Published:Updated:

கோலி - ரஹானேவின் `செஞ்சுரி’ பார்ட்னர்ஷிப்! - முதல் டெஸ்ட்டில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா

பிரேம் குமார் எஸ்.கே.

முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளின் முடிவில் இந்திய அணி 260 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Ajinkya Rahane - Virat Kohli
Ajinkya Rahane - Virat Kohli ( AP )

இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி ஆண்டிகுவா மைதானத்தில் 22-ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதலாவது போட்டி என்பதால் முக்கியமான போட்டியாக எதிர்பார்க்கப்பட்டது.

Ajinkya Rahane
Ajinkya Rahane
AP

டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததுடன் சிறப்பாக பந்துவீசி இந்திய அணியை திணறடித்தது. எனினும் ரஹானே மற்றும் ஜடேஜாவின் அரை சதங்களின் உதவியுடன் 297 என்னும் ஸ்கோரை எட்டியது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா(2), கோலி (9) ஆகியோர் முதல் இன்னிங்ஸில் சொதப்பினர்.

பின்னர் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியை இந்திய அணியின் இஷாந்த் ஷர்மா கவனித்துக்கொண்டார். சிறப்பாக பந்துவீசி பேட்ஸ்மேன்களை கலங்கடித்த இஷாந்த் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 222 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சேஸ் 48 ரன்கள் எடுத்தார்.

பின்னர் 75 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இந்திய அணி. நிதானமாக விளையாடிய ராகுல் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். மயங்க் அகர்வால் 16 ரன்கள் எடுத்தார். கவனமாக விளையாடிவந்த புஜாரா 25 ரன்னில் ரோச் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். அப்போது 81 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி விளையாடி வந்தது.

அதன்பின்னர் கூட்டணி சேர்ந்த ரஹானே மற்றும் கோலி மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டனர். பொறுமையாக விளையாடிய இருவரும் அரை சதம் கடந்தனர். மூன்றாம் நாளின் முடிவில் கோலி 51 ரன்களுடனும், ரஹானே 53 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இருவரும் இணைந்து 104 ரன்கள் சேர்த்துள்ளனர். இந்திய அணி தற்போது 260 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Virat Kohli
Virat Kohli
AP

இன்னும் இரண்டு நாள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நல்ல நிலையில் இருக்கிறது. இன்று நான்காவது நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.