Published:Updated:

`கிளாசிக் சச்சின்; சிக்ஸர் இல்லா சேவாக் இன்னிங்ஸ்!’ - விருந்துபடைத்த #RoadSafetyWorldSeries போட்டி

சச்சின் - சேவாக்
சச்சின் - சேவாக் ( Twitter )

`சச்சின்....சச்சின்....சச்சின்' கோஷம் மைதானமெங்கும் எதிரொலித்தது. நீண்ட இடைவேளைக்குப் பின் தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய சச்சின் - சேவாக் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 83 ரன்கள் குவித்து அசத்தியது.

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் கலந்துகொள்ளும் ரோடு சேஃப்டி வேர்ல்டு சீரிஸ் டி20 தொடர் மும்பையில் தொடங்கியது.

வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா லெஜண்ட்ஸ் அணியும் பிரையன் லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற சச்சின், ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணி சந்தர்பால் அரைசதத்தின் உதவியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. சந்தர்பால் 41 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார்.

லாரா - சச்சின்
லாரா - சச்சின்

151 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்தியா லெஜண்ட்ஸ் அணியின் இன்னிங்ஸை சச்சின் - சேவாக் ஜோடி தொடங்கியது. 2013ம் ஆண்டுக்குப் பின் மும்பை வான்கடே மைதானத்தில் பேட்டிங் செய்ய சச்சின் களமிறங்கியபோது, ரசிகர்கள் கரகோஷத்துடன் வரவேற்புக் கொடுத்தனர். `சச்சின்....சச்சின்....சச்சின்' கோஷம் மைதானமெங்கும் எதிரொலித்தது. நீண்ட இடைவேளைக்குப் பின் தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய சச்சின் - சேவாக் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 83 ரன்கள் குவித்து அசத்தியது. 29 பந்துகளில் 36 ரன்கள் எடுத்த சச்சின், சுலைமான் பென் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

`11 போட்டிகள்; 5 லெஜண்ட் அணிகள்.. குவியும் நட்சத்திர வீரர்கள்!’ - ரோடு சேஃப்டி வேர்ல்டு சீரியஸ்

அடுத்துவந்த முகமது கைஃப், சேவாக்குக்கு கைகொடுக்க இந்தியா லெஜண்ட்ஸ் அணி வெற்றி இலக்கை நோக்கி சீராக முன்னேறியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சேவாக், அரைசதம் கடந்து அசத்தினார். கடைசி 4 ஓவர்களில் 25 ரன்கள் தேவை என்ற நிலையில், பந்துவீசவந்த கார்ல் கூப்பர் கைஃப் மற்றும் கோனி ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார். இதையடுத்து, களமிறங்கிய யுவராஜ் சிங், 17வது ஓவரின் முதல் பந்தை கேலரிக்கு அனுப்பினார்.

சேவாக்
சேவாக்
Twitter

இந்தியா லெஜண்ட்ஸ் அணி சார்பில் அடிக்கப்பட்ட ஒரே ஒரு சிக்ஸர் அதுதான். தொடக்கவீரராகக் களமிறங்கி இறுதிவரை களத்தில் இருந்த சேவாக், 57 பந்துகளில் 74 ரன்கள் எடுத்திருந்தார். அவர் 11 பௌண்டரிகள் மட்டுமே அடித்தார். சிக்ஸரே இல்லாத சேவாக் இன்னிங்ஸ்!. 18.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டிய இந்தியா லெஜண்ட்ஸ் அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது. சேவாக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

அடுத்த கட்டுரைக்கு