இண் டீஸ் லெஜண்ட்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்தியா லெஜண்ட்ஸ் அணி அடுத்ததாக வரும் 14 -ம் தேதி தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது,