Published:Updated:

IND v SCO டாப் 10 மொமன்ட்ஸ்: நெட் ரன்ரேட் ஓகே... ஆனால், அரையிறுதிக்குத் தேவை ஆப்கனின் வெற்றி!

பௌலர்களின் ஆவர்த்தனத்தால், ஸ்காட்லாந்தைச் சரியச் செய்த இந்தியா, அரையிறுதி வாய்ப்புக்காக ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கான வேண்டுதலைத் தொடங்கியுள்ளது.

முன்னதாக நியூசிலாந்து நமீபியாவை வீழ்த்தி, ஒரு அடி அரையிறுதியை நோக்கி முன்னேறி இருந்தாலும், இன்னமும் கோப்பைக் கனவை அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆக்கிக் கொள்ளாது, பிளாக் அண்டு வொயிட்டில் கண்டு கொண்டுதான் உள்ளனர் இந்திய ரசிகர்கள்.

நடந்து முடிந்த இந்தியா - ஸ்காட்லாந்து போட்டியின் முக்கிய தருணங்கள்...

எட்டாவது அதிசயம்:

கோலியும் டாஸும் எப்பொழுதும், இணையாதிருக்கும், இரு துருவங்கள்தானே?! இப்போட்டிக்கு முன்னதாக, மூன்று ஃபார்மட்டுக்கும் சேர்த்து, கேப்டனாக டாஸை வென்றதில், சர்வதேச அளவில், குறைந்த சதவிகிதத்தை (40.7%) கோலியே வைத்திருந்தார். அதிகமுறை டாஸை வென்ற இந்தியக் கேப்டனாக, ராகுல் டிராவிட் (58.3 % போட்டிகளில்) இருந்தார். ஆனால், எட்டாத எட்டாவது அதிசயமாக முக்கியப் போட்டியில் பிறந்த நாள் பரிசாக, டாஸ் கோலிக்குக் கருணை காட்டியது.

IND v SCO | T20 Worldcup
IND v SCO | T20 Worldcup

மூன்று ஸ்பின்னர்கள்:

வேகப்பந்து வீச்சை ஓரளவு சமாளிக்கும் ஸ்காட்லாந்து பேட்ஸ்மேன்கள் சுழல் பந்தை எதிர்கொள்ள, இத்தொடர் முழுவதுமே பெருமளவில் திணறி வந்தனர். இத்தொடரில், அவர்கள் சந்தித்த சுழல்பந்துகளில் 35 சதவிகிதத்திற்கும் குறைவானவை மட்டுமே ரன்களாக மாற்றப்பட்டிருந்தன. எனவே, அவர்களது இந்தப் பலவீனத்தைக் குறிவைத்துத் தாக்க, மூன்று ஸ்பின்னர்களோடு இந்தியா களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. கணிப்புப்படியே கோலி, தாக்கூரை வெளியேற்றி வருண் சக்ரவர்த்தியைக் கொண்டு வந்திருந்தார்.

பூம் பூம் பூம்ரா:

டெத் ஓவர்களில் யார்க்கர்களால் அச்சுறுத்தும் பும்ராதான் தொடக்க ஓவர்களை வீசினார். ஆரம்பத்திலேயே, அழுத்தம் ஏற்றும் யுக்திதான் அது. டி20-ல் இந்தியாவுக்காக ஓப்பனிங் ஓவரை பும்ரா வீசுவது இது ஐந்தாவது முறை மட்டுமே. அதுவும் சர்வதேச டி20 போட்டி ஒன்றில், பும்ரா முதல் மற்றும் மூன்றாவது ஓவரை வீசுவது இது இரண்டாவது முறை மட்டுமே. கோலி தன்மீது வைத்த நம்பிக்கையை சிறிதளவும் பொய்யாக்கவில்லை பும்ரா. பும்ரா வீழ்த்திய கேப்டன் கோய்ட்சர் விக்கெட்தான் இந்தியா எதிர்பார்த்த கிக் ஸ்டார்ட் கொடுத்தது. இப்போட்டியில் எடுத்த இரண்டு விக்கெட்டுகள் மூலமாக அதிக விக்கெட்டுகளை டி20-ல் எடுத்த இந்திய பௌலர்கள் பட்டியலில் 64 விக்கெட்டுகளோடு, சஹாலை முந்தி முதல் இடத்துக்கு முன்னேறினார் பும்ரா.

பவர் பிளேயில் ஆதிக்கம்:

ஸ்காட்லாந்துக்கு சிறிதளவு கூட வாய்ப்பினை அளித்துவிடக் கூடாதென்பதில், இந்தியா மிக கவனமாக இருந்தது. பவர்பிளே ஓவர்களில் 27/2 என ரெட் அலர்ட் தந்தது ஸ்காட்லாந்தின் ஸ்கோர் போர்ட். விழித்துக் கொண்டாலும், அவர்களால் மீண்டெழ முடியாத அளவு மூச்சுமுட்ட வைத்தனர் இந்திய பௌலர்கள். பத்து ஓவர்கள் முடிவில்கூட, 61 சதவிகித பந்துகளை டாட் பாலாக்கி அங்கேயே இந்தியாவின் பெயரில் வெற்றியை பட்டா போட்டுக் கொடுத்துவிட்டது ஸ்காட்லாந்து. அதற்கு முக்கியக் காரணம், இந்திய ஸ்பின்னர்கள். முதல் 10 ஓவர்களில் ஏழு ஓவர்களை ஸ்பின்னர்களே வீசி, ரன்ரேட்டைக் கட்டுப்படுத்தி இருந்தனர். இந்த சுழல் சூத்திரம், வெற்றி மந்திரமாக இந்தியாவின் கையை ஓங்க வைத்தது.

IND v SCO | T20 Worldcup
IND v SCO | T20 Worldcup

மன்சேவும் ஸ்வீப் ஷாட்களும்:

டி20-ல் ஸ்காட்லாந்தின் ஓப்பனர் மன்ஷேவுக்கும் ஸ்வீப் ஷாட்டுகளுக்குமான பந்தம் நீண்ட நெடியது. இந்த ஃபார்மட்டில் அவர் அடித்துள்ள 23 சதவிகிதம் ரன்கள், ஸ்வீப் ஷாட்டுகளிலேயே வந்திருந்தன. குறிப்பாக அதிலும் 65 சதவிகிதம் ஷாட்டுகள், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகளே. இப்போட்டியிலும், அவருக்குப் பிடித்தமான ரிவர்ஸ் ஸ்வீப் ஆடவே முயன்று கொண்டிருந்தார் மன்ஷே. ஓரளவு அது அவருக்குக் கை கொடுக்கவும் செய்தது. இடக்கை ஆட்டக்காரர் என்பதால், அவரது விக்கெட்டுக்காக அஷ்வினை இறக்கிய கோலிக்குத் தண்டனையாக அந்த ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரியின் மூலமாக பயம் காட்டினார் மன்சே.

IND v SCO | T20 Worldcup
IND v SCO | T20 Worldcup

ஜடேஜா ஜாலம்:

வருண் சக்ரவர்த்தி இதுவரை தனது டி20 ஃபார்மட்டில் எடுத்துள்ள விக்கெட்டுகளில் 63 சதவிகித விக்கெட்டுகள் வலக்கை ஆட்டக்காரர்களின் விக்கெட்டுகளே. எனவே, வலக்கை ஆட்டக்காரர்களுக்காக வருண், இடக்கை ஆட்டக்காரர்களுக்காக அஷ்வின் என்ற கணக்கோடே இந்தியா களமிறங்கியது. ஆனால், அவுட் ஆஃப் சிலபஸாக ஜடேஜா வந்து சேர்ந்தார். மேத்யூ கிராஸ் மற்றும் பெர்ரிங்டன் என ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சுழலால் கை கொடுத்தார் ஜடேஜா. அதேபோல், நான்காவது விக்கெட் விழுந்தபின் சற்றுநேரம் நீடித்த பார்ட்னர்ஷிப்பையும் லீஸ்கை எல்பிடபிள்யூவில் வீழ்த்தியதன் மூலம் உடைத்தார். ஆட்டநாயகனாக, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வீசிய ஒவ்வொரு பந்திலும் நியாயம் கற்பித்திருந்தார் ஜடேஜா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டீம் ஹாட்ரிக்:

கடந்த போட்டியில், ஹாட்ரிக் விக்கெட் வாய்ப்பைப் பறிகொடுத்த ஷமி, இம்முறை எதிர்கொள்ளவே முடியாத யார்க்கர்களை தனது ஆபத்தான ஆயுதமாக்கி வீசியிருந்தார். தான் வீசிய முதல் ஓவரை விக்கெட் மெய்டனாக்கியிருந்தார். அவரது ஸ்பெல்லின் கடைசி ஓவரில் மூன்று விக்கெட்டுகள் வரிசையாக விழுந்திருந்தன. அதில் ஒன்று ரன் அவுட் எனினும், ஷமியின் பந்து வீச்சுதான், 100 ரன்களைக் கூட தாண்ட முடியாமல் ஸ்காட்லாந்தைச் சுருட்டிய சுனாமியானது. அவரது சிறந்த டி20 ஸ்பெல்லும் (3/15) இதுவே. அதுவும், மூன்று ஓவர்களிலேயே வந்ததுதான் மிகச்சிறப்பு.

IND v SCO | T20 Worldcup
IND v SCO | T20 Worldcup

85-க்கு ஆல் அவுட்:

இந்திய பௌலிங் மிகச் சிறப்பாக இருந்தது உண்மைதான் என்றாலும், ஸ்காட்லாந்தும் போராடாமல் பணிந்தது என்பதே உண்மை. நியூசிலாந்துக்கு எதிராகவே 156 ரன்களைக் குவித்திருந்ததால் அவர்களது பேட்டிங் யூனிட் மீது சற்றே எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கண்ணாடி மாளிகையாக இந்தியப் பந்துவீச்சில் நொறுங்கி விழுந்து, 20 ஓவர்கள் கூட தாக்குப் பிடிக்காது ஆல் அவுட் ஆகினர்.

டார்கெட்டும் ரன்ரேட்டும்:

வழக்கமாக நாக் அவுட் போட்டிகளில் குடியேறும் பதற்றம், லீக் சுற்றுகளிலேயே சுழற்றி அடிக்கிறது. ஸ்காட்லாந்து இன்னிங்ஸ் முடிவுக்கு வந்த மாத்திரத்திலேயே, தோனி, ரவி சாஸ்திரி, விக்ரம் ரத்தோர் என இந்திய பயிற்சியாளர்கள் படை மொத்தமும் கையில் காகிதத்தோடும், கண்முன் நிழலாடும் கணிதக் கணக்குகளோடும்தான் காணப்பட்டது. ஒரு போட்டி எஞ்சியுள்ள இந்தியா, இப்போட்டியில் இலக்கை 8.5 ஓவர்களில் எட்டினால் நியூசிலாந்தின் ரன்ரேட்டையும், 7.1 ஓவர்களில் எட்டினால், ஆப்கானின் ரன்ரேட்டையும் முந்திவிடலாம் என்ற கணக்கீடுகள், இரண்டாவது பாதியை திகில் பட அளவுக்கு திக் திக் தருணங்களாக்கி இருந்தன.

ராகுல் - ரோஹித்:

இக்கட்டான நேரங்கள்தான், அட்ரினல் சுரப்பியை உச்சகட்டமாகச் சுரக்கச் செய்து, ஒட்டுமொத்த திறனையும் வெளிக் கொணரும். பவர் பிளே ஓவர்கள் இருக்கும்போது, 7.1 ஓவர்கள் எல்லாம் எங்களுக்கு எதற்கு என்னும் ரீதியில் அடித்து விளாசினர் இந்திய ஓப்பனர்கள். மின்னல் வேகத்தில் நடந்து முடிந்த இந்திய இன்னிங்சில், கண்ணைக் கொள்ளை கொள்ளும் ஷாட்டுகளைப் பார்க்க முடிந்தது. வீசப்பட்ட 39 பந்துகளிலேயே, 11 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் நிரம்பி வழிந்தன. 18 பந்துகளில், வந்து சேர்ந்த ராகுலின் அரைசதம், மாஸ்டர் கிளாஸ்.

IND v SCO | T20 Worldcup
IND v SCO | T20 Worldcup
எதிர்பார்த்தபடி, இந்தியா இடம்பெற்று இருக்கும் குரூப்பில், அதிக ரன்ரேட் இந்தியா வசமே, ஆனால் அரையிறுதி வாய்ப்பு இன்னமும் எட்டாக் கனிதான்.

முதல் இரண்டு போட்டிகளில் விட்ட லகானை திரும்பக் கைப்பற்ற முட்டி மோதுகிறது இந்தியா. இன்னமும் நமீபியாவுடனான ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில், அந்தப் போட்டியை விடவும், இந்திய ரசிகர்கள் அதிக ஆர்வத்தோடு, எதிர்கொள்ளும் போட்டி, நியூசிலாந்து - ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான போட்டிதான். அப்போட்டியின் முடிவுதான் லீக் சுற்றின் கடைசிப் போட்டியை உயிர்ப்போடு வைப்பதை உறுதி செய்வதாக இருக்கப் போகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு